சிலம்பட்டி, திருமங்கலம் வட்டாரத்தில் திருவிழாக்களுக்கு வெடிக்கும் சக்தி வாய்ந்த வானவெடிகள் தயாரிக்கும் பட்டாசு ஆலைகள் பல செயல்பட்டு வருகின்றன. அழகுசிறை கிராமத்தில் வெள்ளையப்பன் என்பவர் நடத்தி வந்த ஆலையில் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்ததில் ஆறு தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்து போயினர். 13 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டாசு ஆலை நடத்தி வந்த வெள்ளையப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் என்ற அறிவிப்பு, அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் களத்தில் சென்று பார்வையிட்டனர். விதிமுறைகளின் படிதான் பட்டாசு ஆலை இயங்கியதா என சோதனை செய்ய சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அமைச்சர் பேட்டியளிக்கிறார். உயிர்களை பறிகொடுத்த பிறகு சோதனை என்கிறார்கள். அதற்கு முன்பு சோதிக்கக் கூடிய அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.

பட்டாசு ஆலையில் வெடி வெடிப்பதும் உயிர் போவதும் சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. வருடத்திற்கு இரண்டு, மூன்று இடங்களிலாவது வெடி வெடிக்கின்றது. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் இறந்து போகின்றனர். இதுதொடர் கதை யாகிவிட்டது. நிவாரணம் கொடுப்பது, வழக்கு போடுவது என்பதைத் தாண்டி இந்த அரசு என்ன செய்துவிட்டது?

படிக்க : மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 6 தொழிலாளர் உடல் சிதறி பலி

இதே ஆலையில் 2009-இல் நடந்த வெடிவிபத்தில் 18 பேர் இறந்து போயுள்ளனர். இதுபோக கடந்த தீபாவளி நாளுக்கு முன்பாகவும் ஐந்து வருடங்களுக்கு முன் என இரு முறை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை இந்த விஷயம் கூட வெளியில் தெரியாமல் மூடி மறைத்து விட்டார்கள் என அந்த பகுதிவாழ் உழைக்கும் மக்கள் ஆலையில் நடந்த வெடி விபத்துகளை பட்டியலிடுகின்றனர்.

மேற்கண்ட மக்கள் கூறும் விஷயங்கள் படி பார்த்தால், தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய ஆலையை ஏன் கண்காணிக்காமல் வைத்திருந்தார்கள் என்பது அந்த பட்டாசு ஆலை முதலாளிக்கும் அதிகார வர்க்கத்துக்குமே வெளிச்சம். இந்த கூட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா?

பெரும்பாலான பட்டாசு ஆலைகள் கிராமப்புறங்களில்தான் வைத்துக் கொள்கிறார்கள். அங்குதான் விவசாயம் அழிக்கப்பட்டு வருமானத்திற்கு வழியில்லாத கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் தத்தளிக்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் பட்டாசு ஆலை அதிபர்கள் மிகவும் அபாயகரமான இந்த தொழிலை வெற்றிகரமாக நடத்தி கோடிகளில் புரள்கின்றனர். வேலை செய்யும் தொழிலாளர்கள் தினக்கூலியின் அடிப்படையில் காண்ட்ராக்ட் அடிப்படையில் எந்த உரிமைகளும் அற்ற அடிமைகளாக வைத்து சுரண்டப்படுகின்றன.

இந்த பட்டாசு ஆலை வெடித்ததை ஒட்டி அந்தப் பகுதிக்கு சென்றிருந்த தோழர்கள் அங்கு வேலை செய்த சற்று வயதான ஒரு அம்மாவை பார்த்து பேசி உள்ளனர். அந்த அம்மா உடன் வேலை செய்தவர்கள் மிகவும் கொடூரமாக உடல் அங்கங்கள் தனித்தனியாக சிதறிய அந்த விஷயங்களை மிகவும் பதட்டத்துடன் பகிர்ந்து கொண்டு, மேலும் அவர் கூறுகிறார் வேறுவழியில்லை நாங்கள் இங்குதான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று.

அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற விவசாயம், வேறுவழியில்லாமல் வாழ்க்கை பிழைப்பை தேடிக் கொள்வது இவைதான் இந்த அபாயகரமான தொழிலில் மக்களை தள்ளுகின்றது.

விவசாயத்தை விவசாயிகளிடமிருந்து கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க முனைந்து செயல்படும் அரசு எப்படி விவசாயத்தை மேம்படுத்தும்?

படிக்க : சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து : இதற்கு முடிவே இல்லையா ?

முதலாளிகளுக்கோ பாதுகாப்பை மேம்படுத்துவது, தனது லாபத்தில் பாதிக்கு மேல் இழக்க நேரிடும் என்பதால் அதைப்பற்றி எந்த அக்கறையும் கொள்வதில்லை. இவர்களிடம் நக்கிப்பிழைக்கும் அதிகார வர்க்கமோ மக்களைப் பற்றி துளியும் அக்கறை கொள்வதில்லை.

தெரியாமல் நடந்த விபத்து, விதி வேற என்ன செய்வது என நொந்து கொள்வது நம் தலையில் நாமே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் நிலைதான் உழைக்கும் மக்களுக்கு ஏற்படும்.

ஆகவே இந்த வெடிவிபத்தில் சம்பந்தப்பட்ட முதலாளியை மட்டுமல்ல கண்காணிக்க தவறிய அதிகார வர்க்கம் உட்பட அனைவரையும் கைது செய்யக் கோரிய போராட்டங்களை முன்னெடுப்போம். நமது உரிமையையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்க சங்கமாக இணைந்து களத்தில் இறங்குவோம். சமரசம் இல்லாத போராட்டங்களில் ஊன்றி நிற்போம்.

தகவல் : மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க