தொடர்ந்து பாசிச அரசால் ஒடுக்கப்படும் ஜே.என்.யு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஷெக்லா ரஷித்!

இந்திய இராணுவம் கூறுவதுபோல் இவை போலி செய்திகள் அல்ல. மிசோராம், மணிப்பூர், குறிப்பாக சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட காஷ்மீரில் காலங்காலமாக இந்திய இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டுவரும் கொடுமைகள்தான் இவை.

Shehla Rashid

வஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவரும் அகில இந்திய மாணவர் சங்கத்தில் (AISA) உறுப்பினருமான ஷெக்லா ரஷித் ஷோரா மீது கடந்த 2019-இல் போடப்பட்ட வழக்கினை தொடர அனுமதி அளித்துள்ளது டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அலுவலகம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஷெக்லா ரஷித், இந்திய இராணுவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டதற்காக அவர் மீது அலாக் அலோக் ஸ்ரீவட்ஸ்வா என்பவர் டெல்லி போலீசு நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அப்போது ஷெக்லா மீது 153-ஏ பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

புதைக்கப்பட்ட இவ்வழக்கினைத் தற்போது தோண்டி எடுத்துள்ளது டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அலுவலகம். ஜே.என்.யு. மாணவர் சங்கத் துணை தலைவரான ஷெக்லா, பல்வேறு குழுக்களுக்கிடையே பகைமையை ஊக்குவித்ததாகவும், அவரது ட்விட்டர் பதிவின் மூலம் நல்லிணக்கம் சீர்குலைந்ததாகவும் லெப்டினன்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


படிக்க : ஒரே நாடு, ஒரே தேர்தல் – ரிமோட் வாக்களிப்பு இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள்!


மேலும் ஷெக்லாவின் பதிவு என்பது ஆதாரமற்றது என்றும் அதனை நிராகரிப்பதாகவும் இந்திய இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. “இதுபோன்ற சரிபார்க்கப்படாத மற்றும் போலியான செய்திகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் மக்களைத் தூண்டுவதற்காக சில அமைப்புகளால் பரப்பப்படுகின்றன” என்று கூறியுள்ளது.

இவர்கள் கூறும் ‘பகையை ஊக்குவிக்கும்’ ஷெக்லாவின் பதிவுகள் இதோ.

“ஆயுதப் படைகள் இரவில் வீடுகளில் புகுந்து, சிறுவர்களை கடத்தி செல்கிறார்கள். வீடுகளைச் சூறையாடுகின்றனர். ரேஷன் பொருட்களைக் கீழே கொட்டுவதும் அரிசியில் எண்ணெய்யை ஊற்றியும் அட்டூழியம் செய்கிறார்கள்”.

“சோபியான் (காஷ்மீர்) இராணுவ முகாமிற்கு கடந்தி செல்லப்பட்ட 4 ஆண்கள் சித்தரவதை செய்யப்பட்டனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பீதியடைய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அருகே மைக் வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் அச்சம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளது”

இவைதான் ஷெக்லா போட்ட பதிவுகள். இதில் பகைமையை தூண்டும் வார்த்தைகள் எதுவும் இல்லை.


படிக்க : கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்கள்!


இந்திய இராணுவத்தின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியதைதான் இவர்களுக்கு நல்லிணக்கம் சீர்குலைந்தது என கூச்சலிடுகிறார்கள். இந்திய இராணுவம் கூறுவதுபோல் இவை போலி செய்திகள் அல்ல. மிசோராம், மணிப்பூர், குறிப்பாக சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட காஷ்மீரில் காலங்காலமாக இந்திய இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டுவரும் கொடுமைகள்தான் இவை.

சமூக வலைத்தளத்தில் போலியான செய்தி பதிவிட்டிருந்தால் அதனை நீக்க சொல்லியிருக்கலாம்; நீக்கியிருக்கலாம். ஆனால் உண்மையில் இந்திய இராணுவத்தால் அரங்கேற்றப்படும் அக்கிரமங்களை கொடுமைகளை பொதுவெளியில் வெளியிட்டதே குற்றமாக்குகின்றது இந்த பாசிச அரசு. இதனை பெரிய வழக்காக எடுத்துகொண்டு தற்போது அவ்வழக்கினை தொடர அனுமதித்திருப்பதென்பது, இந்திய இராணுவம் குறித்தோ ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசம் குறித்தோ பொதுவெளியில் பேசினால் இதுதான் கதி என்ற பயபீதியை கிளப்புவதே இவர்களின் நோக்கம்.

பூங்கொடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க