‘வெங்காயம் சாப்பிடுவதில்லை’ :
நிர்மலாவின் பார்ப்பன சாதி பெருமைக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு !

ந்தியாவில் பல மாநிலங்களில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை ரூ. 150 முதல் ரூ. 250 வரை ஏறியுள்ளது. இந்த விலை உயர்வு நாடாளுமன்றத்தில் எதிரொலித்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினார் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சூலே.

அமைச்சர் பதவிக்குரிய கண்ணியமில்லாத நிர்மலா சீதாராமன், ‘நான் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயம், பூண்டு சேர்த்துக்கொள்ளாத குடும்பம் என்னுடையது’ என தனது பார்ப்பன சாதிபெருமை குறித்து சிலாகித்தார்.  இந்திய வரலாறு காணாதவகையில், எந்தவொரு நிதியமைச்சரும் அளித்திராத ’சாதிய’விளக்கம் இதுவாகத்தான் இருக்கும்.

’ஏழைகளின் காய்கறி’ என சொல்லப்பட்டும் வெங்காயத்தை 99% இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள். மீதியுள்ளவர்களின் பிரதிநிதியாக மட்டுமே பதில் சொல்லியிருக்கும் நிர்மலா, நிதியமைச்சராகியிருப்பது காலக்கொடுமை.

நிர்மலாவின் ஆணவப் பேச்சு, சமூக ஊடகங்களில் பலரும் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

“வெங்காயம் சாப்பிடுவதும் தவிர்ப்பதும் தனிமனித ருசி. அதை நகைச்சுவையாகத்தான் நிதி அமைச்சர் சொன்னதாக யாரும் சப்பைக்கட்டு கட்ட முடியாது. சிரித்துக் கொண்டே பேசும் நிலையிலா பொருளாதாரம் இருக்கிறது?

வெங்காயம் பற்றிய இப்பேச்சின் உள் ஒரு மிகப் பெரிய திமிர் தொனிக்கிறது. யாரும் நிரந்தரமாய் மேலேயே இருந்ததில்லை. இன்றைய ஆணவம் நாளைய கேவலத்தின் முன்னறிவிப்பு தான். இன்னும் பேசட்டும். நுணல்கள்.” எனத் தெரிவித்துள்ளார் மருத்துவர் ருத்ரன்.

தயாளன்: வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பார்ப்பனர்கள் பயன்படுத்துவதில்லை, ஏனெனில் மண்ணுக்கு கீழே விளையும் எதையும் அவர்கள் உட்கொள்ள மாட்டார்கள். அந்த உணவுப் பொருட்கள் பன்றிக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் உரியவை என்று கருதுகிறார்கள். ஆனால் உருளைக் கிழங்கும் கேரட்டும் அவர்களுக்கு இந்த வகையில் வராது … – பண்பாட்டு அசைவுகளில் தொ.ப.

நிர்மலா சீதாராமன் சொல்லும் உணவு அரசியல் வெறும் விலை குறித்தது அல்ல. அது இந்திய சாதிய அரசியல்.

நாச்சியாள்சுகந்தி: சாதிய திமிரைத் தன் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் நிமிடத்துக்கு நிமிடம் காண்பித்துக்கொண்டிருக்கும் நபர் தான் நிர்மலா சீதாராமன் என்னும் மனிதநேயம் துளியுமற்ற ஒரு பிறவி.

மீனவர்கள் கொல்லப்பட்டபோது ராமேஸ்வரம் வந்த நிர்மலா பேசிய ஒவ்வொரு பேச்சும் சொல்லும் அத்துணை ஆணவம். செய்தியாளர்களை அவரைப் போல் யாரும் அத்தனை எளிதாக அவமானப்படுத்தியதில்லை.

படிக்க :
சுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள் !
திராவிடம் | திமுக – அதிமுக | பஞ்சமி நிலம் | பாபர் மசூதி தீர்ப்பு | கேள்வி – பதில் !

‘நான் வெங்காயம் பூண்டு சாப்பிடாத குடியில் பிறந்தவள். அதனால் எனக்கு வெங்காய விலை பற்றி எனக்குத் தெரியாது’ என்று கூறுவதெல்லாம் திமிர்த்தனம் மட்டுமில்லை. எப்போதும் சாதியத்திமிரை தூக்கிச் சுமக்கும் அகம்பாவம்.

மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்குக் கேட்டு வெற்றிபெறாத போதே இந்த அகம்பாவம். மக்களை சந்தித்திருந்தால்…?

கவின்மலர்:  அண்மையில் வாடகைக்கு வீடு பார்க்கச் சென்றிருந்தேன். அந்த வீட்டு சொந்தக்காரரின் மகளைப் பார்த்தேன். அவர் ஆங்கிலத்திலேயே பேசினார். அன்றுதான் மும்பையில் இருந்து வந்ததாகச் சொன்னார். ஆகவே அவருக்கு தமிழ் தெரியாதோ என எண்ணிக்கொண்டு ‘Do you know Tamil?’ என்று கேட்டேன். ‘ what? I am a Tamil Brahmin’ என்றார் பதறி.

எங்காவது வேறு சாதியினர் இப்படி ‘I am a Tamil _______ என்று சொல்லிப் பார்த்திருக்கிறோமா?

இதுல என்ன பெருமை… எருமை? என்று கேட்கத் தோன்றியது. ஒரு மொழி தெரியுமா எனக் கேட்டால் எவராவது தன் சாதியையும் சேர்த்துச் சொல்வது வேறு சாதியில் கிடையாது.

நான் வெங்காயம் பூண்டு பயன்படுத்தாததால் அவற்றின் விலையேற்றம் பற்றி அதிகம் கவலைப்படாத குடும்பத்திலிருந்து வந்தவள் – நாடாளுமன்றத்தில் நிர்மலா சீத்தாராமன்.

“நான் பாப்பாத்தி. என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது” – சட்டமன்றத்தில் ஜெயலலிதா.

இப்படிப்பட்டவங்களை எல்லாம் பெண்ணியம் என்கிற பெயரில் எல்லாம் ஆதரிப்பவர்களைப் பார்த்தால்தான் வியப்பாக இருக்கிறது.

ராம் கோபால்:  நான் வெங்காயம் அவ்வளவாக உபயோகிப்பதில்லை. எங்கள் பரம்பரையில் நாங்கள் வெங்காயம், பூண்டு பயன்படுத்துவதில்லை. அதனால் எனக்கு கவலையில்லை, என நமது நாட்டு நிதி அமைச்சர் திருமிகு நிர்மலா சீத்தாரமன் பாராளுமன்றத்தில் எம்.பி. ஒருவரின் கேள்விக்கு போகிற போக்கில் ஒரு பதிலுக்கு கமெண்ட் செய்துள்ளார்.

கிட்டதட்ட இந்த மனிநிலையில்தான் அரசுப் பள்ளிகளின் மத்திய உணவில் வெங்காயம் கூடாது என்று அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனமும் சொல்கிறது. எனக்குத் தெரிய இந்திய நாட்டில் ஒரே ஒரு வெங்காயத்தை வைத்து கூட நீர் சோறு தின்று வாழும் மக்கள் தான் ஏராளம்.

ராஜசங்கீதன்: நான் மூளை சாப்பிடுவதில்லை. அதனால் மூளை வளர்ச்சி பற்றிய கவலை இல்லை! – நிர்மூலம்

மதிவாணன்: வெங்காயம், பூண்டு சாப்பிடாத குடும்பம் என பார்ப்பன பெருமை பேசும் நிதியமைச்சர் நிர்மலா அரசியல் சட்ட அரசமைப்புக்கு நேர்ந்த களங்கம்.

சின்னையா ராஜசேகர்: நிர்மலா சீத்தாராமன் வெங்காய விலை உயர்வை பற்றி பதிலளிக்கையில் நாங்க வெங்காயம் சாப்பிடாத பரம்பரையிலிருந்து வந்தவர்கள். ஆகவே எனக்கு கவலையில்லை என்று சொன்னதாக தவறாக பலர் சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர். உண்மையில் அவர் அப்படி சொல்லியிருந்தால் அறிவுகெட்ட பார்ப்பனிய சாதி திமிர் வார்த்தைகள் என சொல்லிட்டு போகலாம். ஆனால் அவர் சொன்னது ஆழ்ந்த சாதிய மன நிலை கொண்ட சாதிப்பெருமையை நிலை நாட்டும் கூற்று. வெங்காய விலை உயர்வு பற்றி கேட்டபோது வெங்காய விலை உயர்வுக்கான காரணங்களை சொல்லி அதற்கான நடவடிக்கைகளையும் சொன்ன அவர் தமது பரம்பரை வெங்காயம் சாப்பிடுவதில்லை என்பதையும் குறித்ததுதான் ஆபத்தான விடயம். இது வெறும் முட்டாள் தனமான பேச்சில்லை. பார்ப்பனிய சிந்தனையின் நுணுக்கமான வெளிப்பாடு.

பாலாஜி தியாகராஜன்: அன்றாட உணவுகளுக்கு வெறும் வெங்காயத்தை மட்டுமே கடித்துக் கொண்டு உணவருந்தும் ஏழை, எளிய மக்கள் பெரும்பான்மையானவர்களை, சூத்திர மக்களின் உணவென்பதற்காகவே வெங்காயத்தை வெறுக்கும் பார்ப்பன கூட்டத்தை சேர்ந்தவொருவர் ஆள நேர்ந்தால் எதைச் சொல்வாரோ அதைத்தான் நிர்மலா சீத்தாராமன் சொல்லியிருக்கிறார். அது நிர்மலா சீத்தாராமன் என்ற தனியொருவரின் திமிரல்ல, ஒட்டுமொத்த பார்ப்பன கூட்டத்திற்கே உரிய திமிர். #BarbaricAgraharamBehaviour

கருணாகரசு: உப்புப்போட்டு சோறு திங்கிற குடும்பத்திலிருந்தாவது வந்திருக்கிங்களா “மேடம்”?

முகநூலில் கண்டனங்கள் எழுந்ததுபோல, ட்விட்டரில் நிர்மலாவுக்கென்றே உருவாக்கப்பட்ட #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேக் மீண்டும் ட்ரெண்டானது.

காளி: வெங்காயம் கிலோ ரூ. 250–க்கு விற்கிறது. பாஜகவில் உள்ள பெரும்பாலான பார்ப்பன – பனியா கும்பலை அது எப்படி பாதிக்கும்?

ரித்தேஷ் ராஜ்: என்னுடைய நுண்ணறிவு குறைவாக உள்ளது, ஏனெனில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் பாஜக ஆதரவாளர்கள்.

பன் ஸ்டார்: நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றிய கவலை இல்லை, ஏனெனில் அவர் எகானமி கிளாஸில் பயணிப்பதில்லை.

கவுரவ்: எனக்கு பொருளாதாரம் தெரியாது என்பதால், எனக்கு பொருளாதாரத்தைப் பற்றி கவலையில்லை.

அனா: வெங்காய விலை ஏற்றம் குறித்து பேசும்போதும் நிதியமைச்சர் நிர்மலா வெங்காயம் சாப்பிடுவதில்லை என்றார். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் வெங்காய விலை உயர்ந்தபோது, ஸ்மிருதி  இரானி வெங்காயத்தை உண்டார். பாஜக ஆட்சியில் மில்லேனியல்கள் ஏன் வெங்காயத்தை உண்ண நினைக்கிறார்கள்?

மாங்காய் மனிதன்:  நீங்கள் வெங்காயத்தை விரும்புகிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல. இந்த விசயத்தால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதற்கு ஏதாவது செய்யுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள். உங்கள் ஆணவம் தேசத்தின் நலனுக்கு முற்றிலும் எதிரானது.

விவேக் திவாரி: நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டார். எனவே, அவர் குடிமக்கள்  எந்த விலையில் வாங்குகிறார்கள் என்று கவலைப்படவில்லை. வெங்காயம், உப்பு, மிளகாய் மற்றும் ரொட்டி மட்டுமே உண்டு  வாழும் ஏழைகள் இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியுமா?

நாட்டு மக்கள் வறுமையில் வாடியபோது, ஆடம்பரத்தில் ஊறி திளைத்த மேரி அண்டோனேட் என்ற பிரெஞ்சு ராணியிடம் மக்கள் உண்ண ரொட்டி இல்லாமல் தவிக்கிறார்கள் என்றபோது, அவர்களை கேக் வாங்கி சாப்பிடச் சொல்லுங்கள் என மமதையுடன் பதிலளித்தார். அதற்குப் பின் நடந்த பிரெஞ்சு புரட்சியின்போது ராணி கொல்லப்பட்டார் என்பது வரலாறு.

மேரி ஆண்டோனேட்டின் மமதைக்கு நிகரானது, நிர்மலா சீதாராமனின் சாதி திமிர் பேச்சு.

தொகுப்பு : அனிதா


இதையும் பாருங்க :