03.05.2023

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள்மீது போலீசு அடக்குமுறை!
அகர்வாலின் அரசா?
இது திமுகவின் அரசா?

கண்டன அறிக்கை

ஜிப்சம் அகற்றுவது, ஆலையை பராமரிப்பது என்ற நாடகங்கள் மூலம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் சதி வேலைகளைக் கண்டித்து தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த மக்களை அடக்குமுறை மூலம் கைது செய்து மாலை 7 மணி வரை மண்டபத்தில் அடைத்து வைத்திருந்திருக்கிறது  போலீசு. இது திமுகவின் அரசா? அகர்வாலின் அரசா? என்று மக்கள் காறி உமிழும் அளவில்தான் போலீசின் நடவடிக்கைகள் இருந்திருக்கின்றன.

வேதாந்தா நிறுவனம், தனது கைக்கூலிகளுக்கு பணத்தை இறைத்து  ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும்  என்று தொடர் பிரச்சாரங்கள் மேற்கொள்வதை போலீசும் மாவட்ட நிர்வாகமும் ஒருபோதும் தடுக்க வில்லை. ஆனால் மாவட்ட கலெக்டரை சந்திக்க வந்த மக்களை தடுப்பதும் கைது செய்வதும்தான் நடைபெற்றிருக்கிறது. இதற்கு பெயர்தான் ஜனநாயகமா? வந்திருந்த மக்கள் அனைவரையும் சந்திக்க முடியாத ஒருவர் எதற்காக கலெக்டராக இருக்க வேண்டும்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப்போராட்டம் – படுகொலைகள் ஆகியவற்றின் தேர்தல் அரசியல் அறுவடையை பலனாகப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக அரசு தூத்துக்குடி மக்களுக்கு எதிராகவும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.


படிக்க: வேதாந்தா ஸ்டெர்லைட்டின் ஏஜெண்ட் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு! | மக்கள் அதிகாரம் கண்டனம்


ஜிப்சம் அகற்றல், ஆலை பராமரிப்பு என எந்த வடிவிலும் ஸ்டெர்லை ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட சிறப்புச்சட்டம் இயற்றுவதுதன் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய ஒரே வேலை.

அவ்வாறு  சட்டம் இயற்றப் போராடுவதே ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும். ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு தூத்துக்குடி மக்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை பாதுகாப்பதும் தமிழ்நாட்டு மக்களின் கடமையுமாகும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க