மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவு ஏற்படும்: பரகல பிரபாகர்

“2024-இல் மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் அது பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார் பரகல பிரபாகர்

பிரபல பொருளாதார நிபுணரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகல பிரபாகர் மோடியையும் அவர் ஆட்சியையும் விமர்சித்து தி வயர் இணையத்தளத்திற்கு நேர்க்காணல் ஒன்றை அளித்துள்ளார். இந்தியாவில் மோடி அரசை விமர்சிக்கும் பொருளாதாரவாதிகளில் ஒருவராக அறியப்படும் பரகல பிரபாகர்,  பல ஆங்கில பத்திரிகைகளில் மோடி ஆட்சி குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.

சமீபத்தில் பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற பிரச்சினைகளை மோடி அரசு கையாள்வது குறித்த இவரின் தொடர் கட்டுரைகள் ”கூன் விழுந்த புதிய இந்தியா: நெருக்கடியிலுள்ள குடியரசு பற்றிய கட்டுரைகள்” (The Crooked Timber Of New India: Essays on a Republic in Crisis) என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியது. அரசு கட்டமைப்புக்குள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திட்டமிட்டு ஊடுருவுவது, வெறுப்புணர்வை பரப்புவது, நாட்டின் பன்மைத்துவ நல்லிணக்கத்தை சீர்குலைப்பது, சரிந்துவரும் இந்திய பொருளாதாரம் குறித்தெல்லாம் புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.

இப்புத்தகம் குறித்து தி வயர் இணையதளத்தில் கரன் தாப்பருக்கு பேட்டியளித்த பிரபாகர், பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தில் மட்டுமின்றி மற்ற பல துறைகளிலும் திறமையற்றவராக மாறிவிட்டார்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “பிரதமர் மோடி பல விஷயங்களில் திறமையற்றவராக இருந்தாலும் சில விஷயங்களில் திறமையாக இருக்கிறார். சமூகத்தில் பிளவை உருவாக்கி, இனவாத வெறுப்புணர்வை உருவாக்குவதில் திறம்பட செயலாற்றியிருப்பதை நாட்டில் நடந்த சம்பவங்களிலிருந்து பார்க்க முடிகிறது” என மோடியின் மதவெறி பாசிச ஆட்சி குறித்து குறிப்பிட்டுள்ளார்.


படிக்க: பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?


இந்திய பொருளாதாரம் குறித்து பேசிய பிரபாகர், “பாரதிய ஜனதா கட்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே எந்தவொரு பொருளாதாரத் தத்துவமோ ஒத்திசைவான சிந்தனையோ இல்லை” என்று கூறியுள்ளார்.

குறிப்பாக ‘மாண்புமிகு’ நிதியமைச்சர் நிர்மலாவின் கணவரான பரகல பிரபாகர், “எந்த பில்லி சூனிய பொருளாதார நிபுணர் இன்று மோடி அரசுக்கு ஆலோசனை கூறுகிறார் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

மோடி குறித்து, “எந்த பொருளாதார நிபுணரின் ஆலோசனையின் பேரில் பணமதிப்பு நீக்கம் போன்ற மூர்க்கத்தனமான மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத முடிவை அவர்(மோடி) எடுத்தார் என்பது தெரியவில்லை. அவர் கருப்புப் பணத்தைத் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். ஆனால், எந்தப் பொருளாதார நிபுணரிடம் வேண்டுமானாலும் கருப்புப் பணம் பணமாக இருக்குமா என்று கேளுங்கள்?” என்று வினவியுள்ளார்.

மேலும், “2024-இல் மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் அது பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார் பிரபாகர். இந்த நேர்காணலும் பிரபாகரரின் நூலும் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளன.


படிக்க: நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?


பரகல பிரபாகர் மட்டுமின்றி பல்வேறு பத்திரிகையாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் பொருளாதாரவாதிகளும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் பாசிச கொள்கைகளைப் பற்றியும் 2024 தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் இந்திய மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் கொடூரமான பாசிச அபாயம் குறித்தும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

குறிப்பாக, எச்சரிக்கும் பொருளாதார வல்லுநர்களும் அறிவுஜீவிகளில் பலரும் முதலாளித்துவவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு பாசிசத்திற்கு எதிராக புரட்சி நடத்தி மாற்று கட்டமைப்பை அமைக்க வேண்டும் என்பதெல்லாம் நோக்கமல்ல. இருக்கும் போலி ஜனநாயக கட்டமைப்பை சிதையாமல் பாதுகாக்க  வேண்டுமெனில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கு பதிலாக மனித முகம் கொண்ட புதிய தாராளவாத ஆட்சியாளர்கள் வரவேண்டும் என்பதே இவர்களது நோக்கம்.

எளிமையாக சொல்வதெனில், பிரபல பொருளாதார வல்லுநரான ரகுராம் ராஜன் “முதலாளித்துவத்தை முதலாளிகளிடமிருந்து காப்பாற்றுதல்” (Saving Capitalism from the Capitalists) என்று எழுதியதை போல போலி ஜனநாயக கட்டமைப்பை காப்பாற்றும் மனநிலை கொண்ட இவர்கள் பாசிஸ்டுகளுக்கு எதிராக தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.

ஆனால், இருக்கின்ற போலி ஜனநாயக கட்டமைப்பிலிருந்து தான் பாசிசம் வளர்ந்து வருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதே அரசியலமைப்பு சட்டத்தைப் பயன்படுத்தியும் அரசு நிறுவனங்களில் ஊடுருவியும் தான் இந்தியாவில் பாசிசம் வளர்ந்து வருகிறது. எனவே பாசிசத்தை வீழ்த்த போலி ஜனநாயகத்திற்குள்ளேயே தீர்வை தேடாமல் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவதே சரியான தீர்வு.


சோபியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க