ரத்தினகிரி மீது பாசிச அடக்கமுறையை ஏவும் பா.ஜ.க – பின்னணியில் அதானி!

இந்திய பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு சவூதி அராம்கோவுடன் இணைந்து இச்சுத்திகரிப்பு ஆலையை நிறுவ வேண்டுமென்றால், அதானி குழுமத்தை எந்த வகையிலாவது தங்களுடைய கூட்டுப் பங்குதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மோடி அரசு நிச்சயமாக டீல் பேசும்.

ஹாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரி மாவட்டம், மீண்டும் ஒரு கார்ப்பரேட் பேரழிவுத் திட்டத்திற்கு எதிராக போர்கோலம் கொண்டிருக்கிறது. பார்சு-சோல்கன் பகுதியில் அமையவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக சுற்றுவட்டார கிராம மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் கட்டுவதற்காக, 2015-ஆம் ஆண்டு ரத்தினகிரி சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை அறிவித்தது அன்றைய பா.ஜ.க-சிவசேனா கூட்டணி அரசாங்கம்.

இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் கூட்டமைப்பும், கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் சவூதி அரேபியா எண்ணெய் நிறுவனம் (சவுதி அராம்கோ) மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் ஆகியவையும் இத்திட்டத்தின் முதலீட்டாளர்கள். மொத்தம் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டத்தின் சரிபாதி பங்குகள் அந்நிய நிறுவனங்களான சவூதி மற்றும் அபுதாபி எண்ணெய் நிறுவனங்களுக்கு விடப்பட்டுள்ளன.

இந்த ஆலை பயன்பாட்டுக்கு வந்தால் ஆண்டுக்கு 12 லட்சம் பேரல் எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதுடன், 1.8 கோடி டன் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை உற்பத்தி செய்யும் பிரமாண்டமான சுத்திகரிப்பு ஆலையாக இருக்கும் என கருதப்படுகிறது. இதனால் மிகப்பெரிய சுற்றுசூழல் மாசு ஏற்படும் என்று அஞ்சப்பட்டது.

மேலும், இத்திட்டத்திற்காக புகழ்பெற்ற அல்போன்சா வகை மாம்பழங்கள் விளையும் மாமரங்களும் முந்திரித் தோட்டங்களும் நெல் வயல்களும் நிறைந்த, இயற்கை எழில் கொஞ்சும் ரத்தினகிரி மாவட்டத்தின் சுமார் 17 கிராமங்களை உள்ளடக்கிய 16,000 ஏக்கர் நிலத்தை கையப்படுத்த இருந்தனர். இதனால் சுமார் 4,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுவாசல்களை இழந்து அகதிகளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.


படிக்க: மகாராஷ்டிரா: போராடும் ரத்தினகிரி மக்களுக்கு துணைநிற்போம்!


இத்திட்டம் அறிவிக்கப்பட்ட தொடங்கத்திலேயே, ரத்தினகிரி மாவட்டம் முழுக்க பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். “கொங்கன் சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பு நடவடிக்கைக் குழு” என்ற அமைப்பைத் தொடங்கி தொடர்ச்சியான போராட்டங்களில் இறங்கினர். மக்கள் போராட்டங்களால் தமது ஆட்சிக்கு நெருக்கடிக்கு வரும் என்று அஞ்சிய உத்தவ் தாக்கரே, நானார் பகுதியிலிருந்து இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு கோரிக்கை விடுத்தார். அதன் விளைவாக, 2019ஆம் ஆண்டு போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.

அதேநேரம், உத்தவ் தாக்கரே இத்திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரவில்லை. 2022 ஜனவரி மாதம் உத்தவ் தாக்கரே மோடிக்கு எழுதிய கடிதத்தில், இந்த திட்டத்தை நானார் பகுதியிலிருந்து ராஜப்பூர் வட்டத்திலுள்ள பார்சு பகுதியைச் சுற்றி மாற்றிக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்திருந்தார். பார்சு, நானாரிலிருந்து வெறும் 15 கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ள கிராமமாகும்.

தற்போது ஆட்சியிலுள்ள ஷிண்டே-பட்னவிஸ் அரசாங்கம் பார்சு பகுதியில் சுத்திகரிப்பு ஆகையை கட்டுவதற்கான பணியை முடுக்கிவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி சுத்திகரிப்பு ஆலை கட்டுவதற்காக அப்பகுதியின் மண்ணை ஆய்வுசெய்வதற்காக வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்சு பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏறத்தாழ 3,000 மக்கள் சாலையை மறித்து மிகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இப்பகுதி கிராமங்களுக்கு பலமுறை அதிகாரிகள் ஆய்வுக்காக வந்தபோதும், மக்கள் தங்களது போராட்டங்களால் அவர்களை விரட்டியடித்துள்ளனர். எனினும் ஷிண்டே-பட்னவிஸ் தலைமையிலான அரசு, இத்திட்டத்தை எப்படியாவது அமலுக்கு கொண்டுபோக வேண்டுமென வெறியோடு செயல்பட்டுவருகிறது.

மண்ணாய்வு செய்வதற்கு அதிகாரிகள் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே (ஏப் 22) போராட்ட இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த சத்யஜித் சவான், மங்கேஷ் சவான் மற்றும் சில முக்கியச் செயல்பாட்டாளார்கள் போலீசாரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். ராஜப்பூர் வட்டார நிர்வாகவும் நீதிமன்றமும் பார்சு-சோல்கன் சுத்திகரிப்பு நிலைய எதிர்ப்பியக்கத் தலைவரான அமொல் பொலே, அவ்வட்டாரத்தில் நுழைவதற்கும், சுற்றுவதற்கும் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.


படிக்க: ரத்தினகிரி பெட்ரோலிய ஆலை – சேலம் எட்டு வழிச்சாலை : விவசாயிகளை விரட்டும் பாஜக அரசு !


மேலும், ஏப்ரல் 22 முதல் மே 1 வரையில், மண்ணாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களான பார்சு சதா, பார்சு, பன்ஹாலே தர்பே ராஜப்பூர், தொபேஷ்வர், கொவல் மற்றும் கல்சி வாடி கொவல் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் மக்கள் நடமாடுவதற்கு தடைவிதிக்கப்படுள்ளது. 27ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் அப்பகுதியில் 1,800 போலீசார் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். எல்லாவற்றையும் மீறித்தான் பார்சு சதா பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே, பார்சு-சோல்கான் பிராந்தியத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்துகள், சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியிருந்தனர். அத்தீர்மானங்களை மாவட்ட நிர்வாகம் ஒரு துரும்பாகக் கூட மதிக்கவில்லை.

செயல்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்ட அதேநாளில் (ஏப் 22), ராஜப்பூர் மாவட்ட ஆட்சியரான தேவேந்திர சிங், சுத்திகரிப்பு ஆலை அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார். சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பாளர்களுக்கு இத்தகவல் கடைசி 30 நிமிடங்களுக்கு முன்புதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நான்கு பேர் மட்டுமே வர முடிந்துள்ளது. அதேநேரம், ‘சுத்திகரிப்பு ஆலை ஆதரவாளர்கள்’ என்ற பெயரில், ஆளும்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கைக்கூலிகள் கூட்டத்தை திரட்டிவந்துள்ளனர்.

எதிர்ப்பாளர்களுக்கு பேசுவதற்கு போதிய நேரம் வழங்காத மாவட்ட ஆட்சியர், கூலிப்படையினர் பேசுவதற்கு அதிகநேரம் கொடுத்ததோடு ஆலை அமைப்பதற்கு ஆதரவாக அவர்கள் முன்வைத்த வாதங்களைப் பதிவுசெய்துள்ளார்.

தூத்துக்குடியில் போலீசு, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதைப் போலவே, மஹாராஷ்டிரத்தின் ராஜப்பூரிலும் உள்ளது.

போராடும் மக்களை அச்சுறுத்தும் வேலையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த உள்ளூர் கிரிமினல் குண்டர் படைத் தலைவனான அம்பெர்கர் என்பவன் செயல்படுகிறான். செயல்பாட்டாளர்களுக்கு மிரட்டல்விடுவது, தாக்குவது ஆகியவற்றோடு சுத்திகரிப்பு ஆலைக்கு ஆதரவாக விளம்பரமும் செய்துவருகிறான். இச்சட்ட விரோத அச்சுறுத்தலை அம்பலப்படுத்திய உள்ளூர் பத்திரிகையாளர் வாரிஷே, அம்பெர்கரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அரசு நிர்வாகத்தை வைத்தும், தனது குண்டர் படையை வைத்தும் பா.ஜ.க. இத்திட்டத்தை வெறித்தனமாக அமல்படுத்த நினைப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. 6 லட்சம் கோடி ரூபாய் மூலதனம் பாய்கிற இத்திட்டத்தின் முக்கிய பங்குதாரராக உள்ள சவுதி அராம்கோ நிறுவனத்தின் கூட்டுப் பங்குதாரராக இணைய அதானி குழுமம் முயற்சிப்பதாக கடந்த ஆண்டு செய்திகள் வந்துள்ளன.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமத்தால் வாங்க முடியுமா? மூலதனத்திற்கு அதானி குழுமம் என்ன செய்யும் என பொருளாதாரப் பத்திரிகைகள் அப்போதே விவாதித்துக் கொண்டிருந்தன. அதற்கான பதில்தான் இந்த திட்ட ஒப்பந்தம்.

இந்திய பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு சவூதி அராம்கோவுடன் இணைந்து இச்சுத்திகரிப்பு ஆலையை நிறுவ வேண்டுமென்றால், அதானி குழுமத்தை எந்த வகையிலாவது தங்களுடைய கூட்டுப் பங்குதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மோடி அரசு நிச்சயமாக டீல் பேசும். இது கைகூடுமானால், ஹிண்டன்பர்க் அறிக்கையால் பங்குமதிப்புகள் சரிந்த அதானி, ஒரு நொடியில் உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் போட்டிபோட்டுக் கொண்டிருப்பார்.

அதானிக்கு புரோக்கர் வேலை பார்ப்பதற்காகத்தான் ரத்தினகிரி மக்கள் மீது கொடும் பாசிச அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகின்றன. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனத்தை முதன்முதலாக விரட்டியடித்தது ரத்தினகிரி மண், அதானிக்கான இந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையும் முழுமையாக விரட்டியடிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.


வேல்முருகன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க