டிடிஎஃப் வாசன் ‘இளைஞர்களின் தலைவன்’ ஆனது எப்படி?

எதைப் பற்றியும் கவலைப்படாத, பொறுப்பற்ற ஆளும் வர்க்கத்தால் திட்டமிடப்பட்டு மடைமாற்றப்பட்ட நுகர்வு கலாச்சாரத்தால் வெறியூட்டப்பட்ட  புதியதொரு தலைமுறைக்கு பொறுப்பேற்க தலைமை தாங்க டிடிஎஃப் வாசன், சவுக்கு சங்கர், சீமான், ஜிபி முத்து தயாராக இருக்கிறார்கள்.

ண்மையில் கடலூருக்கு வந்திருந்த டிடிஎஃப் வாசனை வரவேற்கவும் ஆராதிக்கவும் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்தனர். திரைப்பட இயக்குனர் ஒருவர் தன்னுடைய அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக டிடிஎஃப் வாசனை அழைத்து இருந்தார்.

டிடிஎஃப் வாசனை காண்பதற்காக நூற்றுக்குமேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வந்திருந்தனர். அலுவலக திறப்பு நிகழ்ச்சி முடியும் வரை தங்களுடைய வாகனத்தை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஊளையிட்டு கொண்டிருந்தனர்.

படிக்க: போபால்: பள்ளி வேனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வெறிப்பிடித்த மனிதர்களை உருவாக்கி வரும் சமூகம்!

போலீஸ் பலமுறை எச்சரித்தும் வாகனங்களை எடுக்க யாரும் தயாராக இல்லை. டிடிஎஃப் வாசன் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகுதான் கிளம்புவோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். சாலையின் நடுவில் இருக்கக்கூடிய வாகனங்களை போலீஸ் பறிமுதல் செய்ய நேரிடும் என்று கூறிய பிறகும் யாரும் மசியவில்லை. போலீஸ் இரண்டுமுறை தடியடி நடத்தியும் இளைஞர்கள் கலைந்து போகவில்லை. நிகழ்ச்சி முடிந்து காரில் திரும்பி சென்ற டிடிஃப் வாசனின் வாகனத்திற்கு முன்னும் பின்னும் பல இளைஞர்கள் தங்களுடைய இருசக்க வாகனத்தை மிக வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றனர்.  ஒரு சில வாகனங்கள் மிக வேகமாக ஓட்டியதால் விபத்துக்குள்ளாகின. பல வாகனங்களையும் போலீசார் மடக்கி ரூ.1000, ரூ.2000 என அபராதங்கள் விதித்தனர்.

அபராதங்களுக்கும் அடிதடிக்கும் அஞ்சி அடுத்தமுறை டிடிஎஃப் வாசன் கடலூருக்கு வரும் பொழுது யாரும் வராமல் இருக்கப்போவதில்லை.

யார் இந்த டிடிஎஃப் வாசன்?

அதிவேகமாக  இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதை தனது யூடியூப் (youtube) சேனல் மூலம் காட்டுபவர். மிக வேகமாக பைக் ஓட்டுவதை ட்ரெண்டிங் ஆக்கி அதை வைத்து இளைஞர்களை கவர்ந்திழுத்து வைத்திருப்பவர்.  மிக வேகமாக வாகனம் ஓட்டுவது தவறா? இல்லை. அது ஒரு மக்கள் விரோத செயல். மிக அதிவேகமாக வண்டி ஓட்டுவதால் பாதிக்கப்படுவது மக்கள். ஆனால், அச்செயலையே ஃபேஷனாக்கி செய்ய தூண்டுவதுதான் சமூக விரோத செயல்.

டிடிஎஃப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டுவது  தவறு என்று யாருக்கும் தெரியாதா? பிறகு எப்படி இத்தனை பேர் அவனை தலைவனாக ஏற்றுக் கொள்கிறார்கள். அவன் தனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஓடுகின்ற கார் ஜன்னலில் தலையை கொடுக்கிறார்கள். அவன் முகத்தை பார்ப்பதற்கு காத்திருக்கிறார்கள். போலீசிடும் அடி, உதை வாங்கி அபராதங்களைக் கட்டி டிடிஎஃப் வாசனின் பேச்சுக்காக ஏன் காத்து கிடக்கிறார்கள்?

தலைவனாக இருக்க வேண்டும் என்றால் சமூகப் பொறுப்போ, விழுமியமோ எதுவும் தேவையில்லை ஏன் அப்படி நடிக்கக் கூட வேண்டிய அவசியம் தேவையில்லை என்பதைத்தான்  டிடிஎஃப் வாசன்கள் நிரூபிக்கின்றார்கள்.

டிடிஎஃப் வாசன், ஜிபி முத்து, சவுக்கு சங்கர், சீமான் போன்றவர்கள்தான் வருங்கால இளைஞர்களின் தலைவர்களாக இருக்கிறார்கள் .

‘ஏ நார பயலே’,  ‘செத்த பயலே’ இப்படி வாய்க்கு வந்ததையும் நா கூசும் வார்த்தைகளையும் பைத்தியக்காரன் போல பேசிக்கொண்டு திரியும் ஜிபி முத்து ஒரு ட்ரெண்டிங் ஆன நபர். அவருக்கு பல லட்சம் ஃபாலோயர்ஸ்.

பெண்களை ஏமாற்றி அவர்களை  அபலைகளாக தவிக்க விட்ட சவுக்கு சங்கரும் சீமானும் இவ்வித கூச்சம் நாச்சமும் இன்றி திரிவது ஒருபுறம் இருக்கட்டும்; இவர்களையெல்லாம் தலைவர்களாகவும், நாயகனாகவும் எப்படி ஏற்றுக்கொண்டிருக்கிறது பழம் பெருமைமிக்க’, அறிவுமிக்க’ தமிழ் சமூகம்’?

மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் கொள்கைகள் நுகர் – தூக்கி எறி என்பதையே இளைஞர்களின் இதய கீதம் ஆக்கிவிட்டனர். மனிதநேயம், மனித மாண்பு, தன்மானம், அன்பு, இரக்கம், காதல், பாசம் என மனிதனுக்கு இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் அடித்து நொறுக்கி, யாரைக் கொன்றும் எப்படியும் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற சிந்தனையை உருவாக்குகிறது.  அதுதான் அஜித் படத்தில்வரும் வசனம் “நாம வாழனும்னா யார வேணும்னாலும் எத்தனை பேரை வேணும்னாலும் கொல்லலாம் தப்பு இல்ல.”

தனியார்மயம், தாராளமயம், உலகமயத்துக்குப் பின்னர் அரசு தன்னுடைய அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கழன்றுகொண்டு அனைத்து உற்பத்தி மற்றும் சேவை துறைகளையும் தனியாருக்கு தாரை வார்த்தது, அதையும் உலகமயமாக்கியது. ஏற்கனவே மிகவும் பிற்போக்கான சமுதாய அமைப்பைக் கொண்டிருந்த இந்த நாட்டில் உலகமயத்தின் வழியாக ஊடுருவும் டாலர்களின் வழியே  மேற்கத்திய நுகர்வுக் கலாச்சாரமும் ஊடுருவி பாய்ந்தது.

மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக நிரந்தரமான வேலைமுறை என்பது காணாமல்போய் நிரந்தரமற்ற, அடித்தளமற்ற உதிரி வர்க்கத் தொழிலாளிகளே எங்கும் நிறைந்திருக்கின்றனர்.

மெத்தப் படித்தவர்களுக்கு வேலை இல்லை. கிடைக்கும் வேலையும் போதுமானதாக இல்லை. ஆக எம்.பி.ஏ படித்தவர்கள் கூட ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் வேலை பார்த்து மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிப்பதை விட, மாதம் 15 நாட்கள் தூங்காமல் வேலை செய்வதன் மூலம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்று ola, uber, zomatto, swiggy-க்கு வேலைக்குச் செல்கிறார்கள்.

தான் விருப்பப்பட்ட நேரம்,  விருப்பப்பட்ட வேலைக்கு செல்லலாம். அதுவும் தான் எதிர்பார்த்த சம்பாத்தியத்தை பெறலாம். யாருக்கும் கட்டுப்பட்டு முறையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விருப்பப்பட்டால் வேலைக்கு செல்லலாம் இல்லையென்றால் வீட்டில் தூங்கலாம். இல்லையெனில் ஊர் சுற்றலாம் யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்த உதிரித்தனமான வாழ்க்கைமுறை, உதிரித்தனமான சிந்தனை – பண்பாட்டையும் உருவாக்கி இருக்கிறது.

ஏற்கனவே, பெண்ணை அடிமையாக வைத்திருந்த இந்த அரை நிலவுடமை சமூகமானது மறுகாலனியாக்கத்தின் விளைவாக உருவான  நுகர்வு பண்பாட்டுடன் இணைந்து விஸ்வரூபம் எடுக்கிறது. அதனால்தான் திருமணம் என்ற பெயரில் யாரும் யாருக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை. எதற்கும் கட்டுப்படாத, எதற்கும் பொறுப்பற்ற லிவிங் டூ கெதர் முறையை ஏற்றிப் போற்றுகிறது. ஆணாதிக்கமும், நுகர்வு பயன்பாடும் இணைந்து வீரிய ஒட்டு ரகமாகி ஷ்ரத்தாக்களை கொன்று எவ்வித குற்ற உணர்வு இல்லாமல் இருக்க வைக்கிறது.

தனக்கு விருப்பப்பட்டதை அடைவதற்கு எப்படிப்பட்ட பாதகச் செயலையும் செய்யலாம் அது தவறல்ல. அது எவ்வளவு மக்கள் விரோத செயலாக இருந்தாலும் சரி. அதை உயர்த்தி பிடிக்கிறது.

படிக்க : பெண்ணை தனிச்சொத்தாகவும் நுகர்வுப் பொருளாகவும் கருதும் இச்சமூகத்தில் நாம் இனியும் வாழமுடியுமா என்ன? 

அதுதான் இன்றைய சமூகத்தில் கருவாகி, உருவாகி வளர்ந்துவரும் புதியதொரு தலைமுறையின் அடி நாதமாக இருக்கிறது. அதனால்தான் ஷ்ரத்தாவின் படுகொலை இச்சமூகத்தில் எவ்வித பேரலையையும், ஏன்சிறு எதிர்விளைவைக் கூட  உருவாக்கவில்லை.

மொழி, இனம், நிலம், நேர்மை, தன்மானம், வர்க்கம்  என எந்த ஒரு அடிப்படையும் தேவையில்லை தலைவன் ஆவதற்கு. இவைதான் ஆக மிகவும் கீழ்த்தரமான லவ் டுடே என்ற படம் பல கோடி ரூபாய்களை வசூல் செய்ததற்கு காரணம்.

எதைப் பற்றியும் கவலைப்படாத, பொறுப்பற்ற ஆளும் வர்க்கத்தால் திட்டமிடப்பட்டு மடைமாற்றப்பட்ட நுகர்வு கலாச்சாரத்தால் வெறியூட்டப்பட்ட  புதியதொரு தலைமுறைக்கு பொறுப்பேற்க தலைமை தாங்க டிடிஎஃப் வாசன், சவுக்கு சங்கர், சீமான், ஜிபி முத்து தயாராக இருக்கிறார்கள். வடநாட்டில் அந்த வெற்றிடத்தை ஏற்கனவே யோகி ஆதித்யநாத் போன்ற காட்டுமிராண்டிகள் மூலம் நிரப்பி விட்டார்கள்.

இந்த சமூக, பொருளாதார, பண்பாட்டு முறையை உருவாக்கும் மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு மாற்றான -எதிரான- புரட்சிகர அரசியலை எந்த அளவுக்கு கொண்டு செல்கின்றோமோ, அந்த அளவுக்குதான்,  டிடிஎஃப் வாசன்களின் வருகையை மட்டுமல்ல, ஏற்கனவே வீற்றிருக்கும் மோடியின் இந்துராஷ் கனவையும் தகர்த்தெறிய முடியும்

மருது

2 மறுமொழிகள்

  1. லிவிங் டூ கெதர் எந்த வகையில் தவறானது சமூக மாற்றத்தில் ஓர் அங்கம் என எடுத்து கொள்ள கூடாதா.
    தோழர் விளக்கம் தேவை

    • முதலில் “லிவிங் டுகெதர்” சமூக மாற்றத்தின் அங்கம் என்று எப்படிச் சொல்கிறீர் தோழரே?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க