கேரளா: மோடி அரசைக் கண்டித்து ரப்பர் விவசாயிகள் போராட்டம்!

கடந்த 10 - 15 வருடங்களாக, ஏற்ற இறக்கமாக இருப்பதால் ரப்பர் விவசாயிகள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக ரப்பருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோ ஒன்றிற்கு ₹300-ஐ உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர்.

0

கேரள ரப்பர் விவசாயிகள் மே 25, 26 ஆகிய தேதிகளில் பாசிச மோடி அரசை கண்டித்து திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் இல்லம் முன்பு இரவு பகலாக போராட்டம் நடத்தினர். ரப்பருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும், ரப்பரை வேளாண் பயிராக அறிவிக்க வேண்டும், ரப்பர் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) துணை அமைப்பான கேரள கர்ஷக சங்கம் (Kerala Karshaka Sangham) ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் 15,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பேரணியாக சென்ற‌ விவசாயிகள் ரப்பருக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ₹300-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், ரப்பரை உள்ளடக்கிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் (FTA) இருந்து இந்திய அரசு விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் ஆதரவு ரப்பர் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும், ரப்பர் வாரியத்தை கேரள மாநிலத்திலேயே மீண்டும் அமைக்க வேண்டும் என்றும், ரப்பர் விவசாயிகளுக்கு முறையாக மானியம் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் AIKS சார்பாக வலியுறுத்தப்பட்டது.


படிக்க: அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!


இப்பேரணிக்கு முன்னதாக, மாநிலம் முழுவதும் 600 கி.மீ தூரத்திற்கு 28 நீண்ட பேரணிகள் சுமார் 29,000 விவசாயிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டன. மேலும் 2.8 லட்சம் வீடுகளுக்குச் சென்று ரப்பர் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விளக்கப்பட்டன. ரப்பர் விவசாயிகளின் பிரச்சினைகளை விளக்கி 3.3 லட்சம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்தியாவின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 90 சதவிகிதத்தை கேரள‌ விவசாயிகள்தான் உற்பத்தி செய்கின்றனர். ரப்பர் விலை பல ஆண்டுகளாக, குறிப்பாக கடந்த 10 – 15 வருடங்களாக, ஏற்ற இறக்கமாக இருப்பதால் ரப்பர் விவசாயிகள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக ரப்பருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோ ஒன்றிற்கு ₹300-ஐ உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். ஆனால், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தியாவில் கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து உயர்தர ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு ரப்பரின் இறக்குமதியை எளிதாக்கும் வகையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் முந்தைய காங்கிரஸ் மற்றும் தற்போதைய பா.ஜ.க அரசாங்கங்கள் கையெழுத்திட்டுள்ளதாக AIKS கூறுகின்றது. இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மத்திய அரசால் கவனத்தில் கொள்ளப்படவில்லை.


படிக்க: கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!


மேலும், ரப்பர் பணப் பயிர் என்பதால் அதை வேளாண் பயிராக வரையறுக்க முடியாது என்று கூறி மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. வாகனங்களில் பயன்படுத்தப்படும் ரப்பர் டயர்களின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் டயர் உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக மத்திய அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாக AIKS கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி 2016-இல், விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்குவதாக மோடி வாக்குறுதி அளித்திருந்தார். பின்னர், டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் இயற்றுவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் இவற்றையெல்லாம் நிறைவேற்றுவது என்பது பாசிச மோடி அரசின் நோக்கமல்ல. தனது எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மூலப் பொருட்களாக பயன்படும் வேளாண் உற்பத்தி பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதே மோடி அரசின் நோக்கம்.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க