2013 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம், முசாஃபர்நகரில் இந்துத்துவக் குண்டர்களால் நடத்தப்பட்ட கலவரத்தில் 60-க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய மக்கள் பலர் உயிருக்கு அஞ்சி தங்களது பகுதிகளை விட்டே வெளியேறுமளவுக்கு இஸ்லாமிய மக்கள் கடுமையாகத் தாக்குதலுக்குள்ளானார்கள். இக்கலவரத்தின்போது இஸ்லாமியப் பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள். பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகளில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டு பேருக்கு 20 ஆண்டுக்கால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்குக்காக எட்டு ஆண்டுகளாக விடாப்பிடியான போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பாலியல் வன்கொடுமைக்குள்ளான 35 வயதான அஃப்ரீன், குற்றவாளிகளுக்கு எதிரான தீர்ப்பு வழங்குவதற்கு முன்பிருந்ததைவிட தற்போது பெரும் அச்சத்திற்குள்ளாகியிருப்பதாகக் கூறுகிறார். முன்பின் தெரியாதவர்களும் வழக்கு சம்பந்தமாகத் தனது கணவருக்கு போன் செய்து “அந்த வழக்கில் உனது மனைவி இருக்கிறார் என்று ஏன் சொல்லவில்லை” எனக் கேள்வி எழுப்புவதாகக் கூறுகிறார் அஃப்ரீன். இதனால் அவரது கணவர் சில நாட்கள் போனை அணைத்து வைத்திருக்கிறார்.
பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு தான் சந்தித்த இன்னல்களையும் அதற்கெதிரான போராட்டத்தையும் விவரிக்கிறார் அஃப்ரீன்.
“செப்டம்பர் 8, 2013 ஆம் ஆண்டு, இரு மகன்களுக்கும் உடல்நிலை சரியில்லாததால் எனது கணவர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்த நேரம். நான் எனது கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்தேன். அப்போது வீட்டிற்குள் நுழைந்த இந்துத்துவ குண்டர்கள் எனது குழந்தையைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி ஒருவர் பின் ஒருவராக என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்”.
படிக்க: பாஜகவினர் மீதான முசாஃபர்நகர் கலவர வழக்கை வாபஸ் வாங்க யோகி அரசு முடிவு !
அஃப்ரீனை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் வேறு யாருமல்ல. அவரது கணவரின் தையல்கடைக்கு வாடிக்கையாக வருபவர்கள்; அஃப்ரீனுக்கு நன்கு தெரிந்தவர்கள்தான். அக்கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது உடைமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. வீட்டை இழந்த அவர்கள் கிட்டத்தட்ட 8 மாதங்கள் நிவார முகாமில் தஞ்சமடைந்தனர்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பலர் தனக்குத் தனது குடும்பத்தினருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி, வழக்கைத் தொடரவில்லை. ஆனால் அஃப்ரீன் வழக்கினை தொடர்ந்தார். இச்சூழலில் அஃப்ரீனுக்கு பெரும் துணையாக இருந்தது அவரது கணவர்தான். தனது மனைவிக்கு நியாயம் வேண்டி குற்றவாளிகளுக்கு எதிராகப் புகாரளிக்க போலிஸ் நிலையத்திற்கு அஃப்ரீனின் கணவர் சென்றபோது, ஒரு மாதத்திற்குப் பிறகு புகார் அளிக்க வந்ததாகவும் புகாரில் உண்மைத் தன்மை இல்லை என்றும் கூறி புகாரை எடுக்க மறுத்தது உ.பி போலிசு.
2014 பிப்ரவரி அஃப்ரீனை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று குற்றவாளிகள் மீது வழக்குப் பதிய போலிசுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அஃப்ரீன் வழக்குத் தொடுத்ததற்குப் பிறகு பாலியல் வன்கொடுமைக்குள்ளான 6 பெண்கள் வழக்கினை தொடர்ந்தார்கள். வழக்குத் தொடுத்த பிறகு, தான் அதிகளவில் அச்சுறுதல்களைச் சந்திக்க வேண்டியதாக இருந்தது என்கிறார் அஃப்ரீன். இவருடன் வழக்குத் தொடுத்த 7 பெண்களும், கொலை மிரட்டல்களால் அப்போதே வழக்கில் இருந்து பின் வாங்கிவிட்டனர்.
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கணவர், நாட்டில் அமைதியை நிலைநாட்டக் குற்றவாளிகளுடன் சமரசமாகச் செல்வது அவசியம் எனக் கூறியிருக்கிறார் என்று கூறும் அஃப்ரீன், தான் சிறு வயதில் இருந்து ஒன்றுக்கொன்றாகப் பழகி வந்த அக்கம் பக்கத்தினர், இந்து நண்பர்களாலே வெறுத்தொதுக்கப்பட்டபோதும், வழக்கில் இருந்து பின்வாங்கவில்லை இனியும் பின்வாங்கப் போவதுமில்லை எனத் தெரிவிக்கிறார்.
நெருக்கடிகள் அதிகரித்த போது, அஃப்ரீன் தனது குடும்பத்துடன் 15 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று குடிபெயர்ந்துள்ளார். “அங்கும் நிம்மதி இல்லை பலரும் தொந்தரவு செய்வார்கள். அங்கு நான் சகஜமாக இருக்கப் பல வருடங்கள் பிடித்தன. ஆனால் அங்கேயும் தன்னை பின் தொடர்ந்து மிரட்டல் விடுத்தார்கள்” என்கிறார் அஃப்ரீன். இதனால் தனது கணவரின் அன்றாட வாடிக்கையாளர்களையும் இழந்ததாகக் கூறுகிறார் அஃப்ரீன்.
படிக்க: முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்
பின்னர் சமூக செயற்பாட்டாளர்களின் சிலரின் உதவியுடன் அஃப்ரீனும் அவரது கணவரும் டெல்லிக்குக் குடிபெயர்ந்தார்கள். “இங்கு யாருக்கும் என்னைத் தெரியவில்லை” என்று பெருமூச்சுவிடுகிறார் அஃப்ரீன்.
இதுகுறித்து அஃப்ரீனின் வழக்கை மேற்கொண்டுவரும் வழக்கறிஞர், “பாலியல் வழக்குத் தொடுத்த 7 பேரில் இன்றுவரை அஃப்ரீன் மட்டுமே வழக்கில் உறுதியாக நிற்கிறார். மற்றவர்கள் அனைவரும் மிரட்டப்பட்டு வழக்கில் இருந்து பின்வாங்கப்பட்டனர். அஃப்ரீனுக்கும்ம் கொலை மிரட்டல்களால் பல வந்தன. அப்போது ஊரைவிட்டு வெளியேறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்” என்கிறார் அவர்.
இருப்பினும் டெல்லியில் தனது குடும்பத்தினை பராமரிக்க ஏற்பட்ட நிதி நெருக்கடியால் உத்தரப் பிரதேசத்திற்குத் திரும்பியிருக்கிறார் அஃப்ரீன். “நாங்கள் மீண்டும் எங்கள் சொந்த ஊருக்குச் சென்றபோது மிகுந்த நெருக்கடிக்குள்ளானோம். எனது கணவர் வழக்குக்காக நீதிமன்றத்திற்குச் சென்றபோது பல முறை தாக்கப்பட்டிருக்கிறார். அவர் உயிருடன் திரும்பி வருவாரா என அச்சத்தில் பல நாட்கள் இருந்திருக்கிறேன்” என்கிறார்.
இந்தியாவில் மதக் கலவரங்களின்போது நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத்தான் அஃப்ரீனின் வழக்கிலும் பிரதிபலித்திருக்கிறது என்கிறார் சமூக உரிமை ஆர்வலர் ஃபரா நக்வி. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தாக்கும் சமூகம், தாக்கப்படும் சமூகத்தின் பெண்களை (பாலியல் ரீதியாக) குறிவைக்கிறது என்கிறார்.
இத்தகைய கலவரங்களின் போது அரசாங்கம் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்து கொள்கிறது எனக் குற்றம் சாட்டும் நக்வி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்மீது திட்டமிட்டு நடத்தப்படுகின்ற வகுப்புவாத வன்முறைகள் அனைத்தும் அரசாங்கத்தின் உதவியில்லாமல் நடந்தேறுவதில்லை; ஆகவேதான் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைப்பதில் அத்தகைய சிரமங்கள் உள்ளன என்கிறார்.
“பாலியல் வன்கொடுமையில் இருந்து மீண்டவர்களுக்கு விடாப்பிடியான போராட்டமே அவசியம். தற்போது என் தொடர்பாக வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுக்கால சிறைத் விதிக்கப்பட்டிருக்கிறது எனினும் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் எனக்கும் எனது குழந்தைகளுக்கு எப்போதுமே ஆபத்தானவர்கள். அவர்களுக்கு எதிரான எனது போராட்டம் இன்னும் ஓயவில்லை; தொடரும்! ” என்கிறார் அஃப்ரீன்.
ஆதிலா