காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 13 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகளை அழித்து “பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம்” என்ற விமான நிலையத்தை கட்டியமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தி.மு.க அரசு. இந்த விமான நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று தி.மு.க அரசு வாதிடுகிறது.
ஆனால், ‘வளர்ச்சி’ என்ற பெயரில் தங்கள் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓராண்டுக்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள், பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராம மக்கள்.
படிக்க : ப்ளீஸ் செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது சொல்லிவிடு ! வந்தே மாதரம் | கவிதை
கடந்த ஆகஸ்ட் 15, பரந்தூர் மக்களின் 386 வது போராட்ட நாள். அன்று, நாட்டின் 77வது போலி சுதந்திர தினத்தை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர், பரந்தூருக்கு அருகாமையிலுள்ள ஏகனாபுரம் கிராம மக்கள்.
அம்மக்கள், ஏகனாபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற போலி சுதந்திர தின விழாவிற்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்துள்ளனர். கிராமம் முழுவதும் தெருக்களில் கருப்புக் கொடிகளில் தோரணங்களை கட்டியும், வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றியும் உள்ளனர். மேலும், கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்துள்ளனர்.
தொடர்ந்து ஆறு முறை கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை என்கின்றனர், ஏகனாபுரம் மக்கள். இதனால் அதிகாரிகள் மட்டும் கூடி கிராம சபைக் கூட்டத்தை நடத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி போராட்டத்தைக் கைவிடுமாறு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போலி சுதந்திர தினத்தை புறக்கணித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
படிக்க : ஜெகதீஸ்வரனை மீண்டும் கொல்லும் ஊடகங்கள் !
‘வளர்ச்சி’ என்ற பெயரில் விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள், நீர்நிலைகள் என தங்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் அழித்து கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக வேலை செய்யும் அரசு உள்ள நாட்டில் தங்களை போன்ற உழைக்கும் மக்களுக்கு என்ன சுதந்திரம் உள்ளது என்பதை போலி சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளதன் மூலம் உணர்த்தியுள்ளனர் ஏகனாபுரம் கிராம மக்கள்.
குயிலி