டந்த மார்ச் 30 அன்று மக்கள் கலை இலக்கிய கழகத்தின் “சிவப்பு அலை” (Red Wave) புரட்சிகர கலைக் குழு வழங்கும் “வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு” பாடல் – இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ம.க.இ.க ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை உரையாற்றிய தோழர் ராமலிங்கம் அவர்கள், கடந்த 40 ஆண்டுகளாக மார்க்சிய – லெனினிய அரசியலை கலை வடிவில் மக்களிடம் பிரச்சாரம் செய்து கலாச்சார ரீதியாக ம.க.இ.க ஏற்படுத்திய தாக்கம் குறித்துப் பேசினார். சிவப்பு அலை புரட்சிகர கலைக் குழு உருவாக்கப்பட்டிருப்பதானது ம.க.இ.க-வின் அடுத்தகட்ட பாய்ச்சல் என்று கூறினார்.

தமிழ் மொழியின் மீதான தீண்டாமைக்கு எதிராக நடத்தப்பட்ட “தமிழ் மக்கள் இசை விழா” மற்றும் கருவறை தீண்டாமைக்கு எதிராக நடத்தப்பட்ட “கோவில் நுழைவு போராட்டம்” ஆகியவை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் உரையாற்றினார்.

“பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” உள்ளிட்ட பாசிசத்திற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை கலை வடிவிலும் எதிர்க்க வேண்டிய தேவையை வலியுறுத்தி தனது உரையை முடித்துக்கொண்டார்.

மக்கள் அதிகாரம் சென்னை மண்டல இணைச்செயலாளர் தோழர் புவன் அவர்கள் தனது அறிமுக உரையில் 1980-ஆம் ஆண்டு முதல் ம.க.இ.க ஆற்றிய பணிகளின் முக்கியத்துவம் குறித்தும், தனது சிறு வயதில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பேசினார். இந்து மதவெறி பாசிசத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் அம்பலப்படுத்தியதில் ம.க.இ.க-வின் பங்கு குறித்தும் பேசினார். அரசியல் முன்னணி சக்திகளிடம் ம.க.இ.க பாடல்கள், ஒலிப் பேழைகள், நாடகங்கள் செலுத்திய தாக்கங்களை விவரித்துப் பேசினார்.

அடுத்ததாக பேசிய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் அரசு ஒடுக்குமுறை காலகட்டங்களில் புரட்சிகர பாடல்கள் ஆற்றிய பங்கு குறித்து விரிவாக பேசினார். மேலும், சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தன்னை செழுமைப்படுத்திக் கொண்டு முன்னேற வாழ்த்துகளை தெரிவித்தார்.

எழுத்தாளர் மற்றும் திரைப்பட கதையாசிரியரான தோழர் பாரதிநாதன் அவர்கள் பேசுகையில் “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே” எனும் மாவோவின் முழக்கத்தின் வழியில் ம.க.இ.க பயணித்தது குறித்து பேசினார். புரட்சிகர இயக்கங்களில் இருந்து கலை இலக்கியவாதிகள் உருவாவதற்கான தேவை குறித்தும் கலை இலக்கியங்கள் வழியே இயக்கத்தை வளர்ப்பதற்கான தேவை குறித்தும் பேசினார்.

எஸ்.கே.எம், தமிழ்நாடு-இன் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தற்போதைய சூழலில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்க்க வேண்டிய தேவையையும் அதனை பண்பாட்டு ரீதியில் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார்.

வாழ்த்துரை வழங்கிய தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை) பொதுச்செயலாளர் தோழர் பாலன் அவர்கள் பார்ப்பனிய பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு எதிராகவும், இந்துத்துவத்திற்கு எதிராகவும், ஜெயலலிதாவின் ஊழல் ஆட்சிக்கு எதிராகவும் ம.க.இ.க கலைக்குழு முன்னெடுத்த அரசியல் இயக்கங்கள் குறித்துப் பேசினார். பாசிச எதிர்ப்பு இயக்கத்தில் கலைக்குழுக்கள் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் பேசினார்.

அடுத்ததாக தோழர் ராமலிங்கம் அவர்கள் மார்க்சிய – லெனினிய அரசியலை உயர்த்திப் பிடித்து பாசிசத்திற்கு எதிராக பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியையும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியையும் அமைக்க பாடுபடுவோம் என்று கூறினார். மேலும், சிவப்பு அலையின் பயணமும் அந்த திசையில்தான் இருக்கும் என்று கூறினார்.

மக்கள் கலை இயக்கியக் கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! பாடல் இசை வெளியீட்டு தகட்டை தோழர் தியாகு வெளியிட தோழர் பாரதிநாதன் பெற்றுக்கொண்டார்.

தோழர்களின் உரைகளுக்கு இடையிடையே –

1.சுற்றிவளைக்குது பாசிசப்படை [கானா பாடல்]

2.இவங்கயெல்லாம் சங்கிங்க…

3.காவி கட்சி ஆளுநரு [நையாட்டி பாடல்]

4.வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு

5.சுற்றிவளைக்குது பாசிசப்படை

– ஆகிய புரட்சிகர பாடல்கள் “சிவப்பு அலை” புரட்சிகர கலைக்குழுவால் பாடப்பட்டன.

 

சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தோழர் ஆதிர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.


இதையும் பாருங்கள்!

பாடல் – 1

பாடல் – 2

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க