கேள்வி : //திராவிடம் என்ற சொல்லே இல்லை, ஆராய்ச்சி பிழை. தமிழர் பெருமை மறைப்புகாக என இன்று திராவிட எதிர்ப்பு தீவிரமாக பலரால் கையாளப்படுகிறது. உண்மையில் திராவிடம் என்றால் என்ன? வரலாற்று ரீதியில்…//

இளம்பரிதி

ன்புள்ள இளம்பரிதி,

இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் இரு வகைக் குடும்பங்களிலிருந்து உருவாகின. ஒன்று திராவிட மொழிக் குடும்பம், மற்றொன்று இந்தோ ஆரியன் அல்லது சம்ஸ்கிருத மொழிக் குடும்பம். ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து திராவிட மொழிக் குடும்பம் வேறுபட்டது என்பதை முதன்முறையாக எல்லீசு, ராபர்ட் கால்டுவெல் ஆகிய ஆங்கிலேய அறிஞர்கள் நிறுவினார்கள். அதற்கு முன்னர் வரை இந்தியாவில் தமிழ் உள்ளிட்டு அனைத்து மொழிகளும் சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்திலிருந்தே தோன்றின என்ற கருத்து செல்வாக்கோடு இருந்தது. இதை மறுத்து அறிஞர் ராபர்ட் கால்டுவெல் தனது “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலில் இரு மொழிக் குடும்பங்களின் வேறுபாட்டை நிறுவினார். அது குறித்த வரலாற்று பின்னணியை விளக்கும் கீழ்க்கண்ட கட்டுரையை படித்துப் பாருங்கள்!

இது வெறுமனே இரண்டு மொழிக் குடும்பங்கள் பற்றிய பிரச்சினை அல்ல! சமஸ்கிருத மொழிக் குடும்பங்கள் பேசப்படும் மாநிலங்களின் வரலாறு பார்ப்பனிய வரலாறாகவும், திராவிட மொழிக் குடும்பங்கள் பேசப்படும் மாநிலங்களின் வரலாறு, ஆரம்பத்தில் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு, சமண, புத்த மரபுகளைக் கொண்ட பகுதிகளாவும் இருக்கின்றன.

அறிஞர் கால்டுவெல்

சிந்து சமவெளி நாகரீகம் முதல், கீழடி தொல்லியல் ஆய்வுகள் வரை திராவிட மரபை நிரூபிக்கின்றன. திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியாக தமிழ் இருக்கின்றது. மற்ற திராவிட மொழிகளில் சமஸ்கிருதக் கலப்பு அதிகமிருந்தாலும் தமிழ் மட்டும் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு தனித்து நிற்கிறது.

மாறாக இன்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகள் தமிழ் மரபை வடமொழி சார்ந்த வேதமரபுதான் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதற்கு சில தமிழனவாதிகளும், ஆர்வலர்களும் பலியாகியிருக்கிறார்கள். எனவே மொழி, பண்பாடு என்ற வகையில் திராவிடம், பார்ப்பனியத்திடமிருந்து பிரிந்தும் எதிர்த்தும் நிற்கிறது. திராவிடத்தில் தமிழ் ஒரு அங்கம். உண்மையில் தமிழ் மரபு என்றால் அது திராவிடம் உருவாக்கிய பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் தொடர்ச்சிதான்.

ஆகையால் திராவிடம், தமிழ் இரண்டையும் எதிரெதிரான முகாம்களாக குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. அது ஆர்.எஸ்.எஸ்.-ன் சூழ்ச்சி. அதற்கு ஏன் நாம் பலியாக வேண்டும்?

♦ ♦ ♦

கேள்வி : //அனைத்தும் சரிதான். இருப்பினும் கருணாநிதியை விட ஜெயலலிதா எவ்வகையிலும் பின் தங்கியவரல்ல. தமிழ் என்ற ஒற்றைப் போர்வையில் தன் வாழ்நாள் முழுதும் மக்களை ஏமாற்றிப் பிழைத்தது கருணாநிதிதான். ஜெயலலிதா அவர்களிடமும் சில எதிர்மறைகள் உண்டு. இருப்பினும் கருணாநிதியின் அனைத்துத் தவறுகளும் தமிழ் மூலமும் ஜெயலலிதா மூலமான ஒப்பீடு மூலமும் மறைக்கப்படு அவரை உயர்வாகச் சித்தரிப்பதைத் துளி அளவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.//

மகாலட்சுமி

ன்புள்ள மகாலட்சுமி,

ஜெயலலிதா அரசியலுக்கு எப்படி வந்தார்? எம்.ஜி.ஆரின் பட நாயகி என்ற நெருக்கத்தால் அதே எம்.ஜி.யாரால் அரசியலில் இறக்கப்பட்டார். கருணாநிதியோ மாணவப் பருவத்தில் இருந்து திராவிட இயக்கத்தில் சேர்ந்து பல வருடங்கள் களப்பணியாற்றி கட்சியின் தலைவராக உயர்ந்தார். ஜெயாவை பார்ப்பன ஊடகங்கள் முற்று முழுவதாக போற்றுவதும், கருணாநிதியை அதே ஊடகங்கள் என்ன செய்தாலும் இகழுவதும் கூட இங்கே இன்னும் இருக்கும் யதார்த்தம்தான்.

இருவரைப் பற்றி ஒப்பீடு செய்வதை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது, படித்துப் பாருங்கள்!

 

♦ ♦ ♦

கேள்வி : //பஞ்சமி நிலம் என்றால் என்ன?//

சி. நெப்போலியன்

ன்புள்ள நெப்போலியன்,

ஆங்கிலேயர் காலத்தில் பட்டியலின மக்களுக்கு என்று தனிச்சிறப்பாக அளிக்கப்பட்ட விளைநிலங்கள் பஞ்சமி நிலம் என்று அழைக்கப்படுகின்றன. இது குறித்து கீழ்க்கண்ட விக்கிபீடியா கட்டுரை ஒரு அறிமுகத்தை அளிக்கும். படியுங்கள்!

♦ ♦ ♦

கேள்வி : //அயோத்தியின் தீர்ப்பை முஸ்லீம்கள் ஏன் ஏற்றுக் கொண்டார்கள்?//

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

நல்லதொரு கேள்வி! அரசியலை கூர்மையாக அவதானிப்பதோடு அதன் முரண்பாடுகளை கேள்விகளாய் அடிக்கடி எழுப்பும் உங்களுக்கு முதற்கண் வாழ்த்துக்கள்!

சில முஸ்லீம் அமைப்புக்களைத் தவிர பெரும்பான்மை முஸ்லீம் அமைப்புகள் பாபர் மசூதி குறித்த தீர்ப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். முஸ்லீம்கள் ஏன் ஏற்றுக் கொண்டார்கள்?

மதச்சார்பின்மை கட்சிகளாய் கூறிக்கொள்ளும் காங்கிரசு, சி.பி.எம்., சி.பி.ஐ, போன்ற கட்சிகள் கூட இந்த தீர்ப்பினை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி பெரும்பான்மை அரசியல் கட்சிகளே ஏற்றுக் கொண்டிருக்கும் போது முஸ்லீம் மக்களுக்கு வேறு வழி என்ன இருக்கிறது?

சொத்தை பறிகொடுத்தவருக்கு அநீதியும், சொத்தை இடித்து விட்டு அபகரித்தவருக்கு நீதியும் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு அநீதியானது. தீர்ப்பு குறித்த வினவு தளத்தில் வெளிவந்த பல கட்டுரைகளை நீங்கள் படித்திருக்கக் கூடும்.

தீர்ப்பு வருவதற்கு முன்னரே உச்சநீதிமன்ற தீர்ப்பினை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் இறுதியான தீர்ப்பு என்பதான சட்ட மாயையை ஊடகங்கள் மூலம் அனைவரும் அடிக்கடி பேசி வந்தார்கள். அதில் முஸ்லீம் அமைப்புகளும் உண்டு.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அதற்கு முந்தைய அத்வானியின் ரத யாத்திரை இரண்டும் இந்தியாவெங்கும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்களை தோற்றுவித்து ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். பிறகு இப்போது நடப்பது பார்ப்பனிய பாசிசத்தை முன்னிறுத்தும் பாஜக ஆட்சி. இந்த ஆட்சியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என முஸ்லீம் மக்கள் கொல்லப்படுவதும், கொலைக் குற்றவாளிகளை நீதிமன்றங்கள் விடுதலை செய்வதும் ஒரு கள யதார்த்தம். இந்நிலையில் இந்த நாடு இந்துக்களின் நாடு, பார்ப்பனியத்தை போற்றும் நாடு, அதை எதிர்ப்போரை அடக்கும் நாடு என்றே எவரும் கருத வேண்டும். அயோத்தி தீர்ப்பு குறித்த விமர்சனங்களை வெளிநாட்டு பத்திரிகைகளே கூட இப்படித்தான் எழுதியிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் கையறு நிலையில் இருக்கும் இந்திய முஸ்லீம் மக்கள் வேறு வழியின்றி ஒருவிதமான தோல்வி மற்றும் சுய பாதுகாப்பு மனப்பான்மையில் அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதன் பொருள் இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் இல்லை என்பதே. சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்காமல் அவர்களை அடிமை போல நடத்தும் ஒரு அமைப்பு முறையை நாம் ஜனநாயகம் என்றே அழைக்க முடியாது. போலி ஜனநாயகத்தில் நமக்கு நீதி கிடைக்காது என்று யதார்த்தமாக கருதும் ஒரு முஸ்லீமுக்கு தீர்ப்பை ஏற்காமல் மறுப்பதற்கு என்ன இருக்கிறது? இல்லை அவர்களது உள்ளக்கிடக்கையில் பாபர் மசூதியை திருப்பிக் கட்டித் தரவேண்டும் என இருந்தாலும் அதை இங்கே எந்த வாக்கு வங்கி அரசியல் கட்சி (ஒரு சில விதிவிலக்குகள் தவிர) பேசுகிறது?

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை | காணொளி
♦ அம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் !

இப்படி ஜனநாயகத்தாலும், அரசியல் கட்சிகளாலும் கைவிடப்பட்ட நிலையில் முஸ்லீம்கள் அயோத்தி தீர்ப்பை ஏற்பது என்பது பாஜகவின் பார்ப்பனிய பாசிசத்தை எதிர்த்து இங்கே எதுவும் செய்ய முடியாது என்று சரணடைந்த நிலையாகும். அதனால்தான் அவர்கள் தீர்ப்பை ஏற்கிறார்கள். உண்மையில் மறுப்பதற்கு அவர்களுக்கு உரிமையோ, ஆதரவோ, அமைப்போ இங்கு இல்லை. மோடி ஆட்சியில் எப்போதும் அச்சத்தோடு வாழும் நிலைக்கு முஸ்லீம்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதை அயோத்தி தீர்ப்பு மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீரின் தனிச்சட்டம் நீக்கப்பட்டது, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவையும் எடுத்துரைக்கின்றன.

இந்த நிலையை மாற்றும் வரலாற்றுக் கடமை இங்கே இருக்கும் முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளுக்கு இருக்கிறது. இல்லையேல் ஹிட்லரின் ஆட்சி போல மோடி ஆட்சி இங்கே சிறுபான்மை, இன, மொழி, பண்பாட்டு, வரலாற்று அழிப்பை தொடரும். அதற்கு அயோத்தி தீர்ப்பு ஒரு முன்னோட்டம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

3 மறுமொழிகள்

  1. பஞ்சமி நிலம் குறித்து தாங்கள் வழங்கிய இணைப்புக்கட்டுரை நல்ல புரிதலை தந்தது…நன்றி வினவு…

  2. கேள்வி கேட்க கற்றுத்தருவதே நீங்கள்தானே வினவு…உங்களைத் தொடர்வதால் எங்களுக்கு ஏற்படும் “பக்கா விளைவுதானே” அது..நண்பர்கள் வாசகர்கள் மாற்றுக்கருத்துள்ளோர் என அனைவராலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிரமேற்கொண்டு தாங்கள் அளிக்கும் பதில்கள் அனைவருக்கும் சிறந்ததொரு புரிதலை ஏற்படுத்துகிறது..தொடரட்டும் கேள்விகளும் பதில்களும்…நாம் வெற்றி அடைந்த பின்னரும்… நன்றி

  3. //திராவிடத்தில் தமிழ் ஒரு அங்கம்….//

    எப்படி .. முதலில் கேள்வி திராவிடம் என்றால் என்ன என்பது தான் ??? அந்த வார்த்தையின் பொருளென்ன ? அதன் வேர்ச்சொல் எங்கிருந்து வந்தது (Literal Meaning)கூறவும் வடமொழி சொல்லான அதில் எப்படி தமிழ் ஒரு அங்கமாகும்? தமிழர்களுக்கும் திராவிடத்திற்கும் என்ன தொடர்பு. அதனை வைத்து தமிழர்களை இருட்டடிப்பது ஏன் ??

    //சிந்து சமவெளி நாகரீகம் முதல், கீழடி தொல்லியல் ஆய்வுகள் வரை திராவிட மரபை நிரூபிக்கின்றன. //

    எப்படி ???? அங்கே திராவிடம் என்று பெயர் பொறிக்க பட்ட சொல் கல்வெட்டு ஏதாவது கிடைத்திருக்கிறதா ??? இருந்தால் அதனை ஆதாரத்தோடு அளிக்கலாம் ..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க