காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் யாருக்கானதாக இருக்கும்?

காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு சட்டத்தையும், சலுகைகளையும் ரத்து செய்ததன் மூலம், காஷ்மீரில் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இனி சொத்து வாங்க முடியும் என்ற காவி கும்பலின் கூப்பாட்டையும் பொருத்திப் பார்த்தால் இதன் பலன் யாருக்கானது என்று புரியும்.

டந்த பிப்ரவரி 9-ம் தேதி அன்று, ஜம்மு & காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் 5.9 மில்லியன் டன் அளவுள்ள கணிசமான லித்தியம் படிவுகளைக் கண்டுபிடித்ததாக இந்திய ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் அறிவித்துள்ளது.

லித்தியம் பளபளப்பான, சாம்பல் நிற உலோகம். பேட்டரி வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் லித்தியம் முக்கியமானது. இன்றைய உலகிற்கு தேவைப்படும் முக்கியமான உலோகமும் கூட.

ஒரு கணக்கீட்டின்படி சிலியில் – 9.2 மில்லியன் டன் லித்தியமும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 6.2 மில்லியன் டன் லித்தியமும், தற்போது இந்தியாவில் 5.9 மில்லியன் டன் லித்தியமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா தற்போது உலகிலேயே அதிக லித்தியம் கொண்ட முதல் மூன்று நாடுகளுக்குள் வந்துவிட்டது.

இப்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ள 1 டன் லித்தியத்தை உற்பத்தி செய்ய சுமார் 2.2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. 1 டன் லித்தியத்தை உற்பத்தி செய்யவே இவ்வளவு தண்ணீர் தேவைப்படும் போது, 5.9 மில்லியன் டன் லித்தியத்தை உற்பத்தி செய்ய எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்களேன்!


படிக்க: கனிமவளக் கொள்ளைக் கும்பலின் பிடியில் ஒரிசா !


இந்த லித்தியத்தை உற்பத்தி செய்ய தேவையான தண்ணீர் அந்தப் பகுதியில் இருந்துதான் எடுக்கப்படபோகிறது. அப்படி எடுக்கப்படுவதன் மூலம் அந்த பகுதியின் நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் அளவில் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு அந்த பகுதியின் சுற்றுச்சூழல் சீர்கெடவும் போகிறது.

மேலும், இந்த லித்தியம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370−ஐ மோடி அரசு நீக்கியதையும், காஷ்மீரிகளுக்கு மட்டும் காஷ்மீரில் நிலங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சொத்துகள் வாங்குவதற்கான உரிமை மற்றும் சலுகைகளை வழங்கிய பிரிவு 35A-வை நீக்கியதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு & காஷ்மீருக்கு வழங்கும் பிரிவு 370 மற்றும் காஷ்மீரிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கும் பிரிவு 35A ஆகியவை ஆளும் பா.ஜ.க-வால் ரத்து செய்யப்பட்டது.

இந்தச் சிறப்புச் சட்டம் நீக்கம் என்பது குறைந்தபட்ச ஜனநாயக நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளாமல், நாடு முழுவதும் இராணுவத்தை நிறுத்தி, காஷ்மீரில் ஊரடங்கை அறிவித்து, இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை ரத்து செய்து, எதிர்ப்புகளை ஒடுக்கி ஒரு இராணுவ நடவடிக்கைபோல் அமல்படுத்தப்பட்ட பாசிச நடவடிக்கையாகும்.

காஷ்மீரின் சிறப்புச் சட்டத்தை நீக்கியதோடு அம்மாநிலத்தை ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடியது, பாசிச மோடி அரசு.

காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவது, முன்னேற்றுவது என்ற வகையில்தான் காஷ்மீரின் சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டதாகவும், இதன் மூலம் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கில் புதிய வரலாறு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இப்பாசிச நடவடிக்கையை நியாயப்படுத்தினார், பிரதமர் மோடி.


படிக்க: கனிம வளக் கொள்ளையில் கவிழும் நீதிமன்றங்கள்!


காஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு, இரண்டாண்டுகளாக தடுப்புக் காவல்களும், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான தடையும் (144) தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வீட்டிலிருந்து வெளியில் செல்பவர்களுக்கு என்ன நடக்கும் என்ற உத்திரவாதமற்ற சூழல்தான் அங்கு நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, காஷ்மீர் மாநிலமே திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறியிருக்கிறது.

இச்சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டவுடன், ‘‘காஷ்மீரில் இனி இந்தியர்கள் சொத்துக்கள் வாங்கத் தடையில்லை’’ என கூப்பாடு போட்டன ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவி கும்பல்.

மோடி சொல்லும் வளர்ச்சி என்பது அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. மோடியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, மீத்தேன், சாகர் மாலா, பாரத் மாலா, எட்டுவழிச்சாலை, மோட்டார் வாகன திருத்தச் சட்டம், கடல் வள மசோதா, நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கை என அனைத்தும் கார்ப்பரேட் நலனுக்காகனவைதான். அந்த வகையில்தான் இப்போது ஜம்மு & காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியமானது அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கே சென்று சேரும்.

காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு சட்டத்தையும், சலுகைகளையும் ரத்து செய்ததன் மூலம், காஷ்மீரில் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இனி சொத்து வாங்க முடியும் என்ற காவி கும்பலின் கூப்பாட்டையும் பொருத்திப் பார்த்தால் இதன் பலன் யாருக்கானது என்று புரியும்.

காஷ்மீரை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாக்க ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவதுதான் ஒரே வழி.

அயன்ஸ்டைன்

நன்றி : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க