பிறர் சாதித்தவற்றை எல்லாம் தாம் சாதித்ததாகவும், தமது தவறுகளையெல்லாம் தமக்கு முன்னர் பிறர் செய்த தவறுகளின் விளைவாகவும் சித்தரித்தது மட்டும்தான், கடந்த ஏழு ஆண்டு கால ஆட்சியில் மோடி செய்த சாதனை.

மோடி ஆட்சியில் அமர்ந்து கடந்த ஏழாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் என ஜூன் 21-ம் தேதியை குறிப்பிட்டு அந்த நாளில் பல்வேறு வித்தைகளைச் செய்து காட்டி வருகிறார்.

இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களில் உடற்பயிற்சி கலைகள் இருந்துவந்தன. அவற்றில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு வழிமுறைகளில் உருவான உடற்பயிற்சி முறையை, “இந்துத்துவ” வேத மரபுக்குள் புகுத்தி சர்வதேச பெருமை பீற்றல் விளம்பரத்தைச் செய்யத் துவங்கியது மோடி அரசு.

படிக்க :
♦ கொரோனா படுகொலைகள் : முதன்மைக் குற்றவாளி மோடியும் பா.ஜ.க. அரசுமே !
♦ டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்

ஒரு பிரதமர் என்பவர், நெருக்கடிக் காலங்களில் தனது சொந்த நாட்டு மக்களுக்கு மத்தியில் ஒரு ஆளுமையைச் செலுத்தும் வகையிலான நடவடிக்கைகளிலாவது குறைந்தபட்சமாக ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் விதவிதமாக போஸ் கொடுப்பதிலும், வெளிநாடுகளுக்குப் போய் விதவிதமான வேடங்கள் போட்டு “கேட் வாக்” செய்வதையே ஆறாண்டுகளாக தமது நடைமுறையாகக் கொண்டிருந்தவர் மோடி.

பணமதிப்பழிப்பில் துவங்கி, ஜி.எஸ்.டி, புதிய கல்விக் கொள்கை என தற்போது கொரோனாவைக் கையாள்வது வரையில் அனைத்திலும் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி, பலரது வாழ்வாதாரங்களை துடைத்தெறிந்து, பலரது உயிரையும் குடித்திருக்கிறார் மோடி. இதுதான் நமக்கு வாய்த்த பிரதமரின் இலட்சணம்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம், மொத்த நாட்டையும் வங்கி வாசலில் நிற்க வைத்து வங்கி ஊழியர்களையும் நூற்றுக்கணக்கான மக்களையும் சாகடித்தார் மோடி. மக்கள் கொந்தளித்த சமயத்தில், முதலைகளே வெட்கப்படும் அளவிற்கு முதலைக் க்ண்ணீர் வடித்து நாடகமாடினார் மோடி. எந்தக் கருப்புப் பணமும் ஒழியவில்லை. அதற்கு மோடி வருத்தமும் தெரிவிக்கவில்லை.

அன்று துவங்கிய கண்ணீர் சிந்தும் நாடகம், இன்று கொரோனா நோய்த்தொற்று வரையில் தொடர்கிறது. கொரோனா முதல் அலையில், எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல், பொது முடக்கத்தை அறிவித்து, சொந்த நாட்டு மக்களை பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வீதிகளில் நடக்க வைத்துக் கொன்றார்.

மக்களின் வாழ்வாதாரத் தேவைக்கு உணவு கிடங்கில் இருக்கும் தானியங்களை இலவசமாக வழங்குமாறு பலரும் கோரிய போது, வாய் மூடி கள்ள மவுனம் சாதித்துவிட்டு, ஆத்மநிர்பார் எனும் பெயரில் 20 இலட்சம் கோடியை இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்தார் மோடி. இதனையும் பெரும் சாதனையாக ஊடகங்கள் கொண்டாடின.

ஒரு பெரும் சுனாமி போல முதல் அலை வந்து வாரிச் சுருட்டிச் சென்ற பிறகு, வாழ்வாதார இழப்பிலிருந்து மீண்டு வர விவசாயிகளும் தொழிலாளர்களும் நினைத்த மாத்திரத்தில், தொழிலாளர் நலச்சட்ட திருத்தம், வேளாண் சட்டத் திருத்தங்கள் எனும் பெயரில் கார்ப்பரேட்டுகளின் கையில் ஒட்டுமொத்த தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒப்படைத்தார். அதோடு, நாம் உண்ணும் உணவின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்தார். எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது போலீசைக் கொண்டும் சங்க பரிவாரக் கிரிமினல்களைக் கொண்டும் காட்டுவெறித் தாக்குதலை நிகழ்த்தியது மோடி அரசு.

கடும் குளிரிலும், வெயிலிலும் பஞ்சாப் விவசாயிகள் வெட்ட வெளியில் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கையில், சிறிதும் வெட்கமின்றி, வீட்டில் மயிலுக்கு உணவளித்து போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார் மோடி.

கோவிட் தொற்றுக்கு தடுப்பூசி ஆய்வு மற்றும் உற்பத்தியில் பிற நாட்டு நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்ட பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிட்டியூட் நிறுவனங்களுக்கு 3800 கோடிகளை அள்ளிக் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல், அந்நிறுவனங்கள் நிர்ணயித்த விலைக்கு சிறிதும் பங்கம் வராத வகையில் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி விற்பனை செய்வதன் மூலம், பெருந்தொற்று சூழலிலும் மக்களைச் சுரண்டுவதற்கு ஆவன செய்து கொடுத்தார் மோடி.

கொரோனா இரண்டாம் அலை குறித்து அனைத்து வல்லுனர்களும் எச்சரிக்கைக் கொடுத்த நிலையில் உத்தரகாண்டில், கும்பமேளாவையும் தேர்தல் பிரச்சாரங்களையும் எவ்விதக் குறைப்பாடும் இன்றி நடத்தி முடித்து, கோவிட்-19 நோயின் சூப்பர் ஸ்பிரட்டராக செயலாற்றினார்.

இரண்டாம் அலையின் தாக்கத்தில் அதிகமானவர்கள் பாதிப்படைய வாய்ப்பிருப்பதை அறிஞர்கள் சுட்டிக் காட்டியபோதும், போதுமான அளவுக்கு மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்கவில்லை. மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கார்ப்பரேட்டுகள், வெளிநாட்டுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்காமல், சொந்த நாட்டு மக்களை ஆக்சிஜனுக்காக வீதிவீதியாக அலையவிட்டு சாகடித்தார் மோடி. வட இந்திய சுடுகாடுகளில் பிணங்கள் அணிவகுத்தன. கங்கை பிணங்களால் நிறைந்து வழிந்தது.

உலகமே காறி உமிழ்ந்த பிறகு தொலைக்காட்சியில் தோன்றி வழக்கம் போல ஒரு அழுகுணி ஆட்டத்தை ஆடினார். கிளிசரின் கண்ணீரின் செய்முறை விளக்கத்தை ஒரு பெண் நடிகர் அம்பலப்படுத்த, மோடியின் வாய் முதல் கன்னம் வரை கேமரா முன்னர் நடித்ததைப் பார்த்து பலரும் வியந்தனர்.

இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கும் வேளையில்தான் அம்பானி மற்றும் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது. கொரோனா இறப்புகளுக்கு நேர் விகிதத்தில் அவை உயர்ந்து கொண்டிருந்தன. மக்கள் வாழ்வாதாரம் இழந்து இன்னும் வீதியில்தான் இருக்கின்றனர்.

மக்களை உற்சாகமூட்ட மீண்டும் மோடி இன்று வந்து உரையாற்றியிருக்கிறார். ”கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. உலக நாடுகளின் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது” என்றார்.

உரையின் நடுவில், கடந்த ஏழாண்டுகளில் நமக்குச் செய்த ‘நன்மைகளுக்கு’ எல்லாம் பிராயச்சித்தம் தேடும் வகையில், திருக்குறள் ஒன்றை உதிர்த்து விட்டுச் சென்றிருக்கிறார்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். ”

நோயை ஆய்ந்து, அதன் அடிப்படையை ஆய்ந்து அந்த அடிப்படையைக் களையும் வழியைக் காண வேண்டும் என்பதுதான் இந்தக் குறளின் மூலம் வள்ளுவர் சொல்லவரும் கருத்து.

வள்ளுவரின் இந்தக் குறளை மோடி விளம்பரத்திற்காகத்தான் சொன்னார் என்றாலும் அது நாம் தவறும் ஒரு விசயத்தைப் பற்றி நமக்கு நினைவூட்டியிருக்கிறது.

படிக்க :
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
♦ அம்பானி, அதானி, மிட்டல்தான் இனி குத்தகை விவசாயிகள் !

மோடி எனும் நோயை, நாம் அன்றாடம் ஆராய்ந்து சாடுகிறோம், கிண்டலடிக்கிறோம். ஆனால் அது மட்டும் போதுமா ? மோடி எனும் நோயின் சமூக அடிப்படை என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டுமல்லவா ?

மோடி எனும் இந்தப் பிணி நமக்குத் தரும் துன்புறுத்தல்களுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது எது ? என்பதை ஆராய்வது கடினமானது அல்ல. அது அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளும், இந்துத்துவ வெறியை ஊட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தான். அதைத்தான் நாம் மேலே பார்த்த கடந்த ஐந்தாண்டு சம்பவங்களின் சுருக்கம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

மோடி எனும் பிணி அகற்றப்பட்டாலும், அதன் அடிப்படைகளான கார்ப்பரேட்டுகளும் சங்க பரிவாரக் கும்பலும் அகற்ற்டப்படாத வரையில், பல்வேறு பெயர்களில் இத்தகைய பிணிகள் மீண்டும் மீண்டும் எழத்தான் செய்யும்.

நோய்முதல் நாடி அதனைக் களையும் வழிகளைத் தேடினால் நோயற்ற வாழ்வுதனை வாழலாம். ஆகவே மோடி இன்று ஆற்றிய உரையின் படி, நோயின் அடிப்படைகளான கார்ப்பரேட் மற்றும் சங்க பரிவாரங்களின் அடிப்படையை வீழ்த்துவதுதான் நம் முன் உள்ள முதல் கடமை !

சரண்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க