அரசுக்கு எதிராக மங்கோலிய மக்கள் போராட்டம்!

தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை போன்ற உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுவரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, மங்கோலியாவில் நடைபெற்றுவரும் இந்த போராட்டமானது, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தோல்வியையும், என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அதன் நெருக்கடியின் தீவிரத்தையும் உணர்த்தும் மற்றுமொரு வெளிப்பாடாகும்.

டந்த டிசம்பர் 4–ஆம் தேதி முதல் மங்கோலிய நாட்டில், நிலக்கரி துறையில் பில்லியன் கணக்கில் நடந்த ஊழலைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசுக்கெதிராக மக்கள் போர்க்குணமிக்க முறையில் போராடி வருகின்றனர். குறிப்பாக, பாராளுமன்றத்தை கலைக்கக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் (-30 °C) உறையவைக்கும் பணியிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்; இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே, உள்ளூர் சிறு வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டக்காரர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கும் வகையில் உணவு, தேநீர் முதலானவற்றை வழங்கி வருகின்றனர்.

அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க நிறுவனமான எர்டெனெஸ் டவன் டோல்கோயிலில் (Ertenes Tavan Tolgoi-ETT) ஊழல் நடந்து இருப்பதுதான் இப்போராட்டம் தொடங்குவதற்கு அடிப்படைக் காரணமாகும்.

படிக்க : உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !

இந்நிறுவனமானது 2011 முதல் 2017 வரை நிலக்கரி ஏற்றுமதி செய்ததற்கான எந்த தரவுகளையும் சமர்ப்பிக்கவில்லை. கடந்த அக்டோபர் மாதம் கிட்டத்தட்ட நான்கு லட்சம் டன் நிலக்கரி கணக்கில் வரவில்லை என மங்கோலிய அரசே தெரிவித்துள்ளது.

இந்த ஊழல் குற்றச்சாட்டில் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பட்டுல்கா கால்ட்மாவும் ஈடுபட்டுள்ளார். அவர்மட்டுமன்றி பல்வேறு முக்கிய தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். ஊழல் குற்றவாளிகளின் முழுமையான பட்டியலை வெளியிடக்கோரியும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் மங்கோலிய மக்கள் போராட்டத்தை துவங்கினர். ஆனால், தற்போது போராட்டம் அரசைக் கலைக்கக் கோரி முன்னேறி வருகிறது. கடந்த வாரம் போராட்டகாரர்கள் அரச மாளிகையை கைப்பற்ற முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

000

சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் அமைந்திருக்கும் நாடுதான் மங்கோலியா. அங்கு சுரங்கத் தொழில் மிக முக்கிய தொழில் ஆதாரமாகும். மேலும், உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் மிக முக்கிய பங்கு வகிக்கின்ற தொழிலாகவும் அது இருக்கிறது. தாமிரம், தங்கம், நிலக்கரி உள்ளிட்ட கனிமங்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் அந்நாட்டு அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவருவதைப் போல, மங்கோலியாவிலும் மக்கள் போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் நடந்து வருகின்றன.

சான்றாக, கடந்த 2015-ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்கத்தின் ஏகபோக உரிமையை மங்கோலிய அரசு சீனாவை சார்ந்த நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுத்ததை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் போராட்டங்களைக் கட்டியமைத்ததைக் குறிப்பிடலாம். அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே தீக்குளித்ததன் மூலம் இப்போராட்டத்தின் தீவிரத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடந்தாலும், மங்கோலியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நிலக்கரி ஏற்றுமதியில் மங்கோலியா வளர்ச்சியடைந்து இருந்தாலும், சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கைநிலைமையானது நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்தே வந்தது. கொரோனா பெருந்தொற்றானது மக்களின் இந்நிலைமையை மேலும் மோசமாக்கியது.

கொரோனா ஊரடங்கில் புதிதாக குழந்தை பெற்ற தாய் ஒருவர், கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்ததால், அரசாங்கத்தால் உடலை உறைய வைக்கும் கடுங்குளிரில் எவ்வித பாதுகாப்பு சாதனமும் இன்றி தனிமைப்படுத்தும் அறைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவத்தை ஒட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே  நாடு தழுவிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்தது.

அப்போராட்டமானது அந்நிகழ்வை மட்டும் கண்டிப்பதோடு நில்லாமல், கொரோனா பெருந்தொற்றை மங்கோலிய அரசு முறையாக கையாளதை எதிர்த்த போராட்டமாக மாறியது. மக்கள் போராட்டத்தின் தீவிரத்தால், அப்போதைய பிரதமர் உக்நாகின் அரசின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆள்பவர்கள் மாறினாலும், மக்களின் வாழ்நிலைமைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது வரை மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும் எவ்வித நடவடிக்கைகளையும் மங்கோலிய அரசு மேற்கொள்ளவில்லை; ஏற்றத்தாழ்வுகள் சற்றும் குறைந்தபாடில்லை; பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக, தற்போது பணவீக்கமானது 15.2% -ஆக உயர்ந்துள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதன் விளைவாக ஒருபுறம் வறுமை, வேலையின்மை முதலானவற்றால் மக்கள் அவதிக்குள்ளாவதுடன், மறுபுறம் கார்ப்பரேட் முதலாளிகள் தங்களுடைய இலாபவெறிக்காக கனிமவளங்களை வரைமுறையின்றி வெட்டி எடுப்பதால் நாட்டின் சுற்றுச்சுழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் வாழ முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காற்று மாசுபாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

படிக்க : ஐரோப்பிய உணவு வங்கிகள்: ஏகாதிபத்திய உலகின் அவலம்

இந்நிலைமைகளை தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் – ரஷ்யா போரானது மேலும் தீவிரப்படுத்தியது. இந்த நிலைமைதான், -மக்களால் இனிமேல் வாழவே முடியாது என்கிற நிலைமைதான்- அரசுக்கு எதிரான இம்மாபெரும் போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும் இணைத்துக்கொள்ள தூண்டியது. இதுதான் வெறும் ஊழல்வாதிகளுக்கெதிராக ஆரம்பித்த போராட்டத்தை அரசுக்கெதிரான போராட்டமாக மாற்றியது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை போன்ற உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுவரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, மங்கோலியாவில் நடைபெற்றுவரும் இந்த போராட்டமானது, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தோல்வியையும், என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அதன் நெருக்கடியின் தீவிரத்தையும் உணர்த்தும் மற்றுமொரு வெளிப்பாடாகும்.

இசை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க