கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்கள்!

நிறுவனங்கள் தங்களுக்குத் தேவை ஏற்படும்போது அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்திக்கொள்வதும், அவர்களை கசக்கிப் பிழிந்துவிட்டு தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவதும் வாடிக்கையாகிவிட்டது. பணிபுரியும் ஊழியர்களை இவர்கள் ஒருபோதும் மனிதர்களாக கருதுவதில்லை.

0

2023-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து நாளொன்றுக்கு (ஜனவரி 16 வரை) 1,600 ஊழியர்களை உலகம் முழுவதிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளதாக layoffs.fyi என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று துவங்கிய காலத்திலிருந்து பணிநீக்கம் தொடர்பான தரவுகளை இந்நிறுவனம் சேகரித்து வருகிறது.

இவ்வாண்டில் மட்டும் 104 தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 26,000-ம் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் (2022) 1024 தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்த 1,54,336 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணிநீக்கம் செய்யப்படும் போக்கானது 2022-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே தொடங்கிவிட்டது. அக்காலகட்டத்தில் மட்டும் 34 தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 10,000-ம் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

2022-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் மட்டும், 400-ம் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 74,000-ம் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது கொரோனா பெருந்தொற்றின் போது மேற்கொள்ளப்பட்டதைவிட, அதிலும் குறிப்பாக 2020-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 400-ம் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 60,000-ம் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைவிட, அதிகமாகும்.


படிக்க: 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் அமேசான் நிறுவனம்!


2023-ஆம் ஆண்டில் பணிநீக்கம் செய்துள்ள 104 தொழில்நுட்ப நிறுவனங்களில் அமேசான் (Amazon), மெட்டா (Meta), ட்விட்டர் (Twitter), ஷேர்சாட் (ShareChat), ஓலா (Ola) உள்ளிட்ட பல்லாயிரம் கோடிகளில் லாபம் கொழிக்கும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இருக்கின்றன.

உலகின் நான்காவது பெரும் பணக்காரரான ஜெஃப் பெசோஸ்-இன் அமேசான் நிறுவனம் கொரோனா பெருந்தொற்றின் போது அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்தியது. தற்போது நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவுவதாகக் கூறி 18,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் அந்நிறுவனம் 10,000 ஊழியர்கள் வரை நீக்கப் போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது என்று பெருமிதம் கொள்ளும் சமூக வலைத்தள நிறுவனமான ஷேர்சாட், இரண்டு நாட்களில் மட்டும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுள்ளது; மொத்த ஊழியர்களில் 20 சதவிகிதத்தினரை பணிநீக்கம் செய்ததுள்ளது.

போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் ஓலா நிறுவனமானது மறுசீரமைப்பு செய்வதாகக் கூறி 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுள்ளது. கேஸ் ஃபிரீ (Cashfree) என்ற நிறுவனம் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஆன்லைனில் மளிகை பொருட்களை விற்கும் நிறுவனமான டன்சோ (Dunzo) செலவினங்களை குறைப்பதாகக் கூறி 3 சதவிகித பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

காயின் பேஸ் (Coinbase) என்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் (crypto exchange firm) 950 ஊழியர்களை, அதாவது அதன் உலகளாவிய ஊழியர்களின் எண்ணிக்கையில் 8 சதவிகிதத்தினரை, பணிநீக்கம் செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தனது இந்திய ஊழியர்களில் 8 சதவிகிதத்தினரை பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு


மேலும், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் பணிநீக்கம் செய்ய உள்ளன. கூகுள் நிறுவனம் இவ்வாண்டில் 11,000 ஊழியர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியரான சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை, அதிலும் குறிப்பாக இன்ஜினியரிங் மற்றும் எச்.ஆர் பிரிவிலிருந்து, பணிநீக்கம் செய்ய உள்ளதாக இன்று (ஜனவரி 18, 2023) தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐனவரி 16 அன்று புனேவில் பேசிய மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே, “ஜூன் மாதத்திற்குப் பிறகு இந்தியாவில் பொருளாதார மந்தநிலை (Recession) ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். அமைச்சரின் பேச்சு இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்யும் பணிநீக்கத்தை நியாயப்படுத்துவதாக உள்ளது.

இப்பெரு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவை ஏற்படும்போது அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்திக்கொள்வதும், அவர்களை கசக்கிப் பிழிந்துவிட்டு தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவதும் வாடிக்கையாகிவிட்டது. பணிநீக்கத்துக்கு இவர்கள் கூறும் காரணம் பொருளாதார மந்தநிலை. தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை இவர்கள் ஒருபோதும் மனிதர்களாக கருதுவதில்லை. இலாபம் குறைகிறது என்றால் தூக்கி எறிந்து விடுகிறார்கள் அரசின் உறுதுணையோடு.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க