பிரிட்டன்: புலம்பெயர்ந்தோரைத் தாக்கி கலவரத்தில் ஈடுபடும் தீவிர வலதுசாரிகள்

பிரிட்டனில் நடந்த கொலைகளுக்கு புலம்பெயர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தான் காரணம் என்று  இணையதளத்தில் பொய் செய்திகளைப் பரப்பி பல இடங்களில் கலவரத்திற்கு வித்திட்டுள்ளனர் தீவிர வலதுசாரிகள்

டந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில் கலந்துகொண்ட 3 சிறுமிகள் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து இக்கொலைக்கு புலம்பெயர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தான் காரணம் என்று  இணையதளத்தில் பொய் செய்திகள் தீவிர வலதுசாரிகளால் திட்டமிட்டு பரப்பப்பட்டன. இது பிரிட்டனில் பல இடங்களில் கலவரத்திற்கு வித்திட்டுள்ளது.

இச்சம்பவம் நடந்த அடுத்த நாள், சவுத்போர்ட்டில் (Southport) உள்ள மசூதிகளுக்கு முன்பாக திரண்டு தீவிர வலதுசாரிகள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.  இதனைத்தொடந்து பிரிட்டனின் 22 நகரங்களுக்கும் கலவரம் பரவியது. ஹல், லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர், ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட், பிளாக்பூல், மற்றும் பெல்பாஸ்ட் ஆகிய இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறின. கடைகள், உணவகங்கள் சூறையாடப்பட்டன; வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த கலவரங்களை திரைமறைவில் இருந்துகொண்டு தீவிர வலதுசாரி குழுக்கள் தான் ஒருங்கிணைக்கின்றன என்றும் அதற்கு, “போதும் போதும்”, “குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்”, “படகுகளை நிறுத்துங்கள்” என்று தொடர்ந்து இணையத்தில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருகின்றன என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் 18 வயது நிரம்பாதவர் என்பதால் அவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. ஆனால், கலவரம் வளர்ந்ததையடுத்து இந்த விதிமுறையை நீக்கி, இக்கொலையில் ஈடுபட்டவர் பிரிட்டனில் பிறந்த 17 வயது நிரம்பிய அக்ஸல் ரூடாகுபான (Axel Rudakubana) என்று அடையாளம் வெளியிடப்பட்டது.


படிக்க: பாசிச சக்திகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ் மக்கள்!


இருப்பினும், இக்கலவரம் பிரிட்டனில் பல இடங்களுக்கும் பரவியது. கலவரக்கார்கள் சன்டர்லேன்டில் உள்ள போலீசு நிலையங்களை தாக்கி கடைகளை சூறையாடினர். ரோத்தர்கம் நகரில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள விடுதியில் கற்களை வீசி ஜன்னல்களை சேதப்படுத்தினர். அவ்விடுதியின் வழிகளில் தீயிட்டுக் கொளுத்தினர். “அவர்களை வெளியேற்றுங்கள்” “தீக்கிரையாக்குங்கள்” என்று கோசமிட்டனர்.

தீவிர வலதுசாரிகள் புலம்பெயர்ந்த வழக்குரைஞர்கள், அவர்களுக்கான ஆதரவு மையங்கள், அகதிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் என்று பட்டியலிட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனை தங்களுக்குள் உள்ள வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிர்ந்துகொள்கின்றனர். இதனால் இஸ்லாமியர்கள், அகதிகள், சிறுபான்மையினர்களுக்கு அச்சுறுத்தலான சூழல் நிலவுகிறது.

கலவரத்தைக் கட்டுப்படுத்த பிரிட்டனின் பல நகரங்களிலும் போலீசு குவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். “தற்போது நடப்பது போராட்டமில்லை; தீவிர வலதுசாரி குண்டர்த்தனம். மேலும் இதில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தின் முழு அதிகாரமும் பாயும்” என்று பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் வலதுசாரிகளுக்கெதிராகவும் அகதிகளுக்கு ஆதரவாகவும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. மிடில்ஸ்போர்க் (Middlesbrough) நகரில் இனவெறிக்கெதிரான செயற்பாட்டாளர்கள் கலவரக்காரர்களை விரட்டியடித்து மசூதியை காப்பாற்றியுள்ளனர்.


படிக்க: பிரிட்டன் தேர்தல்: தொழிலாளர் கட்சியின் வெற்றியில் கொண்டாட ஏதுமில்லை


முதலாளித்துவத்தின் தோல்வியால் ஏற்பட்டுள்ள மீளமுடியாத பொருளாதார நெருக்கடி, தொடர்ந்து அதிகரித்துவரும் வேலையின்மை ஆகியவற்றைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் தற்போது பாசிச சக்திகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக, ஐரோப்பாவில் தீவிர வலதுசாரிகள் வேகமாக வளர்ந்து வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் உள்ளிட்ட புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற வேண்டும், அதற்கான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று மக்களிடையே இவர்கள் விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர். புலம்பெயர்ந்தோர் மீது தாக்குதலையும் தொடுத்து வருகின்றனர்.

நடந்துமுடிந்த பிரிட்டன் தேர்தலில் “ரிபார்ம் யுகே” என்கிற அதிதீவிர வலதுசாரி கட்சி 14 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி வெறும் 2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிந்த உடனே பிரான்சில் தீவிர வலதுசாரிகள் கலவரங்களை அரங்கேற்றினர். அதேபோல், தற்போது பிரிட்டனிலும் தீவிர வலதுசாரிகளின் தூண்டுதலால் கலவரம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க