கவிழ்ந்து வரும் தாமரைக்கு சவக்குழி வெட்டுவோம்!

பா.ஜ.க.வின் காவி-கார்ப்பரேட் நடவடிக்கைகளும் மோடியின் பிம்பமும் மக்கள் போராட்டங்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, பா.ஜ.க. தோல்வி முகத்திற்கு சென்றுள்ள இந்த பின்னணியில்தான், காங்கிரஸ் தன்னை ஒரு மாற்றுத் தலைமையாக மீள்கட்டமைப்பு செய்துவருகிறது.

வாசகர் கேள்வி:

டந்த ஜூலை மாத இதழில், “பாசிசக் கும்பலின் தோல்விமுகமும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்கப் போராட்டமும்” என்ற தலைப்பிலான கட்டுரையின் முதல் பாகத்தில், “தோல்வி முகம்” என்று அழைத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. “வளர்ச்சி” என்ற முகமூடி கழன்றுபோனதும், பா.ஜ.க. தான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றத் தவறியதும்தான் “தோல்வி முகம்” என்று விவரிக்கப்படுகிறதா? அப்படியானால், 2019-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டு கால ஆட்சியிலேயே பா.ஜ.க. தோல்வி முகத்தை அடைந்திருந்ததா? எனினும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் வெற்றிபெற்றது எப்படி? – சற்று விளக்கவும்!

000

ளர்ச்சி நாயகன் மோடி”, “குஜராத் மாடல் வளர்ச்சி”, “கருப்புப் பணத்தை மீட்போம்” என்றெல்லாம் 2014 தேர்தலின்போது முழங்கியது பா.ஜ.க கும்பல். இவை அனைத்தும் தோல்வியை தழுவிவிட்டன. ஆனால், அந்த பொருளில் பா.ஜ.க. தோல்விமுகம் என்று நாம் குறிப்பிடவில்லை. தான் முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலேயே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அரசு வெற்றி பெற முடிந்தது.

பா.ஜ.க.விற்கு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்ற உணர்வெல்லாம் கிடையாது. மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் ‘இலவச அரசியலாக’ வரையறுப்பது, அதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றுவது தவறு என்ற கண்ணோட்டம் பா.ஜ.க.வின் அரசியல் அடிப்படைகளில் ஒன்றாகும்.

கருப்புப் பணத்தில் திளைப்பது அதன் இரத்தத்தில் ஊறிப்போன கொள்கையாகும். வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகச் சொன்ன பா.ஜ.க, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதி வாங்குவதற்கு ஏற்ப தேர்தல் பத்திரங்கள் முறையைத் திருத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை கட்சிக்கு நன்கொடையாகச் சுருட்டிக்கொண்டது. (2018-2022 ஆண்டுகளில் மொத்த வரவில் 9,208 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்த தொகையில், பா.ஜ.க. மட்டும் 5,270 கோடி ரூபாய் – 57 சதவிகிதம் – நன்கொடையாகப் பெற்றுள்ளது)


படிக்க: மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ட்விட்டரில் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கிகள்!


நீரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா போன்ற கார்ப்பரேட் கருப்புப் பணக் கொள்ளையர்களை இந்தியாவில் இருந்து பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து அவர்களைப் பாதுகாத்தது மோடி அரசு. இதனால், மக்கள் மத்தியில் மோடி அரசின் உண்மை முகம் கிழியத் தொடங்கியது.

ஆகையால், ஒரு பாசிசக் கட்சிக்கே உரிய வகையில் பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராகவே அது செயல்பட்டு வருகிறது. மற்றொருபுறம், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்துக் கார்ப்பரேட் வர்க்கங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் சேவை செய்து வருகிறது; மக்களை அடக்கி ஒடுக்கி வருகிறது; சிறுபான்மையினரை இரண்டாம்தரக் குடிமக்களாக்கி வருகிறது. இதுபோன்ற பா.ஜ.க.வின் பாசிசப் போக்குகள் 2014-இல் அது ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே தொடரும் போக்காகும்.

மேலே குறிப்பிட்டுள்ள பா.ஜ.க.வின் செயல்பாடுகள் எல்லாம் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அம்பலப்படுத்தப்பட்டவைதான். இருப்பினும் பாசிச பா.ஜ.க. அப்போது தோல்வி முகத்தை அடையவில்லை; 2019-இல் பா.ஜ.க. கூட்டணி அதுவே எதிர்ப்பார்க்காத அளவிற்கு அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

அப்படியெனில், 2019-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். பரிவாரக் கும்பல்கள் மற்றும் பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தவில்லை என்று பொருளா? பா.ஜ.க.வின் ஐந்தாண்டு காலத்தில், மக்கள் நல்வாழ்வு பெற்றார்கள் என்று கருதிவிட முடியுமா? இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும்.

பா.ஜ.க.வின் இந்த ஆட்சிக் காலத்தில் பசு குண்டர்களின் கும்பல் படுகொலை வன்முறைகளுக்கு பெஹ்லூக்கான், அக்லக் போன்றவர்களே சாட்சி; முற்போக்காளர்களை காவிக் குண்டர்களை வைத்துக் கொல்வதற்கு கௌரி லங்கேஷ் ஒரு சாட்சி; உயர்கல்வியில் இருந்து தலித் மாணவர்கள் விரட்டியடிக்கப்படும் போக்கிற்கு ரோகித் வெமுலா தற்கொலை ஒரு சாட்சி; நீட் தேர்வு ஏழை மாணவர்களை வஞ்சிக்கிறது என்பதற்கு அனிதா ஒரு சாட்சி; கார்ப்பரேட் திட்டங்களை எதிர்க்கும் மக்களுக்கு துப்பாக்கிச்சூடே பதில் என்பதற்கு ஸ்டெர்லைட் ஒரு சாட்சி; மோடியின் டிஜிட்டல்மயமாக்கத்திற்கு பணமதிப்பழிப்பு படுகொலைகளே சாட்சி.

இவை மட்டுமா, ஜி.எஸ்.டி., பொதுத்துறைகள் தாரைவார்ப்பு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு மசோதா, பாரத்மாலா, சாகர்மாலா என மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடி கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்த திட்டங்கள்தான் எத்தனை எத்தனை.

2017-இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் மோடி அரசை பணியவைத்தது. ஜி.எஸ்.டி.க்கு எதிராக மோடியின் குஜராத்திலேயே 10 இலட்சத்திற்கும் மேலான வியாபாரிகள், வணிகர்கள், சிறுதொழில்முனைவோர் மிகப்பெரும் போராட்டங்களில் இறங்கினர். இப்படி மோடிக்கும் பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கும் எதிராக பல்வேறு பிரிவு மக்களிடம் அதிருப்திகளும் எதிர்ப்புகளும் கிளம்ப ஆரம்பித்தன.

2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆட்டோமொபைல் துறையில் நெருக்கடி ஏற்பட்டு பெருமளவில் பொருளாதார மந்தம் நாட்டை தாக்கியது.

ரஃபேல் ஊழல் மோடி ஆட்சியின் உத்தம வேடத்தை அம்பலப்படுத்தியது. பா.ஜ.க.வின் மூத்தத் தலைவர்களாக இருந்த யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி ஆகியோர் பிரஷாந்த் பூசனுடன் இணைந்து இந்த ஊழலை முறையாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.


படிக்க: புதிய நாடாளுமன்ற கட்டடம்: இந்து ராஷ்டிரத்தின் மடம்!


உச்சபட்சமாக, பா.ஜ.க.விற்கு எதிரான மக்களின் உணர்வுகளை மடைமாற்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ்.யிலேயே மோடிக்கு எதிராக கட்காரி அல்லது ஆதித்யநாத்தை முன்னிறுத்துவதற்கான முயற்சிகளும் தொடங்கியிருந்தன. ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குக்கூட அடுத்து பா.ஜ.க. ஆட்சி அமையும் என்ற உறுதியான நம்பிக்கை அன்று இல்லை.

இருப்பினும், 2019-இல் மோடி தலைமையில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையான தொகுதிகளை வென்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது.

ஊரறிந்த திருடனுக்கு வெற்றி, எப்படி?

மக்களிடம் மிகப்பெரும் அளவுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் அமைந்தது, ஏன்?

பா.ஜ.க.வின் தேர்தல் முறைகேடுகள், மின்னணு வாக்குப்பதிவில் தில்லுமுல்லு செய்தது ஆகியவைதான் இதற்கு காரணம் என்று சிலர் தெரிவித்தனர். இது உண்மையல்ல. பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களில் குறிப்பிட்ட அளவு முறைகேடுகள் நடந்திருந்தாலும், தென்மாநிலங்களில் பா.ஜ.க. பின்னடைவை சந்தித்தது எப்படி நடந்தது என்று இவர்கள் விளக்குவதில்லை. அதிலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஒரு சீட்டு மட்டுமே பெற முடிந்தது என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும்.

தேர்தல் கமிஷன் பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்பட்டது மட்டுமே பா.ஜ.க.வின் வெற்றிக்கு காரணம் அல்ல. தேர்தல் வெற்றியை அது மட்டுமே தீர்மானித்துவிடாது. இவற்றை எல்லாம் விட முக்கியமான காரணத்தை நாம் பரிசீலிக்க வேண்டும். அதுதான் “அரசியல் களம்”.

பா.ஜ.க.வை தொடர்ந்து தேர்தல் களத்தில் அம்பலப்படுத்துவது பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு அவசியமானது, அடிப்படையானது எனினும், அது பா.ஜ.க.வின் தோல்வியைத் தீர்மானிக்கும் காரணி அல்ல. இவ்வளவு இருந்தாலும் அரசியல் ரீதியாக பா.ஜ.க.விற்கு தோல்விமுகம் உருவாகவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஒரு ஒற்றுமை உருவாகாமல் இருந்தது என்று பலரும் குறிப்பிடுவது அதில் ஒரு அம்சமாகும். அவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஒரு ஒற்றுமை உருவாகியிருந்தாலும், அதனால் மட்டுமே பா.ஜ.க.வை தேர்தலில் தோற்கடித்திருக்க முடியாது.

வெற்றிமுகத்தில் பா.ஜ.க. இருப்பதற்கு அது தொடர்ச்சியாக ஆகப் பெரும்பான்மை மக்களிடம் தனது நற்பெயரை தக்கவைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. துருக்கியில் எர்டோகனை எடுத்துக் கொள்ளலாம். ஆகப் பெரும்பான்மை மக்களிடம் அவர் நற்பெயரைப் பெற்றிருக்கவில்லை. ஆனால், அவர் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் டிரம்ப், பிரேசிலின் பொல்சனாரோ போன்றவர்களும் எர்டோகன் போன்றவர்களே. ஆனால், அவர்கள் தோல்வியடைந்தனர்.

தேர்தலில் எதிர்க்கட்சிகள் தங்களை ஒரு மாற்றாக முன்னிறுத்திக் கொள்வது, அத்துடன், ஆளும்கட்சி தோல்விமுகம் அடைந்திருப்பது ஆகிய இரண்டும் எந்த அளவிற்கு பொருத்தமாக அமைகிறதோ, அப்போதுதான் ஆளுங்கட்சியினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீசியடிக்கப்படுகின்றனர்.

ஆகப் பெரும்பான்மை மக்களிடம் பா.ஜ.க. மீது அதிருப்தி வளர்ந்துவந்திருந்தாலும், “வலிமையான தலைவர்”, “தேசத்தின் பாதுகாவலர்” என்று மோடி மீது கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் சுக்குநூறாக உடைக்கப்படவில்லை. புல்வாமா தாக்குதல், அதைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசு மேற்கொண்ட ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ ஆகியவை பெரும்பான்மை மக்களின் தேசிய உணர்வைத் தூண்டியது. மற்றொருபக்கம், பா.ஜ.க.வின் மீது மக்களுக்கு வளர்ந்துவந்த அதிருப்தியை ஆழப்படுத்தி அதை தனது வெற்றிமுகமாக்கிக் கொள்ளும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியோ அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணியோ தயாராக இல்லை. இவையே பா.ஜ.க. 2019 தேர்தலில் மீண்டும் வெல்லமுடிந்ததற்கான காரணங்களாகும்.

“மோடி அலைக்கு” சவால் எழுந்த காலம்

2019 தேர்தலை பா.ஜ.க. வெற்றிமுகத்தோடு எதிர்க்கொண்டது. இந்த வெற்றிமுகத்தோடு தனது இந்துத்துவ, கார்ப்பரேட் திட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. 2019 ஜூன் மாதத்தில் முத்தலாக் தடை விதிப்பு; ஆகஸ்டு மாதத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, செப்டம்பர் மாதத்தில் பரூக் அப்துல்லா உள்ளிட்ட காஷ்மீர் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வீட்டுச் சிறை; நவம்பர் மாதத்தில் பாபர் மசூதி நிலம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது – என அடுத்தடுத்த பல நடவடிக்கைகள் மூலமாக ஏறித்தாக்கி வந்தது.

இருப்பினும், அதுவரை மக்கள் போராட்டங்கள் தொடங்கவில்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டம் மோடி அரசுக்கு நேரடியாக சவால்விட்ட போராட்டமாயினும் அது தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மட்டுமே பிரதிபலித்தது. நாடு தழுவியதொரு மக்கள் எதிர்ப்பு கிளம்பவில்லை. இந்நிலையில்தான், 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தேசியக் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதுவரை பெரிய அளவிலான எதிர்ப்புகள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்த பா.ஜ.க. அரசின் திட்டங்களுக்கு எதிராக வெகுமக்கள் போராட்டங்கள் தொடங்கிவிட்டன.


படிக்க: அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!


நாடெங்கும் இஸ்லாமியப் பெண்கள் ஷாகின்பாக் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டங்களுக்கு மக்களின் பல்வேறு பிரிவினர் மத்தியில் இருந்து ஆதரவும் கிடைக்கத் தொடங்கியது. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான இப்போராட்டங்கள் வெற்றிமுகத்தில் இருந்த பா.ஜ.க.வின் வேகத்தை தடுத்து நிறுத்திய நிகழ்வாகும்.

டெல்லிச் சலோ விவசாயிகள் எழுச்சி + ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வி = பா.ஜ.க தோல்வி முகத்தின் தொடக்கம்

பா.ஜ.க.வோ ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத கும்பலோ தமது தோல்விமுகத்தை உணரவில்லை. அதுவரை கும்பல் வன்முறைகளில் ஈடுபட்டு இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுத்துவந்த இந்த கும்பல்கள், நேரடியாக ஜனநாயகமாகப் போராடிய மாணவர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கத் தொடங்கியது. 2020 ஜனவரி மாதத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகுந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை அரங்கேற்றியது. இது நாடு முழுவதும் இருக்கும் மாணவர்களைப் போராட்டக் களத்திற்கு இழுத்துவந்தது.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் டெல்லி மாநிலத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது முறையாக வெற்றிபெற்று, பா.ஜ.க.விற்கு தோல்வியைக் கொடுத்தது.

சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர்.க்கு எதிராக அமைதியாகப் போராடிய மக்கள் மீது மார்ச் மாதத்தில் யோகி ஆதித்யநாத் கும்பல் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. டெல்லியில், போலீசைக் கொண்டு பெரும் கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. டெல்லியில் மட்டும் 53 அப்பாவி மக்கள் இந்துத்துவக் கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டும், அடித்தும் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 25-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது ஆதித்யநாத் அரசு. பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கெதிராக எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். கொரோனா வைரஸ் பரவும் வரை தனது தேர்தல் ஆதாயத்திற்காக அதனைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல், திடீர் ஊரடங்கை அறிவித்து பல இலட்சக்கணக்கான மக்களை நடைப்பிணங்களாக்கியது, மோடி அரசு. கோடிக்கணக்கான மக்களைப் பட்டினிக் கொடுமைக்குத் தள்ளியது. இந்த திடீர் ஊரடங்கால் சொல்லொணா துயரத்திற்கு உள்ளான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆங்காங்கே கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபடத்தொடங்கினர். அதன்பிறகுதான் மோடி அரசு இரயில் பயணத்திற்கு ஏற்பாடு செய்தது.

இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்திலும் இஸ்லாமிய மக்களின் மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் அத்வானி உள்ளிட்ட அனைத்து இந்துமதவெறியர்களும் விடுவிக்கப்பட்டனர். ஜூலை மாதத்தில் புதிய கல்விக் கொள்கை சட்டமாக்கப்பட்டது. இராமர் கோவிலைக் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார் மோடி. பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராடும் இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்கும் “புல்டோசர் ராஜ்” என்ற பயங்கரவாதத்தை உத்தரப் பிரதேசத்தில் ஆதித்யநாத் கும்பல் அரங்கேற்றத் தொடங்கியது. இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். கும்பல் பல்வேறு வகைகளில் தமது இந்துத்துவத் திட்டங்களை நிறைவேற்றி வந்தாலும், அவ்வப்போது சில வெற்றிகளைப் பெற்றாலும் பா.ஜ.க. கும்பலின் தோல்விமுகத்தை இவை தடுக்கவில்லை. பா.ஜ.க.விற்கு எதிரான மக்களின் போராட்ட உணர்வுக்கு உரமூட்டின.

இந்த நிலையில், அந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடமாநிலங்களில் குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் விவசாயிகளிடம் எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. இதன் உச்சகட்டமாக, அந்த ஆண்டு இறுதியில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் “டெல்லி சலோ” முற்றுகைப் போராட்டம் தொடங்கியது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் விவசாயிகளும் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகப் பங்கேற்றனர். நாடு முழுவதிலும் இருக்கும் பல்வேறு விவசாயிகள், பொதுமக்கள் இந்தப் போராட்டங்களுக்கு தங்களது ஆதரவைக் கொடுத்துவந்தனர். உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது.

பல்வேறு சதிகள், அடக்குமுறைகளை முறியடித்து, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது இன்னுயிரை ஈந்து, ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் நடத்திய இந்தப் போராட்டம் சட்டரீதியான வெற்றியையும் பெற்றது. பாசிச மோடி அரசைப் பணியவைத்த விவசாயிகளின் இந்த வீரஞ்செறிந்தப் போராட்டம்தான் பா.ஜ.க.வை தோல்வி முகத்தை நோக்கித் திருப்பியது; பாசிசக் கும்பலுக்கு ஒரு வலுவான அடியைக் கொடுத்தது.

இந்தப் போராட்டம் நடந்த இதே காலகட்டத்தில் தொடர்ந்து மோடி அரசின் முகம் கிழியத் தொடங்கியது. இரண்டாவது கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆக்ஸிஜன் இல்லாமல் கொத்துக்கொத்தாக வடமாநிலங்களில் மக்கள் இறந்த நிகழ்வுகள் உலகத்தையே அதிர வைத்தன. இவையெல்லாம், உத்தரப் பிரதேசத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், அதனைத் தொடர்ந்து நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் மண்ணைக்கவ்வின. இது, பா.ஜ.க.வின் தோல்விமுகத்தைத் தீவிரப்படுத்தியது. மற்றொருபுறம் எதிர்க்கட்சிகளின் பலத்தை அதிகரிக்கச் செய்தது.

“வலிமையான தலைவரில்”இருந்து “தோல்வியுற்ற பிரதமராக”…

அன்று தொடங்கிய தோல்விமுகம் தொடர்ந்து பா.ஜ.க.விற்கு தோல்விகளாகவே அமைந்து வருகின்றன. இச்சூழலில், காங்கிரசு தன்னை வலுப்படுத்திக் கொள்ள பாரத்ஜோடா யாத்திரை நடத்தியது; பிகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகி, ஜே.டி.எஸ். கூட்டணியில் இணைந்ததன் மூலம் பிகாரில் பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கு வந்தது போன்றவையெல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது.

இத்துடன், அண்மையில் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்வி மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. பாங்கு ஓதத் தடை, ஹிஜாப்புக்குத் தடை, ஹலால் உணவுகளுக்குத் தடை, லவ் ஜிகாத் எதிர்ப்பு, பசுப்பாதுகாப்பு குண்டர்களின் கும்பல் வன்முறைகள் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் சிறுபான்மை மக்களை ஒடுக்கியது சங்கப் பரிவாரக் கும்பல். ஆனால், அவை அனைத்தும் பா.ஜ.க.விற்கு எதிராக திரும்பியதை கர்நாடகத்தில் பார்த்தோம்.

தொடக்கத்தில், என்.ஐ.ஏ.வின் சோதனை நடவடிக்கைகளைக் கண்டு மக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சியானது இன்று இல்லை. என்.ஐ.ஏ. என்பது மோடி அரசின் ஏவல்படை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். பி.எஃப்.ஐ மீதான தடைக்கு எதிராக நாடுமுழுவதும் நடந்த போராட்டங்கள், மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை எள்ளி நகையாடின.

தனது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலின் உயிர்நாடியான நடவடிக்கைகளில் ஒன்றான, பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக சொன்னவுடன், பா.ஜ.க.விற்கு எதிராக இந்துக்களில் பல பிரிவினரே போர்க்கொடி தூக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், பொதுசிவில் சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமலே இருந்துவிட்டது மோடி-அமித்ஷா கும்பல்.

குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்த டெல்லிச் சலோ விவசாயிகளின் போராட்டம் ஆகியவற்றுக்கு அடுத்து மணிப்பூரில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் குக்கி பழங்குடியினர் மீது ஏவிவரும் தாக்குதலுக்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெறும் போராட்டங்கள் முக்கியமானவை.

தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் திரௌபதி முர்முவை பா.ஜ.க. வேட்பாளராக அறிவித்ததற்குப் பின், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பழங்குடி மக்களின் கணிசமான ஓட்டுக்களை வேட்டையாடும் திட்டம் இருந்தது. மணிப்பூர் வன்முறைக்கெதிரான பழங்குடி மக்களின் போராட்டங்கள் அக்கும்பலின் கனவிற்கு தீ வைத்துள்ளன. குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பசுவளைய மாநிலங்களில் பழங்குடி அமைப்புகளும் விவசாயிகள், தொழிலாளர் அமைப்புகளும் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்துப் போராட்டங்களை அறிவித்துள்ளன.

மணிப்பூரில் மேய்தி இனவெறியர்களால் குக்கிகள் மீது ஏவப்பட்ட வன்முறை மிசோரமில் சிறுபான்மையாக உள்ள மேய்திகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மிசோரமின் பழங்குடியின மக்கள் மத்தியில் வேலைசெய்யக்கூடிய சில போராளிக்குழுக்கள் மேய்திகளுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பல மேய்திகள் மாநிலத்தைவிட்டு புலம்பெயர்ந்துவருகிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மிசோரம் சட்டமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ள இருப்பதால் அங்குள்ள பா.ஜ.க. கூட்டணி அரசாங்கத்துக்கு இச்சூழல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் தனது கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவருவதை மோடி அரசு வாய்பொத்திக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறது. அண்மையில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று விளையாட்டு வீரர்களுக்கு சீனா ஸ்டேபிள் விசா வழங்கியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் சுமார் 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா தனது பகுதி என்று உரிமை கொண்டாடுகிறது. இப்பகுதியை “ஜாங்னான்” என்று அழைக்கிறது. ஆகவேதான் அருணாச்சலப் பிரதேசத்தின் இந்தியாவின் இறையாண்மையை மறுதலிக்கும்வகையில் ஸ்டேபிள் விசா வழங்கிவருகிறது.

இந்தியாவின் நிலம் சீனாவிடம் பறிபோய்க் கொண்டிருக்கும்போது மோடி அரசு வேடிக்கைப் பார்க்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை பா.ஜ.க.வால் எதிர்க்கொள்ளமுடியவில்லை.

அருணாச்சலப் பிரதேசம் மட்டுமின்றி, மணிப்பூர் வன்முறை, அதிகரிக்கும் விலைவாசி உயர்வு, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி என “எதற்கும் வாய்திறக்காத பிரதமர்” என்று சமூக ஊடகங்களும் பத்திரிகைகளும் கடுமையாக விமர்சிக்கின்றன. “கல்லுளி மங்கன்”, “வெளிநாடுகளிலேயே கிடையாய் கிடப்பவர்” என மன்மோகன் சிங் மீதும், ராகுல், சோனியா மீதும் பா.ஜ.க.வினர் வைத்த விமர்சனங்கள் இன்று அப்படியே மோடிமீது எழுப்பப்படுகின்றன. 2012-ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கை “செயல்திறனற்றவர் (underachiever) என்று குறிப்பிட்டு டைம் பத்திரிகை அட்டைப்படம் வெளியிட்டது. இன்று மோடிக்கும் அதேநிலைதான். “தோல்வியுற்ற பிரதமர்” (failed Prime Minister) என்ற முழக்கம் மோடியை முன்வைத்து அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பிரபலமாகிவருகிறது.

2019-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டுகால ஆட்சியிலேயே மோடியின் வளர்ச்சி முகம் கழற்றி வீசப்பட்ட நிலையில், 2019 தேர்தலில் பா.ஜ.க.விற்கு கைகொடுத்த நாட்டின் ஒரே “செயல்திறனுள்ள தலைவர்”, “வலிமையான தலைவர்” போன்ற பிம்பங்களும் முடிவுக்கு வந்துவிட்டன என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

000

பா.ஜ.க.வின் காவி-கார்ப்பரேட் நடவடிக்கைகளும் மோடியின் பிம்பமும் மக்கள் போராட்டங்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, பா.ஜ.க. தோல்வி முகத்திற்கு சென்றுள்ள இந்த பின்னணியில்தான், காங்கிரஸ் தன்னை ஒரு மாற்றுத் தலைமையாக மீள்கட்டமைப்பு செய்துவருகிறது. ‘பப்பு’ என்று பா.ஜ.க. கும்பலால் கேலிசெய்யப்பட்ட ராகுலை ஒரு தலைவராக தூக்கிநிறுத்தும் முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. “காங்கிரசு இல்லாத இந்தியா” என்று சொல்லி இந்த 9 ஆண்டுகளில் பல்வேறு பாசிச நடவடிக்கைகளை அரங்கேற்றியது பா.ஜ.க. எதற்கெடுத்தாலும் நேரு குடும்பம்தான் நாட்டை கெடுத்தது என்று சொல்லியது. ஆனால், இன்று, காங்கிரசுடன் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கும் நிலைமை உருவாகிவிட்டது.

பா.ஜ.க. கும்பலுக்கு இது அரசியல் ரீதியான தோல்விமுகம். இனி இதை எந்த மூடுதிரையிட்டும் மறைக்க முடியாது.

அதேவேளையில், பா.ஜ.க.விற்கு அமைப்பு ரீதியான பலம் குறைந்துவிடவில்லை. அரசின் பல்வேறு மட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் அரங்கேறி உள்ளது. காவி-கார்ப்பரேட் பாசிச நோக்கங்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள், சட்டங்கள், விதிமுறைகள், மரபுகள் எல்லாம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது பாசிசம் மீண்டெழுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்குகின்றன.

மேலும், அரசியல் ரீதியான தோல்விமுகத்தை பா.ஜ.க. ஒரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வெற்றிமுகமாக மாற்றிக் கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஏனெனில் ஊழல், பிழைப்புவாதம், கோஷ்டி சண்டை, கார்ப்பரேட் சேவை எதிலும் பிற கட்சிகள் பா.ஜ.க.விற்கு சளைத்தவையல்ல.


மகேஷ்

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க