ரிஷி சுனக்: பாசிசத்தின் வீரிய ஒட்டுரகம்!

கன்சர்வேட்டிவ் கட்சியில் இருக்கும் பலரில் ரிஷி ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், ஏனெனில் ரிஷி இங்கிலாந்தின் பழமைவாதமும் இந்திய சனாதனமும் கலந்த ஒட்டுரக பாசிச அவதாரம்; எனவேதான் ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ந்தியாவை அடிமைப்படுத்திய இங்கிலாந்தின் வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராகியிருப்பது ஒரு ‘வரலாற்று மைல்கல்’ என்று பெருமை கொண்டன பார்ப்பன, கார்ப்பரேட் இந்திய ஊடகங்கள். “சுனக் ஒரு வெள்ளையரல்லாத முதல் நபர், முதல் இந்து, இளமையானவர்” என்று புகழ்ந்தது ஹிந்துஸ்தான் டைம்ஸ். ஆர்.எஸ்.எஸ்-இன் பத்திரிக்கையான ஆர்கனைசர் “பெருமை மிகு மற்றும் நடைமுறை இந்துவான சுனக் தீபாவளி நாளில் இங்கிலாந்தின் முதல் இந்து பிரதமராகியிருக்கிறார்” என்று பெருமை கொள்கிறது. காவி கும்பல்களோ, சுனக்கை மையப்படுத்தி “இந்து சிங்கம்” என்று வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரப்பின.

ஒன்றிய பிரதமர் மோடியோ, “சுனக் பிரதமராகி இருப்பதன் மூலம் இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்குமான உறவிற்கு சுனக் பாலமாக இருப்பார்” என்று பூரித்து டீவிட் செய்திருந்தார்.

இந்திய வம்சாவளி என்பதற்காக சுனக்கைக் கொண்டாடுவதென்றால் சுனக்கிற்கு முன்பாகவே கனடா, பிஜி, மலேசியா, அமெரிக்கா, போர்ச்சுக்கல் என பல்வேறு நாடுகளில் அதிகாரமிக்க பதவிகளில் இந்திய வம்சாவளியினர் இருக்கின்றனர். உலக அளவில் உயர் பதவி வகிக்கின்ற 200 இந்திய வம்சாவளியினரில் 60-க்கும் மேற்பட்டோர் பல்வேறு நாடுகளில் அதிகாரமிக்க பதவிகளில் இருக்கின்றனர். சுனக்கைக் கொண்டாடுகின்ற இவர்கள் உலகின் பிற நாடுகளில் அதிகாரமிக்க பதவிகளில் உள்ள பிற இந்திய வம்சாவளியினரைக் கொண்டாடுவதில்லை.


படிக்க : புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 | அச்சு இதழ்


இங்கிலாந்தின் பிரதமர் என்பது முக்கியமான பதவி என்பதால் ரிஷி சுனக்கைக் கொண்டாடுவதாக கருதிக் கொண்டால், அதைவிட முக்கியமான பதவிதான் அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பதவி. ஆனால், அவர் கிருத்தவ மதத்தைச் சேர்ந்தவர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால்தான் இந்திய ஊடகங்கள் சுனக் அளவிற்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

கமலா ஹாரிஸைப் போல இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால். கடந்த 2019-ஆம் ஆண்டு, காஷ்மீரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், இந்திய அரசு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் பிரமிளா தீர்மானம் கொண்டுவந்தார். காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும், என்.ஆர்.சி. மற்றும் குடியுரிமைச் சட்டத்திருத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்த பிரமிளாவை இந்திய ஊடகங்களோ, காவி கும்பல்களோ கொண்டாடவில்லை. மாறாக, காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பதற்காக அவருடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பையே நிராகரித்துவிட்டார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

இந்தியாவை இரு நூற்றாண்டு காலம் அடிமைப்படுத்திய இங்கிலாந்தை ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆட்சி செய்கிறார் என்பதற்காக கொண்டாடுகின்றனர் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கப்பட வேண்டும்.

மீட்பரல்ல, ‘ஜாமீன்’!

அரசாங்கத்தின் ‘சிக்கன’ நடவடிக்கைகளாலும் விலையேற்றம் மற்றும் ஊதிய குறைப்பினாலும் துன்பப்படுகின்ற இங்கிலாந்தின் உழைக்கும் மக்களை ரிஷி சுனக் ரட்சிக்கப் போகிறாரா? அல்லது சரிந்து விழும் பிரிட்டன் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தப் போகிறாரா? இது எதுவும் நடக்கப் போவதில்லை.

இங்கிலாந்து மட்டுமல்ல உலக நாடுகள் சந்திக்கின்ற இந்த நெருக்கடி என்பது ஏகாதிபத்தியத்தின் உள் இயல்பால் ஏற்பட்டதாகும், ஏகாதிபத்தியத்தை ஒழிக்காமல் இந்தப் பொருளாதார நெருக்கடியை தீர்க்கமுடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தெரியாமல்தான், இவருக்கு முன்பு பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் ஆகியோரும் பதவி விலகினர்; அதனைத் தொடர்ந்துதான் ரிஷி சுனக் பிரதமர் பதவியைக் கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடிக்கு ரிஷி சுனக் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை என்பது 1980-களில் வலதுசாரி பழமைவாதியான மார்க்கரெட் தாட்சர் முன்வைத்தவைதான். இந்த வழியில்தான் இவருக்கு முன்னதாக இருந்த இரண்டு பிரதமர்களும் ஆட்சி செய்தனர். அப்படியென்றால், சுனக் செய்யப்போவது என்ன?

தாட்சரிசம் என்பது பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, தொழிற்துறை உள்ளிட்ட அனைத்தையும் தனியார்மயப்படுத்துவது, தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வேட்டைக்கு மொத்த நாட்டைத் திறந்துவிடுவதாகும். அதாவது, இந்தியாவில் மோடியைப் போல இங்கிலாந்தில் சுனக் இவற்றை மேலும் தீவிரப்படுத்தப் போகிறார். சுனக்கின் இந்த கொள்கை ஏற்கெனவே நெருக்கடிப் புதைகுழியில் சிக்கியிருக்கும் இங்கிலாந்தை மேலும் உள்ளிழுக்க செய்யுமே தவிர, மீட்கப் போவதில்லை. ஆனாலும், சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

’ரிஷிமூலம்’?

2019-இல் பழமைவாத-வலதுசாரி கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைத்ததிலிருந்து இதுவரை போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் என இரண்டு பிரதமர்கள் பதவி விலகிவிட்டனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும், இங்கிலாந்தின் இஸ்லாமிய அமைப்புகளும் பொதுத்தேர்தல் கோரிக்கையை முன்வைக்கின்ற இச்சூழலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, வேறு வழியில்லாமல் கட்சியில் உள்ள ஒரு கும்பலின் ஆதரவால் முதலாளித்துவ நெருக்கடிக்கு ‘ஜாமீனாக’ முன்னிறுத்தப்பட்டவர்தான் சுனக்.

எனினும்கூட, கன்சர்வேட்டிவ் கட்சியில் இருக்கும் பலரில் ரிஷி ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், ஏனெனில் ரிஷி இங்கிலாந்தின் பழமைவாதமும் இந்திய சனாதனமும் கலந்த ஒட்டுரக பாசிச அவதாரம்; எனவேதான் ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுனக் இங்கிலாந்தில் பிறந்தவர், கோடிஸ்வரர் என்பதால் இங்கிலாந்தின் பழமைவாத கன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கைகளை இயல்பாக ஏற்றுக் கொண்டவராக இருக்கிறார். தனக்கு தொழிலாளர்கள் மத்தியில் எந்த நண்பர்களும் இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு முதலாளித்துவ திமிர் இவரது இரத்தம் முழுவதும் ஓடுகிறது.

கட்டற்ற சந்தை,  சந்தையில் அரசு தலையீடுக் கூடாது, இஸ்லாமிய வெறுப்பு, ஒரே நாடு போன்றவைதான் கன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கைகள். அதாவது, இந்தியாவின் பா.ஜ.க.வைப் போன்ற ஒரு பிற்போக்குக் கட்சிதான் கன்சர்வேட்டிவ் கட்சி.

நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மாதங்களில், நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது, “அரசு செலவினங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 37 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது” என்று மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை எதிர்த்தவர்தான் சுனக். பல மொழிகளும் தேசிய இனங்களும் கூடி வாழ்கின்ற இங்கிலாந்திற்குள் புலம்பெயர்ந்தவர்கள் வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் ஏழை மக்களுக்கு எதிராகப் பேசுபவர்.

இன்னொரு பக்கம், ரிஷி சுனக்கை இந்திய வம்சாவளியினர் என்று சொல்வதைவிட, இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்கிற கர்நாடக பார்ப்பன கார்ப்பரேட் முதலாளியின் மருமகன் என்று சொல்வதுதான் பொருத்தமானதாகும்.

இந்திய சனாதனத்தை மரபு வழியாகக் கொண்டதோடு, அதை பின்பற்றுபவராகவும், தன்னை ஒரு சனாதனியாக, இந்துவாக வெளிக்காட்டிக் கொள்வதில் பெருமை கொள்பவராகவும் இருக்கிறார் சுனக்.

2015-இல் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தனது பதவி பிரமாணத்தில் பகவத் கீதையை வைத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.  கடந்த ஜூலையில், லிஸ் ட்ரஸ் உடனான பிரதமர் பதவி போட்டியின்போது, தான் வெற்றி பெறுவதற்காக பசு பூஜை செய்தார். இங்கிலாந்தின் பிரதமரான பிறகு, “ஒரு பிரதமராக தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார். பிரதமரான பிறகு தனது முதல் உரையில், “இந்து நம்பிக்கையாளன் என்றும், இந்து கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டவன்” என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

பொதுவாகவே, அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களது மதத்தை வெளிப்படையாக அறிவிப்பது, அதில் பெருமை கொள்வது என்பது ஜனநாயகக் குடியரசு மரபிற்கு நேர் எதிரானதும், பாசிஸ்ட்டுக்கு உரியதுமாகும்.

காவி பாசிஸ்டுகளின் பங்காளி!

இங்கிலாந்தில் இந்துக்கள் அதிகம் வாழும் லெஸ்டர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பான எச்.எஸ்.எஸ். ஊடுருவி வேர்பிடித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இப்பகுதியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டமிட்ட கலவரத்தை அரங்கேற்றியிருக்கிறது இப்பாசிசக் கும்பல். இக்கும்பலுக்கு ஆதரவாக கன்சர்வேட்டிவ் கட்சி இருக்கிறது. இக்கட்சியின் உதவியுடனே இந்துத்துவக் கும்பல் இங்கிலாந்தில் வளர்ந்து வருகிறது. மேலும், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவாக இங்கிலாந்தில் உள்ள ஆதிக்கசாதி மேட்டுக்குடி இந்துக்கள் பிரச்சாரம் செய்தனர். இவையெல்லாம், இந்து சனாதனத்துடன் இங்கிலாந்தின் பழமைவாதம் இணைந்திருப்பதை நமக்கு உணர்த்துகின்றன.


படிக்க : ரிஷி சுனக் – வந்தேறியின் வெற்றியா? வரவிருக்கும் நெருக்கடியின் அடையாளமா? | சு.விஜயபாஸ்கர்


இந்தக்கூட்டின் பிரதிநிதிதான் சுனக். அதனால்தான், இங்கிலாந்தின் மீட்பராக சுனக் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார். நெருக்கடி தருணங்களில் பாசிஸ்ட்டுகளை மீட்பராக முன்நிறுத்துவதுதான் வரலாறு! முசோலினியும், ஹிட்லரும் அவ்வாறுதான் மீட்பராக முன்நிறுத்தப்பட்டனர்.

இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடி சூழலில், சுனக் பிரதமராகி இருப்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் இங்கிலாந்தின் உழைக்கும் மக்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகும். 2014-இல் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு காவி கும்பல் உலகளவில் வளர்ச்சியடைந்ததைப் போல, சுனக் ஆட்சியும் இங்கிலாந்தில் காவி கும்பல் வளர்வதற்கான வளமான அடித்தளமாக அமையும் என்பதில் எந்த ஐயத்திற்கும் இடமில்லை.

ஆகையால்தான், இந்திய காவி பாசிஸ்ட்டுகள் சுனக்கை ஆதரிக்கின்றனரே தவிர, இந்திய வம்சாவளி என்பதனால் அல்ல. எனவே, ஒரு பாசிச ஆதரவாளனை இந்திய வம்சாவளி என்பதற்காக இந்திய உழைக்கும் மக்களாகிய நாமும் கொண்டாடுவதற்கோ, பெருமை கொள்வதற்கோ ஏதுமில்லை. பாசிசத்தின் இந்த சர்வதேசக் கூட்டுக்கு எதிராக பாசிச எதிர்ப்பு சர்வதேச ஒற்றுமையைக் கட்டியமைப்பது நம்முன் நிற்கிற அவசியமான கடமையாகும்!

அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க