கேளாத செவிகள் கேட்கட்டும்!

‘புரட்சி’ என்பதன் மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூகஅமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

1929 ஏப்ரல் 8 – பகத்சிங், பதுகேஷ்வர் தத் இருவரும் டெல்லி, பிரிட்டிஷ் இந்திய சட்டசபையில்  வெடிகுண்டு வீசி சரணடைந்தனர். கேளாத செவிகள் கேட்கட்டும் என்ற முழக்கத்துடன் வீசப்பட்ட வெடிகுண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் செவிப்பறையை கிழித்தது. வெடிகுண்டு வீசியது தொடர்பாக கேளாத செவிகள் கேட்கட்டும் என்ற நூலில் இருந்து சில பகுதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

– வினவு

0-0-0

சட்டமன்ற அறையினுள் வெடிகுண்டுகள் வீசப்பட்டதா, அவ்வாறெனில் ஏன் வீசப்பட்டது?

கீழ் நீதிமன்றம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு சரியா இல்லையா?

முதல் கேள்வியின் முதற்பாதிக்கு எங்களது பதில் ‘என்பதுதான். ஆனால் அதை ‘நேரில் பார்த்த சாட்சிகள்’ என்று சொல்லப்படுபவர்களில் சில பொய்ச்சாட்சி கூறியுள்ளாதாலும், அந்த அளவு வரை (வெடிகுண்டு வீசப்பட்டது என்பது வரை) எங்களது பொறுப்பை நாங்கள் மறுக்கவில்லை என்பதாலும் அவர்களது சாட்சியத்தின் உண்மைத் தன்மை என்ன என்பதை அவர்களைப் பற்றிய எங்களது வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, எங்களில் ஒருவரிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்ததாக சார்ஜன்ட் டெர்ரி கூறியுள்ள சாட்சியம் ஒரு திட்டமிட்ட பொய். நாங்களாகவே முன்வந்து சரணடைந்த அத்தருணத்தில் எங்களில் எவரும் கைத்துப்பாக்கி வைத்திருக்கவில்லை. நாங்கள் வெடிகுண்டை வீசுவதை பார்த்ததாகக் கூறும் பிற சாட்சிகளும் நா கூசாமல் பொய்யுரைக்கின்றனர். நீதிமன்றத்தின் தூய்மையினையும் பாரபட்சமற்ற விசாரணையினையும் குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்களுக்கு இவ்வுண்மைதானாகவே புலப்படும்.

அதே நேரத்தில், அரசு தரப்பு வழக்கறிஞரின் நேர்மையினையும் இந்த நீதிமன்றத்தின் நடுநிலை தவறாத போக்கையும் இதுவரையிலும் நாங்கள் ஒப்புக் கொண்டவர்களாகவே உள்ளோம்.

முதல் கேள்வியின் அடுத்த பாதிக்கு எங்களது பதிலைக் கூற வேண்டுமானால், இன்று ஒரு வரலாற்று நிகழ்வாக ஆகியிருப்பது வரை கொண்டுவந்து விட்டிருக்கும் எங்களது நோக்கத்தையும் சூழ்நிலையையும் முழுமையாகவும் ஒளிவு மறைவின்றியும் நாங்கள் விளக்கியாக வேண்டும். அவற்றை விளக்குவதற்கு நாங்கள் சில விபரங்களுக்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

படிக்க : பகத்சிங் பார்வையில் காதல், தியாகம், மரணம் | தோழர் யுவராஜ் | வீடியோ

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் நிகழ்த்திய தனது உரையில் இர்வின் பிரபு அவர்கள், “இந்தத் தாக்குதல் எந்தவொரு தனிநபருக்கும் எதிராகத் தொடுக்கப்பட்டதல்ல; மாறாக நிறுனத்திற்கு எதிராகவே தொடுக்கப்பட்டுள்ளது” என இந்நிகழ்வை விவரித்துள்ளார். இதனை நிறையில் எங்களை சந்தித்த சில போலீஸ் அதிகாரிகள் எங்களிடம் கூறினார்கள். நாங்கள் இதனை அப்படியே ஏற்றுக் கொள்கின்றோம். அந்நிகழ்வின் உண்மையான முக்கியத்துவம் மிகச் சரியாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

போலித்தனமான நாடாளுமன்றம்: இந்திய அடிமைத் தனத்தின்  அடையாளம்

மனித குலத்தை நேசிப்பதில் நாங்க யாரும் சளைத்தவர்கள் அல்ல. எந்தவொரு தனிநபருக்கும் எதிரான பழிதீர்க்கும் எண்ணங்களையெல்லாம் தாண்டி மனித உயிர்களை  வார்த்தைகளால் வடிக்க இயலாத அளவிற்கு புனிதமானதாகக் கருதுகின்றோம்.

போலி சோஷலிஸ்ட், திவான் சாமன் லால் வர்ணிப்பது போல் நாங்கள், கீழ்த்தரமான கொடுஞ்செயலைச் செய்து அதன் மூலம் நாட்டிற்கு அவப்பெயரை தேடித்தந்தவர்களுமல்ல ; லாகூர் ‘தி டிரிபியூன்’ பத்திரிக்கையும் மற்றவர்களும் நினைப்பதுபோல் நாங்கள் வெறிபிடித்தவர்களும் (Lunatics) அல்ல.

தாய்நாட்டின் நிலைமைகளையும் அவளின் விருப்பங்களையும் அறிந்த வரலாற்று மாணவர்கள் நாங்கள் என்பதற்கு மேல் வேறொன்றுமில்லை என்று மிகத்தாழ்மையுடன் கூறிக் கொள்கிறோம். போலித்தனங்களை நாங்கள் இழிவாகக் கருதுகிறோம். தான் உருவான நாள் முதல், தனது பயனற்ற தன்மையினை மட்டுமல்லாது, சொல்லொனா கேடுகளையும் விளைவிக்கவல்ல தனது ஆற்றலையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்திற்கு (நாடாளுமன்றத்திற்கு) எதிரானதே எங்களது இச்செயல்முறை எதிர்ப்பு.

இந்தியாவின் சிறுமையையும் கையறு நிலையினையும் உலகிற்கு காட்டுவதற்காகவும், பொறுப்பற்ற கொடுங்கோல் ஆட்சியின் மேலாதிக்கத்திற்கு அடையாளமாகவும் மட்டுமே இந்த நிறுவனம் இருக்கின்றது என்று நாங்கள் தீர்க்கமான ஆலோசனையுடன் மிக உறுதியாக நம்புகிறோம். மக்கள் பிரதிநிதிகளால் பல முறை வலியுறுத்தப் படும் தேசியக் கோரிக்கையானது அதன் இறுதி இலக்காக குப்பைக் கூடையையே சென்றடைகின்றது.

நிறுவனத்தின் மீதான தாக்குதல்

அவையில் நிறைவேற்றப்படும் மதிப்பு மிக்க தீர்மானங்கள், இந்திய நாடாளுமன்றம் என்பதாகச் சொல்லப்படும் அதன் தரையிலேயே ஏளனத்தோடு காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் யதேச்சதிகார நடவடிக்கைகளை ரத்து செய்யும் தீர்மானங்கள் இறுமாப்புடன் புறக்கணிக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப் உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரிக்கப்பட்ட அரசாங்க நடவடிக்கைகளுக்கும் முன்மொழிவுகளுக்கும் ஒரே வரியில் எழுதப்பட்ட உத்தரவின் மூலம் உயிர் கொடுக்கப் படுகின்றது.

சுருங்கக் கூறின், இந்தியாவின் கோடானு கோடி உழைக்கும் மக்களின் வியர்வைப் பணத்தை செலவு செய்து, ஆடம்பரமாகவும் பகட்டாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நாடாளுமன்றமானது, போலித்தனமும் பாசாங்கும் நிறைந்த கேடுவிளைவிக்கத்தக்க கேலிக்கூத்து என்பதைத் தவிர, அது ஓர் நிறுவனமாக இருப்பதற்கு வேறெந்த முகாந்திரத்தையும் எங்களால் காணமுடியவில்லை. அதுபோலவே, இந்தியாவின் கையாலாகாத அடிமை நிலையை காட்டுவதற்காகவே வெளிப்படையாக அரங்கேற்றப்படும் இந்நாடகத்திற்காக, பொதுமக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் வேலையில் அரசாங்கத்திற்கு உதவியாக இருக்கும் மக்கள் தலைவர்களின் மனநிலையை புரிந்து கொள்வதற்கும் எங்களால் முடியவில்லை.

தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன

தொழிற்தகராறு மசோதாவின் அறிமுகமானது, அவை நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பதற்காக எங்களை அவைக்குள் இழுத்து வந்தது. அவ்வேளையில்தான் மேற்கண்ட விஷயங்கள் அனைத்தைப் பற்றியும், தொழிலாளர் இயக்கங்களின் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்படுவது குறித்தும் நாங்கள் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தோம்.

அவையில் நடந்து கொண்டிருந்த விவாதத்தின் போக்கானது, சுரண்டல்காரர்களின் அடக்குமுறைக்கும், நிராதரவான தொழிலாளர்களின் அடிமைத்தனத்திற்கும் அச்சுறுத்தும் நினைவுச் சின்னமாக மட்டுமே நிற்கக் கூடிய இந்த நிறுவனத்திடமிருந்து இந்தியாவின் கோடானு கோடி உழைக்கும் மக்கள் எதிர்பார்ப்பதற்கென்று எதுவுமில்லை என்ற எங்களது நம்பிக்கையினை உறுதி செய்வதற்கு மட்டுமே பயன்பட்டது.

இறுதியாக, மனிதத் தன்மையற்றது என்றும் மிராண்டித்தனமானது என்றும் நாங்கள் கருதும் அடக்குமுறைகள் இந்நாட்டு மக்களின் அர்ப்பணிப்புமிக்க பிரதிநிதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வறுமையிலும் வாழ்க்கைப் போராட்டத்திலும் உழன்று கொண்டிருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளும், அவர்கள் தங்களது பொருளாதார வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரே வழியும் மறுக்கப்பட்டன.

எதிர்த்துக் கேட்பதற்கும் உரிமையற்ற கொத்தடிமைகளாய் கிடக்கும் தொழிலாளர்களுக்காக உணர்வு பெற்ற எங்களைப் போன்ற எவராலும் இந்தக் காட்சியை உள்ளக் குமுறலின்றி பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டின் பொருளாதார கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காக அமைதியாய் தங்களது இரத்தத்தையும் வியர்வையையும் சிந்திக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் பொருட்டு இதயத்தில் இரத்தம் வழியும் எவராலும் ஈவிரக்கமற்ற இந்தக் தாக்குதலால் தம் இதயத்தில் எழும் போர்க்குரலை அடக்கி வைக்க முடியாது.

கேளாத செவிகள் கேட்கட்டும் !

கவர்னர் – ஜெனரலின் நிர்வாகக் குழுவின் முன்னாள் சட்ட உறுப்பினர், திரு.S.R. தாஸ், தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார் : “இங்கிலாந்தை அவளது கனவுகளில் இருந்து தட்டி எழுப்புவதற்கு வெடிகுண்டு அவசியமானது”. அவரது வார்த்தைகளை மனதிற்கொண்டே நாங்களும், இதயம் பிளக்கும் வேதனைகளை வெளிப்படுத்த எவ்வழியும் இல்லாதவர்களின் சார்பாக, எங்களது எதிர்ப்பை பதிவு செய்வதற்காக சட்டமன்ற அறையில் வெடிகுண்டுகளைப் போட்டோம்.

“கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதும்”, எச்சரிக்கை உணர்வின்றி இருப்போரை சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்வதுமே எங்களது நோக்கமாகும். எங்களைப் போல் மற்றவர்களும் கூர்ந்து கவனித்தால், வெளித்தோற்றத்திற்கு அமைதியாய் காட்சியளிக்கும் இந்திய ஜனசமுத்திரத்தின் அடியில் பெரும்புயலொன்று வெடித்துக் கிளம்பவிருப்பதை உணரமுடியும் எதிர்வரும் இந்தப் பேராபத்தை முன்னறியாது கண்மூடித்தனமாக சென்று கொண்டிருப்பவர்களை எச்சரிப்பதற்கான “அபாய அறிவிப்பை” மட்டுமே நாங்கள் பறக்க விட்டுள்ளோம்.

வருங்கால தலைமறையினராகிய இளைஞர்களால் சந்தேகத்திற்கிடமின்றி பயனற்றது என்று புரிந்து கொள்ளப்பட்டு விட்ட கற்பனாவாத அஹிம்சையின் சகாப்தம் முடிந்துவிட்டது என்பதற்கான அடையாளத்தை மட்டுமே நாங்கள் காட்டியுள்ளோம்.

முந்தய பத்தியில் நாங்கள் பயன்படுத்திய “கற்பனாவாத அஹிம்சை” எனும் வார்த்தைகளுக்கு சில விளக்கம் தேவைப்படுகின்றது. ஒருவர் வலியச் சென்று தாக்குதல் நடத்தும் போது அது ‘வன்முறை’ ஆகின்றது. எனவே அதனை அறநெறிப்படி நியாயப்படுத்த இயலாது. ஆனால் அது சரியான நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்படும்போது அதற்கு அடிப்படை நியாயம் கிடைத்து விடுகின்றது. எக்காரணத்திற்காகவும் வன்முறை கூடாது என்பது கற்பனாவாதமாகும்.

நாட்டில் தற்போது எழுந்துள்ள புதிய இயக்கமானது – எதனுடைய தொடக்கத்தை நாங்கள் முன்னறிவித்துள்ளோமோ அப்புதிய இயக்கமானது – குருகோவிந் சிங்கையும் சிவாஜியையும், கமால் பாஷாவையும் ரிஸா கானையும், வாஷிங்டனையும் கரிபால்டியையும், லஃபாயட்டேயையும் லெனினையும் வழி நடத்திய கொள்கைகளால் எழுச்சியுற்று எழுந்துள்ளது.

அந்நிய அரசாங்கமும் இந்திய மக்கள் தலைவர்களும் இந்த இயக்கம் இருப்பதையே அங்கீகரிக்க மறுத்து தங்கள் கண்களை இறுக மூடிக் கொண்டிருப்பதால், எங்கே எழுப்பினால் அவர்களது செவிகளுக்கு கேட்டே தீருமோ, அங்கே எங்களது எச்சரிக்கை ஒலியை எழுப்புவது எமது கடமை என்று நாங்கள் எண்ணினோம்.

இதுவரையிலும் பிரச்சனைக்குரிய நிகழ்வின் பின்னணியில் இருந்த நோக்கத்தை விவரித்தோம். இப்பொழுது எங்களது உள்நோக்கம் எதுவரையிலும் என்பதை வரையறுப்பது அவசியமாகும்.

மனித உயிர்கள் மதிப்புமிக்கவை

லேசான காயங்கள் அடைந்தவர்கள் மீதோ சட்டமன்றத்தில் இருந்த மற்றவர்கள் மீதோ எங்களுக்கு தனிப்பட்ட விரோதமோ பழிவாங்கும் எண்ணமோ இல்லை. மாறாக, மனித உயிர்களை வார்த்தைகளால் வடிக்க இயலாத அளவிற்கு புனிதமானதாகக் கருதுபவர்கள் நாங்கள் என்பதை மீண்டும் கூறிக் கொள்கிறோம்.

மற்றவர்கள் எவரையும் காயப்படுத்துவதைவிட, வெகுவிரைவில் இம்மனித குலத்தின் சேவையில் எங்கள் உயிர்களை நாங்களே பலியிடுவோம். மனச்சாட்சியின் உறுத்தலின்றி கொலை செய்வதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்திய இராணுவத்தின் கூலிப் படைவீரர்கள் போன்றவர்கள் அல்ல நாங்கள். மனித உயிர்களை நாங்கள் உயர்வாக மதிக்கின்றோம்.

எங்களின் சக்திக்கு உட்பட்டதாக இருக்கும் பட்சத்தில், மனித உயிர்களை காக்கவும் முயற்சிப்போம் இருந்தபோதிலும், சட்டமன்ற அறையில் திட்டமிட்டு வெடிகுண்டை வீசினோம் என்று நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம். உண்மை, தனக்காகத் தானே பேசும். நடந்த நிகழ்வுகளின் மீது கற்பனையாகப் புனைந்துரைக்கப்பட்ட சூழ்நிலைகளையும் அனுமானங்களையும் ஏற்றிவைக்காமல் எங்களது செயலின் விளைவுகளில் இருந்து மட்டுமே எங்களது உள்நோக்கம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

தனிநபர்களைக் கொல்வது எங்கள் நோக்கமல்ல

அரசாங்க வல்லுனரின் சாட்சியத்திற்கு மாறாக, சட்டமன்ற அறையினுள் வீசப்பட்ட குண்டுகள், அங்கிருந்த காலி இருக்கைகளுக்கு லேசான சேதத்தையும் ஆறுபேருக்கும் குறைவான நபர்களுக்கு லேசான சிராய்ப்புக் காயங்களையுமே ஏற்படுத்தியுள்ளன. அரசாங்க விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் இந்த விளைவுகளை வியப்புடன் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த சம்பவம் அனைத்திலும் விஞ்ஞான நடைமுறையை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். முதலாவதாக, மரத்தடுப்புகளுக் குள்ளிருந்த காலி சாய்வு மேசைகள் மற்றும் காலி இருக்கைகள் இருந்த பகுதியிலேயே இரண்டு குண்டுகளும் வெடிக்கப்பட்டன.

இரண்டாவதாக, திரு. P.ராவ், திரு. சங்கர் ராவ் மற்றும் சர் ஜார்ஜ் சவுஸ்டர் போன்றவர்களுக்கும் கூட எவ்வித காயமும் ஏற்படவில்லை அல்லது லேசான சிராய்ப்புக் காயங்களே ஏற்பட்டுள்ளன. செயல்முனைப்பேற்றப்பட்ட பொட்டாசியம் குளோரேட் மற்றும் எளிதில் வெடிக்கக்கூடிய பைக்ரேட் ஆகியன நிரப்பட்ட அவ்வெடிகுண்டுகள் அரசாங்க வல்லுனர் தனது வாக்குமூலத்தில் கூறிய அளவிற்கு (அவரது மதிப்பீடு கற்பனையானதாகவும் மிகைப்படுத்தப்பட்டதாகவும் இருந்தாலும்) சக்தி வாய்ந்தவையாக இருந்திருந்தால் மரத்தடுப்புகளை உருத்தெரியாமல் அழித்திருக்கும் ; அது வெடித்த இடத்தில் இருந்த சில கெஜங்கள் தூரத்திற்குள் இருந்த பல உயிர்களைப் பலி கொண்டிருக்கும்.

மேலும், அவ்வெடிகுண்டுகள் அழிவை உண்டாக்கக்கூடிய ரவைகளையும் விசிறியடிக்கத்தக்க எறிகணைகளையும் உள்ளடக்கிய அதிக சக்திவாய்ந்த வேறுவகை வெடிமருந்துகளால் நிரப்பப்பட்டிருந்தால், சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரை ஒழித்துக் கட்டுவதற்கு அதுவே போதுமானதாக இருந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால், அக்குண்டுகளை சில முக்கியப் பிரமுகர்கள் அமர்ந்திருந்த அரசு அதிகாரிகள் பகுதியில் எறிந்திருக்க எங்களால் முடியும். இறுதியாக, எவருடைய அதிர்ஷ்டங்கெட்ட கமிஷனை பொறுப்புள்ள மக்கள் அனைவரும் வெறுத்தார்களோ அந்த சர்.ஜான் சைமன் அந்நேரத்தில் அவைத் தலைவரின் மேடையில் தான் வீற்றிருந்தார். எங்களால் அவரைக் குறிவைத்துத் தாக்கியிருக்கவும் முடியும்.

இருந்தபோதிலும் இவையெல்லாம் எங்களது நோக்கங்கள் அல்ல. எதைச் செய்வதற்காக அவ்வெடிகுண்டுகள் செய்யப்பட்டனவோ அதனைத் தவிர வேறெதையும் அவை செய்யவில்லை. அக்குண்டுகளை (யாருடைய உயிருக்கும் தீங்கு விளைவிக்காத) பாதுகாப்பான இடத்தில் எறிய வேண்டும் என்ற எங்களது வெளிப்படையான நோக்கத்தைத் தவிர வேறெதிலும் அரசாங்க வல்லுனர்களின் வியப்பிற்கான காரணம் அடங்கியிருக்கவில்லை.

எங்களை அழிப்பதன் மூலம் இத்தேசத்தை அழிக்க முடியாது

அதன்பிறகு, நாங்கள் செய்த செயலுக்குரிய தண்டனையை ஏற்றுக் கொள்ளவும், தனிநபர்களை அழிப்பதன்மூலம் கருத்துக்களை கொல்லமுடியாது என்பதை ஏகாதிபத்திய சுரண்டல் காரர்களை அறியச் செய்வதற்கும் நாங்களாகவே வலிய முன்வந்து கைதானோம். ஒரு தேசத்தின் முக்கியத்துவமற்ற இரண்டு நபர்களை அழிப்பதன் மூலம் அத்தேசத்தையே அழித்துவிட முடியாது. நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்பும் வரலாற்றுப் படிப்பினை இதுதான் :

அடக்குமுறைச் சட்டங்களாலும் பாஸ்டில் சிறைச் சாலை ப்ரெஞ்சுப் புரட்சியை நசுக்கி விட முடியவில்லை. தூக்கு மேடை சைபீரியச் சுரங்கங்களாலும் ரஷ்யப் புரட்சியை அழித்துவிட முடியவில்லை. இரத்த ஞாயிறாலும் ஐரிஷ் துணை ராணுவப் படைகளான பிளாக் அன் டான்ஸ் (black and tans) களாலும் ஜரிஷ் சுதந்திரப் போராட்டத்தை அடக்கிவிட முடியவில்லை. அவசரச் சட்டங்களும் பாதுகாப்பு மசோதாக்களும் இந்தியாவின் சுதந்திரத்தீயை அணைத்துவிட முடியுமா ?

இட்டுக் கட்டப்பட்ட அல்லது கண்டுபிடிக்கப்பட்ட சதிவழக்குகளும், மாபெரும் தத்துவத்தின் பார்வையை கைக்கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களின் சிறைவைப்பும் புரட்சியின் அணிவகுப்பை தடுத்துவிட முடியாது. ஆனால் சரியான நேரத்தில் செய்யப்படும் எச்சரிக்கையானது, அக்கறையுடன் கவனிக்கப்பட்டால் உயிரிழப்புகளையும் பல்வேறு துயரங்களையும் தடுத்துவிட முடியும்.

அந்த எச்சரிக்கையினை வழங்குவதை எங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டோம் ; எங்கள் கடமையை நிறைவேற்றி விட்டோம்.

புரட்சி என்பது வெடிகுண்டுகளின் வழிபாடு அல்ல

[‘புரட்சி’ எனும் வார்த்தையின் மூலம் எதனைக் குறிக்கின்றீர்கள் என்று கீழ் நீதிமன்றத்தில் பகத்சிங்கிடம் கேட்கப்பட்டது. அக்கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் கூறினார்:]

‘புரட்சி’ என்பது, இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. ‘புரட்சி’ என்பதன் மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூகஅமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

பொருள்களை உண்டாக்குபவர்கள் அல்லது தொழிலாளர்கள் சமுதாயத்தின் மிக இன்றியமையாத அங்கமாக இருந்துங்கூட அவர்களது உழைப்பைச் சுரண்டுபவர்களால் அவர்கள் சூறையாடப்படுகின்றனர். அவர்களது ஆதார உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அனைவருக்கும் தானியங்கள் விளைவித்து கொடுக்கும் விவசாயி, தனது குடும்பத்தோடு பட்டினியில் கிடக்கின்றான் ; உலகச் சந்தைக்கு ஆடைகளை உற்பத்தி செய்து கொடுக்கும் நெசவாளி, தன் உடலையும் தன் குழந்தைகள் உடலையும் மறைப்பதற்கும் போதுமான ஆடைகள் இன்றி தமிக்கிறான்.

நேர்த்தியான கட்டிடங்களை எழுப்பித்தரும் கட்டிடத் தொழிலாளர்களும் கொல்லர்களும் தச்சர்களும் இழிந்தோராய் சேரிகளில் வாழ்கின்றனர். ஆனால் சமுதாயத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும் சுரண்டல்காரர்களும் கோடிக்கணக்கான பணத்தை தங்கள் விருப்பம்போல் ஊதாரித் தனமாக செலவு செய்கின்றனர். இத்தகைய பயங்கரமான சமத்துவமின்மையும் வாய்ப்பு வசதிகளில் வலிந்து திணிக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகளும் நிச்சயம் குழப்பத்திற்கே வழிவகுக்கும். இந்த நிலைமை நீடித்து நிலைத்திருக்க முடியாது. மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருக்கும் தற்போதைய சமுதாய அமைப்பு முறை ஓர் எரிமலை வாயின் விளிம்பில் அமர்ந்திருக்கின்றது என்பது வெளிப்படை.

படிக்க : பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள்: வீரநினைவுகளை நெஞ்சிலேந்தி வீறுநடைபோடுவோம்! | வீடியோ

சரியான நேரத்தில் காப்பாற்றவில்லையெனில் இந்த நாகரீகத்தின் முழுக்கட்டமைப்பும் நொறுங்கி விழுந்துவிடும். எனவே இந்த நாட்டில் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது. இதனை உணர்ந்தவர்களின் கடமை, சமுதாயத்தை சோஷலிசத்தின் அடிப்படையில் புதிதாக மாற்றியமைக்க வேண்டியதே ஆகும். இது செய்யப்படவில்லையெனில், ஏகாதிபத்தியம் என்ற பெயரால் அறியப்படும் மனிதன் மனிதனால், தேசங்கள் தேசங்களால் சுரண்டப்படும் கொடுமையை ஒழிக்க முடியாது ; மனித குலம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் படுகொலைகளில் இருந்து (Carnage) விடுதலை பெற முடியாது. போர்களே இல்லாமல் செய்து உலகளாவிய அமைதிக்கான சகாப்தத்திற்கு அழைத்துச் செல்வது பற்றிய பேச்சுக்கள் அனைத்தும் ஒளிவு மறைவற்ற போலித்தனமாகவே இருக்கும்.

“புரட்சி” என்பதன் மூலம், இவ்விதம் (அதாவது, தற்போது நிலவும் சமுதாய அமைப்பு முறையைப் போல் – மொர்) நிலை குலையக்கூடிய அபாயம் இல்லாததும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுமான (ஓர் சமூக அமைப்பை, முதலாளித்துவத்தின் அடிமைத்தளையிலிருந்தும் ஏகாதிபத்தியப் போர்களின் கொடுமைகளில் இருந்தும் மனித குலத்தை விடுவிக்கவல்ல உலகக் கூட்டரசு ஒன்றை இறுதியாக ஏற்படுத்துவதையே நாங்கள் குறிக்கின்றோம்.)

இதுவே எங்களது கொள்கை. இந்தக் கொள்கையினால் உத்வேகம் பெற்றே நாங்கள் இச்சரியான, உரத்த எச்சரிக்கையை செய்தோம்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலைநாட்டப்படும்

இருப்பினும் இந்த எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படாமல் விடப்பட்டு தற்போதைய அரசு அமைப்பு முறையானது வளர்ச்சியடைந்து வரும் இயற்கை சக்திகளின் பாதையில் தொடர்ந்து ஒரு தடையாகவே இருந்து வருமானால், ஓர் கடுமையானப் போராட்டத்தின் முடிவில் அனைத்து தடைகளும் தகர்த்தெறியப்பட்டு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலை நாட்டப்பட்டு புரட்சியின் குறிக்கோளை அடைவதற்கான பாதை அமைக்கப்படும். புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை. சுதந்திரம் என்பது அனைவரின் அழிக்க முடியாத பிறப்புரிமை. தொழிலாளர்களே சமுதாயத்தை உண்மையில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள். மக்கள் அதிகாரமே தொழிலாளர்களின் இறுதி இலக்கு.

இக்கொள்கைகளுக்காகவும் இந்த நம்பிக்கைகளுக்காகவும் எங்களுக்கு வழங்கக்கூடிய தண்டனையின் மூலம் ஏற்படும் எத்தகைய துன்பத்தையும் நாங்கள் வரவேற்கவே செய்கின்றோம். புரட்சியின் பலிபீடத்தில் எங்களது இளமையை காணிக்கையாக்குகின்றோம். எங்களது இம்மகத்தான இலட்சியத்தோடு ஒப்பிடுகையில் நாங்கள் செய்யும் எந்த தியாகமும் பெரிதல்ல. நாங்கள் மனநிறைவுற்றுள்ளோம். புரட்சியின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.

“புரட்சி நீடூழி வாழ்க”

பகத் சிங் – பட்டுகேஷ்வர் தத்

நூல்: கேளாத செவிகள் கேட்கட்டும்…
(தியாகி பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்)
தொகுப்பும், தமிழும்: த. சிவக்குமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க