25.08.23

BNYS மோசடி: நீட் எழுதாமல் டாக்டராகும் வித்தை!

தனியார்அதிகார வர்க்கத்தின் கூட்டுக் களவாணித்தனத்தை
அம்பலப்படுத்தும் பு.மா..மு!

BNYS எனப்படும் இயற்கை மற்றும் யோகா (மருத்துவ) பட்டப் படிப்பு கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR), இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம், யோகா மற்றும் நேச்சுரோபதிக்கான மத்திய ஆணையம், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் உள்ளிட்ட யாரும் ஒரு மருத்துவப் பட்டப் படிப்பாக இதுவரை அங்கீகரிக்கவில்லை. அதாவது, BNYS என்பது சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மருத்துவ முறைகளுக்கான BSMS, BHMS, BAMS, BUMS பட்டப் படிப்புகளைப் போன்று அங்கீகரிப்பட்ட இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பு அல்ல.

ஆனால், தமிழ்நாட்டிலுள்ள சில அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களுக்குள் ஒரு கள்ளக்கூட்டை உருவாக்கிக்கொண்டு, இந்த BNYS படிப்பை போலியாக உருவாக்கி, இரண்டு அரசு கல்லூரிகளிலும் 17 தனியார் கல்லூரிகளிலும் கற்பித்து வருகின்றனர். இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 1,700-க்கு மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி,  பலநூறு கோடி ரூபாய்களை கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடித்து வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் 80-க்கு மேற்பட்ட அரசு  மற்றும் தனியார் கல்லூரிகள் இப்படிப்பை பயிற்றுவித்து வருகின்றன.

குறிப்பாக, அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்ற பிரச்சனை இருக்கும் போது, இந்தப் படிப்புக்கு மட்டும் நீட் தேவையில்லை என்றும், நீட்டில் தோல்வியடைந்த மாணவர்களே இந்த படிப்பில் சேருங்கள் என்றும் இவர்கள் விளம்பரம் செய்தார்கள். இதைக் கவனித்த போது தான், இந்த படிப்புக்கு ஒன்றிய அரசின் அங்கீகாரம் இல்லை என்பதும், இவர்களது ஏமாற்று வேலையும் நமக்குத் தெரியத் தொடங்கியது.


படிக்க: நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!


BNYS அடிப்படையில் மருத்துவப்படிப்பு தான் என்றால் நீட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அல்லது இதற்கு தந்துள்ளது போல அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் நீட்டிலிருந்து விலக்கு தர வேண்டும். மாறாக எதற்காக இந்த நாடகத்தை ஒன்றிய – மாநில அரசு அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்? யோகா மற்றும் இயற்கை மருத்துவம் என்ற பெயரில் தமது இந்துத்துவ சித்தாந்தத்தைப் புகுத்தி, நாடு முழுவதும் பரப்ப முடியும் என்பதற்காகத்தான் இந்த நீட் விலக்கு நாடகமா என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழகத்திலுள்ள இவ்வகை கல்லூரி உரிமையாளர்கள் பலரும் பாஜக-வுடன் நெருக்கம் காட்டி வருவதும், அதன் மூலம் தமது தகிடு தத்தங்களை மறைத்துக் கொள்வதும் நடந்து வருகின்றன.

மூன்று மாணவிகளின் உயிரைப் பறித்த கள்ளக்குறிச்சி SVS கல்லூரியும் இதே இயற்கை மற்றும் யோகா கல்லூரி தான். அந்தக் கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினையை, தனிப்பட்ட ஒரு கல்லூரியின் பிரச்சினை என்பதாகச் சுருக்கியும், அங்குப் பயின்ற மாணவர்களை அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றியும் தற்காலிகமாகப் பிரச்சினையை அமுக்கியது தமிழ்நாடு அரசு.

இந்தக் கல்லூரி துவக்கம் முதலே செய்த மோசடிகளையும் அதற்குத் துணை நின்ற அதிகார வர்க்கத்தையும் புதிய ஜனநாயகம் இதழிலும், வினவு தளத்திலும் ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளோம். இப்பிரச்சினை தொடர்பாக பு.மா.இ.மு சார்பில் தொடர்ந்து போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். ஆனால், அன்று அங்கீகாரம் இல்லாத கல்லூரி என்று சீல் வைக்கப்பட்ட SVS கல்லூரி இன்று மீண்டும் முறைகேடான வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எவ்வளவு கேடான வழியிலும் பணம் சம்பாதிப்பது ஒன்றையே தனியார் கல்லூரி நிர்வாகங்களும், அரசு அதிகாரிகளும் இலட்சியமாக வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவொரு சாட்சி. இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் SVS கல்லூரி உரிமையாளர் வாசுகி என்பவர் பொன்.ராதா கிருஷ்ணன் முன்னிலையில் பாஜக-வில் சேர்ந்து ‘புனிதராகி’ விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யோகா மற்றும் நேச்சுரோபதி என்ற பெயரில் போலியாக பட்டப்படிப்பை உருவாக்கி செயல்படுத்தி வரும் இவர்கள் மாணவர்களிடம் பணத்தை கொள்ளை அடிப்பது மட்டுமல்லாமல், தம்மைக் கேள்வி கேட்கும் மாணவர்களை ஒடுக்குவதற்காகவும், ஆட்சியாளர்களுடன் குறிப்பாக ஆளுங்கட்சி  மந்திரிகள், ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலுடனும் கூட்டு வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். இதில் குறிப்படத்தகுந்த நபர் – குற்றவாளி சென்னை அண்ணா நகரில் இயங்கி வரும் அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி கல்லூரி முதல்வர் மணவாளன். SVSகல்லூரி பிரச்சினையிலும், குற்றவாளிகளைக் காப்பாற்றியதில் முக்கிய பங்கு வகித்த நபர் இவர். டிப்ளமோ கோர்ஸ் படித்த ஒருவர் அரசுக் கல்லூரி முதல்வராக இருக்க முடியுமா? முடியும் என்பதற்கான முறைகேட்டின் சாட்சி தான் இந்த மணவாளன்.


படிக்க: யோகா தினம் : மோடி எனும் நோய் நாடி அதன் கார்ப்பரேட் காவி அடிப்படை தேடிக் களைவோம் !


மேலும், கடந்த அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரும் முக்கியமான குற்றவாளி ஆவார். தனிப்பட்ட முறையில் அவருக்குச் சொந்தமாக BNYS படிப்புக்கான மூன்று தனியார் கல்லூரிகளை நடத்தி வருகிறார். அது மட்டுமல்ல அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் உலக யோகா ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனம் தொடங்குவதாகவும், அதற்கு ஒரே கையெழுத்தில் நூறு கோடியை ஒதுக்குவதாகவும் அறிவித்தார். இவர் பொறுப்பில் இருக்கும் போதுதான், அரசு மருத்துவமனைகளில் யோகா – இயற்கை மருத்துவ மையம் உருவாக்குவதற்கு ஏற்பாடு செய்வதாக அறிவித்தார். இதன் மூலம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை, தன்னால் ஏமாற்றப்பட்டு வரும் மாணவர்களுக்கு உருவாக்குவதே இவரது நோக்கம்.

இப்படி பல அயோக்கியத்தனங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், அரசே கல்லூரி நடத்துகிறது என்று நம்பி ஏமாந்து போன மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதோ, மத்திய அரசு அல்லது அல்லது தமிழ்நாடு அரசின் பணிகளில் நிரந்தரப் பணியில் சேர்வதோ, வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வதோ பிரச்சினையாகி வருகிறது. இவை அனைத்துக்கும் வழக்கமான முறைகேடுகள் மூலம் தற்காலிக ஏற்பாடுகளை மணவாளன் & கோ செய்து வருகிறது. கேட்டால், எதிர்காலத்தில் மத்திய அரசு அங்கீகரிக்கும் என நம்புவதாக கதை விட்டு வருகின்றனர். மருத்துவம் என்பதற்கான எந்த அடிப்படையும் இல்லாத நேச்சுரோபதி மற்றும் யோகாவுக்கு பாஜக ஆட்சியிலேயே சட்ட அங்கீகாரம் வான்க முடியாத நிலை இருக்கிறது என்றால் இந்தப் படிப்பின் இலட்சணத்தைப் புரிந்து கொள்ளலாம். என்றோ கிடைக்கப்போகும் அங்கீகாரத்தை வைத்து கடந்த 20 ஆண்டுகளாக எல்லாரையும் ஏமாற்ற முடிகிறது என்றால், எப்படிப்பட்ட அயோக்கியர்களாக இவர்கள் இருப்பார்கள்.

இந்த முறைகேடான படிப்பையும், அதற்கு தமிழ்நாடு அரசே அங்கீகாரம் கொடுத்து கல்லூரி – தேர்வு நடத்துவதையும் கண்டித்தும், கேள்விக்குள்ளாக்கியும், மத்திய மருத்துவ சட்ட அங்கீகாரம் இல்லாமல் எப்படி ஒரு நிறுவனத்தை 20 ஆண்டுகளாக இயக்கலாம் என்பதைக் கேள்வி எழுப்பியும், அந்தத் துறைக்கு பொறுப்பான செயலாளர் மலர்விழி மற்றும் கிருஷ்ணவேணி அவர்களுக்கும், துறைக்கு பொறுப்பான ஐஏஎஸ் அதிகாரிக்கும்  மனுவாக பு.மா.இ.மு சார்பாக மனு கொடுத்து கேள்வி எழுப்பினோம். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆளை மாற்றி மாற்றி கை காட்டுவதும், எங்களுக்குத் தெரியாது என்று நழுவுவதுமே பதிலாக இருந்தது. யாருமே மனுவை வாங்கத் தயாராக இல்லை. ஒரு கட்டத்தில் மணவாளனைப் போய்ப் பாருங்கள் என்று சொல்லும் அளவுக்கு இவர்களது நடத்தை இருந்தது. அதாவது திருடனிமே கோரிக்கை மனு கொடுக்க வேண்டுமாம்.

இவர்களை எச்சரித்தும், தொடர்ந்து அடுத்தடுத்து இன்னும் பலரையும் கேள்விக்குள்ளாக்கும் விதமாக இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. இந்த நிகழ்வில், பு.மா.இ.மு தோழர்களுடன் மக்கள் அதிகாரம் மற்றும்  ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு ஆகிய தோழமை அமைப்புகளின் தோழர்களும் பங்கெடுத்துக் கொண்டார்கள்.


.துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா..மு, தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க