உலகம் முழுவதும் மே தினத்தில் எழுந்த செங்கொடி தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்காமல் இனி இறங்காது.
இனி வரும் ஒவ்வொரு தினமும் தொழிலாளர் வர்க்கம் முன்னெடுக்கும் போராட்டங்கள் அனைத்து ஆளும் வர்க்கங்களை குலைநடுங்க வைக்ககூடியதாகவே இருக்கும் என்பதற்கு சான்றுதான் உலகமெங்கும் நடைபெற்ற மே தின பேரணி.
இச்சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் சர்வலோக நிவாரணி நான்தான் என்று கொக்கரித்துக்கொண்டு வந்த முதலாளித்துவம் பல்வேறு நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் மரணப்படுக்கைக்கு வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது.
தன்னுடைய மரணத்தை ஒப்புக்கொள்ள மறுத்து மீண்டும் தட்டிதடுமாறி எழ முயற்ச்சிக்கும் முதலாளித்துவத்தின் நெஞ்சில் ஏறி மிதிக்கிறார்கள் உலக பாட்டாளிகள்.
சர்வதேச தொழிலாளர் தினமான மே நாளில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் திரளாக திரண்ட தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளை கேட்டு மிகப்பெரிய பேரணி மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற மே தின பேரணியில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாக்ககோரியும் அண்மையில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கொண்டு வந்த ஓய்வூதிய திருத்த சட்டங்களை திரும்பபெறக்கோரியும் பிரான்ஸ் அரசாங்கத்திற்கெதிரான முழக்கங்களை முன்வைத்து போராடினர். அதனை முடிவுக்கு கொண்டுவர எண்ணிய பிரான்ஸ் போலீஸ் போராடும் தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது; 291 பேரை கைது செய்ததுள்ளது
இதைபோன்று இத்தாலியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து பாசிஸ்ட் ஜார்ஜியா மெலோனி அரசுக்கு எதிராகவும் இத்தாலி நாட்டின் வரிக் கொள்கையை சீர்திருத்தகோரியும், தொழிலாளர்களின் ஊதியத்தை விலைவாசி உயர்வுக்கெற்ப்ப அதிகரிக்க வேண்டியும் ஆளும் அரசாங்கத்திற்கு ஆணையிட்டு ஆர்பாட்டம் செய்தனர்.
அதைதொடர்ந்து தென்கொரிய நாட்டில் கடந்த கரோன பெருந்தொற்று காலகட்டத்திற்கு பின் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பெருந்திரளாக ஒன்றுகூடி நடத்திய மிகப்பெரிய பேரணியாக மே தின நிகழ்வு நடைபெற்றது.
ஜெர்மனியில் மே தினத்தையொட்டி 398 நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், மொத்தமாக 2,88,000 பேர் பங்கேற்றதாகவும் ஜெர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு (DGB) கூறியுள்ளது. வேலைநிறுத்த உரிமை உள்ளிட்ட தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி பேரணிகள் நடைபெற்றன.
ஜப்பானில் டோக்கியோ மாகாணத்திலும், நெதர்லாந்து, லெபனான், தைவான், இந்தோநேஷியா போன்ற நாடுகளிலும் எழுச்சிகரமான மே தின பேரணிகள் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. அந்தந்த நாடுகளில் ஒன்றுதிரண்ட தொழிலாளர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளை முழக்கங்களாக முன்வைத்து நடத்திய பேரணி அந்நாட்டில் ஆளும் அரசாங்கங்களை அசைத்து விட்டது. ஏதோ தொழிலாளர்கள் உரிமையை விலைவாசியை குறை என்று கெஞ்சாமல் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடிந்தால் உடனடியாக தீருங்கள் இல்லையேல் உங்களுடைய பதவிகளில் இருந்து விலகி கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கான அரசியல் போராட்டமாக இருந்தது.
மேலும் பாகிஸ்தான் மற்றும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வழக்கமாக நடைபெறும் மே தின நிகழ்ச்சிகளை போன்று இல்லாது பெருந்திரளான மக்களுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இப்படி உலகம் முழுவதும் எழுச்சிகரமாக நடைபெற்ற மே தின பேரணிகள் ஆர்பாட்டங்கள் நமக்கு உணர்த்துவது உலகம் முழுவதும் உழைக்கும் மக்களின் மீது அரச ஒடுக்குமுறைகளும் பொருளாதார நெருக்கடிகளும் தீவிரமாகி, பாசிச சூழல் நெருங்கி வரும் தருவாயில் அவற்றிற்கெதிராக தொழிலாளர் வர்க்கம் நடத்தும் போராட்டங்களும் காட்டமாகத்தான் என்பதைத்தான்.
எழுந்த செங்கொடி முதலாளித்துவத்தின் முடிவை எழுதாமல் இறங்காது. பாட்டாளி வர்க்கம் அக்கடைமையை முடிக்காமல் உறங்காது.
தொகுப்பு:சித்திக்