மகாராஷ்டிரா: சங்கிகளின் பேச்சைக்கேட்டு நமாஸ் செய்வதைத் தடை செய்த கலெக்டர்!

வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் சொத்து பிரச்சினைகள் தொடர்பாக எழும் சர்ச்சைகளை வக்பு வாரியத்தைத் தவிர வேறு எந்தத் துறையும் விசாரிக்க முடியாது என வாரியத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி ஜுனைத் சையத் இப்பிரச்சினை குறித்துப் பதிலளிக்கையில் கூறியுள்ளார்.

0

காராஷ்டிரா மாநிலம் ஜல்கானின் எரண்டோல் தாலுகாவில் உள்ள ஜும்மா மசூதியின் உள்ளே முஸ்லீம் ஆண்கள் கூடி தினமும் ஐந்து முறை தொழுகை நடத்தி வந்தனர். வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இம்மசூதி, 800 ஆண்டுகள் பழமையானது. வடக்கு மகாராஷ்டிராவில் ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுகிறது.

இம்மசூதி ஒரு இந்து வழிபாட்டுத் தலத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்று சங்கப் பரிவார அமைப்பு ஒன்று அளித்த புகாரை விசாரித்த மாவட்ட ஆட்சியர் அமன் மிட்டல் இந்த மசூதியில் வழிபாடு நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இம்மசூதி திடீரென முஸ்லீம்கள் அணுக முடியாததாக மாறிவிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ், மசூதி வளாகத்தில் தொழுகை நடத்த உடனடியாக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அப்பகுதியில் போலீசைக் குவிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இம்மசூதியை ”சர்ச்சைக்குரியது” என்று கூறிய மாவட்ட ஆட்சியர், அதை நிர்வகிக்கும் பொறுப்பை வட்டாட்சியரிடம் ஒப்படைத்துவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் இடைக்காலத் தடை உத்தரவு மற்றும் அதை நிறைவேற்றுவதற்கான அவரது அதிகாரம் ஆகியவற்றை எதிர்த்து ஜும்மா மஸ்ஜித் அறக்கட்டளையால் மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜும்மா மஸ்ஜித் அறக்கட்டளை குழுவின் தற்காலிக உறுப்பினர்களில் ஒருவரான அஸ்லம், “முன்னெப்போதும் இல்லாத விதத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, மாநிலத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான இம்மசூதியை வகுப்புவாதமயமாக்குவதற்கான தொடக்கத்தைக் குறிக்கிறது” என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாண்டவ்வாடா சங்கர்ஷ் சமிதி (Pandavwada Sangharsh Samiti) என்ற பதிவு செய்யப்படாத அமைப்பு அளித்த புகாரின் பேரில் பல நூற்றாண்டுகள் பழமையான இந்த மசூதி திடீரென சர்ச்சைக்குரிய இடமாக மாற்றப்பட்டுள்ளது. புகார்தாரர் பிரசாத் மதுசூதன் தண்டவாடே, கடந்த மே மாதத்தில் ஜல்கான் மாவட்ட ஆட்சியர் அமன் மிட்டலிடம் புகார் மனுவை அளித்தார். தண்டவாடே (அவரின் பேஸ்புக் சுயவிவரத்தின்படி) ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) மற்றும் பஜ்ரங் தள் ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளார். தண்டவத்தே தனது புகாரில், இம்மசூதி ஒரு இந்து வழிபாட்டுத் தலத்தின் மீது கட்டப்பட்டது என்றும், இது சட்டவிரோதமானது என்றும், இதை மாநில அதிகாரிகள் கையகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஜும்மா மஸ்ஜித் அறக்கட்டளை இந்த இடத்தை ’சட்டவிரோதமாக’ ஆக்கிரமித்துள்ளதாகவும் புகார்தாரர் கூறியுள்ளார்.


படிக்க: மகாராஷ்டிரா: தலைவிரித்தாடும் காவி பாசிசம்!


ஜும்மா மஸ்ஜித் அறக்கட்டளை உறுப்பினர்கள் தி வயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஜூன் மாத இறுதியில் நோட்டீஸ் வரும் வரை இந்தக் கூற்றுகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர். அறக்கட்டளை குழுவின் தற்காலிக உறுப்பினரான அஸ்லம் ”குறுகிய காலத்தில், எங்கள் வழக்கை வாதாடுமாறு எங்களிடம் கோரப்பட்டது. இந்நிலையில் திடீரென, ஜூலை 11 அன்று, மாவட்ட ஆட்சியர் ஒரு தடை உத்தரவை பிறப்பித்து விட்டார்” என்று கூறினார்.

மசூதியின் அறக்கட்டளை குழுவுக்கு மட்டுமல்லாமல் வக்பு வாரியம் மற்றும் இந்தியத் தொல்லியல் துறைக்கும் (ஏ.எஸ்.ஐ) மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது ஒரு பழங்கால அமைப்பு என்ற அறக்கட்டளையின் கூற்றுகளை ஏ.எஸ்.ஐ-யும் அங்கீகரித்துள்ளது. 1986-ஆம் ஆண்டில் தொல்லியல் துறை ஆராய்ச்சியில் ஈடுபட்ட காலத்திலிருந்து, மசூதி வளாகத்திற்குள் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மசூதி காலங்காலமாக முஸ்லீம்களால் பயன்படுத்தப்பட்டு வந்த இடம்தான் என்பதைத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

வக்பு சட்டத்தை மேற்கோள் காட்டி, புகாரை விசாரிக்கும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தை எதிர்த்து வக்பு வாரியம் வழக்குத் தொடர்ந்ததுள்ளது.

வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் சொத்து பிரச்சினைகள் தொடர்பாக எழும் சர்ச்சைகளை வக்பு வாரியத்தைத் தவிர வேறு எந்தத் துறையும் விசாரிக்க முடியாது என வாரியத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி ஜுனைத் சையத் இப்பிரச்சினை குறித்துப் பதிலளிக்கையில் கூறியுள்ளார்.

வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மொயின் தாசில்தார் தி வயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ”தடை உத்தரவு பிறப்பிக்கும் மாவட்ட ஆட்சியரின் முடிவு அவரது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும், இது வக்பு தீர்ப்பாயத்தின் சட்ட அதிகார வரம்பை மீறுவதாகும் என்றும் கூறினார். இங்குச் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வதில் மாவட்ட ஆட்சியர் தலையிடலாம்; மற்றவை அனைத்தும் வக்பு வாரியத்தின் பொறுப்பு. இந்த மசூதி 2009-ஆம் ஆண்டு முதல் வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்தாக உள்ளது, அதில் எந்த குழப்பமும் இல்லை” என்று மொயின் தாசில்தார் தெளிவுபடுத்தினார். மேலும், வாரியம் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த பதிலில், சட்ட ரீதியான நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் போது வக்பு கூறியதை மாவட்ட ஆட்சியர் புறக்கணித்து விட்டதாக மொயின் தாசில்தார் குற்றம்சாட்டினார்.


படிக்க: மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!


”இடைக்கால உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்துள்ளோம்” என்று மொயின் தாசில்தார் மேலும் கூறினார். இந்த வழக்கின் விசாரணை ஜூலை 13-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அதை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இடைக்காலத் தடை உத்தரவு அடுத்த விசாரணை வரை தொடரும்.

இதற்கிடையில், மஸ்ஜித் அறக்கட்டளை பிரிட்டிஷ் இந்திய அரசாங்க காலங்களிலிருந்து அவ்வப்போது வழங்கப்பட்ட உத்தரவுகள் அடங்கிய ஆவணங்களுடன் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. ”நியாயமான விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் முன்வரவில்லை. மனுதாரரிடம் இருந்து எதையும் கேட்கும் மனநிலையில் அவர் இல்லை. மனுதாரருக்கு வாய்ப்பளிக்காமல் 11.07.2023 அன்று ஜல்கான் மாவட்ட ஆட்சியர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 மற்றும் 145-ன் கீழ் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்” என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மஸ்ஜித் அறக்கட்டளை குற்றம்சாட்டியுள்ளது.

கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று மதவெறியைத் தூண்டி அதன்மூலம் தனது செல்வாக்கை விரிவு படுத்திக்கொள்ளும் உத்தி காவி பாசிஸ்டுகளால் தொடர்ந்து கையாளப்பட்டுவரும் ஒன்றுதான். ஏற்கனவே, மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்துத்துவ கும்பல்கள் தொடர் பேரணிகளை நடத்தி வருகின்றன; அங்கு ‘பசுப் பாதுகாப்பு’ கொலைகள் அதிகரித்துள்ளன. இவை அனைத்தும் அரசு எந்திரத்தின் துணையுடன் நடந்தேறி வருகின்றன. அம்மாநிலத்தில் மத முனைவாக்கத்தை சங்கப் பரிவார கும்பல் துரிதப்படுத்துவதையே தற்போது நடைபெற்றுவரும் இந்நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க