ராகுல் காந்தி தகுதிநீக்கம்: பாசிச முடியாட்சி நிறுவப்பட வெகுநாட்கள் இல்லை!

பாசிஸ்டுகள் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவதற்கோ மாநில அரசுகளை கலைப்பதற்கோ சிறு தயக்கத்தைக் கூட வெளிப்படுத்த மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. பெயரளவிற்கு இருந்த ஜனநாயகமும் ஒழிக்கப்பட்டு பாசிச முடியாட்சி நிறுவப்பட்டு கொண்டிருப்பதையே இந்நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

0

நேற்று (24.03.2023) ராகுல் காந்திக்கு குற்றவியல் அவதூறு வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது ராகுல் காந்தியை எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மோடியின் நண்பரான அதானி குறித்த விவாதத்தை விரும்பாத பாசிச பாஜக அரசு, ராகுல் காந்தியின் லண்டன் உரை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கியது. ‘அதானி’ என்ற வார்த்தை மட்டும் அதன் காதுகளில் விழவில்லை.

ராகுல் காந்தியும் காங்கிரசும் அந்நிய மண்ணில் இந்தியாவை அவமானப்படுத்தி விட்டதாக பா.ஜ.க எம்‌.பி-க்கள் கொக்கரித்தனர். ராகுல் தேச விரோதமாக பேசியதாக குற்றம் சாட்டினார்.

அப்படி தேச விரோதமாக ராகுல் பேசியது என்ன தெரியுமா? லண்டன் பயணம் சென்ற ராகுல் காந்தி “ஜனநாயகத்துக்கு அடிப்படையான நிறுவன கட்டமைப்புகள் அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்தியாவில் பயணம் மேற்கொண்டால் தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினருக்கு என்ன நேர்ந்து வருகிறது என்பதை காண முடியும். இதுகுறித்த வாதங்களுக்கு பா.ஜ.க தயாராக இல்லை” என்று பேசினார்.


படிக்க: ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்! | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை


மேலும் சி.பி.ஜ (CBI), அமலாக்கத்துறை (ED), ரிசர்வ் வங்கி (RBI) போன்றவற்றை மோடி அரசு எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்தும், பெகாசஸ்-ஐ பயன்படுத்தி உளவு பார்த்தது குறித்தும் பேசினார். தங்கள் மீதான எதிர் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாத பாசிஸ்டுகள் தாங்கள் அம்பலப்படுவதை தேசத்தின் மீதான தாக்குதல் என்று சித்தரித்து வருகின்றனர்.

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் முடக்குவதற்காகவும், அதன் மூலம் மற்ற எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காகவும் ராகுல் காந்தியை திட்டமிட்டு தற்போது எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்துள்ளனர்.

அதற்காகத்தான் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று கர்நாடகாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி பேசியதற்காக தொடுக்கப்பட்ட வழக்கிற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்பிரச்சாரத்தில் ராகுல் காந்தி “அனைத்துத் திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டிருக்கின்றனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிகிறது. அது ஏன்?” என்று பேசியிருந்தார்.

இதை எதிர்த்து குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது குற்றவியல் அவதூறு (criminal defamation) வழக்குத் தொடர்ந்திருந்தார். அவ்வழக்கின் தீர்ப்பு நேற்று (மார்ச் 23) வெளியானது. ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹15,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ராகுல் காந்தியின் ஜாமீன் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதோடு மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசமும் வழங்கியது.


படிக்க: ராகுலின் எம்.பி பதவி பறிப்பு: நேற்று விவாத சுதந்திரம், இன்று பதவி, நாளை தேர்தல் !


ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே குற்றவியல் அவதூறு வழக்கிற்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டு சிறை தண்டனை என்பது வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (Representation of the People Act, 1951) பிரிவு 8-இன்படி, பதவியில் இருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு தண்டிக்கப்பட்டால் அவர்களின் பதவி தகுதிநீக்கம் செய்யப்படும்.

மேலும், தண்டனை காலம் முடிவடைந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட இயலாது. அதாவது ராகுல் காந்தி மேல் முறையீடு செய்து, இத்தீர்ப்பை முறியடிக்காவிட்டால் அவரால் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட இயலாது.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் முன்னாள் தலைவருக்கே இந்த நிலை என்றால், மற்ற எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-களின் நிலை என்னவாகும். பாசிஸ்டுகள் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவதற்கோ மாநில அரசுகளை கலைப்பதற்கோ சிறு தயக்கத்தைக் கூட வெளிப்படுத்த மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. பெயரளவிற்கு இருந்த ஜனநாயகமும் ஒழிக்கப்பட்டு பாசிச முடியாட்சி நிறுவப்பட்டு கொண்டிருப்பதையே இந்நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க