எவ்வளவு விளக்கமாகக் சொன்னாலும், அல்லது எவ்வளவு சுருக்கமாகக் சொன்னாலும், நம் அனைவருடைய நல்வாழ்வுக்கான வழியே சோசலிசம்.
நமது குடும்பத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். உங்கள் குடும்பத்தை எப்படி நிர்வகிப்பது என்று உங்களுக்கு ஒரு திட்டமிருக்கும் அல்லவா? அதைப்போல இந்த உலகை நிர்வகிக்கும் திட்டமே சோசலிசம்.
ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா, இரு மகன்கள், இரு மகள்கள், வயதான தாத்தா, பாட்டி என மொத்தம் 8 நபர்களும், இரண்டு பூனைகளும் ஒரு நாயும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். மேற்சொன்ன குடும்பத்தை உதாரணமாக வைத்துக்கொண்டு சோசலிசத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
உழைப்பும் தேவையும்:
ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவர் திறனுக்கு ஏற்ப உழைப்பை பெற்றுக் கொள்வதும் அவரவர் தேவைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் வளங்களை தருவதும் வளர்ந்த சோசலிச சமுகத்தில் சாத்தியப்படும்.
நமது குடும்பத்தில் அப்பா பேராசிரியராக வேலை செய்கிறார். 1 லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார். அம்மா வழக்கறிஞர் பணிபுரிகிறார். ஊதியமாக 1.5 லட்சம் பெறுகிறார். பாட்டியும் தாத்தாவும் பணி மூப்பு பெற்று வீட்டில் உள்ளனர். இருவரும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள். மூத்த மகனுக்கு வயது 25, பொறியாளராக வேலை செய்கிறார். 50 ஆயிரம் ஊதியம் பெறுகிறார். இரண்டாவது மகள் கல்லூரி படிக்கிறார். மூன்றாவது மகன் பள்ளிப்படிப்பு படிக்கிறார். கடைசி பெண் குழந்தை சிறுவயதில் ஏற்பட்ட நோய் காரணமாக ஒரு கால் செயல் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடமாடுகிறார். பள்ளிப் படிப்பு படித்து வருகிறார்.
படிக்க : சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
குடும்ப உறுப்பினர்களில் மூவர் மட்டுமே ஊதியம் பெரும் பணி புரிகிறார்கள். அவர்கள் பெறும் ஊதியத்தை வைத்து வளர்ப்பு பிராணிகளுடன் சேர்த்து 11 உயிர்களின் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
அனைவரின் தேவையும் ஒன்றாக இருக்குமா? அனைவருக்கும் காலை உணவாக இரண்டு இட்லிகள் மட்டும் வழங்கப்படும் என சொல்வோமா? அப்பாவும் அம்மாவும் மூத்தமகனும் மட்டுமே ஊதியம் ஈட்டுவதால் அவர்களுக்கு இட்லிகளுடன் சேர்த்து ஒரு வடையும் ஒரு குவளை பழச்சாறும் காலை உணவாக வழங்கப்படும் எனச் சொல்வோமா?
தாத்தாவும் பாட்டியும் சம்பாதிக்கவில்லையே. எனவே அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கித் தரமாட்டோம் எனச் சொல்வோமா? நாயும் பூனைகளும் மனித இனம் இல்லையே, அவைகளுக்கு உணவிட மாட்டோம் எனச் சொல்வோமா?
சொல்ல மாட்டோம் அல்லவா. குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் நியாயமான தேவை என்னவோ அதை வழங்குவோம். அது தானே அறம்? இந்த அற உணர்ச்சியோடு உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அணுகுவதே சோஷலிச சமூகத்தின் நோக்கம். வெறும் நோக்கம் மட்டுமல்ல. சாத்தியமும் கூட.
எப்படி சாத்தியம்?
தாத்தாவும் பாட்டியும் இப்போதுதான் சம்பாதிக்கவில்லை. அவர்கள் கடந்த காலத்தில் குடும்பதிற்காக உழைத்துள்ளனர். ஊதியம் பெறும் வேலை செய்யதாபோதும், சமையல், வீட்டு வேலைகள், வீட்டுப் பிராணிகளைப் பேணிக் காப்பது என முதிய வயதிலும் தங்களால் இயன்ற வேலைகளை செய்து வருகின்றனர். கடந்த காலத்தில் நமக்காக உழைத்தவர்களை நிகழ்காலத்தில் பார்த்துக்கொள்வது நமது கடமை என்பதால் அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்து என அனைத்தையும் வாங்கித் தந்து அவர்களை பராமரித்துக் கொள்கிறோம்.
குழந்தைகள் தற்போது வேலை செய்யவில்லையெனினும் எதிர்காலத்தில் வேலை செய்வார்கள் அல்லவா? இளம் வயதில் கல்வி முக்கியம் என்பதால் கல்வி கற்கிற வேலையை செய்கிறார்கள். இளம் வயதில் அவர்கள் கற்கும் கல்வி பின்னாட்களில் குடும்பத்திற்கு பயன்படும் என்பதால் எதிர்காலத்திற்கான முதலீடாகிறது.
வேலை செய்யும் அளவுக்கு நாய்க்கும் பூனைக்கும் அறிவில்லை அல்லது அவர்களுக்கு இருக்கும் அறிவுக்கு பொருந்துகிற அளவுக்கு எந்த வேலையும் இல்லை. எனவே அவர்களால் ஊதியம் பெற இயலவில்லை. இருப்பினும் நம்மைப் போன்ற இன்னொரு குடும்ப உறுப்பினர் போல் செல்லப் பிராணிகளை நாம் பார்த்துக் கொள்கிறோம். ஏனெனில், விலங்குகள் நம் உயிர் சூழல் தொகுப்பின் ஒரு அங்கம்.
ஊன்றுகோல் உதவியுடன் நடமாடும் கடைசி பெண் குழந்தையால் அதிகமான மருத்துவச் செலவுகள் ஏற்படுகின்றன. இருப்பினும் அவளுக்கு மருந்து வாங்காமல் விட்டு விடமாட்டோம். அவளுக்காக ஊன்றுகோல் வாங்கியும் தந்துள்ளோம். குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகளை ஒப்பிடும்போது, நோயுற்ற குழந்தையை கூடுதல் பரிவோடு பார்த்துக் கொள்கிறோம். ஏனெனில் அவளால் மற்றவர்களைப் போல் நடக்கவோ, ஓடவோ முடியாது. அவளுக்கு கூடுதல் உதவி தேவைப்படுகிறது. வலு அதிகம் உள்ளவர்கள் வலு குறைந்தவர்களை அன்புடனும் அக்கறையுடனும் பார்த்துக்கொள்வது மனித நேயம் என்பதால் அவளை பாசத்தோடு கவனித்துக் கொள்கிறோம்.
நம் குடும்பத்தில் இரு குழந்தைகள் சண்டையிட்டு கொண்டால், நமக்கென்ன கவலை என பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம். தடுத்துநிறுத்துவோம். அது மட்டுமின்றி, இனி சண்டை போடக் கூடாது என அறிவுரை சொல்லுவோம்.
மகன் போதைப் பொருள், குடிப்பழக்கம் என தீய பழக்கங்களுக்கு அடிமையானால், புத்திமதி சொல்லி, நல்வழிப்படுத்துவோம். இனி தீய பழக்கங்கள் பக்கம் மகன் போய்விடாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ, அவை அனைத்தையும் செய்வோம்.
சுருக்கமாகச் சொன்னால், குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, விட்டு கொடுத்து, அன்பு செலுத்தி, நம்மிடம் இருப்பவற்றை பகிர்ந்து கொள்வோம். அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். வெறும் விருப்பத்தோடு நின்று விடாமல், அனைவரின் நலவாழ்வுக்கு நம்மால் என்ன செய்யமுடியுமோ அவை அத்தனையையும் செய்வோம்.
எங்கிருந்து கற்றோம்?
நோயுற்ற குழந்தையின் மீது நாம் காட்டிய மனிதநேயம், வயதான தாத்தா பாட்டியிடம் நாம் காட்டிய பரிவு, வழி தவறிப் போன மகனிடம் நாம் காட்டிய அக்கறை உள்ளிட்ட அனைத்து பண்புகளையும் எங்கிருந்து கற்றோம்? அன்பு, மனித நேயம், பரிவு, சக மனிதர்கள் மீதான அக்கறை உள்ளிட்ட அனைத்து நற்பண்புகளையும் பிறந்து வளர்ந்த சமூகத்திடம் இருந்து கற்றோம்.
ஆனால், நாம் மேலே சொன்ன (உதாரண) குடும்ப உறுப்பினர்கள் போல் உலகில் உள்ள அனைவரும் நடந்து கொள்கிறார்களா? நற்பண்புகள் கொண்ட மனிதர்கள் மட்டும்தான் இவ்வுலகில் உள்ளனரா? திருட்டு, கொலை, கொள்ளை, பொய், சக மனிதர்களை ஏமாற்றுதல் உள்ளிட்ட தீய பண்புகளை கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் உள்ளனர். அத்தகையான மனிதர்கள் எங்கிருந்து தீய பண்புகளை கற்றனர்? கெடுவாய்ப்பாக, அவர்களும் நம்முடைய சமூகத்தில் இருந்தே தீய பண்புகளை கற்கின்றனர்.
அப்படியானால் நல்லதோ கெட்டதோ, அனைத்து பண்புகளையும் கற்கும் பள்ளியாக நம் சமூகமே உள்ளது. கற்றதை செயல்படுத்தும் இடமாகவும் நம் சமூகமே உள்ளது. அப்படியானால் இந்த சமூகத்தை நல்லதை மட்டும் கற்றுக் கொடுக்கும் கல்விக்கூடமாக மாற்றிவிட்டால், தீய பண்புகளுக்கு இடமிருக்காது அல்லவா?
நல்லதைச் செய், தீயதை செய்யாதே என்ற பிரச்சாரத்தை அனைவரும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் தீயதை செய்யாமல், நல்லதை மட்டும் செய்பவர்களை இவ்வுலகில் அரிதாக உள்ளது.
ஏன் பிரச்சாரம் வேலை செய்யவில்லை?
நல்லதைச் செய், தீயதை செய்யாதே என்பதை அனைவரும் கேட்டுக் கொண்டே இருந்தாலும், நல்லதையும் கெட்டதையும் வெறும் பிரச்சாரத்தின் மூலம் கற்கவில்லை. வேறு சொற்களில் சொன்னால், வெற்றுப் பிரச்ச்சாரத்தில் உலகை மாற்ற முடியவில்லை. அதாவது நல்லதையும் கெட்டதையும் பிரச்சாரம் உருவாக்கவில்லை. மாறாக நாம் வாழும் உலகில் உள்ள சமூகப் பொருளாதார நிலைகள்தான் நல்லதையும் கெட்டதையும் உருவாக்குகின்றன.
எனவே அந்த வகையில் நமது உலகின் சமூகப் பொருளாதார நிலைகளை மாற்றிவிட்டால், நல்லதையும் கெட்டதையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் அல்லவா. நமது உலகின் சமூகப் பொருளாதார நிலைகளை மாற்றும் வழிமுறையையே சோசலிசம் அல்லது கம்யூனிசம் என்றைழைக்கிறோம்.
அவரவர் திறனுக்கு ஏற்ப உழைப்பை செலுத்தும் பண்பையும், அவரவர் தேவைக்கேற்ப வளங்களை நுகரும் பண்பையும் ஒவ்வொருவருக்கும் உருவாக்கிவிடும் திறனுடைய சமூகத்தை கட்டி அமைப்பதே சோஷலிசத்தின் லட்சியம். சோசலிசத்தின் லட்சியம் பெரிதாக உள்ளதே. இது சாத்தியமா?
தனி ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் அன்போடும் பரிவோடும் அக்கறையோடும் நடந்து கொள்கிறார்கள் அல்லவா? நமது குடும்பம், நம்ம அம்மா, நம்ம அப்பா, நம்ம தாத்தா, நம்ம பாட்டி, நம்ம பூனை என நினைப்பதால், பரிவோடும் அன்போடும் நடந்து கொள்கிறோம். நம்ம என்பதை குடும்பத்தை தாண்டி நாம் வாழும் இந்த உலகமனைத்திற்கும் விரிவாக்கினால், பாரடா இப்புவி மக்களை என்ற விசாலப் பார்வை கொண்ட சுரண்டலற்ற சமூகம் சாத்தியமே.
விசாலப் பார்வை கொண்ட சுரண்டலற்ற சாத்தியம் சமூகம் என்றால், இதுவரை ஏன் அது சாத்தியமாகவில்லை?
இது நம்ம குடும்பம், நம்ம அம்மா, நம்ம அப்பா, நம்ம தாத்தா, நம்ம பாட்டி, நம்ம பூனை என்ற பொதுமைப் பண்பு நாம் எடுத்துக்கொண்ட உதாரண குடும்பத்திற்குள் உருவாகி இருந்ததால், சுரண்டலற்ற குடும்பம் சாத்தியமானது. ஆனால் இப்படியான பொதுமைப் பண்பு உலகத்தில் உருவாகாததால் சுரண்டலற்ற சமூகம் தற்போதைக்கு இல்லை.
படிக்க : ஜூலை 1, 1921 : சீன கம்யூனிஸ்ட் கட்சி உதய நாளை நினைவுக்கூறுவோம்!
நமது உதாரண குடும்பத்தில் உழைக்க தேவையான தகுதியைப் பெற்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் தகுதிற்கேற்ப உழைத்தார்கள். தங்கள் தேவைக்கேற்ப வளங்களை பகிர்ந்து கொண்டார்கள். யாருக்கும் யாரிடம் இருந்து எதையும் பிடுங்க (சுரண்ட) வேண்டிய தேவையும் இல்லை. உழைப்பும் தேவையும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. நமது உதாரண குடும்பத்தில் உறுப்பினர்கள் இடையே போட்டி இல்லை. எனவே சுரண்டல் (அதாவது ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது) இல்லை. வயது, பாலினம், உழைப்பு, கல்வி, அனுபவம் உள்ளிட்ட பல காரணிகளில் அனைவரும் வேறுபட்டு இருந்தாலும், அவரவர் திறமைக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்ற பொதுப் பண்பு உருவாகி இருந்தது. எனவே வேறுபாடின்றி அனைவரும் அவரவர் பங்கை குடும்பத்திற்கு செய்தனர். அவரவர் தேவைக்கு ஏற்ப வளங்கள் (உணவு, பணம்) பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஏதேனும் ஒருவர் தவறு செய்தால், அதை குடும்ப உறுப்பினர்கள் விவாதித்து தவறை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மாறும் சூழல் காரணமாக சிலருக்கு தேவை (கல்லூரிப் படிப்பு செலவு, மருத்துவச் செலவு) அதிகமானால், அதற்கேற்ப வகையில் உழைப்பும் மாற்றி அமைக்கப்பட்டது. தேவைக்கு அதிகமாக நுகரும் பண்பு குடும்ப உறுப்பினர்களிடையே இல்லை.
இப்படியான சுரண்டலற்ற, தங்கள் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்த, ஒருவரை ஒருவர் ஏய்த்துப் பிழைக்கும் பண்புகள் இல்லாத குடிமக்களை உருவாக்குவதே சோசலிசத்தின் லட்சியம். அந்த லட்சியம் வெறும் கனிவின் மூலமோ, பிரச்சாரத்தின் மூலமோ, கற்பனையின் மூலமோ, தெய்வ சக்தியின் மூலமோ வந்துவிடாது. மனிதர்களுடைய உணர்வுகளும் பண்புகளும் செயல்பாடுகளும் சமூகப் பொருளாதார சூழ்நிலைமைகளில் பின்னணியில்தான் உருவாகின்றன. சுரண்டலற்ற சமூகத்தைப் படைக்கத் தேவையான சமூகப் பொருளாதார நிலையை உருவாக்குவதே சோசலிசம்.
சு.விஜயபாஸ்கர்