ராஜஸ்தான்: ஹஜ் யாத்திரிகர்களைத் தாக்கிய இந்துத்துவ கும்பல்!

தொடர் இந்து மதவெறி ஊட்டப்பட்டதன் விளைவாகத்தான் இத்தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்மையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் துர்கா வாகினி அமைப்புகள் இணைந்து 7 நாள் ஆயுதப் பயிற்சி வகுப்புகளை நடத்தின.

0

ராஜஸ்தானின் கோட்டா நகரில் கடந்த மே 24 இரவு ஹஜ் யாத்திரிகர்கள் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது இந்துத்துவ கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. பேருந்து ஜெய்ப்பூர் விமான நிலையம் நோக்கி கோட்டா – பூண்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது இந்துத்துவ கும்பலால் இடைமறிக்கப்பட்டது.

குடிபோதையிலிருந்த இந்துத்துவ கும்பல் தங்களைக் கடந்து சென்ற பேருந்தை வழிமறித்து கற்களை வீசித் தாக்கியதில் பேருந்து ஓட்டுநர், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் காயமுற்றனர். இத்தாக்குதல் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கும் காணொளி அச்சமூட்டுவதாக உள்ளது.

மே 25 அதிகாலையில் சவுதி அரேபியா செல்லவிருக்கும் விமானத்தைப் பிடிக்கச் சென்ற பேருந்தை இந்துத்துவ கும்பல் பின் தொடர்ந்து வழிமறித்தது. சுமார் 40 யாத்திரிகர்கள் பயணித்த இப்பேருந்தில் அத்துமீறி நுழைந்த இக்கும்பல் உள்ளே இருந்த இளம் பெண்களின் பெயர்களை விசாரித்தது. அனைவரும் இஸ்லாமியர்கள் என்று அறிந்தவுடன் அக்கும்பல் அவர்களை தாக்கத் தொடங்கிவிட்டது. ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குமாறு மிரட்டியுள்ளது. பேருந்தினுள் இருந்த பெண்களைக் கடத்தி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளது. பேருந்திற்குப் பலத்த சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


படிக்க: ராஜஸ்தான் : ரம்சான் அன்று கலவரத்தை நடத்திய காவி பாசிஸ்டுகள் !


முதலில் பெண்களை இழிவாகப் பேசியது அந்த இந்துத்துவ கும்பல். அதை மற்றவர்கள் தட்டிக் கேட்கத் தொடங்கியதும் இரும்பு கம்பி உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளது. கேள்வி கேட்ட அப்துல் கலாம் என்ற யாத்திரிகர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ஆறு தையல் போடும் அளவிற்கு இரும்புக் கம்பியைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளது இக்கும்பல்.

இத்தாக்குதலால் தனது இடது காலில் கடுமையாகக் காயமுற்ற முகமது பர்தீன் (Mohammad Fardeen) என்ற 18 வயது இளைஞர் கூறியதாவது: இந்துத்துவ பயங்கரவாதிகள் குழந்தைகள் பெண்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை; அனைவரையும் தாக்கினர். எனது 60 வயது பாட்டியின் துப்பட்டாவைப் பிடுங்கினர். அவர் வைத்திருந்த ₹30,000 பணத்தையும் பறித்துக் கொண்டனர்.

இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசு வழக்குப் பதிவு செய்து 6 பேரைக் கைது செய்துள்ளது. சுமார் 25 – 30 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதாகப் போலீசின் முதல் தகவல் அறிக்கையே கூறுகிறது.

கடந்த சில மாதங்களாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவ வெறியர்கள், இந்து சாமியார்கள் ஆகியோர் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுகளை பேசி வருகின்றனர். இஸ்லாமியர்கள் மீது வன்முறையை ஏவும் வகையில் அவர்களது பேச்சுகள் அமைந்துள்ளன. சில இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.


படிக்க: ‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!


இவ்வாறு தொடர் இந்து மதவெறி ஊட்டப்பட்டதன் விளைவாகத்தான் இத்தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்மையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் துர்கா வாகினி அமைப்புகள் இணைந்து 7 நாள் ஆயுதப் பயிற்சி வகுப்புகளை நடத்தின.

அரசு எந்திரத்தில் சங்கப் பரிவார் கும்பலின் ஊடுருவல் காரணமாக ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசாங்கம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. இந்த காவி பாசிச கும்பலை எதிர்கொள்வதற்கு ஒரே வழி, மக்களை அமைப்பாக்கி அணி திரட்டுவது மட்டும்தான் என்பதை ராஜஸ்தானில் நடைபெற்று வரும் தொடர் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க