14.06.2023

செந்தில் பாலாஜி கைது!
இது ஊழல் பிரச்சினை அல்ல;
மோடியை எதிர்க்கும் அனைவருக்கும் இனி இதுவே நடக்கும்!

கண்டன அறிக்கை

மிழ்நாட்டின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான வீட்டிலும் தலைமைச் செயலகத்திலும் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதும் அவசர அவசரமாக இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும் ஒன்றிய அரசு மோடிக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் இதுதான் கதி என்று கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே நாம் கருத வேண்டி உள்ளது. ஆகவே ஒன்றிய அரசின்  நடவடிக்கையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை என்று கூறி ஒரு நாள் முழுவதும் அவருடைய வீட்டிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் துணை ராணுவப் படையின் உதவியோடு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது என்பதும் செந்தில் பாலாஜி மீதான கைது என்பதும் எவ்விதமான சட்ட, ஒழுங்கு, விதிமுறைகளுக்கு எதிரானதாகவே உள்ளது.

ஒரு மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ளே புகுந்து ஆயுதம் தாங்கிய துணை ராணுவப் படையுடன்  சோதனை செய்வதற்கு  முன்பு அந்த மாநில அரசிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றால், மாநில அரசுக்கு எங்கே உரிமை உள்ளது? இதை தடுக்கக் கூட முடியாத அளவில் தான் மாநில அரசின் உரிமை உள்ளது என்பதே உண்மை. இப்படிப்பட்ட உரிமைகள் ஏதுமற்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது.

ஒரு அமைச்சர் ஊழல் செய்துவிட்டார், அவர் மீது நடத்தப்படும் சோதனை தொடர்பான பிரச்சனையாகக் கருத முடியாது.

டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் விசாரணை நடவடிக்கைகளும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கவே மேற்கொள்ளப்பட்டது.


படிக்க: மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்


நாடு முழுவதும் வருமான வரித் துறையும் அமலாக்கத் துறையும் பல்வேறு சோதனைகளை தினம்தோறும் செய்து வருகின்றன.பாசிச மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் அனைத்து துறைகளும் ஏவல் துறைகளாக செயல்பட்டு எதிர்க் கட்சிகள் மீது தாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு நபர் எப்படிப்பட்ட குற்றம் செய்திருந்தாலும் அவர்  நாட்டின் அரசியலமைப்பு வழங்கி உள்ள அனைத்து சட்டங்களுக்கு உட்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.

இந்த நாட்டின்  உழைக்கும் மக்களும் உழைக்கும் மக்களுக்காகக் குரல் கொடுப்போரும் எவ்வித வழிமுறை இன்றியும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் வருமான வரிச் சோதனை, அமலாக்கச் சோதனை போன்ற  சோதனைகள் நடந்து முடிந்தவுடன் அது தொடர்பான விவரங்களைச் சேகரித்து முறையான சம்மன் அனுப்பி, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது என்பது முறையான நடவடிக்கை. அப்படிப்பட்ட முறைப்படியான நடவடிக்கை செந்தில் பாலாஜி விவகாரத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

முறையற்ற கைதும் முறையற்ற சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது திமுகவை மிரட்டுவதற்காக மட்டுமல்ல;

இதன் மூலம் தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பையோ,  ஆர்எஸ்எஸ் – பாஜக ; அம்பானி – அதானி பாசிச எதிர்ப்பையோ யார் மேற்கொண்டாலும் அவர்களை இப்படித்தான் அணுகுவோம் என்று பாசிச மோடி அரசு தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இப்படிப்பட்ட கைதுகளும் சோதனைகளும் அமைச்சர் செந்தில் பாலாஜியோடு மட்டும் நிறைவுறப் போவதில்லை.

அடுத்தடுத்த இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் திமுக அரசினை நிலை குலைய  வைத்து அதன் மூலம் ஆதாயம் அடைவது பாசிச ஆர் எஸ் எஸ்  –  பாஜகவின் திட்டம் .இப்படிப்பட்ட பல்வேறு  திட்டங்கள் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று பாசிச சக்திகள் எண்ணுகின்றன.


படிக்க: விழுப்புரம் – மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை பூட்டாதே! || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி


மாநிலங்கள் உரிமைகள் ஏதுமற்ற இந்து ராஷ்டிரத்தின் சமஸ்தானங்களாக மாறிக்கொண்டிருப்பதையும் பாசிச பாஜகவுக்கு தேர்தலில் எதிராகச் செயல்படும் கட்சி அல்லது ஒரு மாநில அரசையே இப்படி மிரட்டும் என்றால் பாசிச பாஜக – ஆர் எஸ் எஸ்- ஐ எதிர்க்கக்கூடிய மற்ற அமைப்புகளையும் தனி நபர்களையும் ஜனநாயகவாதிகளையும் ஒழித்துக் கட்டுவதற்கு இனி எந்த நிலைக்கும் பாசிச மோடி அரசு செல்லும் என்பதே உண்மை.

இப்படி  எல்லோரையும் ஒழித்துக் கட்டிவிட்டு ’ஜனநாயகப் பூர்வமான’  தேர்தல் நடத்தி அதில் தன்னை மாமன்னராக முடி சூட்டிக்கொள்ள பாசிச மோடி காத்திருக்கிறார்.

ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் மாநில உரிமைகள் ஒழிக்கப்படுவதும்  எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவதும் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் ஒன்றிய அரசின் ஏவல் துறைகள் மாநில அரசின் அனுமதி இன்றி தமிழ்நாட்டில் செயல்படத் தடை விதிக்க வேண்டும். அது தொடர்பான சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டைச் சுற்றி வளைத்துள்ள பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க , பாசிச மோடி அமித்ஷா கும்பலின் கொட்டத்தை அடக்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமை.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க