மருத்துவ துறையில் வேத மரபுகளைத் திணிக்கும் மோடி அரசு!

இந்தியா முழுவதையும் ஒற்றை பண்பாட்டில் அடக்க முயலும் ஒன்றிய பாசிச மோடி கும்பல் இந்தியா முழுமைக்குமான ஒற்றை மருத்துவமாக ஆயுர்வேதத்தைத் திணித்து வருகிறது. ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம்! என்கிற ரீதியில் "ஆயூர்வேதத்தை தான் ஆதரிப்போம்" என்று முழங்கி வருகிறது.ச்

மிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 20 யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 19 கல்லூரிகள் தனியார் நிறுவனங்களுக்கு கீழ் இயங்கி வருகின்றன. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மட்டும் அரசு கல்லூரியாக இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு அடிப்படை கல்வி தகுதிகூட இல்லாத மணவாளன் என்பவர் தான் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வருகிறார்.

யு.ஜி.சி விதிப்படி ஒரு கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர், ரீடர் பதவிகளுக்குத் தேர்வாகக் கூடியவர்கள் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆனால், டிப்ளோமா மட்டுமே படித்துவிட்டு கடந்த 1997-ஆம் ஆண்டு அக்டோபரில் மருத்துவ அதிகாரியாக, தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்தவர் தற்போது கல்லூரியின் முதல்வர், இணை இயக்குநர் மற்றும் இயக்குநர் பதவிகளை வகித்து வருகிறார். மேலும், கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக பேராசிரியர்களின் பதவியில் தனக்கு வேண்டியவர்களை முறைகேடாக பணியில் அமர்த்திய புகாரும் உள்ளது.

மேலும், கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சமீபத்தில் இந்திய மருத்துவத்துறை மற்றும் ஹோமியோபதி நடத்திய தணிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஊழல் முறைகேடு குறித்து அலசி ஆராயும்போது இவரின் மற்றொரு கேடுகெட்ட அயோக்கியத்தனம் வெளிச்சத்துக்கு வந்தது. அது என்னவென்றால், யோகா மற்றும் இயற்கை மருத்துவ துறையே முறைகேடாக அங்கீகாரம் பெற்ற போலியான மருத்துவத்துறை என்பதுதான்.

இந்திய மருத்துவத் துறையில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி, சவுரிக் இக்பால் மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகள் மட்டுமே சட்ட அங்கீகாரம் பெற்று இயங்கிவருகின்றன. பின்னர் யோகா ஒரு துணை கல்வியாக உருவாக்கப்பட்டு ஆயுர்வேதத்திலும் சித்தாவிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது.

படிக்க :நீட் என்னும் அயோக்கியத்தனம்

இந்நிலையில்தான் அவற்றிலிருந்து யோகாவை மட்டும் தனியாக எடுத்து மேற்கத்திய இயற்கை மருத்துவத்தையும் அதனுடன் இணைத்து புதிதாக இளங்கலை யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (Bachelor of Naturopathy and Yogic Sciences) என்ற துறையை  உருவாக்கியது அன்றைய பாஜக அரசு. மருத்துவ துறையிலேயே இல்லாமல் சென்னை அரசு யோகா மற்றும் மருத்துவ கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வரும் இந்த படிப்புக்கு, ஒவ்வொரு வருடமும் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் ‘அங்கீகாரமும்’ மருத்துவ சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதனை விட அதிர்ச்சி என்னவெனில் வருடா வருடம் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்திலிருந்து மருத்துவ சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது என்பதுதான்.

இந்திய மருத்துவத்துறையில் உள்ள ஐந்து துறைகளும் இந்திய மருத்துவக் கழகத்தின் கீழ் வருவதால் நீட் நுழைவுத் தேர்வு மூலமாக மருத்துவ சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகளில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு இல்லாமலேயே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஏழை, எளிய மாணவர்களின் உயிரை காவு வாங்குகிறது என்பதனால் இந்த கல்லூரிகளுக்கு நீட் தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை சாதகமான அம்சமாக பார்க்க முடியாது. ஏனெனில் “நீட் தேர்வு இல்லாமலேயே மருத்துவர் ஆகலாம்” (Golden opportunity to become doctor without NEET) என்றும் விளம்பரம் செய்யப்பட்டு போலியான ஒரு மருத்துவ படிப்பில் மாணவர்களைச் சேர்த்து அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் கொள்ளை அடிக்கப்படுகிறது. இவ்வாறு, ஏழை, எளிய மாணவர்களின் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்ற இந்த போலியான மருத்துவ கல்லூரிகள் வருடா வருடம் பல லட்சம் கோடி லாபம் ஈட்டுகின்றன.

இவ்வளவு பெரிய ஊழலுக்கு பின்னாலும் மணவாளன்-தான் உள்ளார் என்றாலும் அதற்கு இந்த ஓட்டுக் கட்சிகளும் அரசு அதிகாரிகளும் துணை சென்றுள்ளனர். கடந்த அதிமுக அரசானது, தனது ஒன்றிய விசுவாசத்தைக் காட்டுவதற்காக செங்கல்பட்டில் 80 ஏக்கர் நிலத்தில் 100 கோடியில் சர்வதேச யோகா ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவியது. ஆனால், பழனியில் இடம் ஒதுக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும் சித்த மருத்துவ கல்லூரி தொடங்கியபாடில்லை.  மேலும் யோகாவிற்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டது.

ஏற்கனவே, 2015-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாசும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக தி.மு.க-வின் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் இதை மூடி மறைத்தனர். இந்தக் கல்லூரியை திறந்து வைத்தவரும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அரசின் அடைக்கலத்தின் மூலம்தான் இவர் இவ்வளவு அயோக்கியத்தனங்களையும்  ஆர்.எஸ்.எஸ்.-யிடம் அரங்கேற்றியுள்ளார். தற்போதும் ஆர்.எஸ்.எஸ். துணையோடு கொஞ்சமும் அச்சமின்றி தைரியமாக பேசி வருகிறார். சமீப காலமாக இந்த களவாணிகளின் கூட்டங்களில் ஆர்.என்.ரவி கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

படிக்க : SVS மருத்துவக் கல்லூரி வரலாறும் மோசடிகளும் – உண்மை அறிக்கை

இந்தியா முழுவதையும் ஒற்றை பண்பாட்டில் அடக்க முயலும் ஒன்றிய பாசிச மோடி கும்பல் இந்தியா முழுமைக்குமான ஒற்றை மருத்துவமாக ஆயுர்வேதத்தைத் திணித்து வருகிறது. ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம்! என்கிற ரீதியில் “ஆயூர்வேதத்தை தான் ஆதரிப்போம்” என்று முழங்கி வருகிறது. அதில் ஒரு அங்கமாகத்தான் யோகாவை பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன் டெல்லி தெருவெங்கும் படுத்து உருண்டெழுந்து யோகா ஆசனத்தை ஐ.நா.விலும் உலகெங்கிலும் எடுத்து சென்றது. அதனைத் தொடர்ந்து வெளிநாட்டினர் விரும்பி வாங்கக் கூடிய ஒரு பண்டமாக யோகாவும், தியானமும் மாற்றப்பட்டது.  பெரிய அளவு டாலர் புழங்கக்கூடிய ஆன்மீக சந்தை ஆனது. அதனை தொடர்ந்து பல கார்ப்பரேட் யோகா மடங்கள், யோக குருஜிகள் தோன்றினர். இன்றைய யோகக் கலையின் உலக சந்தை மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். நமது 52 இன்ச் மார்பு உடைய மோடி டெல்லி எங்கும் உருண்டு புரண்டதற்கு பின் ஒளிந்திருப்பது இவையே.

80 பில்லியன் அமெரிக்க டாலருடைய யோகா கலையின் உலகச் சந்தையின் லாபத்தை பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு லாபம் ஏற்றுவதற்கே இளங்கலை யோகா மற்றும் இயற்கை மருத்துவம் என்ற மருத்துவ பட்டப்படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெயரில் காலை 5 மணிக்கே மாணவர்களை எழுப்பி கர்மயோகா உள்ளிட்ட பெயர்களில் எல்லா வேலைகளையும் செய்ய சொல்லி துன்புறுத்துவது, மரம் வெட்ட சொல்வது, சமையல் செய்ய வைப்பது, காரை துடைக்க சொல்வது என பார்ப்பனிய அடிமைத்தனத்தை புகுத்துகின்றனர்.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் புகுத்தப்பட்ட பின்பு மருத்துவம் என்பது கடை சரக்காக மாறியது. அதற்கு தகுந்தாற்போல் சட்டங்களைத் திருத்தி புகுத்தினர். மத்தியில் பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்து மருத்துவ படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பை விட்டு விரட்டியடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே வேளையில் தமிழ்நாட்டில் உள்ள 20 யோகா மற்றும் மருத்துவ கல்லூரிகள் நீட் நுழைவு தேர்வேயின்றி, போலியான மருத்துவப்படிப்பு 20 வருடங்களுக்கு மேலாக கற்பிக்கப்பட்டு லாபம் ஈட்டுவதோடு காவி குப்பைகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் அவர்களுக்கு தேவையான அவர்களே கொண்டு வந்த நீட் தேர்வைகூட தூக்கி எறிந்து விட்டு தங்களது நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வர் என்பது அம்பலமாகிறது.

மருத்துவத் துறையில் ‘வேத மரபுகளை’ திணிப்பதற்காகவும்; ஏகாதிபத்திய கொள்ளை லாபத்திற்காகவும் மோடி கும்பலை அண்டிப் பிழைக்கும் மணவாளன் போன்ற கிரிமினல்களுக்கு எதிராக நம் மண்ணிற்கும் மரபிற்குமான அந்தந்த மாநிலங்களின் மெய்யியல் மரபு சார்ந்த மருத்துவங்களை உயர்த்திப் பிடித்து மருத்துவர்களும் ஆய்வாளர்களும் மாணவர்களும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவதே தீர்வாக அமையும்!


ஊமைத்துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க