G20 மாநாடு: ஏழ்மையையும் வறுமையையும் திரைச்சீலைகளால் மறைக்க முடியாது!

ஏழ்மையும் வறுமையும் பசியும் பிணியும் தான் இந்தியாவின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை எத்தனை கோடி செலவு செய்தும் திரைச்சீலைகளால் மறைக்க முடியாது.

ரும் செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் G20 மாநாடு நடக்கவிருப்பதால், இந்திய நகரங்களை ‘அழகு படுத்தும்’ பணி மும்முரமாக நடந்து வருகிறது. ‘அழகு படுத்துதல்’ என்றால், இந்திய நகரங்களில் வாழும் எளிய மக்களின் ஏழ்மையையும் வறுமையையும், இரண்டு நாட்கள் சுற்றுலாவிற்கு வருகை தரும் ‘உலக தலைவர்களின்’ கண்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வது தான்.

அதன் பொருட்டு, புது தில்லியில் வாழும் நகர்ப்புற ஏழைகளின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டும், தெருவோர வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டும் வருகிறது. இதுவரை இரவு நேரங்களில் வெளிச்சமே காணாத தெருக்கள், தெருவிளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. டெல்லி நகரத்தின் சுவர்கள் வண்ண ஓவியங்களால் நிறைந்திருக்கிறது. இதற்காக, 120 மில்லியன் டாலர் வரை செலவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை நூற்றுக்கணக்கான வீடுகளும், கடைகளும் கணிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து வேறு இடத்திற்கு குடிபெயர்நதுள்ளனர். டெல்லியில், நகர்ப்புற ஏழைகளின் குடியிருப்பு பகுதிகளில் வாழும் பலருக்கு, வீடுகள் இடிக்கப்படுவதற்கு சில காலம் முன்பு தான் நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்.

படிக்க : சந்திரயான்-3: போலி தேசப்பெருமித போதை!

ஏழை மக்கள் வாழும் வீடுகளை ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பு’ என்று பொய் சொல்லி இடித்துள்ளனர் அதிகார வர்க்க கையாட்கள். மக்கள் சிலர் தாங்கள் இங்கே 100 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம் என்பதற்கு சான்றாக ஆவணங்களை காட்டியும், அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வீடுகளை இடித்துள்ளனர் அதிகார வர்க்க கையாட்கள்.

இதேபோல் மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களிலும் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. “Concerned Citizens Collective” என்ற அமைப்பு, G20 மாநாட்டு பணிக்களுக்காக இதுவரை மூன்று லட்சம் வீடுகள் இடிக்கப்படுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

ஏழை மக்களின் வாழ்விடத்தின் இடிபாடுகளின் மீது பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக செலவு செய்யப்படும் அந்த 120 பில்லியன் டாலர் பணமும் மோடியின் சொத்தோ, அல்லது பாஜகவின் கட்சி நிதியோ அல்ல. மக்களின் வரிப்பணமாகும். இந்திய மக்களின் வரிப் பணத்தைக் கொண்டே நகர்ப்புற ஏழைகளின் குடியிருப்புகளையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இவர்கள் எத்தனை பெரிய அயோக்கியர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்றே, 2020 ஆம் ஆண்டில் ட்ரம்ப் வருகையின் போது, சாலையோரத்தில் ஏழைகள் வாழ்வதை மறைக்கும்வண்ணம் குஜராத் மாநிலத்தில் சுவர் எழுப்பப்பட்டது. 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்தியாவில் நடைபெற்ற போது இதுபோல் நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது.

பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் எளிய மக்களுக்கு எதிராகவே உள்ளது என்பதையும் அவர்கள் விசுவாசம் கார்ப்பரேட்களுக்கு மட்டும் தான் என்பதையும் இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி டெல்லியில் 47,000 மக்கள் வீடற்றவர்களாக இருந்தனர் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் இது நிச்சயமாக குறை மதிப்பீடு தான். உண்மையில் 1,50,000 மக்கள் வீடற்றவர்களாக இருப்பார்கள் என்று சமூக செயல்பாட்டாளர்கள் சொல்கிறார்கள். இந்த எண்ணிக்கை கூட 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைதான்.

“உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் நிலை” என்ற அறிக்கை, இந்தியாவில் 74% மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க வழியில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.

படிக்க : உ.பி: தொடரும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள்!

BRICS கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளில் (தற்போது புதிதாக இணைந்த 6 நாடுகளையும் சேர்த்து) இந்தியாவில்தான் உணவுப் பொருட்களின் விலை மலிவானது. இந்தியாவில் வாழும் ஒரு மனிதன் ஒரு நாளுக்கு 3 டாலர்கள் இருந்தால் மூன்று வேளை ஆரோக்கியமான உணவு சாப்பிட முடியும்.

இது மற்ற BRICS கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளைவிட மிகக் குறைந்தது ஆகும். ஆனால் அதை வாங்கக்கூட வக்கற்ற நிலையில் இந்திய மக்கள் உள்ளனர். ஏனெனில், பல ஆண்டுகளாக இந்திய மக்களின் வருமானம் தேக்க நிலையில்தான் உள்ளது. தற்போது, பணவீக்கம் அதிகரித்து வருவதால், மக்களின் உண்மையான ஊதியம் குறைந்து கொண்டே போகிறது. இதற்கெல்லாம், மோடி கும்பலின் கார்ப்பரேட் சார்பு பொருளாதார பயங்கரவாதம் தான் காரணம்.

இப்படி ஏழ்மையும் வறுமையும் பசியும் பிணியும் தான் இந்தியாவின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை எத்தனை கோடி செலவு செய்தும் திரைச்சீலைகளால் மறைக்க முடியாது. நகரத்தின் சுவர்களில் பாசிச கும்பல் தீட்டிய ஓவியங்களை துருத்திக் கொண்டு தெரிகிறது இந்தியாவின் யதார்த்தமான வறுமை.

சீனிச்சாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க