விருது வேண்டுமா! ‘சொரணையில்லை‘ என்று எழுதிக் கொடு!!

நிலவுகின்ற அரசியல் சமூக   காரணிகளிலிருந்து துண்டித்துக்கொண்டு தனியே ஒரு கலைஞன் உருவாக முடியுமா? மக்களின் வாழ் நிலையிலிருந்தும் மக்கள் படும் அவலங்களிலிருந்தும் தன்னை துண்டித்து கொண்ட கலைஞன் படைப்பது கலையாகவோ இலக்கியமாகவோ இருக்குமா?

விருது வேண்டுமா!
சொரணையில்லைஎன்று எழுதிக் கொடு!!

இந்து ராஸ்டிர நிகழ்ச்சி நிரலுக்குத் துணைபோகும் நாடாளுமன்ற நிலைக்குழு!

சுற்றுலா, போக்குவரத்து மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு’ கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு இலக்கிய மற்றும் கலாச்சார அமைப்புகள் சார்பில் வழங்கப்படும்  விருதுகளுக்கான நடைமுறைகள் குறித்து சில பரிந்துரைகளை மாநிலங்களவைக்கு அளித்துள்ளது.

அதில் சாகித்ய அகாடமி விருது போன்ற விருதுகளுக்கு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைப் பரிந்துரைக்கும்போது, “அரசியல் காரணங்களுக்காக அந்த விருதுகளைத் திருப்பி அளிக்கப்போவதில்லை” என்ற வாக்குறுதிகளை பெற வேண்டும் என்றும் அதை மீறி விருதுகளைத் திருப்பி அளித்தால், வேறு எந்த விருதுகளுக்கும் அந்த கலைஞரையோ, எழுத்தாளரையோ பரிசீலிக்கக்கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள கலை, கலாச்சார அகாடமிகள் அரசியல் சார்பற்றவையாம்; அதனால் சாகித்ய அகாடமி போன்ற விருதுகளை பெறும் போது அரசியல் காரணங்களுக்காக விருதைத் திருப்பி அளிக்கப்போவதில்லை என ஒரு வாக்குறுதியைப் பெற வேண்டுமென இந்தக் குழு கூறுகிறது.

“ஒரு கலைஞருக்குக் கிடைக்கும் உயர்ந்தபட்ச அங்கீகாரமாக சாகித்ய அகாடமி போன்ற விருதுகளை அரசியல் காரணத்திற்காக திருப்பித் தருவது  நாட்டிற்கே அவமானமாக இருக்கிறது” என்றும் புலம்பியுள்ளது நாடாளுமன்ற நிலை குழு.


படிக்க: ரஜினிக்கு பால்கே விருது !! தேர்தலுக்கான மோடி ஸ்டண்ட் || கருத்துப்படம்


தமிழ் எழுத்தாளர்கள் பலரும் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், 2020-ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதை வென்ற எழுத்தாளர் இமயம், “இது போன்ற நிபந்தனைகள் எழுத்தாளர்களை அவமானப்படுத்துபவை; ஒரு எழுத்தாளன் எழுத்துக்காக வாழ்ந்த வாழ்க்கையையும் சமூகத்தின் மேலிருக்கும் அக்கறையையும் அவமானப்படுத்தும் நிபந்தனை இது; எழுத்தை அங்கீகரித்து விருதைக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை; விருதை ஏற்பது, ஏற்காதது, திருப்பி அளிப்பது ஆகியவை எழுத்தாளனின் முடிவு” என்று கண்டித்துள்ளார்.

பாஜகவின் இந்துராஷ்டிர  அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் இந்தியாவில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் சாகித்ய அகாடமி போன்ற விருதுகளைப்  பெற்ற பலர்  இந்த காட்டுமிராண்டிகளால் தாங்கள் கௌரவிக்கப் பட்டத்தையே அவமானமாக கருதுகின்றனர்.

தனது வாழ்வின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் இத்தகைய விருதுகளைத் தூக்கி வீசத் துணிகின்ற கலைஞர்கள் எழுத்தாளர்களால் சங்கிகளுக்கு ஏற்படும் அவமானத்தை ‘தேசத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பாக’ சித்தரிகிறது நாடாளுமன்ற நிலைக்குழு. அதனால் அரசியல் அற்ற கலைஞர்களுக்குத் தான் இத்தகைய விருதுகளை பரிந்துரைக்க வேண்டும் என்கிறது.

நிலவுகின்ற அரசியல் சமூக   காரணிகளிலிருந்து துண்டித்துக்கொண்டு தனியே ஒரு கலைஞன் உருவாக முடியுமா? மக்களின் வாழ் நிலையிலிருந்தும் மக்கள் படும் அவலங்களிலிருந்தும் தன்னை துண்டித்து கொண்ட கலைஞன் படைப்பது கலையாகவோ இலக்கியமாகவோ இருக்குமா?

மக்களைப் பற்றி துளியும் அக்கறையற்ற, பத்ரி சேஷாத்ரி, ஜெயமோகன், மாலன் போன்ற  சனாதனவாதிகளாலும் இளையராஜா, குஷ்பூ போன்ற பாசிச அடிவருடிகளாலும் தான் அப்படி இருக்க முடியும்; அவர்களைப் போன்ற சங்கிகளுக்கு விருதுகளைக் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்துவது தான் இதன் பொருள்.

2015-ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்புர்கி, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பன்சாரே, தபோல்கர் ஆகியோர் சங் பரிவார் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக சாகித்ய அகாதமி எவ்விதக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இதுபோன்ற தாக்குதல்களைக் கண்டித்து 39 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிப்பதாக அறிவித்தனர்.


படிக்க: பத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி !


2019-ஆம் ஆண்டு CAA-NPR-NRC யை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, புதுச்சேரி பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் 4 மாணவர்கள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அளிக்கும் தங்கப்பதக்கத்தையும் பட்டங்களையும் பெற மாட்டோம் எனப்  புறக்கணித்தனர். மேலும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும்வரை எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

சமீபத்தில்  மல்யுத்த வீரர், வீராங்கனைகள், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், பாலியல் குற்றவாளியுமான பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரிய தொடர் போராட்டத்தில், ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில்  இந்தியாவுக்காக தாங்கள்  வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக அறிவித்தனர்.

இப்படி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு எதிராக அறிவுத் துறையினரும், கலைஞர்களும், வீரர் வீராங்கனைகளும், மாணவர்களும் தங்களது உயரிய விருதுகளையே துச்சமாக தூக்கி எறிந்து போராடுவது சர்வதேச அளவில் சங்கிகளுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது.

இப்படியெல்லாம் தான் அம்பலப்படுவதை எப்படியாவது தடுக்க வேண்டிய கட்டாயத்தில் பாசிச பாஜக அரசு உள்ளது. ஆகவே விருதுகளைத் திருப்பித் தருவது, ‘தேசத்தை அவமதிக்கும் செயல்’ என்று நாடாளுமன்ற நிலைக் குழுவின் மூலம் தேசவெறிக் கூச்சலிடுகிறது.

“விருதைத் திருப்பி அளிக்க மாட்டேன்” என வாக்குறுதி அளிப்பவருக்கு மட்டுமே விருது வழங்குவதென்ற கொள்கை முடிவுகளை எடுக்க கலாச்சார அமைப்புகளை நிர்பந்திக்கிறது.

இனி பாசிச அடிவருடிகளுக்கானதாக சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகள் இதன்மூலம் மாற்றப்பட இருக்கிறது.

இந்த பாசிசக் கும்பல்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, அவர்களின் ரத்தக்கறை படிந்த கைகளிலிருந்து விருது வாங்கினால் உணர்ச்சிகள் அற்ற செத்த பிணத்திற்கு சமமாவோம். “கலையும் இலக்கியமும் மக்களுக்கானதே” என்று உயிர்த்துடிப்புடன் இயங்குவது தான்  கலைஞர்கள் எழுத்தாளர்களின் தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.


பாரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க