சிதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்!

உழைக்கும் மக்களுக்கு போதுமான தரமான மருத்துவனைகளையும், தரமான மருத்துவர்களையும், சுகாதாரமான மருத்துவ வளாகங்களையும் ஏற்படுத்தி தராத இந்த சிதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பும், தமிழக அரசும்தான் பிரியாவின் மரணத்திற்கு முதன்மை காரணம்.

0

கால்பந்து வீராங்கனை பிரியா நவம்பர் 15 ஆம் தேதி அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் மரணமடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சார்ந்தவர் ரவிக்குமார். அவரது மகள் பிரியா சென்னை கடற்கரையில் உள்ள ராணிமேரி அரசு கலைக் கல்லூரியில், பி.எஸ்.சி உடற்கல்வி பிரிவில் படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள பிரியா மாவட்ட, மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சென்ற ஆண்டு பிரியாவின் வலது காலில் எலும்புகளை இணைக்கும் தசைநார் கிழிந்திருப்பது (Ligament tear) கண்டறியப்பட்டது. இப்பிரச்சினையின் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி பிரியாவிற்கு கடுமையாக வலி ஏற்பட்டுள்ளது. வலியால் அவதிப்பட்ட பிரியா-வை கொளத்தூர், பெரியார் நகர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் நவம்பர் 7 ஆம் தேதி காலை பத்து மணிக்கு சிறிய துளைமூலம் அறுவை சிகிச்சை (arthroscopy) செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் பிரியா, வலி அதிகம் இருப்பதாக கூறியுள்ளார். வலது காலின் ரத்தப்போக்கை தடுப்பதற்கு பிரதானமான தமனியைச் (artery) சுற்றி டார்னிக் (Tourniquet) எனப்படும் கயிறு போன்ற பட்டைகள் அழுத்திக் கட்டப்பட்டுள்ளது. அதனால் அவருடைய கால்கள் வீக்கம் ஏற்பட்டுள்ளது. ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, டார்னிக் கட்டப்பட்டியிருந்த பகுதிக்கு கீழே இருந்த செல்கள் அழுக ஆரம்பித்ததுள்ளது. இதனை அறிந்த மருத்துவர்கள் பிரியாவை நவம்பர் 8 ஆம் தேதி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

படிக்க : தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு !!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரியாவை பரிசோதனை செய்து பார்த்த போது வலது கால் உணர்விழந்து விட்டதாக கூறியுள்ளனர். வலது காலை தூண்டித்தால் மட்டுமே அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அதன்படி கால் அகற்றப்பட்டு அழுகிய செல்களை அகற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், பிரியா நவம்பர் 15 ஆம் தேதி காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார்.

தமிழ்நாடு அரசு மருத்துவ வல்லுநர் குழு, பெரியார் நகர் மருத்துமனை மருத்துவர்களிடம் நடத்திய விசாரணையில், அங்கிருந்த இரு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என்றும் அவர்களை விருதுநகர் மற்றும் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பிரியாவின் சகோதர் நக்கீரன் செய்தி ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியில், “என்னுடைய சகோதரிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும். இந்த மருத்துவர்களின் பெயர்களை எந்த ஊடகத்திலும் கூறவில்லை. அவர்களின் புகைப்படமும் எங்களிடமில்லை. பெரம்பூர் பெரியார் நகர் மருத்துவமனையில் இருக்கும் பால் ராம் சங்கர் மற்றும் சோமசுந்தர் ஆகிய மருத்துவர்கள்தான் அவர்கள். போலீசாரிடம் புகார் கொடுத்தும் மூன்று நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரியா இறந்தவுடன் முதல் தகவல் அறிக்கையை காண்பித்தது போலீசு. பிரியாவின் வலதுகால் எக்ஸ்ரே ரிப்போர்டில் எலும்புக்கு நடுவில் போல்டு இருக்கிறது. சவ்வு கிழிச்சத்துக்கும் போல்ட்டுக்கும் என்ன சம்பந்தம்? என்று கேள்வி கேட்டதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. சிகிச்சையின் போது நாங்கள் எழுப்பிய எந்த கேள்விகளுக்கு உரிய பதிலை மருத்துவமனை நிர்வாகமும் போலீசும் கூறவில்லை. நஷ்ட ஈடு கொடுத்தால் பிரியா திரும்பி வருவாரா?” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

படிக்க : மதுரை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா இறப்புகள் || புமாஇமு கள அறிக்கை

பிரியாவின் சகோதரர்களில் மூவரில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், இழப்பீடு வழங்கப்படும் என்றும், இடமாற்றம் செய்யப்பட்ட இரு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மேலும் பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானது ஆனால் கவனக்குறைவாக அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சிகிச்சை சரிதான் ஆனால் அதில் கவனக்குறைவு என்று கூறி சிதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பை பாதுகாக்கிறார் அமைச்சர். உறவினர்கள் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சிதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பை பாதுகாக்கிறது போலீசுத்துறை.

வலதுகாலின் சவ்வு பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு சென்ற கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு அலட்சியமாக மருத்துவம் பார்த்த இரண்டு மருத்துவர்கள் மட்டும்காரணம் அல்ல. உழைக்கும் மக்களுக்கு போதுமான தரமான மருத்துவமனைகளையும், தரமான மருத்துவர்களையும், சுகாதாரமான மருத்துவ வளாகங்களையும் ஏற்படுத்தி தராத இந்த சிதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பும், தமிழக அரசும்தான் பிரியாவின் மரணத்திற்கு முதன்மை காரணம்.

ரோகித் வெமுலா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க