பிரிட்டன்: மிக மோசமான வறுமையின் பிடியில் நாற்பது இலட்சம் மக்கள்

ஆய்வில் பதிலளித்தவர்களில் 61% பேர் கடந்த மாதங்களில் தாங்கள் பட்டினி கிடந்ததாகவும், உணவு வங்கிகளையோ, உறவினர்களையோ உணவுக்காக சார்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

டந்த ஆண்டு பிரிட்டனில் 10 இலட்சத்திற்கும் (10,35,600) அதிகமான குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 40 இலட்சம் (38,48,400) மக்கள் வறுமையின் மிக மோசமான பிடியில் இருப்பதாக ஜோசப் ரௌன்ட்ரீ அறக்கட்டளை (Joseph Rowntree Foundation) வெளியிட்ட சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடை, கணப்பு (heating), இருப்பிடம் மற்றும் உணவு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத நிலைமை ஏழ்மை என வரையறுக்கப்பட்டுள்ளது. 2019 – 2022 காலகட்டத்தில் மட்டும் ஏழ்மையின் அளவு பிரிட்டனில் 61 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

குடும்ப வருமானம் குறைந்து போன காரணத்தால் வீட்டுச் செலவுகள் செய்ய முடியாமல் உள்ளது. வாரம் ஒரு நபருக்கு அடிப்படைச் செலவுகளுக்கான தேவை 95 யூரோக்கள் (115 டாலர்கள்). இரண்டு குழந்தைகளைக் கொண்ட தம்பதியினருக்கு வாராந்திரத் தேவை 205 யூரோக்கள் (249 டாலர்கள்). ஆதரவற்ற குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வீட்டுச் செலவுகளுக்கு  85 யூரோக்களுக்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர்.

2017-ஆம் ஆண்டிலிருந்து ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை 186 சதவிகிதம் அதாவது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. நாடெங்கும் ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை சாப்பிட இயலாமல் இருப்பதும், அவர்களின் குழந்தைகளும் கூட அவ்வாறே இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.


படிக்க: ரிஷி சுனக்: பாசிசத்தின் வீரிய ஒட்டுரகம்!


ஆய்வில் பதிலளித்தவர்களில் 61% பேர் கடந்த மாதங்களில் தாங்கள் பட்டினி கிடந்ததாகவும், உணவு வங்கிகளையோ, உறவினர்களையோ உணவுக்காக சார்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆதரவற்ற நபர்களில் பாதிப்பேர் ஷாம்பூ, பற்பசை, ஆடை, காலணிகளை கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளி சீருடைகளைத் தாண்டி எதுவும் வாங்க முடியாத நிலையில் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

குறைந்து போன வருமானத்தின் காரணமாக சில்லறை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலையின்மையின் அளவு பிரிட்டனில் அதிகரித்து வருவதும் இதற்கு நேர் எதிராக வட்டி விகிதங்கள் உயர்ந்து குடும்ப ரீதியான சுமை அதிகரிக்கப்படுவதும் சில்லறை விற்பனை குறைவதற்கு காரணமாக உள்ளன. இந்த கிறிஸ்துமஸ் காலாண்டு, கடைக்காரர்களுக்கு நல்ல வருமானத்திற்கு உரிய ஒன்றாக இருக்காது என்று கூறப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களாக வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் வாழ்க்கைத் தேவைகளுக்கான நெருக்கடி கூடியுள்ளது. இது மக்கள் பொருட்களை வாங்குவதைக் குறைத்துள்ளது. அதேசமயம் இதற்கு நேர் எதிராக தொடர்ச்சியான வட்டி விகித உயர்வு பிரிட்டனில் மந்த நிலையை பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆரோக்கியமற்ற பொருளாதார சூழல் நிலவுவதையும், மேலும் பின்னோக்கி செல்வதையும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.


படிக்க: G20 மாநாடு: ஏழ்மையையும் வறுமையையும் திரைச்சீலைகளால் மறைக்க முடியாது!


கடந்த 25 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் தீவிர தனியார்மய கார்ப்பரேட் கொள்கைகளின் விளைவாகவே பிரிட்டன் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் லண்டனில் வெடித்த கலகம் இதைத் துலக்கமாக எடுத்துக் காட்டியது. தொடர்ந்து தீவிர பொருளாதார நெருக்கடியின் விளைவாக இனவாத, மதவாத அரசியலின் செல்வாக்கில் இருந்து கடந்த 2019-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லும் பிரெக்சிட் முடிவை பிரிட்டன் எடுத்தது.

ஆனாலும் பிரிட்டனின் பிரெக்சிட் முடிவுகள் பிரிட்டனின் உழைக்கும் மக்களுக்கு எந்தத் தீர்வையும் தரவில்லை என்பதை சமீபத்திய நிலைமைகள் துலக்கமாகக் காட்டுகின்றன. இன்னொரு பக்கம் நெருக்கடியைக் குறைப்பதற்குப் பல்வேறு சமூக நலத் திட்டங்களைக் குறைத்து உழைக்கும் மக்கள் மீதே சுமையை ஏற்றியது பிரிட்டன் முதலாளித்துவ அரசு.

1970 களில் தாராளமயக் கொள்கைகளை உலகம் முழுவதும் புகுத்தி, முதலாளித்துவ நெருக்கடியை தீர்க்கப்போவதாக மார்தட்டிய பெருமை பிரிட்டனின் ஆளும் கும்பலையும், மார்க்ரெட் தாட்சரையும் சாரும். ஆனால் அதே கார்ப்பரேட் நலன் சார்ந்த தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் இன்று பிரிட்டன் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சிதறடித்துக் கொண்டிருக்கின்றன.

சுரண்டிக் கொழுத்த ஒரு சதவிகிதத்தினருக்கு எதிராகவும், தனியார்மய கார்ப்பரேட் கொள்கைகளுக்கு எதிராகவும் சுரண்டப்படும் 99 சதவிகிதம் பேர் வீதிகளில் திரள்வதும், மீண்டும் 2011-ஆம் ஆண்டைப் போன்ற ஒரு எழுச்சியும் பிரிட்டன் உழைக்கும் மக்களின் இன்றைய தேவை.


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க