அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்க எதிரி!

இப்படி அதானி குழுமமானது 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளில் அதானியின் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

டந்த இரு ஆண்டுகளும் வரலாற்றில் மிகக்கொடிய ஆண்டுகள். கொரோனா எனும் கொடிய வைரஸினால் உலகமே நிலைகுலைந்து, கொத்துக்கொத்தாய் மக்கள் மாண்டு போயினர். உலகமே தம் உயிரைக் காக்க போராடிக் கொண்டிருந்த போது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடிக்க போட்டியிட்டுக் கொண்டிருந்த சிறுகும்பலும் இருக்கவே செய்தது. அதில் முதன்மையான நபர் அதானி. அப்போது அவருடைய ஒருநாள் வருமானம் 1,002 கோடி.

ஒரு சாதாரண ஜவுளித்தொழில் செய்யும் வணிகக் குடும்பத்தில் பிறந்த இவரால் எப்படி இவ்வளவு வருமானம் ஈட்ட முடிந்தது? எப்படி உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடிக்க முடிந்தது? ஒரே காரணம், மோடி – அதானி கூட்டணி. 2001 இல் மோடி குஜராத்தின் முதல்வரான பின்பே அதானியின் தொழில்களும் சொத்தும் வளரத் தொடங்கின. அதானியின் பல வணிக விரிவாக்கங்கள் மற்றும் தொழில் வளர்ச்சிகளே மோடியின் குஜராத் மாடலாகக் காட்டப்பட்டன என்றால் அது மிகையாகாது.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போது, மோடியை ஆதரித்துப் பேசி பாதுகாத்தவர் அதானி. இப்படுகொலைகளுக்காக இந்தியத் தொழில் முனைவோர் கூட்டமைப்பு மோடியைக் கண்டித்தது. அப்போது கூட்டமைப்பின் உள்ளிருந்தே அதை எதிர்த்த அதானி, மோடிக்காக கூட்டமைப்பை விட்டு விலகப்போவதாகவும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். அந்தளவுக்கு மோடி-அதானி கூட்டணி அப்போதே வலுவாக இருந்தது.

மோடிக்கு மட்டுமல்ல, அவரது சிந்தாந்தத் தலைமையான ஆர்.எஸ்.எஸ்.க்குமே நெருக்கமானவர் அதானி. ஆர்.எஸ்.எஸ்-ன் தலைமையகமான நாக்பூர் அலுவலகத்தில் நடந்த ஷாகாக்கள், முக்கியக் கூட்டங்களில் அதானி கலந்து கொண்டிருப்பதை “நரக மாளிகை” என்னும் நூலின் ஆசிரியர் சுதீஷ் மின்னி அம்பலப்படுத்தியுள்ளது, அதானி – காவி உறவுக்கு ஓர் சான்று.


படிக்க: விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !


2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குஜராத் வைப்ரண்ட் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 15,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்தார் அதானி. அதானி பராமரித்து வந்த முந்த்ரா துறைமுகம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட இருந்த சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டத்திற்காக 15,946 ஏக்கர் நிலத்தை ஒரு சதுரமீட்டர் 1 முதல் 32 ரூபாய் வரை என அடிமாட்டு விலைக்குத் தூக்கிக் கொடுத்தார் மோடி. அந்நிலத்தையே அரசுப் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு, 1 சதுரமீட்டர் 600 ரூபாய் என உள்குத்தகைக்கு விட்டார் அதானி.

குஜராத் அரசே இயற்கை எரிவாயுவை வெளிச்சந்தையில் வாங்கி, குறைவான விலைக்கு அதானி நிறுவனத்துக்கு விற்றது; அதானி நிறுவனம், குஜராத் மின் வாரியத்திற்கு ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய மின்சாரத்தை வழங்காத போது, குறைவான தண்டத்தொகையையே அரசு வசூலித்தது; முந்தரா துறைமுகத்தின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு அதானிக்கு விற்றது என இக்கூட்டணி செய்த முறைகேடுகள் கணக்கில் அடங்காதவை. இம்முறைகேடுகளின் மூலம் கோடிகோடியாய் மக்கள் பணத்தைக் கொள்ளையிட்ட அதானி, அடுத்தடுத்த தொழில்களில் கால்பதித்து பெரும்பணக்காரர் பட்டியலில் இணைந்து கொண்டார்.

2009 ஆம் ஆண்டு தன்னுடைய தனித்தனி தொழில்களுக்காக 11 நிறுவனங்களைத் தொடங்கினார். 2012 ஆம் ஆண்டு முதல் சூரிய மின் உற்பத்தியில் கால் பதித்தார். 2012 -2013 நிதியாண்டில் அதானி குழுமத்தின் ஆண்டு வருமானம் 47,352 கோடியாக அதிகரித்தது. ஆனால், 2000 ஆம் ஆண்டில் அதானி குழுமத்தின் மொத்த வரவு செலவு 3,300 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2013 வரை குஜராத்தை மையமாகக் கொண்டு தன்னுடைய கொள்ளையை நடத்திக் கொண்டிருந்த அதானி, 2014 இல் மோடி பிரதமரானதும் இந்தியா முழுக்க விரிவுபடுத்த ஆரம்பித்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அதானியின் சொந்த விமானத்திலேயே பறந்து சென்றார் மோடி. அதானியின் விமானத்தில் மோடி பறக்கப் பறக்க, அதானி நிறுவனங்களின் பங்குகள் மேலேமேலே ஏறின. அதானியின் 3 நிறுவனங்களின் பங்குகள் கிட்டதட்ட 85.35% வளர்ச்சி கண்டன.

தேர்தலில் வென்று மோடி பிரதமரான பிறகு, அதானி குழுமமானது மின்னல் வேகத்தில் வளரத் தொடங்கியது. பிறரது தொழில் நிறுவனங்களை மொத்தமாக விலைக்கு வாங்குவதன் மூலம் தன் தொழிலை மேலும் விரிவுப்படுத்தியது. 2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், தாம்ரா துறைமுகத்தை 5,500 கோடிக்கு எல்&டி மற்றும் டாடா ஸ்டீலிடம் இருந்து வாங்கியது. அடுத்து மூன்று மாதங்களில் 1200 மெகாவாட் அனல்மின் நிலையத்தையும், அதற்கடுத்த மூன்று மாதங்களில் 600 மெகாவாட் அனல்மின் நிலையத்தையும் விலைக்கு வாங்கியது.


படிக்க: அதானியே நமோ நமஹா!


பிறரது தொழில் நிறுவனங்களை வாங்குவது ஒரு வழிமுறை என்றால், தனக்கு முன் அனுபவம் இல்லாத துறைகளில் எல்லாம் தன் தொழிலை விரிவுபடுத்துவது மற்றொரு வழிமுறை. வானூர்தி நிலையத் தொழிலுக்குத் துளியும் சம்மந்தம் இல்லாத அதானி குழுமத்திற்கு 6 விமான நிலையங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் 2019 பிப்ரவரியில் தரப்பட்டது. இதற்காக அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் என்ற தனி நிறுவனத்தையே புதியதாக உருவாக்கியது அதானி குழுமம். அதே போல் 5ஜி அலைக்கற்றையை வாங்கியதன் மூலம் தொலைத்தொடர்பு துறையிலும் நுழைந்திருக்கிறது.

இதன் விளைவாக அதானி குழுமம், நிலக்கரி துரப்பனம் மற்றும் வணிகம், துறைமுகங்கள், மின்சாரம், எரிவாயு உற்பத்தி மற்றும் பகிர்மானம் போன்ற துறைகளில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக வளர்ந்துள்ளது. பிற துறைகளிலும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. இதனூடாகவே பிற நாடுகளிலும் தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது.

மோடி இந்தியப் பிரதமரான உடனேயே, அதானியின் சர்வதேசக் கொள்ளைக்கு அடிக்கோல் நாட்ட ஆரம்பித்தார். அதானிக்காக, மோடியே ஆஸ்திரேலியாவிற்கு நேரடியாகச் சென்று நிலக்கரிச் சுரங்கத்தை பேரம்பேசி வாங்கிக் கொடுத்தார். அதற்காக 6500 கோடியையும் எஸ்பிஐ வங்கியில் இருந்து தூக்கிக் கொடுத்தார். இத்திட்டம் மட்டுமின்றி, அதானி குழுமத்தின் மொத்த வளர்ச்சிக்கும் அடிநாதமாக இருந்து வருவது வங்கிக்கடன்களே. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டு தள்ளுபடி செய்யப்படும் பல்லாயிரம் கோடிகளே, அதானி – அம்பானி உள்ளிட்ட பெரும்பணக்காரர்களை உருவாக்கி வருகின்றன. கோடானுகோடி உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை, வங்கிச் சேமிப்பைச் சூறையாடிக் கொடுத்து, அதானிகளை உருவாக்குவதை அரசு தனது முதன்மைப்பணியாக செய்து வருவதே இதற்கு அடிப்படை. இப்பகல் கொள்ளைக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர் ‘தேசத்தின் வளர்ச்சி’.

ஆஸ்திரேலியா சுரங்க ஒப்பந்தத்தைப் போல, இலங்கை மின்சார ஒப்பந்தத்தையும் மோடியே பேரம்பேசி முடித்துக் கொடுத்தார். “இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தத்தால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்க தன்னைப் பணித்தார்” என அப்போது இலங்கையின் மின் வாரியத் தலைவராக இருந்த ஃபெர்டினாண்டோவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஒரு நாட்டில் மின்சார உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி மின் உற்பத்தி செய்து, அந்நாட்டு அரசிற்கே மின் விநியோகம் செய்வது ஒரு வழிமுறை என்றால், ஒரு நாட்டில் மின் உற்பத்தி செய்து, வேறொரு நாட்டிற்கு மின் விநியோகம் செய்வது அதானி குழுமத்தின் மற்றொரு வழிமுறை. வங்கதேசம் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்ய இரண்டாவது வழிமுறையே பின்பற்றி வருகிறது  அதானி குழுமம்.

டிசம்பர் 2022 முதல் வங்கதேசத்திற்கு அனுப்பவிருக்கும் 1,600 மெகாவாட் மின்சாரத்தை ஜார்கண்டில் உள்ள கோட்டா அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் பங்களாதேஷ் பவர் டெவெலப்மண்ட் போர்ட் (BPDB) உடன் 2017 ஆண்டே போடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் இந்தியா வந்த வங்கதேசப் பிரதமர், அதானியுடன் நடத்திய சந்திப்பின் மூலம் இவ்வொப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிருக்கும் அரசுகளைப் போலவே, வங்கதேச அரசும் அதானியிடம் இருந்து அதிகப்படியான விலைக்கே மின்சாரத்தை வாங்குகிறது. அதானியிடம் இருந்து 1 கிலோ வாட் மின்சாரத்தை 3.26 டாக்காவுக்கு வாங்குகிறது. இந்த விலையானது அந்நாட்டு மின்சார நிறுவனங்கள் இதே அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவை விட அதிகமாகும்.


படிக்க: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! மாநாட்டுத் தீர்மானங்கள்


இதேபோல் மொராக்கோவில் மின்சாரம் மற்றும் உமிழ்வு இல்லாத எரிபொருளை (பசுமை ஹைட்ரஜன்) உற்பத்தி செய்து ஐரோப்பிய யூனியனுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக அதானி குழுமம் கூறியுள்ளது. 10 ஜிகாவாட் மின்சாரத்தை விநியோகம் செய்யும் இத்திட்டமானது, இந்தியாவிற்கு வெளியே மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மின் உற்பத்தி திட்டமாகும்.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் 50 பில்லியன் டாலரை முதலீடு செய்வதன் மூலம், உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக மாறுவதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது அதானி குழுமம். இதற்காக பிரான்ஸ் நாட்டு டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

நிலக்கரிச் சுரங்கம், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் மட்டுமில்லாமல், சில நாடுகளில் சரக்குப் போக்குவரத்துத் துறைமுகங்களையும் அதானி துறைமுகம் கைப்பற்றிவருகிறது. 2017-ஆம் ஆண்டு மலேசியாவில் போர்ட் கிளாங் துறைமுகத்தின் விரிவாக்கமாக கேரி தீவில் ஒரு மெகா கொள்கலன் துறைமுகத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் அதானி குழுமம் ஈடுபட்டது.

அதே போல் 2022 ஜூலையில் இஸ்ரேலின் மத்தியத் தரைக்கடல் கடற்கரையில் உள்ள ஒரு முக்கிய வர்த்தக மையமான ஹைஃபா துறைமுகத்தை அதானி குழுமம் கைப்பற்றியது. உள்ளூர் இரசாயன மற்றும் தளவாடக் குழுமமான கடோட் உடன் கூட்டணி அமைத்துக்கொண்டு இத்துறைமுகத்தைக் கைப்பற்றியது. இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கான பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய பெரும்பாலும் கடல்வழியையே நம்பி உள்ளது. ஹைஃபா துறைமுகமே இஸ்ரேலுக்கான கண்டெய்னர் சரக்குகளில் கிட்டதட்ட பாதியைக் கையாளுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அடிப்படையில் அதானி குழுமம் இத்துறைமுகத்தைக் கைப்பற்றியது முக்கியமானது என்றாலும், அதை விட முக்கியமாக அதானி குழுமமானது இத்துறைமுகம் மூலம் இந்தியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போக்குவரத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. அதைவிட, மலேசியாவில் உள்ள கேரி, இஸ்ரேலில் உள்ள ஹைஃபா மற்றும் இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் மூலம் அதானி குழுமமானது ஒரு ஒருங்கிணைந்த உலகப் போக்குவரத்தை உருவாக்கும் நோக்கத்தை மையமாகக் கொண்டே இயங்கிவருகிறது.

இப்படி அதானி குழுமமானது 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளில் அதானியின் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. இதே சமயத்தில் அதானி குழுமத்தின் கொள்ளைக்கெதிராக – சுற்றுச்சூழல் அழிப்பிற்கெதிராக குஜராத், கேரளா, தமிழ்நாடு என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கேரளாவில் அதானியின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக, அங்குள்ள  மக்கள் தற்போது தீவிரமாக போராடிவருகிறார்கள்.

கார்ப்பரேட் கொள்ளையர்களின் வேட்டைக்காடாக நாட்டை மாற்றுவதையே வளர்ச்சி – முன்னேற்றம் என புளுகி மக்களை ஏமாற்றி வரும் மோடியின் துணைகொண்டு, இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் தன் நாசகாரக் கொள்ளையை விரிவுபடுத்தி வருகிறார் அதானி. இந்த வகையில், அதானி இந்தியப் பாட்டாளி வர்க்கத்திற்கான எதிரி மட்டுமல்ல, சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் எதிரியும்கூட. எனவே, அதானியை வீழ்த்தும் போராட்டத்தில் இந்தியப் பாட்டாளி வர்க்கம், சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துடன் ஒன்றிணைவது அவசியம். மோடி-அதானி கூட்டணியை முறியடிக்கவும் இது அவசியம்.

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 இதழ்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க