23.03.2023

பத்திரிகை செய்தி

காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை விபத்து 10 தொழிலாளர்கள் பலி- 18 பேர் படுகாயம், கவலைக்கிடம்! முதலாளிகளின் லாபவெறியே காரணம்!

தமிழக அரசே!

லாபவெறிப்பிடித்த முதலாளியையும், துணை போன தொழிற்சாலை ஆய்வாளரையும் கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்! தண்டனை வழங்கு!

காஞ்சிபுரம் அருகில், குருவிமலை பட்டாசு ஆலையில் கொடூர விபத்து நடந்துள்ளது. அதில் 10 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 18 பேர் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் படுக்காயங்களுடனும் உறுப்புகளை இழந்தும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பலருக்கும் முற்றிலுமாக காது கேட்கவில்லை என்கின்றனர். இந்த சம்பவம் நேற்று 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நடந்துள்ளது. இந்த வெடிவிபத்து நிகழ்ந்த போது அந்த ஆலையை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஆலையில் பெண்கள் அதிகமாக வேலை பார்த்துள்ளனர். இறந்தவர்கள் 7 பேர் பெண் தொழிலாளர்களும் ஒரு சிறுவனும் இறந்துள்ளார்கள்.

இந்த பட்டாசு ஆலை கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. இதே ஆலையில் கடந்த 2008 ஆம் ஆண்டில் ஒரு விபத்து நடந்துள்ளது. மொத்தம் 40யில் இருந்து 45 பேர் வரை இந்த ஆலையில் வேலை செய்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு நடந்த விபத்திற்கு பிறகு மீண்டும் உரிமத்தை புதுபித்து இயக்க தொடக்கியுள்ளனர். இந்த ஆலையின் உரிமையாளர் நரேந்திரன் ஆஇஅதிமுக கட்சியில் செல்வாக்கு படைத்தவர் என்கின்றனர்.

தோழர்கள் நேரில் சென்று பார்த்த போது பட்டாசு ஆலை கட்டிடமே தரைமட்டமாகியுள்ளது. மக்கள் பலரும் தீயை அணைக்க முற்பட்ட போதும் முடியவில்லை என்றும் தொடர்ச்சியாக வெடித்து கொண்டே இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்க தண்ணீரோ மண்ணோ எதுவுமே இல்லாமல் தவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி இருவர் உடல் கருகி இறந்துள்ளனர். நேரில் பார்த்தவர்கள் கை, கால்கள் துண்டு துண்டாகி தொழிலாளர்கள் இறந்ததை பார்த்து கடும் வேதனையை வெளிப்படுத்தினர். அந்த விபத்து வீடியோ காட்சிகளை பார்த்து கண் களங்காமல் இருக்க முடியாது. இதில் இருவர் எப்படி விபத்து நடந்தால் தப்பிக்க வேண்டும் என்று தெரிந்து தப்பியுள்ளனர். மேலும் ஊரில் ஒரு இறப்பு நடந்ததால் 12 பேர் வரை நேற்று வேலைக்கு செல்லவில்லை அதனால் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர். இல்லையென்றால் கூடுதல் உயிரழப்பு நிகழ்ந்திருக்கும் என்கின்றனர். எந்த வித பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் தான் இந்த ஆலை இயங்கியுள்ளது என்பது இதிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது.

படிக்க: அழகு சிறை பட்டாசு ஆலை வெடி விபத்து: வெடித்து சிதறிய ஆறு மனிதர்கள், அலட்சியமாக அரசு நிர்வாகம்!

இந்த பகுதியில் கொத்தனார், சித்தாள் வேலை கூட கிடைக்காமல், விவசாயமும், நெசவும் அழிந்த நிலையில் இந்த ஆலைக்கு வேறு வழியில்லாமல் வேலைக்கு செல்கின்றனர். அதிகப்படியாக மருந்துகள் இருந்தது இந்த விபத்திற்கு காரணம் என சிலரும், விழாக்காலங்களிலும், இறந்தால் வெடிக்கும் வீரியமிக்க பட்டாசுகள் அதிகம் இருந்ததாலும் தான் விபத்து நேர்ந்துள்ளது என்று சிலரும் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு தரப்பு ஆய்வாளரோ மின் கசிவால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். தோழர்கள் பார்த்தவரை எந்த மின் வயரும் துண்டாகி காணப்படவில்லை என்று கூறுகின்றனர். மேலும் சூரிய ஒளியில் தான் மின்சாரம் தயாரிப்பு நடந்துள்ளது.

இந்த பட்டாசு ஆலையில் எந்தவிதமாக பாதுகாப்பு விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு எந்த விபத்து காப்பீடோ, விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று முறையான பயிற்சியோ தரப்படவில்லை. மாவட்ட அளவில் இருக்கக்கூடிய தொழிற்சாலை ஆய்வாளர்கள் கண்டும் காணாமல் இருந்துள்ளதே இந்த கொடிய விபத்து நடந்ததற்கு காரணம்.

அரசுகள் தரப்பில் இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இது போன்ற தொடர் பட்டாசு ஆலை வெடி விபத்துகள் நடந்த கொண்டு இருக்கிறது. பாதுகாப்பு இல்லாமல் லாபவெறிக்காக இயங்கும் பட்டாசு ஆலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்புடன் இயங்குகிறதா என கண்கானிக்காமல் இருந்த தொழிற்சாலை ஆய்வாளர்கள் மீது தமிழக அரசு உடனடியாக கொலைக் குற்றத்தின் வழக்கு போட வேண்டும். இந்த லாபவெறிப்பிடித்த முதலாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

முதலாளிகளின் லாபவெறிக்காக பட்டாசு ஆலையில் வேலை செய்த சாதாரண கூலித்தொழிலாளர்களையும், நெசவாளர் குடும்பத்தை சேந்தவர்களையும் பலி கொடுத்துள்ளனர். தொழிலாளி வர்க்கத்தின் உயிர் துச்சமாய் மாறியுள்ளதை எதிர்த்து உழைக்கும் மக்களே, உழைக்கும் வர்க்கமாய் ஒன்று திரள்வோம்! இந்த படுக்கொலைகளுக்கு எதிராக போராடுவோம்!.


தோழமையுடன்,
தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை.
99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க