பிரிட்டன் தேர்தல்: தொழிலாளர் கட்சியின் வெற்றியில் கொண்டாட ஏதுமில்லை

பழமைவாத கட்சி, தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் நேட்டோ (NATO) ஆதரவு கட்சிகள் தான். பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்‌ரேலின் இனப்படுகொலையை ஆதரிப்பதிலும் இவர்களுக்குள் ஒற்றுமை உள்ளது.

1

பிரிட்டனில் ஜூலை 4 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தியாவைப் போல் தேர்தலை நடத்தி முடித்து முடிவுகளை அறிவிக்க ஒன்றரை மாதம் எடுத்துக்கொள்ளாமல், தேர்தல் நடந்த ஜூலை 4 அன்று இரவே தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிவிட்டன. ஜூலை 5 அன்று காலை அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

ரிஷி சுனக் தலைமையிலான பழமைவாத கட்சியை (Conservative Party) தோற்கடித்து கியெர் ஸ்டார்மர் (Keir Starmer) தலைமையிலான தொழிலாளர் கட்சி (Labour Party) 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 412 இடங்களில் வெற்றி பெற்றது. பழமைவாத கட்சி வெறும் 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. லிபரல் டெமாக்ரட் கட்சி (Liberal Democrats) 72 இடங்களை வென்றது.

மேலும், குடியேற்ற எதிர்ப்பு கட்சியான சீர்திருத்தக் கட்சி (Reform UK) 5 இடங்களில் வெற்றி பெற்றது. குறைவான இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும், 2019 ஆம் ஆண்டு பெற்றிருந்த 2 சதவிகித வாக்கு சதவிகிதத்தை 14 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது ஒரு அபாயகரமான போக்காகும்.

தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதற்கான முதன்மைக் காரணம், அக்கட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை அல்ல. மாறாக, பழமைவாத கட்சியின் மீதான வெறுப்பே தொழிலாளர் கட்சியின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது.

போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பொதுத் துறைகளை தனியார்மயமாக்க பழமைவாத கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியது. முன்னதாக ஓரளவு சீராகச் செயல்பட்டு வந்த அந்நாட்டின் தேசிய சுகாதார வசதிகள் (National Health Service) சுருக்கப்பட்டு, குடிமக்களுக்கான சமூகப் பாதுகாப்பு வளையம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டது. மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த போதுமான நிதி ஒதுக்காமல், காலிப்பணியிடங்களை நிரப்பாமல் செயற்கையாக ஊழியர் பற்றாக்குறையை ஏற்படுத்தி பொதுத்துறையான மருத்துவக் கட்டமைப்பு திட்டமிட்டே சிதைக்கப்பட்டது.


படிக்க: பிரிட்டன்: மிக மோசமான வறுமையின் பிடியில் நாற்பது இலட்சம் மக்கள்


மேலும், தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்டன; தொழிற்சங்கம் மற்றும் வேலைநிறுத்தத்திற்கான உரிமைகள் பழமைவாத கட்சியின் ஆட்சியில் கடிவாளம் இடப்பட்டது. 1980-களில் தாட்சர் ஆட்சியில் தொழிற்சங்க உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டதன் நீட்சியாகவே ரிஷி சுனக் ஆட்சி அமைந்தது. தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை உடைப்பதற்கான சட்டத்தை முன்மொழிந்தது. வேலைநிறுத்தம் நடைபெறும்போது ஏஜென்சிகள் மூலமாகத் தற்காலிகமாக தொழிலாளர்களை பணியமர்த்திக் கொள்ளலாம் என்பதே அந்த முன்மொழிவு.

அதேபோல், பழமைவாத கட்சி கடைப்பிடித்த குடியேற்ற எதிர்ப்பு கொள்கை பிற்போக்கானதாகப் பார்க்கப்பட்டது. அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சட்டவிரோதமாக புதிதாகக் குடியேறுபவர்களை ருவாண்டாவிற்கு (Rwanda) நாடு கடத்துவதற்கான சட்டத்தை ரிஷி சுனக் அரசு ஏப்ரல் 2024 இல் நிறைவேற்றியது.

பிரிட்டன் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் பழமைவாத கட்சியின் கொள்கைகளால் மேலும் மோசமானது. உணவுப் பொருட்களின் விலைகள் அதிக அளவில் அதிகரித்ததால் பிரிட்டன் மக்கள் பசியையும், பட்டினியையும் எதிர்கொண்டனர்.

பழமைவாத கட்சியின் இந்த மக்கள் விரோத கொள்கைகளே தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதற்கான முதன்மையான காரணமாக அமைந்துள்ளது. அதேபோல், தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதால் அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் பெரிய மாறுதல்கள் எதுவும் இருக்கப்போவதில்லை.

இந்த இரண்டு கட்சிகளும் நேட்டோ (NATO) ஆதரவு கட்சிகள் தான். ரஷ்யாவுக்கு எதிராகப் போரை நடத்த உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி அளிப்பதை ஆதரிக்கும் கட்சிகள் தான் இவை. அதுமட்டுமல்ல, பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்‌ரேலின் இனப்படுகொலையை ஆதரிப்பதிலும் இவர்களுக்குள் ஒற்றுமை உள்ளது.


படிக்க: பிரிட்டன் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவைத் திறந்துவிடும் மோடி அரசு!


எனவேதான், தொழிலாளர் கட்சி வெற்றி அடுத்த நாளான ஜூலை 6 அன்று பாலஸ்தீன மக்களை ஆதரித்தும் காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் பத்தாயிரக்கணக்கான மக்களால் லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டார்மர் அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்கிறதா என்று மக்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும், தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியிடம் இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தயாராக இருப்பதாக ஸ்டார்மர் உறுதி அளித்துள்ளார். பிரிட்டனில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ரிஷி சுனக்கைப் போலவே ஸ்டார்மரும் இந்து வாக்குகளைக் கவருவதற்காக இந்து கோவிலுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ்-இன் வெளிநாட்டுக் கிளையான எச்.எஸ்.எஸ் (Hindu Swayamsevak Sangh) உடன் நேரடியாகக் கைகோர்த்து வேலைசெய்யும் பழமைவாத கட்சி தோற்றிருப்பதை தமிழ்நாட்டில் கூட பலர் கொண்டாடினர். ரிஷி சுனக்கின் பழமைவாத கட்சி தோற்றிருப்பது நல்லது தான் என்றாலும், அதற்கு மாற்றாக தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பழமைவாத கட்சியின் கொள்கைகளைப் பின்தொடர தொழிலாளர் கட்சியைத் தலைமை தாங்கும் ஸ்டார்மர் தயாராக உள்ளார்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube1 மறுமொழி

  1. போன தேர்தலில் 32.1% பெற்ற தொழிலாளர் கட்சி இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதம் 33.8 இவை ஒப்பிட்ட அளவில் பார்த்தால் வெறும் 1.7 சதவீதம் மட்டுமே. இந்த தேர்தலில் புதிதாக uk reform என்கிற வலது சாரி கட்சி 14.3 % பெற்றியிருக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க