சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த மாணவி பிரியா பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற கால்பந்து வீராங்கனை. குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கால்பந்து விளையாட்டில் அவர் சாதனைகள் பல படைப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில்தான் விளையாட்டின்போது ஏற்பட்ட காயத்தால் முழங்கால் ஜவ்வு கிழிந்துள்ளது. அதை சரி செய்ய கொளத்தூர் பகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாமல் காலை துண்டிக்கும் நிலைமைக்கு கொண்டு சென்றது. காலை அகற்றிய போதும் உடலின் உறுப்புகள் செயல் இழப்பது தொடர்ந்தது இறுதியாக பிரியா உயிரிழந்தார்.

வீராங்கனை பிரியாவிற்கு சரியாக சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால், இவர்களை மட்டும் குற்றவாளி கூண்டில் ஏற்றும் இந்த அரசின் யோகிதை என்ன?

வீராங்கனை பிரியாவின் பயிற்சியாளராக இருந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் பேசும்போது, “இதேபோல எனது நண்பன் ஒருவனுக்கும் காலில் ஜவ்வு கிழிந்தது. ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து அந்த பிரச்சினையை சரி செய்து விட்டான். ஆனால் பிரியாவின் குடும்பம் அந்தப் பணத்தைக் கூட செலவு செய்ய முடியாத பின்னணி கொண்டது. அதனால்தான் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அவர் உயிருடன் திரும்பவில்லை” என கூறியுள்ளார்.


படிக்க : சிதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்!


ஒரு தேசிய அளவில் விளையாடக்கூடிய வீராங்கனையை எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து கவனித்துள்ளார்கள் என்பது அந்தப் பயிற்சியாளரின் பேச்சு அழுத்தமாக பதிவு செய்கிறது.

கிரிக்கெட் என்ற விளையாட்டை எடுத்துக் கொண்டால் அதில் விளையாடும் வீரர்களை தங்கத் தட்டில் வைத்து தாங்குகிறார்கள். அவர்களுக்கு அடிபட்டால் உடனடியாக மிகப்பெரும் மருத்துவமனைகளில் தனிச்சிறப்பான கவனம் கொடுத்து சரி செய்கிறார்கள். அவர்களின் ஆடம்பரங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் செலவு செய்யும் பணத்தில் சொற்பமான அளவு ஒதுக்கி இருந்தால்கூட இன்று பிரியாவின் உயிர் பிரிந்து இருக்காது.

கடந்த ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் சதுரங்கப்போட்டி நடைபெற்றது. போட்டியை நடத்த தமிழக அரசு செய்த செலவு ரூ.92 கோடி என்கிறார்கள். சென்னை முழுவதும் விளம்பர பேனர்கள், வரவேற்பு பாடல், கலை நிகழ்ச்சிகள் என குதூகளித்தார்கள். இதில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஒதுக்கி இருந்தால் கூட இன்று பிரியா  காப்பாற்றப்பட்டிருப்பார்.

சென்னை சதுரங்கத்திற்கு உலகின் 180 நாடுகளை சேர்ந்த வீரர்கள் வருகிறார்கள். அந்த நாட்டின் பார்வை அனைத்தும் தமிழகத்தின் மீது படும். அங்கிருந்து முதலீடுகளைக் தமிழகத்தில் குவிப்பார்கள். அதனால் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம்.

கார்ப்பரேட் நிறுவனங்களை இங்கு கொண்டுவந்து குவிப்பதற்காக ரூ.100 கோடிகள் செலவு செய்யலாம். அதேபோல, கிரிக்கெட் விளையாட்டின் மூலம் விளம்பரங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான கோடிகள் சம்பாதிக்கலாம். இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் நோக்கத்துடன் இணைக்கப்படும் விளையாட்டுகளில் உள்ளவர்களுக்கு ஆடம்பரங்களும் சுபபோகமான வாழ்க்கையும் உத்தரவாதம். அந்த நிலைக்கு உயராத நடுத்தர வர்க்கத்திற்கு சொந்தக் காசில் ஓரளவு அவர்களே சிகிச்சை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், உழைக்கும் வர்க்கத்து வீட்டு பிரியா போன்றவர்கள் அரசு மருத்துவமனையை நம்பி மிகவும் வறிய பின்னணியிலேயே வாழ்கின்றனர்.

இதுபோக கார்ப்பரேட்டுகளுக்கு இலட்சக்கணக்கான கோடிகளை வரிசலுகைகளாக வாரி வழங்கும் அரசுகள். கல்வி சுகாதாரம் மருத்துவம் போன்ற அனைத்திலும் வறிய ஏழை நாடுகளை காட்டிலும் குறைந்த அளவே நிதி ஒதுக்குகின்றனர். இதன் விளைவு டாக்டர்கள் பற்றாக்குறை மருத்துவமனைகள் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை என அனைத்தும் தலை விரித்தாடுகிறது. மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் முறையான ஆலோசனை பெறுவது கூட சிரமமாக மாறி வருகிறது.

தமிழகத்தில் மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள், குக்கிராமங்கள் வரை மருத்துவமனைகள் உள்ளது என நாம் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது. பிரியாவின் மரணம் அது அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதுதான் அரசு மருத்துவக் கட்டமைப்பின் அவலம்.


படிக்க : மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!


தனியார்மய-தாராளமய-உலகமய ஆதிக்கத்தின் கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு கார்ப்பரேட்டுகளிடம் மருத்துவத்தை ஒப்படைக்கும் வேலையைத்தான் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். அதற்கு திராவிட மாடல் அரசும் விதிவிலக்கல்ல. உழைக்கும் வர்க்கத்தின் அனைத்து தேவைகளையும் உரிமைகளையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கிறார்கள். நமது உரிமைகளையும் தேவைகளையும் நாம்தான் போராடி பறித்தெடுக்க வேண்டும்.

வீராங்கனை பிரியா மருத்துவமனையில் இருக்கும் போது, தனது நண்பர்கள் உறவினர்கள் என பல இடமும் பேசும்போது மீண்டும் “மாஸாக என்ட்ரி” கொடுத்து திரும்ப வருவேன்  என உறுதியாக கூறியுள்ளார். ஆனால் பிரியா திரும்பவில்லை. இன்னும் இதுபோல பல பிரியாக்களை நாம் இழக்க வேண்டுமா? உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் “மாஸாக என்ட்ரி”கொடுத்து களத்திற்கு வருவதுதான் கார்ப்பரேட் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்கான வழி, வர்க்க பகைமையை தீர்க்க வழி. அதுவே பிரியாவிற்கு செலுத்தும் இறுதி அஞ்சலி!

ரவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க