திமுக ஏன் 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்? இப்படி ஒரு கேள்வியை கேட்டு அதற்கு பலரும் பலவாறு பதில் கூறினார்கள். பாசிசம் வரக் கூடாது என்றால் அதற்கு திமுகவை ஒரு தடுப்பரனாக பயன்படுத்த வேண்டும்.

திமுகவை வைத்துக்கொண்டு பாசிசத்தை நிறுத்த முடியாது என்றாலும் நமக்கு ஒரு மூச்சு விடக் கூடிய நேரம் அதாவது பிரீத்திங் ஸ்பேஸ் தேவை என்றார்கள். மானை துரத்திக் கொண்டு புலி ஓடுகிறது, புலிக்கு பிரீத்திங் ஸ்பேஸ் தேவை இல்லை. ஆனால் மானுக்கு பிரீத்திங் ஸ்பேஸ் தேவை. பாசிசம், பாசிசம் என்று பேசும் இவர்கள் பாசிசத்தை பற்றிய ஆழமான அறிவும் புரிதலும் அற்றவர்கள் அல்லது ஆழமான புரிதலும் அறிவும் இருந்தாலும் கூட, கடவுள் நம்பிக்கை போல ஒரு மூடநம்பிக்கையில் பாசிசத்தை தேர்தலைப் பயன்படுத்தி வீழ்த்தி விட முடியும் என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்.

எவ்வளவு குறுகிய காலமாக இருந்தாலும் பிரீத்திங் ஸ்பேஸ் மிகவும் முக்கியம் என்றார்கள்.

0-0-0

சென்னை சேத்துப்பட்டில் பல ஆண்டுகளாக அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவு நாள் மற்றும் பிறந்த நாளின் போது அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் மாலையிடுவதும் வழக்கமான செயல்தான்.

ஆனால், இந்த வருடம் அம்பேத்கர் சிலைக்கு மாலையிடுவதற்கு அனைத்து அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் போலீஸ் வழங்கி இருக்கும் ஜனநாயகத்தின் அளவு இரண்டே நிமிடம்.

படிக்க : அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக காட்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் !

இதை எதிர்த்து கேள்வி கேட்பதற்கும் சீந்துவதற்கும் நாதியில்லை. அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் போலீஸ் ஒதுக்கும் இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே மாலையிட்டுவிட்டு வருகிறார்கள். மக்கள் அதிகாரம் தோழர்கள் முழக்கமிடத் தொடங்கிய உடனே போலீஸ் சூழ்ந்து கொள்கிறது. “ஒவ்வொரு கட்சிக்கும் இரண்டு நிமிடம்தான் அனைவரும் கேட்டுக் கொண்டு அமைதியாக போய்விட்டார்கள். உங்களுக்கு கூடுதல் நேரம் கொடுக்க முடியாது” என்கிறார்கள்.

சேத்துப்பட்டில் மக்கள் வைத்தது அந்த சிலை, ஒரு மனிதன் தங்கள் ஊரில் ஒரு தலைவரின் சிலைக்குதான் விருப்பப்பட்ட நேரம் போல மாலையிடவும் மரியாதை செலுத்தவும் முடியாது என்றால் இது எப்படிப்பட்ட ஜனநாயகம்?

அது என்ன ரெண்டு நிமிடம்?

ஜெயலலிதாவின் சமாதியில் ஒரு நாள் முழுக்க பலரும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். மரியாதை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு நிமிடத்தை இந்த போலீஸ் ஒதுக்குமா ?

இதுவரை அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டதிலிருந்து பி.ஜே.பி.க்கு மாலை அணிவிக்க சேத்துப்பட்டு மக்கள் அனுமதி கொடுத்தது இல்லை.

ஆனாலும் தடையை மீறி போலீஸ் பாதுகாப்புடன் கடந்த முறை மாலை அணிவித்து சென்றார்கள் பிஜேபியினர்.

அதுபோலவே இவ்வாண்டும் அம்பேத்கருக்கு மாலையிட வருகிறார்கள். அதனால்தான் மற்ற அனைத்து கட்சிகளுக்கும் இரண்டு நிமிட ஜனநாயகம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதுவரை போலீசு இப்படி இரண்டு நிமிடம் அனுமதி கொடுத்ததில்லையே என்று கேட்டால், “பழங்கதையை பேசாதே இப்போது நாங்கள் சொல்வதை செய்’ என்கிறது போலீசு.

கும்பகோணத்திலே அம்பேத்கருக்கு பட்டையிட்டு காவி உடை போட்டு சுவரொட்டி ஒட்டி இருக்கிறார்கள் இந்து மக்கள் கட்சியினர். அவர்களை யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனாலும் அம்பேத்கரின் கொள்கைகளைப் பற்றி பேசுவதற்கும் முழக்கமிடுதற்கும் இங்கே ஜனநாயகம் இல்லை. இதே நேரம் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இந்த நேரமும் கிடைக்காமல் போயிருக்கும் என்று நம்மை நாமே தேற்றிக் கொள்வதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.

0-0-0

சேத்துப்பட்டில் போலீசின் அராஜகமான நடவடிக்கைகளை கண்டு திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளும் திமுக ஆதரவு அமைப்புகளும் அமைதியாக இருக்கிறார்கள்.

இப்போது ஏதாவது நாம் பிரச்சினை செய்தால் அதை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி நுழைந்து விடுவானே என்பது அவர்களுடைய கவலை.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யும் இனியும் நுழைவதற்கு இடமில்லை. ஏற்கனவே அவர்கள் அரசுத் துறையிலும் போலீசிலும் நிரம்பி விட்டார்கள் என்பது தானே இந்த நடவடிக்கை.

தோழர்களே நீங்கள் கேட்ட பிரீத்திங் ஸ்பேஸ் வந்துவிட்டது. இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று நீங்கள் சொல்லுங்கள்.

கடந்த வருடம் மயிலாடுதுறையில் அம்பேத்கரின் போட்டோவுக்கு மாலையிட்டதால் கலவரம் ஏற்பட்டது. அதனையே காரணம் காட்டி இப்போது அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போட்டிருக்கிறது போலீசு.

இதற்கு பெயர் சமூக நீதியா? அம்பேத்கரின் போட்டோவுக்கு மாலையிட தடுப்பவர்களை தூக்கி சிறையில் வைத்து விட்டு, அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துபவர்களுக்கு அனுமதி அளிப்பதுதான் சமூக நீதி.

ஆதிக்க சாதியின் தாக்குதல் போது இரண்டு பேரும் அமைதியாக இருங்கள் என்று சொல்லக்கூடிய இந்த பிரீத்திங் ஸ்பேஸ்- ஐ வைத்துக்கொண்டு நம்மால் என்ன செய்ய முடியும் ?

பாசிசத்தை வீழ்த்துவதை கைவிட்டு எப்பாடுபட்டாவது திமுக ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவுதான் ரெண்டு நிமிட ஜனநாயகம்.

இன்று சந்தர்ப்பவாத சிந்தனை தான் தமிழ்நாட்டின் கோயில்களை பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பொழுதும் வாயை மூடி அமைதியாக இருக்கவைக்கிறது.

எடுத்துக்காட்டாக வயலூர் முருகன் கோவில் பிரச்சினை எடுத்துக் கொள்வோம். இந்தக் கோயிலில் சட்ட விரோதமாக பார்ப்பனர்கள் எட்டு பேர் நுழைந்து வேலை செய்கிறார்கள் என்று பலரும் கூறுகிறார்கள். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அந்த கோயிலில் சட்டவிரோதமாக எட்டு பேர் வேலை செய்கிறார்கள் என்றால் அவர்கள் மீது ஏன் இன்னும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற கேள்வியை கேட்பதில்லை. இந்தக் கேள்வியைக் கூட கேட்பதற்கு நாதியில்லாமல் போவதற்கு தானா பிரீத்திங்ஸ் ஸ்பேஸ்?

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்துபோது, மூத்த வழக்குரைஞரை கூட நியமிக்காமல் சதி செய்தது அன்றைய அதிமுக அரசு. இதை அம்பலப்படுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இன்றைக்கு வயலூர் முருகன் கோவில் தொடர்பான மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற கூடிய வழக்கில், மூத்த வழக்கறிஞர் நியமிக்காமல் அதே வேலையை செய்கிறது தமிழ்நாடு அரசு. ஆனால் அதைப் பற்றி மூச்சு விடுவதில்லை. என்ன ஒரு முரண்பாடு பாருங்கள்? ப்ரீத்திங்ஸ் ஸ்பேஸ் என்பது மூச்சு விடுவதற்கான நேரம். திமுக செய்யக்கூடிய தவறை பற்றி பேசாமல் மூச்சு விடாமல் இருப்பதற்குமான நேரமா?

0-0-0

இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை கட்டுப்பாட்டில் அடக்கு முறையின் கீழ் கொண்டுவர முடியும் என்பது பணமதிப்பிழப்பு ஜி.எஸ்.டி கோவிட்-19 முதலான எல்லா சம்பவங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.

படிக்க : ஒடிசா : அம்பேத்கர் பிறந்த நாளில் தாக்குதல் தொடுத்த பஜரங் தள் !

அதுவே இப்பொழுது அரசியல் தளத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு மனிதன் சுவாசிப்பதற்கு தேவையானதற்கும் குறைவான அளவு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டால், அவனும் இறந்து தான் போவான். ஆனால் அவனது மரணம் மிகவும் கொடூரமானதாக இருக்கும். அதைப்போலவே தேவையானதற்கு மிகவும் குறைவாக கொடுக்கப்படும் ஜனநாயகம் மரணத்தை விட மிக மோசமானதாகும்.

பாசிசத்தை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியும் என்பதும் தேர்தலை பாசிசத்துக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பது போன்ற சிந்தனைகள் நம்மை அதிகார வர்க்க, பாசிசத்துக்கு அறியாமலேயே கீழ்படிய செய்து வருகின்றது.

புரட்சிக்கு குறைவான எதற்கு சம்மதித்தாலும் அது சந்தர்ப்பவாதத்தில் தொடங்கி மக்கள் பாதிக்கப்படும்போது வாயை மூடி அமைதியாக இருக்கும் சகுனித்தனத்தில் தான் போய் முடியும்.

மருது
மக்கள் அதிகாரம் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க