1. தவறான உணவு முறை ( மிக அதிக மாவுச்சத்து உணவு முறை)

ஜங்க் ஃபுட் , ஃபாஸ்ட் ஃபுட் , குளிர்பானங்கள், பொறித்த உணவுகள் போன்றவற்றை அளவின்றி உண்பது. தெருக்குத் தெரு முளைத்திருக்கும் வடை பஜ்ஜி கடைகள் , பேக்கரிகளில் கிடைக்கும் கேக், பப்ஸ்கள், எண்ணெயில் பொறித்த பரோட்டாக்கள்.
ஒருகாலத்தில் பண்டிகை நாட்களில் மட்டுமே சாப்பிட்ட இட்லி இப்போது தமிழனின் தேசிய உணவானது. இப்படி நாளுக்கு நாள் வருமானம் கூடக்கூட தீனியும் கூடிக்கொண்டே செல்கிறது.

ஒருகாலத்தில் சரியான எடையில் இல்லாமல் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் அதிகம் பார்த்து வந்தது போய் இப்போது குழந்தைகள் அனைத்தும் குண்டாகி வருகின்றன. childhood obesity மேற்கத்திய நாடுகளை விட இங்கு அதிகமாகி வருகிறது.

ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் தான் இருக்க வேண்டிய எடையை விட சராசரியாக பத்து முதல் இருபது கிலோ அதிகமாக தான் இருக்கின்றனர். தவறான உணவு – பல தொற்று நோய்களுக்கு நம் உடலை திறந்து வைக்கிறது.

2. உணவுக்கேற்ற உடலுழைப்பு இல்லை

உணவு உண்பது அதிகமாகிக்கொண்டே வர வர .. உடலுழைப்பு மிக மிக குறைந்து கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட அனைவருக்குமே டேபிள் சேர் உத்தியோகம் தான். வெயில் தோலில் படுவதே அரிதென்று ஆகிவிட்டது. சிறு நடை கூட பாரதூரமாகிவிட்டது. ஆனால் உணவு , ஸ்நாக்ஸ் மட்டும் வேளைக்கு உள்ளே சென்று விடுகிறது. இதனால் உடல் கனக்கிறது. வயிற்றின் சுற்றளவு மெல்ல மெல்ல கூடுகிறது.

3. பெருகிவரும் குடிப்பழக்கம்

புகை மற்றும் குடி போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர். நட்பு வட்டாரங்களில் இருந்து வரும் அளவு கடந்த அழுத்தத்துக்கு ஆளாகி தினமும் குடிக்கு அடிமையாகும் இளைஞர் கூட்டம் பெருகி வருகிறது.

ஒருகாலத்தில் குடி பழக்கம் என்பது சமூகத்தால் வெறுக்கப்பட்டு வந்த நிலை போய் இப்போது ஃபேஸ்புக் , வாட்சப்பில் கூட தான் குடித்து கும்மாளமடிப்பதை வெளிப்படையாக இளைஞர்கள் பகிர்ந்து வருவதை பார்க்கிறோம்.

“சோசியல் ட்ரிங்கிங்” என்ற பெயரில் தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளும் இளைஞர்கள் இன்று மிக அதிகம்.

4. அதிவேக ஊர்திகளும் அதனால் வரும் விபத்துகளும்

தனது மகனுக்கு 18 வயது ஆகிவிட்டதா என்பதைக் கூட முழுதாக கவனிக்காத தந்தைமார்கள் தங்களது பிள்ளைகளுக்கு அதிக சிசி திறன் கொண்ட மோட்டார் பைக்குகளை வாங்கிக்கொடுக்கின்றனர்.

அதற்குரிய லைசன்சும் இல்லாமல் , தலைக்கவசமும் இல்லாமல், சைடு மிரர் கூட இல்லாமல் வண்டியை சர்ர் சர்ர் என்று நெடுஞ்சாலையில் கூட ரூல்ஸ் தெரியாமல் ஓட்டும் பல டீனேஜ் மாணவர்கள் ஒருநாள் மார்ச்சுவரியில் பிணங்களாக பிரேதப்பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.

5. பணம் மட்டுமே குறிக்கோளாய் மாறிப்போன சமுதாயம்

ஒரு இளைஞனுக்கு திருமணம் செய்ய அத்தியாவசியத்தேவை என்ன ? பையன் பொறுப்பானவனாக இருக்க வேண்டும். எந்த கெட்ட பழக்கமும் இருக்கக்கூடாது.
கலகலப்பாக இருக்க வேண்டும். ஒரு டீசண்ட்டான வேலை அல்லது தொழிலில் இருக்க வேண்டும். அவனது குடும்பம் நல்லதாக இருக்க வேண்டும். இது தான் இதற்கு முந்தைய தலைமுறை வரை ஒரு திருமணத்திற்கு தேவையானதாக இருந்தது.

ஆனால் இப்போது என்னென்ன பார்க்கிறோம் ? பையன் எத்தனை இலக்க சம்பளம் வாங்குகிறான். அவன் பேரில் லோன் கடன் ஏதும் இருக்கிறதா? சொந்த வீடு இருக்கிறதா? வீட்டில் ஏசி இருக்கிறதா? கார் இருக்கிறதா?
என்று நமது லிஸ்ட் பெரிதாக பெரிதாக அவன் மேல் விழும் ஸ்ட்ரெஸ் மிக அதிகமாகிறது. ஸ்ட்ரெஸ் ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். அதை சரிவர கவனிக்காமல் விட்டால் உயிரை எடுத்து விடும்.

6. இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் ஆபத்தான மருத்துவம் தொடர்பான போலி பரப்புரைகள்

ஒரு பக்கம் ரத்த கொதிப்பு , இளவயது இதய நோய் , இளவயது ஸ்ட்ரோக், நீரிழிவு போன்ற நோய்கள் சமூகத்தில் பெருகி வருகின்றன. ஆனால் அதற்கு ஈடாக இளைஞர்கள் சமுதாயத்தில் போலி மருத்துவப் பரப்புரைகள் பரப்பப்பட்டு வருகின்றன.

அவற்றுள் பிரபலமான சில. பின்வருமாறு சுகர் ஒரு நோயே அல்ல. டயாபடிஸ் என்பது மருந்து மாபியா கண்டுபிடித்த நோய். எவ்வளவு ரத்த சர்க்கரை இருந்தாலும் சரி.. சிறுநீரில் சர்க்கரை வெளியானாலும் சரி. கவலைபடத்தேவையில்லை.

வெள்ளை சர்க்கரை தான் கெட்டது. நாட்டு சக்கரை நல்லது . நாட்டு சக்கரை போட்டு சாப்பிட்டால் சுகர் ஏறாது. ரத்த கொதிப்பு என்பது நோயே அல்ல. உடல் தன்னை தானே சரிசெய்து கொள்ள ரத்த கொதிப்பை வரவழைக்கிறது.

காய்ச்சலுக்கு சிகிச்சை தேவையில்லை. வீட்டில் பிரசவம் பார்ப்பது சிறந்தது. சிசேரியன் என்பது பணம் பறிக்கும் நாடகம் என்று மருத்துவம் சார்ந்த பல போலி பரப்புரைகளை உண்மை என்று நம்பி அதனால் உயிர் விடும் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

பல இளைஞர்கள் தங்களுக்கு வரும் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை துச்சமென ஒதுக்கி விட்டு நோய் முற்றியதும் மருத்துவமனைக்கு வரும் நிலை அதிகமாகி வருகிறது. இங்கே இளைஞர்கள் என்று மட்டும் குறிப்பிடக்காரணம்.

இளைஞிகளுக்கு இயற்கை தரும் கொடை யாதெனில் அவர்களின் இனப்பெருக்க காலமான 15 வயது முதல் 50 வயது வரை இது போன்ற ஸ்ட்ரெஸ், உணவு முறை மாற்றம், உடலுழைப்பின்மை, தூக்கமின்மை என்று அனைத்து ரிஸ்க் ஃபேக்டர்களும் இருந்தாலும் இளைஞர்களைப் போல இளைஞிகள் இளம் வயதில் அதிகமாக இறப்பதில்லை.

அவர்களை இயற்கையானது, ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்றவற்றில் இருந்து காக்கிறது. இது இயற்கையாக மனித இனம் தொன்றுதொட்டு தளைக்க உருவான ஏற்பாடு. 50 வயதுக்கு மேல் ஆண் பெண் இருபாலருக்குமான ரிஸ்க் சரிசமமாகிவிடுகிறது.

பெண்ணின் உடலில் இனப்பெருக்க காலம் முழுவதும் இருக்கும் ஈஸ்ட்ரோஜென் எனும் இந்த முக்கிய ஹார்மோன் அவளை பல இதயம் மற்றும் மூளை சார்ந்த ஆபத்துகளில் இருந்து காக்கிறது. இந்த பாதுகாப்பு ஆண்களுக்கு இல்லை.பெண்கள் ஆண்கள் போல அதிகம் குடிப்பதில்லை. புகைப்பதில்லை. (குறைந்தபட்சம் தமிழகத்திலாவது அப்படி இல்லை) யுவதிகள் யுவன்களைப்போல வாகனங்களில் எல்லை மீறி பறப்பதில்லை. இந்த காரணங்களும் இளைஞிகள் மரணிப்பதை குறைக்கிறது.

மேலும், தற்கொலை செய்து உயிர் நீப்பதிலும் ஆண்கள் தான் பெண்களை விட முந்துகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் செய்யும் தற்கொலை முயற்சி என்பது எதிர் இருப்பவரை மிரட்டுவதற்காகவே இருக்கிறது அல்லது பெண்கள் தற்கொலை முடிவுக்கு அத்தனை எளிதாக செல்வதில்லை. ஆனால் ஆண்கள் செய்யும் தற்கொலை முடிவானது. பெரும்பாலும் வெற்றிகரமானதாகிவிடுகிறது.

இளைஞர்கள் தற்கொலை செய்யுமுன் அதில் வெற்றி பெற பல ஹோம்வொர்க்குகள் கூட செய்யத் தவறுவதில்லை. எந்த பாய்சனை சாப்பிட்டால் காப்பாற்றவே முடியாது என்றெல்லாம் படித்து விட்டு வேளையில் இறங்குகிறார்கள்.

ஆகவே, அதிகமான சூசைடு அட்டம்ப்ட்களை பெண்களும் அதிகமான வெற்றிகரமான சூசைடுகளை இளைஞர்களும் புரிகிறார்கள். பெண்களுக்கு இயற்கையாகவே ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் சிறப்பாக வேலை செய்யும். ஆனால் அது ஆண்களுக்கு எளிதில் பிரச்சனைக்குள்ளாகும் ஒன்று.

அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சிறிய மாற்றத்தைக் கூட ஆண்களின் சிஸ்டம் அவ்வளவு எளிதில் ஏற்காது. ஆனால் பெண்களின் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் பெரிய மாற்றங்களைக்கூட எளிதில் ஏற்கும் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் தான் இளைஞர்களை விட இறப்பில் இளைஞர்கள் முந்துகிறார்கள்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க