தென்கொரிய நிறுவனமான ஹூண்டாயின் இந்திய கிளையான “ஹூண்டாய் மோட்டார் இந்தியா” சார்பாக ₹20,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், மின்னூர்தி உற்பத்திக்கான புதிய தொழிற்சாலை மற்றும் தமிழ்நாடு அளவில் 100 இடங்களில் சார்ஜர் பாயிண்டுகள் ஆகியவற்றை நிறுவ உள்ளதாகவும் ஹூண்டாய் மோட்டார் கூறியுள்ளது.
ஹூண்டாயின் இப்புதிய முதலீடு குறித்து, “மாற்று எரிபொருள் மூலம் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் ஹூண்டாயின் முதலீடு அமைந்துள்ளது” என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
அந்நிறுவனத்தை பாராட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்ற நமது இலட்சிய இலக்கினை அடைவதற்கு இந்த முதலீடு ஒரு பாய்ச்சலாக அமைந்துள்ளது. நாட்டின் ஆட்டோ மொபைல் துறையில் தமிழ்நாட்டின் பங்கு 34 சதவீதம். ஹூண்டாயின் வளர்ச்சியோடு தமிழ்நாடும் வளர்கிறது. தொழிற்துறை முதலீட்டை ஈர்ப்பதற்கு அதற்குரிய வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தம் மூலம் பல ஆயிரக்கணக்கான பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு பெருகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில், மேற்கண்ட ஒப்பந்தங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெருகும், மாநிலத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியானாக வளரும் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பித்தலாட்டம். புதிய ஆலைக்கான இருபதாயிரம் கோடி முதலீடு எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்பதை புரிந்து கொள்வதின் மூலம் சொல்லப்படும் வேலைவாய்ப்பு என்பது மோசடி என்பதை யாவரும் அறியலாம்.
படிக்க: தென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் !
பூந்தமல்லி அடுத்த பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருபெருமந்தூர் அருகில் உள்ள இருங்காட்டுகோட்டை சிப்காட்டில் இயங்கிவரும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை 200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது. இந்த ஆலை கடந்த 1998-ஆம் ஆண்டு ₹4000 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. தொடங்கும்போது 1 பிளானட்டாக இருந்த ஆலை இன்றோ இரண்டு பிளானட்டுகளாக விரிவடைந்துதிருக்கிறது. இன்றைக்கு ஆண்டொன்றுக்கு, 7 இலட்சம் காருக்கு மேல் உற்பத்தி செய்யப்படுவதுடன், கார் விற்பனையிலும் ஏற்றுமதியிலும் இந்தியாவில் இரண்டாம் நிலையில் உள்ள பெரும் நிறுவனமாக ஹூண்டாய் திகழ்கிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம் என கேட்டால், அரசின் வரிவிலக்கு, நவீன தொழில்நுட்பம், அதிகாரிகளின் திட்டமிடல், விளம்பர உத்தி மற்றும் இன்னும் இதர காரணிகள் என பட்டியல் இடுகின்றன முதலாளித்துவ பத்திரிகைகள். ஆனால் இவையெல்லாம் உண்மையில் இரண்டாம்பட்ச காரணிகள் தான். உண்மையான காரணம் , தொழிலாளி வர்க்கத்தின் “உழைப்பு சக்தி”யே ஆகும்.
மார்க்சின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “ஒரு பொருளின் மதிப்பு அதாவது பரிவர்த்தனை மதிப்பு, அதற்கு செலுத்தப்பட்ட உழைப்பு சக்தி, கச்சா பொருட்கள், இயந்திர தேய்மானம், இட வாடகை இன்னும் இதரவற்றை கணக்கிட்டு மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது” என்கிறார். அதன்படி தனது உற்பத்திக்கு, ஆலைக்குள் வரும் அனைத்து பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கும் உரிய விலை கொடுத்து வாங்கும் முதலாளித்துவம், ஒன்றுக்கு மட்டும் உரிய விலை கொடுப்பதில்லை அல்லது விலையை தானே தீர்மானிக்கிறது. அதுதான் தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பு சக்தி.
இன்னும் சற்று எளிமையாக பார்ப்போம். ஒரே வேலைக்கு டிரெய்னி, அப்ரெண்டீஸ், ஒப்பந்த தொழிலாளி, நிரந்தர தொழிலாளி என நான்கு விதமான விலைகளில் உழைப்பு சக்தியை வாங்கும் முதலாளித்துவம், எதை அடிப்படையாகக் கொண்டு விலையை தீர்மானிக்கிறது? இதை ஒரு கணக்கின் மூலம் பார்க்கலாம். நிரந்தர தொழிலாளி என்போர் மிக மிக சொர்ப்பம். இவர்களை தவிர்த்து மேற்கண்ட மூன்று பிரிவினர் தான் ஆலை இயங்குவதற்கு அச்சாணி என்றால் மிகையாகாது. இத்தொழிலாளர்களுக்கு மாதம் ₹20,000 கூலி என வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் நாளொன்றுக்கு ₹666, ஒரு மணி நேரத்திற்கு ₹84 ஆகும்.
இப்போது ஹூண்டாயின் உற்பத்தியோடு ஒப்பிடுவோம். ஹூண்டாய் ஆலையில் 8 மணி நேர வேலைக்கு 400 கார்களை அசெம்பிள் ஆகுகிறது. தற்போதுள்ள தொழில்நுட்பம் மற்றும் இயந்திர திறனை வைத்து பார்த்தால், நமது தொழிலாளி நாளொன்றுக்கு பெறும் ஊதியமான ₹666 பண மதிப்புக்கு இரண்டு மணி நேர உழைப்பு சக்தியே போதுமானது. மீதமுள்ள ஆறு மணி நேர உழைப்பை முற்றிலும் இலவசமாக பெற்றுக் கொண்டு உழைப்பு சக்தியை உரிய விலை கொடுத்து வாங்கியதாக கணக்கிட்டு தனது பொருளை விற்பனை செய்கிறது முதலாளித்துவம்.
படிக்க: வாழ்க்கை : மாருதி, ஹூண்டாயைச் சுமக்கும் மனிதர்கள் !
ஆக, உயிருள்ள மனிதனின் உழைப்பு சக்தி சரக்காக, பண்டமாக, மாறியுள்ளதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அன்றாடம் ஆலை வாயிலில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் “இன்றைக்கு மேன் பவர் (man power) சரியாக வந்துவிட்டதா?” என கேட்பார்கள். இதுதான், உயிருள்ள உழைப்பை செலுத்தும் மனிதன் ஏதோ செங்கல் ஜல்லியைப் போல சடப்பொருளாக மாற்றப்பட்டுள்ளதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும். இதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையே தனக்கு ஏற்றவாறு மாற்ற முனைகிறது முதலாளித்துவ வர்க்கம்.
அதன்படி, நமது நாட்டில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கும் உலகமயமாக்கல் கொள்கையானது நாட்டின் முதுகெலும்பு என சொல்லப்படும் விவசாயத்தையும் சிறு தொழில் – சிறு வணிகத்தையும் அழித்து பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளை பறித்து பிழைப்புக்காக நகர்புறங்களை நோக்கி – குறிப்பாக சொல்வதென்றால் தொழிற்பேட்டைகளை நோக்கி விரட்டுகிறது. இன்னும் எளிமையாக சொல்வதென்றால், மக்கள் தங்கள் சொந்த காலில் நிற்கும் வேலையையும், தொழிலையும் அழித்துவிட்டு கூலி அடிமையாக மாற்றுகிறது.
மேலும், இக்கொள்கையின் மூலம் எப்போதும் சந்தையில் உழைப்பு சக்தி மலிவாக இருக்கும்படி அரசு பார்த்து கொள்கிறது. இதனால், மாத ஊதியம் ₹15,000 அல்லது ₹20,000 கிடைப்பதே பெரிய விசயம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி தொழிலாளியின் மீதான சுரண்டலை சுதந்திரமாக நடத்துகிறது முதலாளித்துவம்.
படிக்க: சென்னை ஹூண்டாய் ஆலையில் போராட்டம்!
நாம் முன்னரே விளக்கிய ஹூண்டாயின் இருபதாயிரம் கோடி முதலீட்டின் மோசடியை இப்போது குறிப்பாக ஆராய்வோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்கள் ஹூண்டாயில் ஒரு வருடம் அப்ரெண்டீஸ், இன்னொரு வருடம் டிரெய்னி பயிற்சிகளை முடித்த பிறகு வெளியேறிவிட வேண்டும். அடுத்த வருடம் புது அணி (batch) மாணவர்கள் இதை செய்வர். இவ்வாறு, முடிவே இல்லாமல் இளம்தொழிலாளிகளுக்கு வேலை கொடுப்பதின் பேரில் அவர்களை ஒட்ட சுரண்டுகிறது ஆலை நிர்வாகம்.
மறுபுறம் கிராமப்புறங்களில் இருந்து விவசாயத்தால் வருமானம் இழந்தவர்கள் மற்றும் பள்ளி கல்வியில் இடை நின்றவர்கள், நெசவு தொழில் நலிவுற்று போனதால் தொழிலில் இருந்து விரட்டப்பட்டவர்கள் என பல்லாயிர கணக்கானோர் ஒப்பந்த தொழிலாளியாக அதாவது கூலி அடிமையாக மாற்றப்படுகின்றனர். இவ்வாறு மனித தன்மையற்ற, கொடூரமான முறையில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான உழைப்பு சுரண்டலின் விளைவே முன்பு சொன்ன இருபதாயிரம் கோடி முதலீட்டுக்கான பணம். இது ஹூண்டாய் நிறுவனத்திற்கு மட்டுமல்ல; ரெனால்ட் நிசான், ராயல் என்ஃபீல்டு, யமஹா ஆகிய நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.
இப்படிப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நாசகர நிறுவனத்தை தான் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது தி.மு.க அரசு. ஆக, சமூக நீதி பேசும் திராவிட மாடல் என்றாலும் சரி காவி சித்தாந்தத்தை உயர்த்தி பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிஸ்டுகள் என்றாலும் சரி மறுகாலனியாக்க கட்டமைப்புக்குள் உள்ள அனைத்து கட்சிகளுமே கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளே!
எனவே பா.ஜ.க-விற்கு மாற்று தி.மு.க என்ற மயக்கத்தில் இல்லாமல் கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு எதிராகப் போராட வேண்டும்.
ஆ.கா.சிவா
தொழிலாளி வர்க்கத்தை பற்றி மேலும் தொடர்ந்து எழுதுங்கள் தோழர் ஆ.கா.சிவா!