“ஈரோடு பட்டி ஃபார்முலா”: புழுத்து நாறிக்கொண்டிருக்கும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ மற்றொரு பரிணாமம்!

புழுத்துப் போன போலி ஜனநாயகத் தேர்தல்களின் நிலை, ஒவ்வொரு முறையும் மிக மோசமாகி, அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. எல்லா ஓட்டுக் கட்சிகளும் மக்களை கவர்ச்சிவாதத்திலும் பிழைப்புவாதத்திலும் மூழ்கடித்துதான் ‘அரசியல்’ செய்துவருகின்றன. அந்தவகையில், தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்துள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கவர்ச்சிவாத மற்றும் பிழைப்புவாத தேர்தல் உத்திகளின் மைல்கல்லாக அமைந்துள்ளது.

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எல்லா அராஜக அத்துமீறல்களையும் அரங்கேற்றி, ஒரு அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது தி.மு.க; திருமங்கலம் மாடலை விஞ்சிவிட்டது ஈரோட்டு மாடல்” – என ஈரோடு இடைத்தேர்தலின் முடிவுகள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் பணநாயகம் வென்றதாகவும் ஜனநாயகம் தோற்றதாகவும் பேசி வருகின்றன. ஓட்டுக்கு பணம் வாங்குவது, பரிசுப் பொருட்கள் தருவது எல்லாம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தல்களிலும் நடக்கும் விஷயம்தான் என்றாலும் இவர்களின் புலம்பல்கள் ஈரோட்டில் இது உச்சம் அடைந்து விட்டது என்பதையே காட்டுகிறது.

படிக்க : அறிவிப்பு: மாநாடு பேரணி தேதி ஒத்திவைப்பு!

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிப்பெற்றுள்ளார். இது தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் வாங்கிய ஓட்டுகளை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துவிட்டனர்.

காங்கிரஸ்தான் தேர்தலில் போட்டியிட்டது என்றாலும், ஆரம்பம் முதலே தி.மு.க.தான் களத்தில் இறங்கி மும்முரமாக வேலை செய்து வந்தது. எப்போதுமே இடைத்தேர்தல் என்றால், அதற்கு ஆளும்கட்சிகள் காட்டும் அக்கறையே தனிதான். எனினும் தனது திராவிட மாடல் ஆட்சியின் மீதான பிம்பத்தை இழந்துவிடக்கூடாது என்ற தி.மு.க.வின் பதற்றமும், வரப்போகும் மக்களவைத் தேர்தலில் இது கண்டிப்பாக பிரதிபலிக்கும் என்ற எதிர்கட்சிகளின் எண்ணமும் ஈரோடு தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்தது.

குறைந்தது 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற வேண்டும் என்ற இலக்கில் களமிறங்கிய தி.மு.க. இத்தேர்தலுக்கு செலவழித்த மொத்தத் தொகை சுமார் 400 கோடி என்று சொல்லப்படுகிறது. இரண்டரை ஆண்டுகள் பார்த்துப் பார்த்து கட்டமைத்து வைத்திருந்த “திராவிட மாடல்” பிம்பத்தையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, ஒட்டுப் பொறுக்குவதற்காக எல்லா அயோக்கியத்தனங்களையும் அராஜகத்தையும் நிகழ்த்தியது.

தேர்தல் தேதி அறிவித்ததும் ஒட்டுமொத்த தி.மு.க. அமைச்சரவையும் ஈரோட்டில் கூடாரம் போட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தது. ஒரு அமைச்சருக்கு மூன்று வார்டுகள் என பிரித்துக் கொடுக்கப்பட்டதால் திரும்பும் திசையெல்லாம் அமைச்சர்களின் ஊர்வலங்களும், அவர்கள் செய்த கோமாளித்தனங்களும்தான் பேசுபொருளாக இருந்தன.

தி.மு.க. அமைச்சர் செஞ்சி மஸ்தான் போட்ட பரோட்டா, அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி ஆடிய ஒயிலாட்டம், உதயகுமார் போட்ட டீ – என கேலிக்கூத்துகளுக்கு சற்றும் பஞ்சமில்லாமல் இருந்தது தேர்தல் களம்.

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தையும் பரிசுப் பொருட்களையும் வாரியிறைத்தன. ஒரு ஓட்டுக்கு சுமார் 15,000 ஆயிரம் ரூபாய்வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. குக்கர், ஹாட்பாக்ஸ், சேலை, கொலுசு, வெள்ளி டம்ளர், ஸ்மார்ட் வாட்ச், லேப் டாப் என பரிசுப் பொருள்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே போனது. தி.மு.க. வழங்கிய வெள்ளி டம்ளர் அளவில் பெரியதாக இருப்பதாகவும் அ.தி.மு.க. கொடுத்த டம்ளர் சிறியதாக இருப்பதாகவும் ஒப்பிட்டுக் காட்டி சமூக வலைதளங்களில் வீடியோக்கள் உலாவிக் கொண்டிருந்தன. மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிற்கே சென்று இறைச்சி தருவது, காதணி விழா என்ற பெயரில் பிரியாணி வழங்குவது என எப்படியாவது ஓட்டுக்களை பொறுக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக வேலை செய்துவந்தன தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்.

“தமிழ்” “தமிழர்” என பேசிவந்த நாம் தமிழர் கட்சியின் சீமான் தனது தேர்தலுக்கான ஆயுதங்களாக இனவெறியையும் சாதிவெறியையும் எடுத்துக் கொண்டார். “போர் நடந்தால் முதலில் வேல் ஏந்தி வரும் மக்கள்தான் முதலியார்”. விஜயநகரப் பேரரசின் காலத்தில் இங்கு தூய்மை பணி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட தெலுங்கர்கள்தான் அருந்ததியர்கள்” என அப்பட்டமாக சாதிவெறியை கக்கினார். நாட்டையே காவி இருள் சூழ்ந்துக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றியெல்லாம் பேச வக்கற்றுப்போன சீமான் பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வடமாநிலத் தொழிலார்களை அடிப்பேன் உதைப்பேன் என இனவெறியைத் தூண்டி மக்களை பிளவுபடுத்தும் வேலையில் இறங்கினார்.

பிழைப்புவாதத்தின் மற்றொரு பரிணாமம்!

மற்ற இடைத்தேர்தல்களைவிட, ஈரோடு தேர்தலை மற்றொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றது “பட்டி ஃபார்முலா”. தி.மு.க.வினர் ஏற்பாடு செய்த மண்டபங்களில் காலை முதல் நண்பகல் வரை இருந்தால் 500 ரூபாயும், காலை முதல் மாலை வரை இருந்தால் 1,000 ரூபாயும், மூன்று வேலை உணவும் தருவதாகக் கூறி மக்களை கொத்துக் கொத்தாக அழைத்துச் சென்று அடைத்து வைத்தது. இவ்வாறு கருங்கள்பாளையத்தில் மக்களை பட்டியில் அடைத்து வைத்திருப்பதை நேரலையில் செய்தியாக வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிருபர்களை தி.மு.க.வினர் அடித்து உதைக்கும் காட்சிகள் வெளியாகி நாறிப்போனது.

தி.மு.க. கையிலெடுத்த இந்த பட்டியில் அடைக்கும் தேர்தல் உத்தியினால் எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்திற்கு செல்லும்போது, தெருக்களிலும் பிரச்சாரக் கூட்டங்களிலும் ஈயாடியது. எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்கு செல்லும்போது மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருப்பதை பார்த்து, “நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால், சூடு, சொரணை, வெட்கம், மானம் உள்ளவராக இருந்தால் வாக்களர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்” என கதறும் நிலைமைக்கு உள்ளானார்.

“பட்டி ஃபார்முலா”விற்கு அடுத்து, வாக்களர்களை “இன்பச் சுற்றுலா” அழைத்து செல்லும் சலுகையையும் அறிவித்து ஓட்டுக்களை கவர்ந்தது தி.மு.க.

தி.மு.க. மக்களை பட்டியில் அடைத்து வைக்கிறது, பணம் பரிசுப்பொருட்களை வாரியிறைக்கிறது என தேர்தல் ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன; நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என அப்படமாக கைக்கழுவி விட்டு நடக்கும் அராஜகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தேர்தல் ஆணையம்.

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதைத் தடுத்து தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் பாராட்டு விழா” என்று கரூரில் ஒட்டப்பட்ட சுவராட்டிகள் தேர்தல் ஆணையத்தின் கேவலமான நிலையை அம்பலப்படுத்தியது.

வரலாறு காணாத அராஜகங்களையும், அட்டூழியங்களையும் அரங்கேற்றி தேர்தலில் வெற்றிப்பெற்று விட்டு கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், “இந்த வெற்றி 20 மாத கால திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின். தி.மு.க.வை ஆதரிப்பவர்களும் இந்த வெற்றியை தி.மு.க.வின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ் என்று வெட்கமே இல்லாமல் கொண்டாடுகிறார்கள்.

தேர்தல் சீரழிவின் கதை!

தமிழ்நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தின் இந்த இழிந்த கேடுகெட்டநிலை திடீரென்று தோன்றிய ஒன்றல்ல.

தற்போது திரிபுராவில் சட்டமன்ற தேர்தலில் பாசிச பா.ஜ.க எதிர்க்கட்சிகளை அடித்து விரட்டவதும், கொலை செய்வதும், ஓட்டுப் போடவிடாமல், பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கும் வழிமுறைகளையும், தமிழ்நாட்டில் பாசிச ஜெயலலிதா, 2002 ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலிலேயே கையாண்டார். எதிர்க்கட்சிகள் அனைவரையும் அடித்து உதைத்து, கைதுசெய்து, பிரச்சாரத்திற்கு கூட வர விடாமல், வாக்குச்சாவடியிலும் நுழைய விடாமல் பல அட்டூழியங்களை நிகழ்த்தி ஜெயலிலதா அத்தேர்தலில் வெற்றிபெற்றார்.

அதேபோல, தற்போது ஈரோடு மாடலுக்கு முன்னோடி 2009 திருமங்கலம் இடைத்தேர்தல் ஆகும். அப்போதைய தி.மு.க.வின் தென்மண்டலச் செயலாளராக இருந்த அழகிரி தலைமையில் இடைத்தேர்தலை சந்தித்த தி.மு.க, ஒரு ஓட்டுக்கு 5,000 ஆயிரம் வரை பணமும், மிக்சி, கிரைண்டர், செல்போன், திருநெல்வேலி அல்வா, சாராயம் போன்ற பொருட்களும் வழங்கியது. இந்த தேர்தலை ஒட்டி உருவான “திருமங்கலம் ஃபார்முலா” என்ற சொல்லாடல் இன்றுவரை நிலைத்து நிற்கிறது.

ஆபாச நடனம், கறிவிருந்து என கலாச்சாரச் சீரழிவுகளை தேர்தல் பிரச்சாரத்தில் பிரபலப்படுத்தியதில் ஜெயலலிதாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. தி.மு.க. உருவாக்கிய “திருமங்கலம் ஃபார்முலாவை”, 2014 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தல் விஞ்சிவிட்டது.

2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஓட்டு போட்ட பிறகும்கூட மக்களுக்கு பணம் கிடைக்கும் வகையில் அ.ம.மு.க. கட்சியின் டி.டி.வி. தினகரன் உருவாக்கிய “டோக்கன் ஃபார்முலா” இன்றைய ஈரோடு தேர்தலிலும் பயன்படுத்தப்பட்டது.

சீரழிந்த தேர்தல் முறையின் இன்றைய கேடுகெட்ட பரிணாமம்தான் “பட்டி ஃபார்முலா” ஆகும். ஆடு-மாடுகளை அடைத்துவைப்பதற்குப் பெயர்தான் பட்டி. வாக்காளர்களை காசுக்காக ஆடு-மாடுகளைப் போல, காலை முதல் மாலை வரை ஒரு கூரையின் கீழ் அடைத்துவைப்பது ஒப்பீடு சொல்ல முடியாத இழிவாகும். இந்த அளவிற்கு மக்களை பிழைப்புவாதச் சாக்கடையில் மூழ்கடித்திருக்கிறது சொல்லிக்கொள்ளப்படும் தேர்தல் ஜனநாயகம்.

ஈரோடு இடைத்தேர்தல் நடைப்பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அதே மாவட்டத்தில்    கோபிசெட்டிபாளைய பகுதியில் பல நாட்களாக உணவின்றி பசிக் கொடுமையினால், இறந்துபோன தன் கணவர் மற்றும் தாயின் உடலை புதைக்கக் கூட பணமில்லாமல் ஒரு வாரகலாமாக சாந்தி என்ற பெண், வீட்டில் வாழ்ந்த கோடூரம் அரங்கேறியது. இதுதான் மக்களின் உண்மையான வாழ்நிலை.

படிக்க : தற்கொலையை ’நகைச்சுவை’யாக்கும் பாசிஸ்டு மோடி!

வேலையின்மை, வறுமை, மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் எவையும் ஈரோடு தேர்தலிலோ அல்லது வேறு எந்த தேர்தலிலும் பேசப்படப் போவதில்லை. தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெற்று முழக்கங்கள் என்பதும், ஓட்டுக்கு கொடுத்தவரை பணத்தை வாங்கிக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்பதும் பெரும்பான்மை மக்களின் கருத்தாக உள்ளது.

ஓட்டுக்கட்சிகள் தேர்தல்களை, அதிகாரத்தின் மூலம் பொறுக்கித் திண்பதற்கான வாய்ப்பாகத்தான் பார்கின்றன. பெரிய கட்சிகள் அனைத்தும் இன்று கார்ப்பரேட் பாணியில் மாறிவிட்டன. அதனோடு தேர்தல் சீரழிவும் கார்ப்பரேட் பாணியில் மாறிவிட்டன. இங்கு அரசியல் கொள்கைகளுக்கு எந்த வேலையும் இல்லை.

பாசிச அபாயம் சூழந்து வரும் நிலையில் ஈரோடு “பட்டி ஃபார்முலா” போன்ற அரசியலற்ற பிழைப்புவாதத்தை ஊட்டிவளர்க்கும் வேலையை செய்வது பாசிச பா.ஜ.க வளர்வதற்குதான் துணைப் புரியும். கவர்ச்சிவாத-பிழைப்புவாத அரசியலை மற்ற ஓட்டுக் கட்சிகளை விட பாசிச பா.ஜ.க-வால் சிறப்பாகவே செய்ய முடியும் என்பதை விளக்கத் தேவையில்லை. உண்மையான அரசியல்படுத்துதல் என்பது மக்களை போராட்டக்களங்களுக்கு அழைத்துவருவதிலேயே இருக்கின்றது.

மதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க