விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட ஊர்களைச் சுற்றி 900-க்கும் மேற்ப்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் விவசாயம் அழிக்கப்பட்டு, விவசாயம் சார்ந்த தொழில்கள் அழிக்கப்பட்டு, மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக, தங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் இந்த கொலைகாரப் பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.

இந்நிலையில் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி எனும் கிராமத்தில் ராஜூ என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட அறைகளில், 120-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைப் பார்த்து வருகிறார்கள்.

படிக்க :
♦ சிவகாசி பட்டாசு ஆலையில் 5 பேர் பலி ! மக்களை சாகக் கொடுக்கும் அரசு !

♦ சிவகாசி தொழிலாளிகளுக்கு தீபாவளி உண்டா ?

கடந்த ஏப்ரல் 5-ம் தேதி அன்று வழக்கம்போல் ஆலை இயங்கி வந்தது. கெமிக்கல் அறையில் வெடிமருத்து எடுக்கச் சென்றிருக்கிறார் தர்மலிங்கம் என்ற தொழிலாளி. அப்போது மருத்துகளில் உராய்வு ஏற்பட்டு பயங்கரமான வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் தர்மலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். கெமிக்கல் அறைக்கு பக்கத்து அறைகளில் இருந்த முருகன், கந்தசாமி ஆகிய இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 அறைகள் தரைமட்டமாகியுள்ளன. அந்த விபத்து தொடர்பாக ஆலையின் மேலாளர் கோமதிராஜ், போர்மேன் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆலை முதலாளி ராஜூ மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஓர் மிகப்பெரிய வெடிவிபத்து நடந்துள்ளது. இதில் 23 பேர் உடல் கருகி பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். ஆலையில் 20-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானது. இந்த வெடி விபத்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அதே மாதத்தில் 25-ஆம் தேதி சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் ப்டுகாயமடைந்துள்ளவர். 10 அறைகள் தரைமட்டமாகியுள்ளன.

இதுபோன்று சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரங்களில் என்னெற்ற வெடிவிபத்துக்களும் மரணங்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. தாய், தந்தையை இழந்த குழந்தைகளின் அழுகுரலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், கமிஷன் வாங்கிக் கொண்டு வெடிவிபத்து ஏற்படும் ஆலை முதலாளிகள் மீதும், விதிமுறைகளை மீறி இயங்கும் ஆலைகள் மீதும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல் விட்டுவிடுகிறது அரசு.

தொழிலாளர்களுக்கு உயிர் பாதுக்காப்பு இல்லாமல் இயங்கும் பட்டாசு ஆலைகள் மீது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் பட்டாசு ஆலைகள் இயங்குகிறதா என்பதையும் முறையாக சோதிப்பதில்லை.

பட்டாசு ஆலைகளில் எந்த குறிப்பிட்ட இடத்திலும் சிறிய பிரச்சனையானாலும் அதிபயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்டும். பேன்சி ரக மருத்துக்கலவைகளை  கலக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்குள் பட்டாசில் அடைத்து விடவேண்டும். சிறிது நேரம் தாமதமானாலும் அது நீர்க்க ஆரம்பிக்கும், அதன்பின் அதைத் தொட்டால் வெடித்து சிதறும். அதேபோல், சல்பர் அளவு சில மில்லிகிராம் அதிகமானாலும் கலக்கும் போது வெடிக்கவும் செய்யலாம்.

ஒரு அறையில் விதிமுறைகளை மீதி அதிகமான தொழிலாளர்கள் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டால், உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து நிகழும். இரவு நேரங்களில் எலியோ அல்லது வேறு ஏதாவது ஒரு உயிரினமோ வெடிமருந்து அறைக்குள் சென்றால் கண்டிப்பாக விடிவிபத்து நிகழும் அபாயம் உள்ளது.

“பட்டாசு ஆலையில் வேலை செய்யாமல் வெளியில் இருந்து இரவு நேரத்தில் வாட்ச்மேன் வேலை செய்யும் எங்களுக்கே உயிருக்கு உத்திரவாதம் இல்லையென்றால், பகலில் ஒருநாள் முழுவதும் ஆலைக்குள் வேலை செய்யும் தொழிலாளர்களைப் பற்றி சிந்தித்தாலே மரணபயம் வருகிறது” என்கிறார்கள் பட்டாசு ஆலை வாட்ஸ்மேன்கள்

மேலும், உரிய விதிமுறைகளின் கீழ் பெரும்பாலான ஆலைகள் இயங்குவதில்லை. அரசுக்கு கமிஷன் கொடுத்து உரிமமும் வாங்கி விடுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் முறையாகக் கப்பம் கட்டிவிட்டும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் பட்டாசு நிறுவனங்கள் மனித உயிர்களை துச்சமாக மதித்துச் செயல்படும் நிலையில் தான் தமிழக நிலைமை இருக்கிறது

வெடிவிபத்து நேர்ந்தால், தொழிலாளியில் கவனக் குறைவால் நடந்த விபத்து, வெடிமருந்து உராய்வினால் நடந்த விபத்து என்று கட்டப்பஞ்சாயத்து செய்து, பணம் வாங்கி தருவது, அதிலும் கமிசன் பெறுவது மட்டுமே அரசு அதிகாரிகள், போலீசின் வேலையாக உள்ளது.

படிக்க :
♦ ரஃபேல் : ஊழல் முறைகேடுகளை சுட்டிக்காட்டியது பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை !
♦ சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா – நாளை தமிழகம் !

மிகப்பெரிய விபத்து நேரும் பட்சத்தில் மட்டும், தங்களை மக்களுக்கு சேவகனாக காட்டிக் கொள்ள மாநில அரசும் எதிர்கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையை அறிவிக்கும். ஆனால், வெடிவிபத்துக்கள் நேராமல் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவும், கண்காணிக்கவும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க மறுக்கிறது அரசு.

அரசு இயந்திரத்தின் உச்சியிலிருந்து பாதம் வரை அனைத்தும் ஊழல்மயமாகியிருக்கும் நிலையில், வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் இதற்கான தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை. மக்களை அணிதிரட்டி, இந்தக் கொடுமை இனியும் தொடராத வகையில், தொடர் போராட்டமாக முன்னெடுக்காத வரை, தமிழ்கத்திற்குக் கிடைத்த சாபக் கேடாய், இத்தகைய  சம்பவங்கள் தொடரும் என்பது உறுதி.


சந்துரு
செய்தி ஆதாரம் : தினகரன் (5.4.21)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க