பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனமான “இன்போசிஸ்” (Infosys) நிறுவனத்தின் மைசூரு பயிற்சி வளாகத்திலிருந்து, ஒரே நாளில், “ஃபிரஷர்” (Fresher) எனப்படும் 400 பயிற்சி பொறியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பயிற்சித் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டதாகக் கூறி இந்த 400 ஊழியர்களையும் அடாவடியாக வெளியேற்றியுள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம்.
பிப்ரவரி 7 அன்று, “இந்த நிமிடம் முதல் நீங்கள் இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்கள் அல்ல. ஆகவே இன்று மாலை 6:00 மணிக்குள் அனைவரும் வளாகத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். நிறுவனத்திற்குச் சம்பந்தமில்லாத யாரும் வளாகத்திற்குள் தங்கியிருக்க அனுமதிப்பதில்லை” ஊழியர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி தனது கோரமுகத்தை வெளிக்காட்டியுள்ளது, இன்ஃபோசிஸ் நிறுவனம். தனது நிறுவனத்திற்காக உழைத்த ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச மரியாதையைக் கூட அளிக்காமல் பாதுகாப்பு ஊழியர்களையும், பவுன்சர்கள் எனப்படும் குண்டர் படையினரையும் கொண்டு பயிற்சி ஊழியர்களை வெளியேற்றியது. மத்தியப்பிரதேச மாநிலம் செல்ல வேண்டிய பெண் ஊழியர் ஒருவர், அந்த ஒரு நாள் இரவு மட்டும் தங்கிக்கொள்வதற்கு அனுமதி கேட்டதையும் மறுத்துக் கட்டாயப்படுத்தி வெளியேற்றியது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மனிதத் தன்மையற்ற இந்த நடவடிக்கை நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்தியத் தொழில் தகராறு சட்டத்தை (Industrial Dispute Act) அப்பட்டமாக மீறியிருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த அராஜகத்தைச் சுட்டிக்காட்டி, தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் (NITES – Nascent Information Technology Employees Senate) ஒன்றிய அரசின் தொழிலாளர் அமைச்சகத்திற்குப் புகார் அளித்திருக்கிறது. இதனையடுத்து, தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களிடத்தில் ஏற்படுத்தி இருக்கும் அதிருப்தியை கண்டஞ்சிய ஒன்றிய அமைச்சகம், வேறு வழியில்லாமல், கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்திற்கு இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது.
தற்போது வெளியேற்றப்பட்டுள்ள பயிற்சி ஊழியர்கள் அனைவரும் இந்தியா முழுவதுமுள்ள கல்லூரி-பல்கலைக்கழகங்களின் வளாகத் தேர்வு மூலம் தேர்வானவர்கள் ஆவர். சிறந்த மாணவர்களை தமது நிறுவனத்துக்குத் தேர்வு செய்து கொண்டு விட வேண்டும் என்ற பிற நிறுவனங்களுடனானப் போட்டியினால் அவ்வாண்டில் மொத்தம் 2,000 மாணவர்களை கேம்பஸ் தேர்வு மூலம் வேலைக்கு எடுத்தது இன்ஃபோசிஸ் நிறுவனம். ஆனால், அதன் பிறகு இரண்டு முதல் இரண்டரை ஆண்டுகள் வரை மாணவர்களைக் காத்திருக்கச் செய்துவிட்டு, 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-க்குப் பிறகுதான் அவர்கள் மைசூர் வளாகத்திற்குப் பயிற்சிக்கு வரவழைக்கப்பட்டனர். பிப்ரவரி 7 அன்று வெளியேற்றப்பட்ட இந்த 400 பேர் உள்ளிட்டு 930 பேர் 2024 அக்டோபர் 7 அன்று ஒரு குழுவாகப் பயிற்சியில் இணைந்தவர்கள்.
பயிற்சியின் முடிவில் இறுதித் தேர்வில் மூன்று வாய்ப்புகளுக்குள் குறைந்தபட்சம் 65 மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற வேண்டும், இல்லையெனில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது. இந்த 930 பேரில் முதல் வாய்ப்பில் 160 பேர் மற்றும் இரண்டாவது வாய்ப்பில் 140 பேர் என்று குறைந்த அளவு ஊழியர்களே தேர்ச்சி பெற்றனர். பிப்ரவரி 7 அன்று மூன்றாம் வாய்ப்பு தேர்வு முடிவில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்காக, முதல் நாள் தகவல் தெரிவித்து, ஒரு குழுவுக்கு 50 பேர் என்ற விகிதத்தில் அழைத்து ஒரு அறையில் இருத்தி, ஊழியர்களும் ஒவ்வொருவரும் தனித்தனியாக அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு அதிகாரிகள் முன்னிலையில், பாதுகாப்பு ஊழியர்கள் பவுன்சர்கள் கொண்டு மிரட்டி, கருத்தொருமித்த பிரிவு ஒப்பந்தத்தில் (Mutual Seperation Agreement) கட்டாயப்படுத்தி கையொப்பம் பெற்றிருக்கின்றனர். இதுபோன்றே இன்னும் அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.
படிக்க: 70 – 90 மணிநேர வேலை: தொழிலாளி வர்க்கம் கிள்ளுக்கீரையல்ல!
முந்தைய ஆண்டுகளில் இறுதித் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்த நிலையில், இந்தாண்டில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் தோல்வி அடைந்தவர்களாக அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். குறைந்த தொழிலாளர்கள் மீது அதிக உழைப்பை சுமத்தில் தனது லாபத்தைப் பெருக்கிக்கொள்ளும் சுரண்டல் நோக்கத்திலிருந்தே இறுதித் தேர்வைக் கடுமையாக்கி ஊழியர்களைக் கழித்துக் கட்டியுள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம். தகுதியற்றவர்கள் என்று கழித்துக் கட்டப்பட்ட இந்த ஊழியர்களின் எதிர்காலம் என்பது குறித்தெல்லாம் அதற்கு எந்த கவலையும் இல்லை.
பிரபலமான இன்போசிஸ் நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம், அலுவல் ரீதியாக அதற்கான ஆவணத்தையும் பெற்றிருக்கிறோம், (Offer Letter) என்கிற நம்பிக்கையில் இரண்டரை ஆண்டுகளாகப் பொறுமையுடன் காத்திருந்தவர்களை, பயிற்சி தேர்வு என்கிற சுற்றுப்பாதையின் வழியே வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது இன்ஃபோசிஸ் நிறுவனம். இரண்டரை ஆண்டுகள் காத்திருக்கச் செய்ததே சட்டப்படி குற்றமாகும். அத்துடன் இந்த இரண்டரை ஆண்டுக்கால காத்திருப்பு குடும்பங்களில் பல சிக்கல்களை உண்டாக்கியதுடன் இளம் மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. அவற்றையெல்லாம் கடந்து பிரபலமான இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்களைக் கைவிட்டுவிடாது என்கிற ஒரே நம்பிக்கையில் ஊழியர்கள் அனைவரும் காத்திருந்தனர்.
இன்னும் இவர்களுக்கு முன்னரும் பின்னரும் தேர்வு செய்யப்பட்ட 4,500-க்கும் மேற்பட்டவர்கள் இப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வேலையும் எதிர்காலமும் உத்தரவாதமற்றதாக உள்ளது. இது இன்போசிஸ் நிறுவனத்தில் மட்டும் நடக்கவில்லை. அதே 2022-ஆம் ஆண்டில் விப்ரோ நிறுவனமும் இதேபோன்று கேம்பஸ் தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்வு செய்துவிட்டு பின்னர் ஒப்பந்தக் கடிதத்தை (Offer Letter) வாபஸ் வாங்கிக்கொண்டது. இன்னும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இதுதான் இன்றைய நிலைமை.
கடந்த ஜனவரி மாதத்தில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு கோயம்புத்தூரில் 2,000 ஊழியர்களுடன் இயங்கிவந்த “ஃபோக்கஸ் எஜுமேடிக்ஸ்” (Focus Edumatics) என்கிற தனியார் ஐ.டி. நிறுவனம் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுவனத்தின் செயல்பாட்டை நிறுத்திகொள்வதாக அறிவித்தது. ஜனவரி மாத சம்பளத்தைக் கூட கொடுக்காமல் அடாவடி செய்தது. இதனைக் கண்டித்து ஐ.டி. நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, ஜனவரி மாத சம்பளத்தைத் தருவதாக அறிவித்தாலும் நிறுவனத்தின் செயல்பாட்டைத் தொடர மறுத்தது.
1990-களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம்-தாராளமயம் என்கிற கொள்கையைப் பயன்படுத்திக்கொண்டு தொழில் மற்றும் சேவைத்துறை கார்ப்பரேட் முதலாளிகள், தொழிலாளர்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கசக்கிப் பிழிகின்றன. லாபம் குறைந்தால் தெருவிலும் வீசி எறிகின்றனர். தற்போது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்துவரும் சூழலில் தொழிலாளர்கள் வீசியெறியப்படுவது உலகம் முழுவதும் தீவிரமடைகிறது. இதனால் தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்களே முதன்மையாகப் பாதிக்கப்படுகின்றனர். தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு ரீதியான ஒற்றுமையின் மூலமே இவற்றுக்கெல்லாம் முடிவுகட்ட முடியும்.
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram