சந்திரயான்-3: போலி தேசப்பெருமித போதை!

இந்தியா சொந்தத் தொழில்நுட்பத்தாலும் சொந்த அறிஞர்களின் முயற்சியாலும் இந்த விண்வெளி சாதனையை நடத்தியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த விண்வெளி ஆராய்ச்சியின் வெற்றி யாருக்கு பயன்படப்போகிறது என்பதுதான் நமது கேள்வி.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்பது இந்தியாவின் வெற்றியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியோ, “இன்று நிலவு, நாளை சூரியன்” என்றும் “புதிய இந்தியாவின் வெற்றிப் பெருமிதம்” என்றும் பெருமை பொங்கக் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். கும்பலும் இதனைப் பெருமை பொங்க தேசத்தின் வெற்றி எனக் கூறுகிறது. சந்திரயான் திட்டத்திற்காக சங்கப் பரிவாரக் கும்பல் காசியில் யாகங்களை நடத்தின. வடநாட்டின் கோவில்கள், மசூதிகளில் பூசைகளும் தொழுகைகளும் நடத்தப்பட்டன.

இந்தியாவில் சந்திரயான் ஏவப்பட்ட அன்றைய நாளில் பிறந்த பல குழந்தைகளுக்கு “சந்திரயான்” எனப் பெயரிட்டு பெருமை கொண்டுள்ளனர் பெற்றோர்கள். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைமை குழுவில் தமிழர்கள் பங்காற்றியிருப்பதை தமிழ்நாட்டு மக்களும் மலையாளிகள் பங்காற்றியிருப்பதை கேரள மக்களும் மற்றும் பிற மாநிலத்தில் இருப்பவர்கள் வெவ்வேறு வகையிலும் இந்த தேசப்பெருமிதத்தில் தங்களுக்கும் பங்கிருப்பதாகப் பெருமை பட்டுக்கொள்கின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் முதன்மை ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜெர்னல், வாசிங்டன்போஸ்ட், தி கார்டியன், ஃபைனான்சியல் டைம்ஸ் உள்ளிட்ட பல பத்திரிகைகள் இந்நிகழ்வைப் பாராட்டி எழுதியுள்ளன. அதுமட்டுமல்ல, பாகிஸ்தானின் டான் பத்திரிகையும் பாராட்டியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் பல அதிபர்கள் சந்திரயான்-3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதைப் பாராட்டிப் பேசியுள்ளனர்.

படிக்க : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்ட சொன்ன பாசிஸ்ட் சாமியாரின் கொட்டத்தை அடக்குவோம்!

நிலவின் தென்பகுதிக்கு விண்கலத்தை அனுப்புவது என்பது இதுவரை ஏகாதிபத்திய நாடுகளான ரசியா, சீனா போன்ற பலநாடுகள் முயற்சி செய்து தோல்வியடைந்த விசயமாகும். ஆகையால், நிலவின் தென்பகுதிக்குச் செல்வது என்பது ஒரு சவாலாகவே கருதப்பட்டது. அந்த வகையிலும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற வகையிலும் சந்திரயான்-3 நிலவின் தென்பகுதிக்கு செலுத்தப்பட்டிருப்பதானது பெருமை கொள்ளும் விசயமாக பார்க்கப்படுகிறது.

அணு ஆயுதங்களைக் கொண்டிருந்தால் அணு வல்லரசு (Nuclear Power) என்பது போல சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலமும், நிலவின் தென் துருவத்தை முதலில் அடைந்த நாடு என்றும் நிலவில் கால்பதிக்கும் நான்காவது நாடு என்ற வகையிலும் இந்தியா விண்வெளி வல்லரசு (Space Power) என்று கொண்டாடப்படுகிறது.

சென்ற மே மாதம் சீனா, நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பி சாதனைப் புரிந்தது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் மனிதர்களைக் குடியேற்றப் போவதாக அது அறிவித்துள்ளது. இச்சூழலில், நிலவின் தென்பகுதியை தொட்டதானது சீனாவிற்கு போட்டியாக இந்தியா முன்னேறியுள்ளதாகக் கருதப்படுகிறது.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, சொந்த நாட்டின் அறிஞர்கள், சொந்தத் தொழில்நுட்பம், இதுவரை பல நாடுகள் முயற்சித்தும் முடியாத நடவடிக்கை போன்ற காரணங்களால் சந்திரயான்-3 நினைத்து பெருமை கொள்ளும் பலருக்கும், இத்திட்டத்தின் பின்னணி குறித்த பல உண்மைகள் தெரியாது. அவ்வாறு தெரிந்தால் இந்த விண்வெளி வளர்ச்சி என்பது நாம் பெருமை கொள்ளத்தக்கதல்ல என்றும் நம்மை ஏதோ ஒருவகையில் சுரண்டுவதையும் ஒடுக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருப்பது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

***

குறிப்பாக, சந்திரயான்-3 எந்த நோக்கத்திற்காக ஏவப்பட்டது? நிலவில் தென்பகுதியில் உறைந்த பனி இருக்கிறதா, ஆக்ஸிஜனை உருவாக்க முடியுமா, மனிதர்களை குடியேற்ற முடியுமா, அங்கு கிடைக்கும் தனிம வகைகள் போன்றவற்றை ஆராய்வதற்காக ஏவப்பட்டுள்ளது.

தற்போது நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போனுக்கு சிறிதளவு தேவைப்படும் அரியவகை தனிமங்கள், எரிப்பொருளாக உபயோகிக்கப்படும் ஹீலியம் உள்ளிட்ட தனிமங்கள் நிலவில் அபரிவிதமாக இருக்கின்றன. இவற்றை பூமிக்கு எடுத்துவருவது எப்படி என்பதும் ஆராயப்பட்டு வருகிறது.

மேலும், ஏகாதிபத்திய, முதலாளித்துவ நிறுவனங்கள் உலகைப் பங்கீடு செய்து மனித வளத்தையும் இயற்கை வளத்தையும் கொள்ளையடிப்பதைப் போல செவ்வாய், சந்திரன் உள்ளிட்ட விண்கோள்களையும் ஆக்கிரமித்து சூறையாடுவதும் விண்வெளி சுற்றுலா என்று ஊர்சுற்றும் தேவையை ஈடேற்றுவதும் எதிர்கால இலக்குகளாகும். இவற்றிற்கெல்லாம் உதவும் வகையில்தான் சந்திரயான் விண்கலம் ஏவப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா சொந்தத் தொழில்நுட்பத்தாலும் சொந்த அறிஞர்களின் முயற்சியாலும் இந்த விண்வெளி சாதனையை நடத்தியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த விண்வெளி ஆராய்ச்சியின் வெற்றி யாருக்கு பயன்படப்போகிறது என்பதுதான் நமது கேள்வி.

சந்திரயான்-3: மோடியின் தேசவிரோதத் திட்டத்தின் ஒரு அங்கம்!

பாசிச பா.ஜ.க. இந்தியாவின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்த்ததைப் போல, ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை அந்நிய மற்றும் உள்நாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்க்க பல்வேறு சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. விண்வெளி நடவடிக்கைகள் மசோதா 2017, நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல்) 2019, தேசிய புவியியல் கொள்கை 2022, இந்திய விண்வெளிக் கொள்கை 2023 போன்றவை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்குள் கொண்டுவருவதற்கான சட்டத் திருத்தங்களாகும்.

இதனை, மார்ச் 2023-இல் இஸ்ரோ வெளியிட்ட “விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்பை மேம்படுத்தல்” என்ற அறிக்கையானது முன்னேற்றம் என்று பெருமையாகத் தெரிவிக்கிறது. வழக்கம் போல விண்வெளி ஆராய்ச்சியில் கார்ப்பரேட்டுகளை நுழைப்பதன்மூலம் செலவினங்கள் குறையும் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் ஐ.டி. துறைக்குப் பிறகு விண்வெளித் துறையில் கால்பதிப்பதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் இந்த நடவடிக்கைக்கு நியாயம் கற்பிக்கிறது இந்த அறிக்கை.

தற்போது மோடி அரசின் இந்த நடவடிக்கைகளின் மூலம் இஸ்ரோவின் உள்கட்டமைப்பு மற்றும் மற்ற வசதிகளை கார்ப்பரேட் கம்பெனிகள் பயன்படுத்திக்கொள்ள திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய விஞ்ஞானிகளாலும், உழைக்கும் மக்களின் வரிப்பணத்தாலும் இத்துணை ஆண்டுகாலம் உருவாக்கப்பட்ட இஸ்ரோவின் கட்டமைப்புகளை அப்படியே தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் தேசவிரோத செயலைத்தான் பா.ஜ.க செய்துவருகிறது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது தனிப்பட்ட முயற்சியில் விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த தேசவிரோத செயலைத்தான் மோடி கும்பல் கொஞ்சமும் வெட்கமின்றி தேசப்பெருமிதம் என்று ஆர்ப்பரித்து வருகிறது.

இதுமட்டுமல்ல, சந்திரயான்-3 தயாரிப்புப் பணியில் முக்கிய பங்கு வகித்த ராஞ்சியில் உள்ள பொதுத்துறை கனரக பொறியியல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 17 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய 1,000 கோடி ரூபாயை நிறுத்தி, விண்வெளி ஆராய்ச்சிக்காக கொடுக்கப்படும் தொகையையும் 32 சதவிகிதம் குறைத்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை திட்டமிட்டு நஷ்டமடைய செய்து அதை அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் அதே உத்தியைத்தான் இஸ்ரோவிற்கும் கடைப்பிடிக்கிறது பா.ஜ.க. அரசு.

இதனோடு நாட்டின் பல பகுதிகளில் செயல்படும் ஒன்றிய அரசின் தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களின் (National Skill Training Institutes) மூலமாக பயிற்சியளிக்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் மட்டும் 4,000 பேருக்கு இவ்வாறு பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இங்கு பயிற்சி பெறுபவர்கள், இயல்பாகவே விண்வெளித் துறையில் மூலதனமிடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் சேவை செய்வார்கள். இஸ்ரோவின் வேலைவாய்ப்பைவிட கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலைவாய்ப்புதான் அதிகரிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் 250-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன. இதில் 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் இதுவரையில் கையெழுத்தாகியுள்ளன. இதற்கு முன்னதாகவே, உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுத்தல், உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தல் போன்றவற்றில் பல கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக புதிய செயலிகள் (ஆப்கள்), வரைபடங்கள் ஆகியவற்றிலும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், கடந்த 2022 நவம்பரில் இஸ்ரோவின் உதவியுடன் “விக்ரம்-எஸ்” என்ற ராக்கெட்டை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) என்ற கார்ப்பரேட் நிறுவனம் ஏவியுள்ளது. இதைப் போலவே துருவா ஸ்பேஸ் (Dhruva Space) நிறுவனம் தைபோல்ட்-1, தைபோல்ட்-2 ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மாஸ் (Agnikul Cosmos), பெங்களூருவைச் சேர்ந்த பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் (Bellatrix’s Aerospace), நாக்பூரைச் சேர்ந்த எக்னாமிக் எக்ஸ்போலிசிவ் (Economic Explosives), எல் அண்டு டி (Larsen & Toubro), டேட்டா பேட்டன்ஸ் (Data Patterns) போன்ற பல கார்ப்பரேட் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் இதில் குதித்துள்ளன.

இந்த தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் இந்தியப் பொதுத்துறையான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் அதன் பல்வேறு பிரிவுகளையும் ஆக்கிரமிப்பதானது, இவர்களைப் பின் தொடர்ந்து பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் நுழைவதற்கான பாதையை செப்பனிட்டுக் கொடுக்கும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

“சந்திரயான்கள்” அனைத்தும் கார்ப்பரேட்டுக்களுக்கே!

ஜி20 நாடுகளின் ஒரு அங்கமாக 2020-ஆம் ஆண்டு முதல் “விண்வெளி பொருளாதாரத் தலைவர்கள் கூட்டம்” (Space Economy Leaders Meeting) நடத்தப்பட்டு வருகிறது. அதன் நான்காவது கூட்டம் கடந்த ஜூலை 6-7 ஆகிய இரு தேதிகளில் பெங்களூருவில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பகாசுர பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்று விண்வெளித்துறையில் மூலதனமிடுவது குறித்து விவாதித்தனர். அதன் ஒரு பகுதியாகவே இந்தியாவின் விண்வெளித் துறையில் மூலதனமிடுவதும் அடங்கியுள்ளது.

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் இறங்கிய நிகழ்வையொட்டி பிரதமர் மோடி, “இந்தியாவின் இந்த வெற்றி என்பது இந்தியாவிற்கு மட்டும் உரியதல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் உரியது, இந்தியாவைத் தொடர்ந்து பலநாடுகள் நிலவிற்குச் செல்லும் திட்டத்திற்கு உதவக்கூடியது” என்று குறிப்பிட்டதன் உண்மையான பொருள், அன்னிய பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் இந்திய விண்வெளித்துறையை ஆக்கிரமிப்பதாகும்.

படிக்க : “ஒரே நாடு, ஒரே தேர்தல்”: பூச்சாண்டி காட்டும் பாசிஸ்டுகள்!

சென்ற ஜூன் மாதம், அவசர அவசரமாக பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை மேற்கொண்டார். அந்தப் பயணத்தைப் பற்றி வெள்ளை மாளிகை அதிகாரிகளோ, “இச்சந்திப்பின் மூலமாக ஒரு திறந்த, வெளிப்படையான, வளமான, பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பாதுகாக்கின்ற வகையில் இருநாடுகளுக்கிடையில் விண்வெளி, பாதுகாப்பு, தூய்மையான ஆற்றல் மற்றும் போர்த்தந்திர தொழில்நுட்பங்கள் ஆகியவை பகிர்ந்து கொள்ளப்படும்” என்று தெரிவித்ததில் இந்த சந்திரயான்-3 திட்டமும் அடங்கியுள்ளது. இவைமட்டுமல்ல 2026-ஆம் ஆண்டு சந்திரயான்-4 ஏவப்படுவதற்கான திட்டமும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானதே.

மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து, நமது நாட்டு விஞ்ஞானிகளின் உழைப்பால் உருவாக்கி ஏவப்படும் சந்திராயன்-3 போன்ற விண்கலங்களும், செயற்கைக்கோள்களும் ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காகவும் இந்திய தரகு முதலாளிகளின் விண்வெளி உற்பத்தி கருவிகளை ஏழை நாடுகளில் திணிப்பதற்காகவுமே பயன்படுத்தப்படுகிறது. இதில் உழைக்கும் மக்களாகிய நாம் பெருமைகொள்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

மாறாக, மணிப்பூரில் நடந்த இனப்படுகொலை, ஹரியானா கலவரம், நீட் படுகொலை, சி.ஏ.ஜி அறிக்கையால் வெளியான மோடியின் மெகா ஊழல் போன்ற பல அரசியல் பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காகவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக சாதனை நாயகனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் பொருட்டும் ‘சந்திரயான்-3 வெற்றியை’ தேசப்பெருமிதமாக காட்டிவருகிறது பாசிச மோடி அரசு. இந்த போலி தேசப்பெருமித போதையை எதிர்க்கட்சியினரும் அறிவியல் அறிஞர்களும் அம்பலப்படுத்தாமல் கார்ப்பரேட் வர்க்கத்திற்கு சேவை செய்கின்றனர்.

மகேஷ்
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2023

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க