திருநெல்வேலி: மருத்துவமனை பணியார்களுக்கு ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கும் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்!

கடந்த அக்டோபர், நவம்பர் இருமாதங்களும் சம்பளம் போடவில்லை. இந்த மாதமும் 20-ஆம் தேதி நெருங்குகிறது இன்னமும் சம்பளம் ஏறியபாடில்லை. ஒருநாளைக்கு சம்பளம் ரூ.250 தரப்படுகிறது. ஆனால் ஒருநாள் விடுப்பு எடுத்தாலோ ரூ.400 பிடித்தம் செய்கிறார்கள்.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் 88 பேர் டிசம்பர் 19, 2022 காலை 7 மணி அளவில் ஊதியம் முறையாக வழங்காததை கண்டித்தும், ஊதியம் முறையாக வழங்கக் கோரியும் மருத்துவமனைக்கு வெளியே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலியில் ரூ.150 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி, 2019-ல் மதுரையில் நடைபெற்ற விழாவில் இருந்து திறந்து வைத்தார். பிரதமரின் சுவஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டம்-3 இன் கீழ் மத்திய அரசு சார்பில் ரூ.120 கோடி, மாநில அரசு சார்பில் ரூ.30 கோடி என மொத்தம் ரூ.150 கோடியில் இம்மருத்துவமனை தொடங்கப்பட்டது.

8 தளங்களுடன் 20 ஆயிரத்து 64 சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாரத் மேன்பவர் எனும் நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட்டனர். நான்கு வருடமாக முறையான சம்பளம் எதுவும் அவர்களுக்கு தரப்படுவதில்லை என்று பணியாளர்கள் கூறுகின்றனர். 2 அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறை சம்பளம் வழங்குவது, ஈ.எஸ்.ஐ, பி.எஃப் போன்றவை பிடித்தாலும் அது எந்த கணக்கிலும் காட்டப்படுவதில்லை என்றும் தெரிவித்தனர்.

படிக்க : சிதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்!

கடந்த அக்டோபர், நவம்பர் இருமாதங்களும் சம்பளம் போடவில்லை. இந்த மாதமும் 20-ஆம் தேதி நெருங்குகிறது இன்னமும் சம்பளம் ஏறியபாடில்லை. ஒருநாளைக்கு சம்பளம் ரூ.250 தரப்படுகிறது. ஆனால் ஒருநாள் விடுப்பு எடுத்தாலோ ரூ.400 பிடித்தம் செய்கிறார்கள். இதற்குமுன் முறையான சம்பளம் கேட்டு சென்ற 4 தொழிலாளர்களை மிரட்டி அனுப்பி உள்ளது ஒப்பந்த நிறுவனம். அதன்பின் 7 பேர் வேலையை விட்டு நின்றுவிட்டனர். தொடர்ந்து சம்பளப் பிரச்சினை நீடிக்கவே பொறுத்துப் பார்த்த 3 ஷிப்ட்-ல் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர்.

செய்தியறிந்து சென்ற மக்கள் அதிகாரம் இணைச் செயலாளர் கின்ஷன் தனியார்மயத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் நிலை பற்றியும், இம்மாதிரியான போராட்டங்களால் மட்டுமே நம்முடைய உரிமைகளை நாம் மீட்க முடியும் என்று போராடும் தூய்மைப்பணியாளர்களிடம் பேசினார்.

போராட்டத்தை கண்டு ஆடிப்போன மருத்துவமனை நிர்வாகம் முதலில் நான்கு பேரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், பணியாளர்கள் அனைவர் முன்னிலையிலும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர். வேறுவழியின்றி நிர்வாகம் ரோட்டுக்கு வந்தது. பேச்சுவார்த்தையின் போது பணியாளர்களை வேலைக்கு எடுத்த பாரத் மேன்பவர் நிர்வாகத்தை சார்ந்த யாரும்வரவில்லை. விசாரித்தால் அந்த நிறுவனம் தற்போது ஒப்பந்தத்தில் கிடையாது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது பணியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படியானால் தாங்கள் யாருக்கு கீழ்தான் வேலை செய்கிறோம் என்று கேட்டனர் பணியாளர்கள். மருத்துவமனை நிர்வாகமோ மலுப்பலாகவே பதில் கூறியது. பின்னர் வரும் வெள்ளிக்கிழமை சம்பளம் அக்கவுண்ட்டில் ஏற்றப்படும் என்று உறுதி அளித்தது. வெள்ளிக்கிழமை சம்பளம் ஏறவில்லையானால் திங்கள்கிழமை மறுபடி போராட்டம் தொடரும் என்ற எச்சரிக்கையுடன் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் மருத்துவமனை கட்ட ரூ.150 கோடி ஒதுக்கிய மத்திய, மாநில அரசுகள் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை ஏன் ஒப்பத்த முறையில் பணிக்கு அமர்த்துகிறது? இதன் காரணம் என்ன? இவர்களை நிரந்தரமாக பணியிலமர்த்தி மாதம் முறையான சம்பளம் தருவதில் அரசுக்கு என்ன பிரச்சினை வந்துவிடும்? என்ன பிரச்சினை என்றால் இங்குதான் அரசின் கொள்கை தலையிடுகிறது. அதுதான் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான தனியார்மயக் கொள்கை!

பணியாளர்களில் ஆரம்பித்து செவிலியர்கள், மருத்துவக் காப்பீடு என்று ஒவ்வொரு பிரிவும் தனியார்மயப்படுத்தி இறுதியில் மொத்த மருத்துவத்துறையும் தனியாருக்கு தாரை வார்க்கப்படப்போகும் கொடுமை நம்மை எட்டுவதற்கு நாம் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதன் ஆரம்ப புள்ளிதான் இது. நாளை முழுவதும் தனியாருக்கு என்றானபின் இன்று உழைத்த காசையே தர மறுக்கும் முதலாளிகள், நாளை நம்மை பார்த்து ஓசியில் உனக்கு நான் மருத்துவம் பார்க்க வேண்டுமா என கண்டிப்பாக கேட்பார்கள். அப்போது அரசு மருத்துவமனையை மட்டும் நம்பியிருக்கும் ஏழை, எளிய மக்கள் மருத்துவம் பார்க்க வழியின்றி தவிப்பார்கள். அந்த நாள் வராதிருக்க வேண்டுமானால் இந்த நாளில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

படிக்க : மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

தனியார் வசம் ஒப்படைத்தால்தான் நிர்வாகம் நன்றாக நடக்கும் என்கிற சில தனியார்மய ஆதரவாளர்களின் எண்ணங்களுக்கு இப்போராட்டம் ஒரு சாட்டையடி. தன் நிறுவனத்தின் கீழ் வேலை செய்த தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் தரக் கூட துப்பில்லாமல், அவர்களின் உழைப்பை சுரண்டிதான் இந்நிறுவனங்களும் அதன் முதலாளிகளும் வயிறு வளர்க்கின்றனர். அரசு நிர்வாகமும் தனியார்மயத்திற்கு ஆதரவான கொள்கையை தீவிரப்படுத்தி வருகிறது.

கொரோனா சமயத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பூ போட்டு வணங்கி ஏமாற்று நாடகம் நடத்திய மோடியின் பா.ஜ.க கட்சியினர் ஒருவர் கூட இந்த போராட்டத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை.

மருத்துவமனை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மருத்துவர்கள், பொதுமக்கள் அனைவரும் இணைந்திருக்க வேண்டிய நேரமிது. புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் இம்மாதிரியான பொருளாதார போராட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதன் மூலமே ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்குமான தீர்வை நோக்கி நகர முடியும் என்பதை உணர்ந்து போராட்டக்களத்தில் இறங்க வேண்டிய தருணமிது!

தகவல்:
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9385353605.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க