ஜனவரி 25: இந்தி திணிப்புக்கெதிரான மொழிப்போர் தியாகிகளது தீரத்தையும், தியாகத்தையும் நெஞ்சிலேந்துவோம்!

இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்தி பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! என்ற தலைப்பின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

னவரி 25 : இந்தி திணிப்புக்கு எதிராக உயிர்நீத்த தியாகிகளை நினைகூர்வது, அடங்க மறுக்கும் இந்தி திணிப்புக்கு முடிவு கட்ட அறைகூவல் விடுப்பது என்கிற நோக்கத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ஆவடி, பூவிருந்தவல்லி, காஞ்சிபுரம், வேலூர், பேரணாம்பட்டு, ஓசூர் பகுதிகளில் தொழிலாளர்கள் – மாணவர்கள் – இளைஞர்கள் மத்தியில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

வேலூர் மாநகரில், அடுக்கம்பாறை பகுதியில் இயங்கி வருகின்ற தரைக்கடை வணிகர்கள் பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் சுந்தர் தலைமையில் வீரவணக்க நிகழ்ச்சியை நடத்தினர். மாலையில் பேரணாம்பட்டு பகுதியில் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த தெருமுனைக்கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்டப் பொருளாளர் தோழர் ப.சக்திவேல் தலைமை தாங்கினார்.

படிக்க : மீண்டும் இந்தி: வெறும் மொழித் திணிப்பல்ல!

தோழர் சக்திவேல் தனது தலைமை உரையில் “இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் மொழிப்போர் தியாகிகள் தின நிகழ்ச்சிகளை மொழி வெறியர்கள் நிகழ்ச்சியாக சித்தரிக்க முடியாது. நாம் மொழி வெறியர்கள் அல்ல. எனது தாய்மொழியைப் பாதுகாக்கும் உரிமையை பாதுகாக்கும் உரிமை எமக்குள்ளது. அதேபோல தமது தாய்மொழி, பண்பாடு ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ளும் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் இருக்கிறது. அந்த வகையில் எமது தாய் மொழி தமிழை பாதுகாப்பது, ஆதிக்க இந்தியை அடித்து விரட்டுவது என்கிற நோக்கத்தோடு களமிறங்கி மாண்டுபோன நூற்றுக்கணக்கான தியாகிகளது நினைவேந்தலானது இன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது” என நிகழ்ச்சியின் நோக்கத்தை பதிவு செய்தார்.

சிறப்புரையாற்றிய தோழர் ஆ.கா.சிவா, தலைவர் (வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு) தனது உரையில், “ஆதிக்க இந்தி திணிப்புக்கெதிரான போரில் தமிழ்நாட்டுக்கொரு மரபு இருக்கிறது. இந்த மரபு தான் தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது; தமிழகம் என்று சொன்ன ஆர்.எஸ்.எஸ் ரவியை பத்தே நாட்களில் பணிய வைத்தது.

தமிழ் மொழிகாக்கும் மரபை – தாய்மொழிக்காக நூற்றுக்கணக்கானோர் தங்களை மாய்த்துக் கொண்ட மரபைக் கொண்ட தமிழ்நாட்டில் 1937-38 கால கட்டத்திலேயே இந்தி திணிப்புக்கெதிரான போராட்டம் வீச்சாக நடந்து பார்ப்பன ராஜாஜியை பணிய வைத்தது. 1965-ல் மீண்டும் இந்தியை திணித்த பக்தவத்சலம் – காமராஜ் – கக்கன் கூட்டத்துக்கு பாடம் புகட்டியது.

1938-ல், காலனிய ஆட்சியில் ராஜாஜி வெறும் பாடத்திட்டத்தில் தான் இந்தியை திணித்தார்.

1965-ல் ‘சுதந்திர’ இந்தியாவில் இந்தியை ஆட்சிமொழியாக்கும் அளவுக்கு ஆதிக்கவெறி உச்சகட்டத்துக்கு சென்றது.

படிக்க : இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகள் தினம் – ஆளுநர் ரவியே வெளியேறு சென்னையில் ஆர்ப்பாட்டம்!

1938 போராட்டத்துக்கு தமிழறிஞர்கள், சமூகநீதி இயக்கத் தலைவர்கள் வழிநடத்தினர். 1965 போராட்டத்திலோ போராட்டக்களத்தை மாணவர்கள் முன்னின்று வழி நடத்தினர். சென்னை திருவொற்றியூரில் கல்கத்தா ரயில் நிறுத்தப்பட்டு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டக்களமாக்கப்பட்ட போதும், சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில் பெரம்பூர், வில்லிவாக்கம், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை போன்ற ரயில் நிலையங்கள் போராட்ட முனைகளாக்கப்பட்ட போதும் மாணவர்களே தலைமை சக்தியாக இருந்தார்கள். தொழிலாளர்கள் துணையாக நின்று தோள் கொடுத்தனர். சென்னை பச்சையப்பன் கல்லூரி துவங்கி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழியாக கோவை, திருச்சி, தஞ்சை, சேலம் நெல்லை வரை குறுக்கும், நெடுக்குமாக விரிவடைந்த போராட்டத்தில் தடியடியையும், துப்பாக்கி குண்டுகளையும் தீரத்துடம் எதிர் கொண்டு, தியாகிகளாகி தாய்மொழியைக் காத்த மரபு தமிழ்நாட்டுக்கு இருக்கிறது.

1937-38, 1965 களங்களில் துரத்தியடிக்கப்பட்ட இந்தி திணிப்பு இன்று காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் வழியே; ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தின் ஆயுதமாக, இந்து ராஷ்டிரம் அமைக்கும் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக நம்மை நோக்கி வருகிறது. தாய்மொழியின் வரலாற்றையும், அதன் பண்பாட்டுக் கூறுகளையும் அழிப்பதன் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என இந்த பாசிசம் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. இதற்கு முடிவு கட்ட மொழிப்போர் தியாகிகள் நாளில் சூளுரைப்போம்!” என அறைகூவல் விடுத்தார்.

மாவட்ட செ.கு உறுப்பினர் தோழர் ம.சரவணன் நன்றியுரையுடன் முடிந்த இந்த தெருமுனைக்கூட்டம் ஒரு உந்துதலைக் கொடுத்துள்ளது.

தகவல்:
வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க