நண்பருக்கு ஒரு வாரமாக காய்ச்சல். அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். காலை 10 மணி இருக்கும். நாங்கள் மருத்துவமனைக்கு உள்ளே வரும்போது ஒரு குழந்தை அழுது கொண்டே வெளியே போனது. “இது ஒன்னு, நேரத்துக்கு திங்குதா பாரு. காலைல வூட்ட வுட்டு கிளம்பும்போது சாப்பிடச் சொன்னேன் சாப்பிடவே இல்லை, இப்ப பாரு உயிர எடுக்குது” என்று திட்டிக் கொண்டே சென்றார் அந்த குழந்தையின் தாய். அந்தத் தாய்க்கு 23 வயது இருக்கலாம்.
சீட்டு வாங்கிவிட்டு வரிசையில் உட்கார்ந்தோம். எங்களுக்கு முன்னே 20 பேர் இருந்தனர். மருத்துவர் வெளியே போயிருந்தார். இருபது நிமிடம் ஆனபோது மருத்துவர் வந்தார், அழுது கொண்டே ஓடிய குழந்தை, சந்தோஷமாக ஆடிக்கொண்டே வந்தது அம்மாவுடன்.
அந்தக் குழந்தையால் வரிசையின் இடத்தை பறி கொடுத்த அந்த அம்மா, மீண்டும் வரிசையின் கடைசியில் உட்கார்ந்தார். அந்தத் தாய் மீண்டும் கருவுற்றிருக்கிறார், அனேகமாக ஆறு மாதமாக இருக்கலாம்.
படிக்க : நாடாளுமன்றத்தில் செங்கோல் – பாசிச ஆட்சிக்கு அடிக்கல்! | தோழர் மருது
அந்தக் குழந்தையிடம் பேசத் தொடங்கினேன்.
“பேர் என்னப்பா ?”
“தேவசேனா!”
“பாகுபலில வர தேவசேனா நீ தானா!”
“இல்ல, நான் தான் தேவசேனா, என் பேரு தான் அந்த படத்துல வந்திருக்கு”
“வீடு எங்க இருக்கு ?”
“அம்பேத் காலனி, 3-வது தெரு”
“சரி என்னப்பா படிக்கிற ?”
“ஒன்னாவது இல்ல இல்ல இரண்டாவது” என்று சிரித்துக் கொண்டே கூறியது தேவசேனா.
“ஒன்னாவதா இரண்டாவதா தெளிவா சொல்லு” என்றேன்.
“ஸ்கூல் முடிஞ்சிடுச்சில்ல, நான் இரண்டாவது போக போறேன்” என்றது தேவசேனா.
ஒன்றும் ஒன்றும் எத்தனை என்றேன்.
“இரண்டு” என்றது. அது மட்டும் இல்லை. கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் வந்தது.
ஒன்னு ரெண்டு மூணு சொல்லட்டுமா என்று 100 வரை திணறாமல் ஒப்பித்தது.
எனக்கும் ஆச்சரியம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளோடு பேசிக் கொண்டிருப்பவன் என்பதால் இந்த வயதில் இவ்வளவு அழகாக பேசும் பதில் அளிக்கும் குழந்தையை ஆச்சரியமாக பேசியபடி ரசித்துக் கொண்டிருந்தேன்.
ஒவ்வொருவரையும் பொறுமையாகவும் தாமதமாகவும் சோதித்துப் பார்த்தார் மருத்துவர். அது இன்னமும் எனக்கு வசதியாக போய்விட்டது.
“வீட்ல அம்மாவுக்கு உதவி பண்ணுவியா?” என்றேன்.
“அம்மா சொல்ற வேலையெல்லாம் செய்வேன், கடைக்கு போக சொல்லுவாங்க போவேன், சாமா விளக்க சொல்லுவாங்க விளக்குவேன்”.
“காலைல என்ன சாப்ட்ட”
“தேங்காய் பால், ஆப்பம், எனக்கு கொழம்பு பிடிக்காது”
“வேற என்ன சாப்பிடுவ?”
“லேஸ் தான் எனக்கு பிடிக்கும்”
“கொய்யாப்பழம் சாப்பிடுறியா” என்றபடி என்னிடம் இருந்த கொய்யாப்பழத்தை கொடுத்தேன்.
“லேஸ் சாப்பிடக்கூடாது உடம்புக்கு கெடுதல் சரியா?”
“தினமும் லேஸ் சாப்பிட மாட்டேன், ஒரு நாளைக்கு லேஸ் சாப்பிடுவேன். இன்னொரு நாளைக்கு கொய்யாப்பழம் சாப்பிடுவேன். இப்ப நீங்க கொடுத்தீங்கல்ல அது மாதிரி” என்றது.
தண்ணி குடிச்சிட்டு வரேன் என்று மருத்துவமனையின் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரைப் குடித்து விட்டு தன்னுடைய அம்மாவுக்கு தண்ணீரை பிடித்துக் குடிக்க கொடுத்து விட்டு வந்து,
“உங்களுக்கு தண்ணி வேண்டுமா?” என்றது.
“எங்க அம்மாவுக்கு சீக்கிரமே பாப்பா பொறந்திடும். எங்க அம்மாவை எந்த வேலையும் செய்ய வுட மாட்டேன். நானே தண்ணி புடிச்சியாருவேன். சாமான் எல்லாம் கழுவுவேன். கடைக்கு போய் வருவேன். அம்மாவை பத்திரமா பாத்துப்பேன்.”
என்ன சொன்னாலும் சொல் பேச்சு கேட்காத குழந்தை, வீட்டில் இந்த வேலை சொன்னாலும் செய்யாத குழந்தை இப்படி குழந்தைகள் பணம் படைத்தவர்கள் மத்தியில் இருக்கும்போது. உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்த இந்த குழந்தைக்கு இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
அப்பா என்ன பண்றாரு? என்றேன்.
“அப்பா கொழுத்து வேலைக்கு போறாரு. ரொம்ப நல்லவரு எனக்கு ஏதாவது வாங்கிட்டு வருவாரு. ஆனா தெனம் குடிச்சிட்டு வந்து வீட்ல ஒரே சண்டை போடுவாரு. நேத்து கூட என்னோட விளையாட்டு சாமான், வீட்டில் இருந்த அடுப்ப எல்லாம் தூக்கி போட்டு உடைச்சுட்டாரு, நைட் முழுக்க எனக்கு பயம், தூக்கமே இல்ல தெரியுமா?” என்றபடி அமைதியானது தேவசேனா.
அதற்கு மேல் என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை. நானும் அமைதியாகிப் போனேன்.
அந்த அமைதியையும் உடைத்தது தேவசேனாவின் மெல்லிய குரல்.
“சரி உங்க போன்ல கேம் இருக்கா? என்றது தேவசேனா.
இல்லப்பா அதெல்லாம் வச்சுக்கறது இல்ல என்றேன்.
“உங்க வீட்டில பாப்பா எதுவும் இல்லையா”
“ஆமா எதுவும் இல்ல” என்றேன்.
“சீக்கிரம் கேம் டவுன்லோட் பண்ணி வச்சுக்கோங்க. பாப்பா வந்தா விளையாடனும்ல்ல” என்று சொல்லி குலுங்கி குலுங்கி சிரித்தது.
படிக்க : “கீழடியும் ஈரடியும்” | தோழர் திருமுருகன் காந்தி | காணொலி
அதற்குள் என்னுடைய நண்பர் மருத்துவரை பார்த்து விட்டு வெளியேற, தேவசேனாவிடம் டாடா சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
மருந்து வாங்கி விட்டு எட்டிப் பார்த்தேன். அருகில் இருந்தவரின் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தது தேவசேனா.
இன்று இரவாவது தேவசேனா நிம்மதியாக தூங்குமா என்ற கவலை என்னை தொற்றிக் கொண்டது.
இந்த டாஸ்மாக்குகள் எத்தனை தேவசேனாவின் உறக்கத்தை கலைத்துப் போட்டிருக்கின்றனவோ!
– மருது