கலவரத்திற்கு பாஜக அரசுதான் காரணம்: மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ

ஆளும் பாஜக அரசு குக்கி மக்களைத் திட்டமிட்டுத் தாக்கி வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு என்பதை மூடுதிரையாகப் பயன்படுத்தி காடுகளிலும் மலைகளிலும் இருந்து குக்கி மக்களை அகற்றும் பணியைச் செய்து வருகிறது.

1

ணிப்பூரில் மே 3-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்தக் கலவரம் தவிர்த்திருக்கப்படக்கூடியது. அரசு உடந்தையாக இருப்பதால்தான் இத்தனை நாட்களாகத் தொடர்கிறது” என்று மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ பாவோலியன்லால் ஹாக்கிப் (Paolienlal Haokip) கூறியுள்ளார். மணிப்பூர் பிரச்சினை குறித்து இந்தியா டுடே பத்திரிகையில் எழுதியுள்ள அவர் இதை வெளிப்படுத்தியுள்ளார்.

“முற்றிலும் இன-வகுப்புவாத கலவரமாகத் தொடங்கிய மணிப்பூர் வன்முறையை ’நார்கோ பயங்கரவாதிகளுக்கு’ (போதைப்பொருள் கும்பல்களுக்கு) எதிரான அரசின் போராக’ சித்தரிக்க முதல்வர் முயற்சி செய்தார். இதன்மூலம் இந்தக் கலவரத்துக்கு அரசும் உடந்தையாக இருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது” என்று ஹாவோகிப் தனது இந்தியா டுடே கட்டுரையில் எழுதியுள்ளார்.

”இம்பால் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலையடிவாரத்தில் உள்ள குக்கி – ஜோ குடியிருப்புகளைத் தாக்கி எரிப்பதில் தீவிரமாகச் செயல்படும் மைதேயி வன்முறை குழுக்களுக்கு உதவுவதற்காக அரசுப் படைகளைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தவே ’நார்கோ பயங்கரவாதிகள்’ கதையாடல் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை” என்று பாவோலியன்லால் ஹாக்கிப் எழுதியுள்ளார்.

”இந்த இன வன்முறை, பழங்குடி குக்கி – சோ மக்களால் இத்தகைய கடுமையான அநீதிகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராகக் கருதப்படுகிறது; அதே நேரத்தில் மைதேயி பிரிவினர் இதைப் பழங்குடி நிலத்தை உரிமை கோருவதற்கான போராகப் பார்க்கிறார்கள்” என்று ஹவோகிப் மேலும் கூறியுள்ளார்.


படிக்க: மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தான் குற்றவாளிகள்!


“மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மைதேயி லீபுன் மற்றும் ஆரம்பாய் தெங்கோல் போன்ற பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ளார். இந்தக் குழுக்கள் குக்கி இன மக்களைத் துடைத்தெறிவதற்காகச் செயல்படும் குழுக்கள். ஒரு பக்கச்சார்பான அரசாங்கம் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும். மணிப்பூரில் இதுபோன்ற பாரபட்சம் எப்போதும் ஓரளவு இருந்தபோதிலும், தற்போதைய முதல்வரின் கீழ் அது அதிகரித்தது” என்றும் ஹாக்கிப் எழுதியுள்ளார்.

முன்னதாக, கடந்த மே மாதம் ஹாக்கிப் உள்ளிட்ட மணிப்பூரின் 10 பழங்குடி எம்.எல்.ஏ-கள் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்கிற்குக் கடிதம் ஒன்றை எழுதினர். கடிதம் எழுதிய 10 பேரில் 7 பேர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள். அதில் அவர்கள், பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக இருக்கும் மைதேயி சமூகத்தால் இந்த வன்முறை நிகழ்த்தப்படுவதாகவும், ஆளும் மாநில பா.ஜ.க அரசாங்கத்தால் மறைமுகமாக ஆதரிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

அந்தக் கடிதத்தில் அவர்கள் குக்கி மக்கள் பெரும்பான்மை வகிக்கும் மாவட்டங்களுக்குத் தனி நிர்வாகத்திற்கான உரிமை வழங்கப்படவேண்டும் என்று கோரியிருந்தனர். அக்கோரிக்கையை நிராகரித்த முதல்வர் பிரேன் சிங், ”மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும்” என்று கூறியிருந்தார்.


படிக்க: மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!


நார்கோ பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளதாகக் கூறும் முதல்வர் பிரேன் சிங்கின் யோக்கியதையை முன்னாள் மணிப்பூர் போலீசு அதிகாரியான தௌனோஜம் பிருந்தாவின் (Thounaojam Brinda) நீதிமன்ற ஆவணம் அம்பலப்படுத்துகிறது. 2020-ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டிருந்த போதைப்பொருள் கும்பலின் தலைவரைக் (drug lord) காவலில் இருந்து விடுவிக்க பிரேன் சிங்கிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவர் அந்த ஆவணத்தில் கூறியிருந்தார். மேலும், பிரேன் சிங் அரசு தனக்கு வழங்கிய வீரதீர செயலுக்கான மாநில போலீஸ் பதக்கத்தை அவர் திருப்பி அளித்துவிட்டார்.

ஆளும் பாஜக அரசு குக்கி மக்களைத் திட்டமிட்டுத் தாக்கி வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு என்பதை மூடுதிரையாகப் பயன்படுத்தி காடுகளிலும் மலைகளிலும் இருந்து குக்கி மக்களை அகற்றும் பணியைச் செய்து வருகிறது. இதற்கான கருவியாக குக்கி மற்றும் மைதேயி மக்களுக்கு இடையிலான முரண்பாட்டை பயன்படுத்திக் கொண்டது. மேலும், குக்கி மக்களைக் கொன்று குவிக்கும் மைதேயி லீபுன் மற்றும் ஆரம்பாய் தெங்கோல் ஆகிய பயங்கரவாதக் குழுக்கள் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொண்டவை. இதன்மூலம், மணிப்பூர் கலவரம் என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலால்தான் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது.

மணிப்பூரில் ஆட்சி புரியும் பாசிச பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரே கலவரத்திற்கு பா.ஜ.க தான் காரணம் என்று கூறியிருக்கிறார். இனிமேலும் இந்த காவி கும்பலால் தனது கைகளில் இரத்தம் படிந்திருப்பதை மறைக்க முடியாது.


பொம்மி

1 மறுமொழி

  1. The whole episode is done after 355 declaration and the central govt has taken all the powers from state in the last week of April and all these tragic things happened from 3rd may and the officials and cm were mere spectate to the incident All these things has taken place to help Adani who hS an eye on these fertile land of manipur Even till yesterday things are at stand still.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க