ஒடிசா ரயில் விபத்து – பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் காவி வானரப் படைகள்!

காலங்காலமாக பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் காட்டுவதையும், திட்டமிட்டு கலவரங்களை தூண்டுவதையும் ஒரு வழிமுறையாக கையாண்டு வருகின்றனர், காவி பாசிஸ்டுகள்.

டந்த ஜூன் 2 ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகா பஜார் ரயில் நிலையம் அருகே மாலை 6.30 மணி அளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. ஒன்று சரக்கு ரயில். மற்ற இரண்டும் பயணிகள் ரயில். இதுவரை அரசுத் தரவுகளின்படி 288 பேர் உயிரிழந்துள்ளனர்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நூற்றாண்டில் இது ஒரு கோரமான ரயில் விபத்து ஆகும்.

ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தில் உடல்கள் நசுங்கி, சிதறிக் கிடக்கும் கொடூரத்தை காணும் போது நம் நெஞ்சு கணக்கிறது. விபத்து ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்கள் இன்னும் மீண்டபாடில்லை. சடலங்களை மரபணு பரிசோதனை மூலம் தான் அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவலநிலையே நிலவுகிறது. இதுவரை 205 சடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்து மோடி அரசின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் இரயில்வே துறை திட்டமிட்டு சீரழிக்கப்பட்டதும், தீவிரமாக தனியார்மயக் கொள்கை புகுத்தப்பட்டதன் விளைவே ஆகும்.

படிக்க : முசாஃபர்நகர் கலவரம்: “எனது போராட்டம் இன்னும் ஓயவில்லை!”

ரயில் விபத்துகளைத் தடுக்கக்கூடிய “கவச்” (கவசம்) தொழில்நுட்பம் இரண்டு சதவிகித ரயில் பாதைகளில் மட்டும் பொருத்தப்பட்டுள்ளதும்; சிக்னல் மற்றும் தடம் மாற்றும் மின்னணு அமைப்பு முறையில் (எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் சிஸ்டம்) உள்ள குறைபாடுகள் குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே ரயில்வே தெற்கு மண்டல அதிகாரி எச்சரித்தும் அதை ரயில்வே துறை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாததும்; 3.12 இலட்சம் ஊழியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும்; ரயில்வே துறைக்கு ஒதுக்கும் நிதி படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதும் அதற்கான சான்றுகளாகும்.

ரயில்வே துறை திட்டமிட்டு சீரழிக்கப்பட்டதை காங்கிரஸ், சிபிஎம் போன்ற எதிர்க்கட்சிகளே பிரச்சாரம் செய்து வருகின்றன. இதன் மூலம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நாறி வருகிறது மோடி கும்பல். ஹிண்டன்பர்க் அறிக்கை, பிபிசி ஆவணப்படம், கர்நாடக தேர்தல் தோல்வி, நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து இருப்பது, மணிப்பூர் கலவரம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த ரயில் விபத்தினாலும் மோடி பிம்பம் சரிந்து வருகிறது

ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு எதிர்வினையாக மோடி கும்பல், அரசியல் ஆதாயம் தேடுவதாக எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஜனநாயக சக்திகள் பலரும் மோடி அரசை சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். துயரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என பா.ஜ.க-வை விமர்சிக்கும் ஜனநாயக சக்திகளுக்கு காவிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மோடி கும்பல் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நாறி வருவதை தடுப்பதற்காக சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது காவிக் கும்பல். “ரயில் ஜிகாத்” என்ற பெயரில் ரயில் விபத்திற்கு முஸ்லிம்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் நயவஞ்சக பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன சங்கி வானரப் படைகள்.

தி ரேண்டம் இந்தியன் (The Random Indian) என்ற டிவிட்டர் பக்கம் விபத்து நடந்து இடத்திற்கு அருகில் உள்ள வெள்ளைக் கட்டிடத்தை நோக்கி அம்புக்குறியிட்டு காட்டி “நேற்று வெள்ளிக்கிழமை” என்று பதிவிட்டு இருந்தது. அதாவது வெள்ளைக் கட்டிடத்தை மசூதி என்று கூறுகிறது; நேற்று வெள்ளிக் கிழமை என்று கூறுவதன் மூலம் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் கட்டாயம் தொழுகைக்கு வந்து இருப்பார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது. இதன் மூலம் இந்த ரயில் விபத்திற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று மறைமுகமாக கூறுகிறது.

இந்த பதிவு டிவிட்டரில் வைரலாகி 40 லட்சம் பார்வைகளையும் 4,500 மறுபதிவுகளையும் பெற்றது. மேலும் மற்றொரு பதிவில் விபத்து நடந்த பாலசோர் பகுதி என்பது சட்டவிரோதமாக குடியேறிய ரோங்கியா முஸ்லிம்களின் மையமாக உள்ளது என்றும் பதிவிட்டு இருந்தது. இப்பதிவும் வைரலாகியது. இந்த நச்சுப் பிரச்சாரத்தை உண்மை சரிபார்ப்பு இணைய தளமான “ஆல்ட் நீயூஸ்” அம்பலப்படுத்தியது. வெள்ளைக் கட்டிடம் கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கம் (Iskcon) நடத்தும் ஜெயின் கோயில் என்பதை கண்டறிந்து வெளியிட்டது.

ஆனால் “ரயில் ஜிகாத்”, “நாசவேலை”, “சதி” என சங்கி வானரப் படைகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ரயில்வே சிக்னலை தவறாக கொடுத்தது ஷாரிப் என்ற முஸ்லிம் இளைஞர் என்ற பொய்ச் செய்தியையும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

மேலும் சங்கிக் கும்பல், ரயில் விபத்து குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்றும்; “ஸ்டாப்ரிசர்வேஷன்இன்ரயில்வே” (#Stopreservationinrailway) என்ற ஹேஷ்டேக் பெயரில் ரயில் விபத்திற்கு இடஒதுக்கீடு மூலம் ரயில்வேயில் பணிபுரியும் தகுதியற்ற நபர்கள் தான் காரணம் என்றும்; இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க வேண்டும் ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்துவருகிறது.

மேற்கூறிய நச்சுப் பிரச்சாரத்தில் குறிவைத்து தாக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான். அதற்கு உதவி செய்யும் விதமாக தான் ரயில்வே அமைச்சரின் கூற்றும் அமைந்துள்ளது. ரயில் விபத்துக்கு சிக்னல் மற்றும் தடம் மாற்றும் மின்னணு அமைப்பு முறையில் செய்யப்பட்ட மாற்றமே காரணம் என்றும் இதன் பின்னணியில் சதி இருக்கலாம் என்று கூறியுள்ளார். அந்த கோணத்தில்தான் போலீசின் முதல் தகவல் அறிக்கையும், சிபிஐ விசாரணையும் அமைந்துள்ளது.

ஒருபுறம் முஸ்லிம் மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயலும் பிரச்சாரம் என்றால், மறுபுறம் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு எதிராக “ஸ்டாண்ட்வித்அஸ்வினிவைஷ்ணவ்” (#Standwithashwinivaishnaw) என்ற ஹேஷ்டேக்கில் ரயில்வே அமைச்சர் மற்றும் மோடி அரசாங்கத்தின் துதிபாடி வருகிறது காவிக் கும்பல்.

அந்த பதிவுகள் வைஷ்ணவின் கீழ் இரயில்வே துறையின் கடந்த கால சாதனைகளை எடுத்துக்காட்டுகின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டதற்காக அவரை பாராட்டுகின்றன. விபத்தால் சேதமடைந்த ரயில் தண்டவாளங்கள் 51 மணி நேரத்திற்குள் மறுசீரமைக்கப்பட்டு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டதாக பெருமை கொள்கின்றன. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகிய அமைச்சர்களை கேலி செய்கின்றன.

காலங்காலமாக பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் காட்டுவதையும், திட்டமிட்டு கலவரங்களை தூண்டுவதையும் ஒரு வழிமுறையாக கையாண்டு வருகின்றனர், காவி பாசிஸ்டுகள். இப்பிரச்சாரங்கள் பிரச்சனையின் உண்மையான காரணத்தை மூடி மறைப்பதோடு மட்டுமல்லாமல், முஸ்லிம் மதவெறியை தூண்டி இந்து மக்களை தன் பக்கம் திரட்டிக் கொள்வதற்கு காவிக் கும்பலுக்கு வழியேற்படுத்தி கொடுக்கிறது.

படிக்க : புதிய நாடாளுமன்ற கட்டடம்: இந்து ராஷ்டிரத்தின் மடம்!

கொரோனா ஊரடங்கு காலத்தில், கொரோனா நுண்கிருமியை தப்லீக் ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள் பரப்பியதாக மேற்கொள்ளப்பட்ட காவிகளின் நச்சுப் பிரச்சாரம் அதற்கு சான்றாகும்.

இத்தகைய நச்சுப் பிரச்சாரங்கள் தமிழக மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகளால் அவை முறியடிக்கப்படுகின்றன. ஆனால், வட இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

எனவே சங்கிகளின் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியது மோடி- அமித்ஷா பாசிசக் கும்பலை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒவ்வொருவரின் கடமை ஆகும். காவிகளின் கோட்டைகளான உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநில மக்களை சென்றடையும் வகையில் அப்பிரச்சாரங்கள் அமைய வேண்டும்.

குயிலி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க