இந்தியாவின் தலைநகராம் டெல்லி?  கைகளால் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அவலம்!

டெல்லி, ஆக்ரா நகரங்களில் சாலையோர வியாபாரம் செய்பவர்கள் கூட பொருட்களை தரையில் போட்டுத்தான் விற்கின்றனர். தரைவிரிப்பு கூட இல்லை. சிறுநீர் துர்நாற்றத்துக்கு இடையில்தான் வியாபாரம் நடக்கிறது.

டந்த நவம்பர் 13, 2022 அன்று MAZA (தொழிலாளர் உரிமைகள் மற்றும் போராட்டங்களுக்கான இயக்கம்) சார்பாக தொழிலாளர் நலச்சட்டத் திருத்தம் ரத்து உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம், பேரணி நடைபெற்றது. இதில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) சார்பாக கலந்து கொண்டோம்.

இந்தப் போராட்டத்துக்கு வெளியே நாம் பார்த்த காட்சிகள் வடஇந்தியாவின் உண்மை முகத்தை ஓங்கி அறைவதுபோல் உணர்த்தியது. தலைநகர் டெல்லியில் உணவகங்களின் நிலை, சாலையோர கடைகள், வீடுகள், பற்றிப் படர்ந்திருக்கும் தூசிகள், குப்பைகள் அம்மக்களின் துயரமான வாழ்நிலையை நமக்கு உணர்த்தி விடுகின்றன. மக்களின் வாழ்நிலை படுமோசமாக இருக்கிறது.

படிக்க : நேர்காணல் : ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு – மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!

டெல்லி, ஆக்ரா இரண்டு நகரங்களிலும் இதுதான் நிலைமை. டில்லி நகரில் காலைக் கடன்களுக்காக பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்தினோம். அப்போது அங்கு கண்ட காட்சி  இதயத்தை உலுக்குவதாக இருந்தது. கழிப்பிடத்தை துப்புரவுத் தொழிலாளர்கள் கையுறையின்றி பிளாஸ்டிக் குப்பை பேப்பரைப் பயன்படுத்திக் கழுவுகின்றனர். தூய்மை பாரதம் என்று மோடி அரசு கூவிக் கொண்டிருக்கும் யோக்கியதை இதுதான்.

சங்கி கும்பலின் இன்னொரு அவதாரமான நடுத்தர வர்க்க நாயகனாக முன்னிறுத்தப்படும் கெஜ்ரிவால் ஆட்சியின் உண்மை முகமும் இதுதான். துடைப்பம் சின்னத்தை வைத்துக் கொண்டு ஓட்டுப் பொறுக்கும் கெஜ்ரிவாலின் அரசாங்கம் கழிவறைகளுக்கு துடைப்பம் வாங்கிக் கொடுப்பதற்குக் கூட வக்கில்லாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட கெஜ்ரிவாலைத்தான் பிஜேபிக்கு மாற்று பலரும் முன்னிறுத்துகிறார்கள்.

ஆக்ராவில் ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம். ஒரு சாப்பாட்டின் விலை ரூ.150 கூட கொஞ்சம் சாப்பாடு வைய்யுங்கள் என்று கேட்டதற்கு ஓட்டல்காரர் “இது தமிழ்நாடு இல்ல, இங்க நடக்கிறது யோகி ஆட்சி” என்று கூறினார். தாராளமாக உணவு கொடுக்கும் நிலைமை கூட இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் மக்கள் நலத்திட்டங்களை குறைந்தபட்சம் செய்ய வேண்டும். அதன் மூலமாகத்தான் இங்கு முதலாளித்துவத் தொழில் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்ற நிலைமையும், தங்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலைமையும் உள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் மக்களை பாசிஸ்டுகள் வறுமையில் வாட்டினாலும் மதவெறியை ஊட்டினால் போதும் என்ற நிலைமைதான் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

டெல்லி, ஆக்ரா நகரங்களில் சாலையோர வியாபாரம் செய்பவர்கள் கூட பொருட்களை தரையில் போட்டுத்தான் விற்கின்றனர். தரைவிரிப்பு கூட இல்லை. சிறுநீர் துர்நாற்றத்துக்கு இடையில்தான் வியாபாரம் நடக்கிறது.

அதேசமயம் ராஜ்பவன் – நொய்டா செல்லும் சாலைகளும், கட்டிடங்களும் மட்டும் உலகத்தரத்தில் இருக்கின்றன. கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சிதான் நடைபெறுகிறது என்பதை உணர்வதற்கு டெல்லியை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் போதும்.

டெல்லியை சுற்றிவரும் பழைய பேருந்துகள், பராமரிப்பு இல்லாத ஆட்டோக்கள், மீன்பாடி வண்டிகள், சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இவைகளைத்தான் பெரும்பாலும் மக்கள் பயன்படுத்துகின்றனர். சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இன்னும் ஓடிக்கொண்டிருப்பதை பார்க்கும்போது அதிசயமாக இருக்கிறது.

இதன்மூலம் வட இந்தியாவின் ஒட்டுமொத்த நிலைமையை நம்மால் உணர முடிகிறது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகள் எப்படிப்பட்ட நிலைமையை வளர்த்தெடுத்திருக்கிறார்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஒட்டுமொத்த சமூகத்தையும் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றனர். உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி எள்ளளவும் அவர்களுக்கு கவலையில்லை என்பதே உண்மை.

படிக்க : நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!

மத்திய அரசு மக்கள் நலப் பணிகளுக்காக ஆண்டுதோறும் ஒதுக்கும் நிதி எங்குப்போகிறது என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. கார்ப்பரேட் கொழுத்திருக்கும் நிலைமையைப் பார்க்கும்போதும், மதவெறி கொழுந்துவிட்டெரிவதைப் பார்க்கும்போதும் நிதி எங்கு போகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

காவி பாசிஸ்டுகளின் வளர்ச்சி என்பது வடஇந்தியாவில் இத்தகைய அவலத்தைத்தான் சாதித்துள்ளது. இந்த இருண்ட காலத்தைத்தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பரப்ப எத்தனிக்கிறது காவிக் கும்பல்.

பரசுராமன் – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – பிரச்சாரக்குழு – ஓசூர்

1 மறுமொழி

  1. வட மாநிலங்களின் அவல நிலைக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும். அனுபவப் பகிர்வுக்கு நன்றி தோழரே! !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க