இனவெறியர்களால் சித்திரவதைக்குள்ளாகும் வடமாநில தொழிலாளர்கள்!

வேலைத்தேடி குடும்பம், குட்டிகளை விட்டு பல மைல் தூரம் கடந்து வந்திருக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், அற்பக்கூலிக்காக மாடாய் உழைக்கிறார்கள்; அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. அவர்களை போலதான் உழைக்கும் மக்களான நாமும் சுரண்டப்படுகிறோம் என்ற உணர்வு, இனவெறியால் திரையிட்டு மறைக்கப்படுகிறது.

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை தாக்கினார்கள் என்ற வதந்தி பரவியதையடுத்து, உண்மை நிலைமை என்னவென்றே தெரிந்து கொள்ளாமல் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான மீம்கள், வீடியோக்கள் சமூகவலைத் தளங்களில் பெரிதளவில் வலம் வந்தன.

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான இவ்வெறுப்புப் பிரச்சாரங்கள் திட்டமிட்டே பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலில், “வடக்கு ரயில் பாவங்கள்” என்ற பெயரில் வீடியோ ஒன்று வெளியானது. 8 மில்லியன் பார்வைகளைக் கடந்த இவ்வீடியோ, “ரயில்களில் ஏறும் வடமாநில தொழிலாளர்கள் யாருக்கும் இடம் கொடுக்காமல் ஆக்கிரமித்து கொள்வார்கள்”; கண்டக்கண்ட இடங்களில் எச்சில் துப்புவார்கள், “பீடாவாயன், வடக்கன்களால் வேலை பறிபோகுது” போன்ற வசனங்கள் மூலம், வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான விஷக்கருத்தைக் கக்குகிறது. “இதுதான் தமிழ்நாட்டின் எதார்த்த நிலைமை”, “வடக்கன்ஸ் ஆதிக்கத்தில் இருந்து மீளுவோம்” போன்ற ஆயிரக்கணக்கான கமெண்டுகளும் இவ்வீடியோக்குக்கீழ் கொட்டி கிடக்கின்றன. “நான் 200 ரூபாய்க்கு வேலை செய்வேன். என் சித்தப்பா 80 ரூபாய்க்கு வேலை செய்வார்” என்ற இவ்வீடியோவில் இடம்பெற்ற வசனங்களை நாம் தமிழர் கூட்டத்தில் பேசி பூரிப்படைகிறார் சீமான்; அதனை நூற்றுக்கணக்கான இளைஞர்படை ஆரவாரத்தோடு ரசித்து வரவேற்கிறது.

படிக்க : நெடுமாறனும் சீமானும் கைக்கூலிகளே! || தோழர் மருது வீடியோ

வடமாநில தொழிலாளர்கள் மீதான இக்கருத்தியியல் தாக்குதல் என்பது அன்றாட வாழ்க்கையில் எதார்த்த நிலையாக மாறி வருகிறது. அண்மையில், இரயில் பயணத்தை மேற்கொண்டிருந்தேன். ஒரு நிலையத்தில், பெண்கள், சிறுவர்கள் என 8 – 10 வடமாநில தொழிலாளர்கள் திடுதிடுமென நான் இருந்த பெட்டியில் ஏறினார்கள். அவர்கள் கொண்டு வந்த மூட்டை பைகளோ அவர்களைவிட இரண்டு மடங்கு அதிகம். லக்கேஜ் வைக்கும் இடங்களில் வரிசையாக தங்களது மூட்டைகளை அடுக்கி, காலியாக இருந்த இருக்கைகளில் படுத்துக் கொண்டனர்.

நேரம் கடந்தது. பெண் ஒருவர் இந்தியில் வீரிட்டு கத்தும் சத்தம் கேட்டு, கண் அசந்திருந்த நான் திடீரென விழித்துக் கொண்டேன். அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என புரிந்துகொள்ள சிறிது நேரமானது.

வடமாநில தொழிலாளர்கள் ஏறிய இரண்டு நிலையங்களுக்கு அடுத்து, கூட்டம் அலைமோதியதால், இருக்கைகளில் படுத்துக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்களை எழுந்து உட்காரும்படி பயணிகள் கூறினார்கள். முன்பதிவு செய்யாத பெட்டியில் உட்கார இடமில்லை என்றால் படுத்திருப்போரை எழுந்திருக்க சொல்வது வழக்கம்தான். ஆனால், வடமாநில தொழிலாளர்கள் நாயைவிட மோசமாக நடத்தப்பட்டனர்.

அப்போது பெட்டியில் ஏறிய 22 – 25 வயதுடைய 3 தமிழ் இளைஞர்கள், இரண்டு வடமாநில தொழிலாளர்களை வற்புறுத்தி கீழே உட்காரச் சொல்லி, அவர்கள் அமர்ந்திருந்த இடங்களை ஆக்கிரமித்தனர். இருக்கைக்கு மேலே லக்கேஜ் வைக்கும் இடத்தில் படுத்திருந்த வடமாநில பெண்ணை எழுப்பி கீழே உட்கார சொன்னபோதுதான் அப்பெண் வீரிட்டு இந்தியில் கத்தினாள். அப்பெண்ணின் மொழி தெரியாது என்றாலும் அவளின் குரலில் இருந்த ஆதங்கம், பயங்கலந்த கோபத்தை யாராலும் புரிந்துகொள்ள முடியும். அப்பெண் கத்தியதையும் பொருட்படுத்தாத பயணிகள் சிலர், இடங்களை ஆக்கிரமிப்பதில் கிடைத்த வெற்றியில் சிலாகித்தப்படி அமர்ந்துகொண்டனர்.

கீழே இறங்க மறுத்த அப்பெண்ணை “இதுலாம் பொம்பளையா. இப்படி பேசுறா”, “என்னடா சொல்றா.. ஒன்னுமே புரியல” என்று அந்த மூன்று இளைஞர்களும் அப்பெண்ணை கலாய்க்க ஆரம்பித்தனர். 15 வயதுடைய ஒரு வடமாநில சிறுவனிடம் கத்திய பெண்ணைச் சுட்டிக்காட்டி “இது உங்க அம்மாவா டா இப்படி கத்துறா” என்றதும் அச்சிறுவனுக்கு ஒன்றும் புரியாமல் சிரிந்தபடி இருந்தான். “இது உங்க அப்பாவா..? இது உங்க அப்பாவா” என சில வடமாநில தொழிலாளர்களைச் சுட்டிக்காடி அவ்விளைஞர்கள் கேட்டனர்.

நேரம் சென்றது, இருந்தும் வடமாநில தொழிலாளர்களை ஏசுவதை அவ்விளைஞர்கள் சிறிதுநொடி கூட நிறுத்தவில்லை. இதில் என்ன வேதனை என்றால் வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒருத்தரும் அவ்விளைஞர்களை எதிர்த்துக் கேள்விக் கேட்கவில்லை என்பதுதான்.

ஆரம்பத்தில் வடமாநில தொழிலாளர்களின் உருவங்களைக் கேலி செய்தவர்கள் பின்னர், “எங்க போற”, “நீங்க (வடமாநில தொழிலாளர்கள்) மட்டும்தான் டிரெயின்ல போகனுமா? ஏன் நாங்கலாம் போகவேண்டாமா”, “இப்படி உட்கார்ந்துகிட்டா நாங்க எப்படி உட்காரது” என்றனர். தங்களுக்கு புரிந்தளவில் பதிலளித்த வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து கேள்விகளால் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டார்கள். கேள்விப் புரியாமல் சிரித்த அச்சிறுவனையும் சில வடமாநில தொழிலாளர்களையும் பார்த்து “சிரிச்சே எங்க பொழப்ப கெடுக்க வந்துருங்கீங்க டா” என்று எரிந்து விழுந்தனர்.

எழுப்பூரில் இறங்கவேண்டிய அவ்வடமாநில தொழிலாளர்களை விழுப்புரத்திலேயே “இதுதான் டா நீங்க இறங்கவேண்டிய இடம். மூட்டை முடிஞ்சலாம் கட்டிக்கிட்டு ஒழுங்கா கீழ இறங்குங்கடா” என்று கத்திக் கொண்டே இருந்தனர். வார்த்தைகளால் தாங்கள் தாக்கப்படுவதைப் புரிந்து கொண்ட வடமாநில தொழிலாளர்கள் எதுவும் பேசமுடியாமல் அமைதியாக இருந்தனர். வடமாநில தொழிலாளர்களை ஏசுவதில் சிறிது நேரம் தங்களது வாயிக்கு ஓய்வு கொடுத்த அந்த இளைஞர்கள், வடமாநில தொழிலாளர்கள் குறித்த சீமானின் இனவெறி வீடியோக்களை சத்தமாக வைத்து கேட்டுக் கொண்டு வந்தனர்.

20 – 25 நிமிடங்கள் அமைதியாக இருந்திருப்பார்கள் அவ்வளவுதான், வீடியோக்களைப் பார்த்துவிட்டு, மீண்டும் “உங்களால தாண்டா எங்களுக்கு வேலை போயிடுச்சு. தமிழ்நாட்டில இருக்குற நாங்க 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறோம். வடக்குல இருந்து அலுங்காம இங்க வந்து 25 ஆயிரம் சம்பாதிச்சிட்டு போறீங்க” என்று சீமான் கக்கியதை எடுத்து வாயில் போட்டு கக்கினான் ஒருவன். “வேலையும் புடுங்குவீங்க, இங்க இடமும் கொடுக்கமாட்டீங்களா டா”.. “டிக்கெட் எடுக்காம சீட்டுல உட்கார்ந்துட்டு வரீங்க” என்று பேசியபடியே, “டேய்.. டிடிஆர் வராரு டா” என்று கத்தி ஏதோ சாதித்ததுபோல் அருவருப்பாக சிரித்தனர்.

இருக்கையில் வடமாநில தொழிலாளருடன் அமர்ந்திருந்த தமிழ் பயணி ஒருவர் சிறுநீர் கழிக்க எழுந்து சென்று திரும்பி வந்து பார்த்தபோது, வடமாநில தொழிலாளர் ஒருவர் அசதியில் இருக்கையில் படுத்துவிட்டார். ”எங்கடா என் இடம்?” என்று கேட்ட அப்பெரியவரிடம், “பாருங்கண்ணா இவனுங்க இப்படிதான் பண்ணுவாங்க. இருக்க இடம் கொடுத்தா முதலாளி மாறி படுத்துக்குவாங்க” என்று அப்பெரியவரின் கோபத்தை ஏற்றிவிட்டான் ஒரு இளைஞன். அப்பெரியவரும் இளைஞர்களுடன் இணைந்து வடமாநில தொழிலாளர்களை ஏச ஆரம்பித்தார்.

படிக்க : அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்க எதிரி!

“உனக்கு அடக்க ஒடுக்கமா உட்கார தெரியாதா டா. கால விரிச்சிக்கிட்டுதான் உட்காருவியா” என்று 15 வயது சிறுவனை பார்த்து கேட்டவர்கள், “ஏன்.. உட்கார இடத்துல கட்டியா. அடங்கி உட்காரு” என மிரட்டினர். ”இங்க ஏண்டா வந்த.. கஞ்சா விக்கதான” என கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு செய்தனர். மொழி தெரியாத ஊருக்கு பிழைப்புத்தேடி வந்த அச்சிறுவன், இளைஞர்கள் கேட்ட கேள்வியால் பயந்து கூனிக்குறுகிப் போய் அமர்ந்திருந்தான். இரவில் நான்கு மணி நேரமாக துளியும் தூங்கவிடாமல் அவனை நச்சரித்து கொண்டு கேவலமாக சிரித்துக் கொண்டிருந்தனர் அந்த இளைஞர்கள்.

வடமாநில தொழிலாளர்களை சக மனிதர்களாக பார்க்க முடியாத அளவுக்கு இவ்விளைஞர்களுக்கு இனவெறி போதை ஊட்டப்பட்டிருக்கிறது. வேலைத்தேடி குடும்பம், குட்டிகளை விட்டு பல மைல் தூரம் கடந்து வந்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள், அற்பக்கூலிக்காக மாடாய் உழைக்கிறார்கள்; அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. அவர்களை போலதான் உழைக்கும் மக்களான நாமும் சுரண்டப்படுகிறோம் என்ற உணர்வு, இனவெறியால் திரையிட்டு மறைக்கப்படுகிறது.

ஏன் வேலை இல்லை, அந்தந்த மாநிலங்களுக்குரிய வேலைவாய்ப்பை அரசு ஏன் உருவாக்கவில்லை என்று சிந்திப்பதில்லை. லாபம் ஈட்ட வடமாநில தொழிலாளர்களை, குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மீதோ; குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலத்தவர்களை, இரயில்வே, வங்கிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளாக பணியமர்த்தும் மோடி அரசின் மீதோ இளைஞர் ‘தம்பி’களுக்கு கோபம் வருவதில்லை. சீமான் போன்றவர்களால் ஊட்டப்பட்ட இனவெறியால் நமது எதிரி வடமாநில தொழிலாளர்கள்தான்; அவர்களை நேரடியாகவும் உளவியல் ரீதியாகவும் தாக்குவதன் மூலம்தான் தங்கள் உரிமைகளை மீட்பதாக தப்பெண்ணம் கொண்டவர்கள் இவர்கள். வடமாநில தொழிளார்களுக்கு ஆதரவாக மனிதாபிமான அடிப்படையில்கூட சக உழைக்கும் மக்கள் யாரும் குரல் கொடுப்பதில்லை என்பதுதான் இனவெறியைவிட கொடூரமானது.

ஆதினி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க